இராஜாராம் மோகன்ராய் (கி.பி.1777-1833)
இந்திய வரலாற்றில் இராஜாராம் மோகன்ராய்க்கு என்று ஒருசிறப்பான இடம், அழிவில்லா இடம் உண்டு. அதிலும் குறிப்பாக பெண்ணிய வரலாற்றில் அவருக்கு ஓர் உயரிய இடம் உண்டு.
சிறுவயது முதற்கொண்டே பகுத்தறிவோடு சிந்தித்தார். ஒவ்வாதவற்றை உதறினார். நீண்டகாலமாகப் பின்பற்றப்படுகின்ற காரணத்தால் எதையும் அப்படியே ஏற்றுக் கொள்வது அறியாமை என்று கூறினார். அவரது குடும்பம் பழுத்த வைதீகக் குடும்பம். தந்தை பெரியாரைப் போலவே, பெற்றோருடன் முரண்பட்டார். விவாதம் செய்தார். வெறுப்புக்குள்ளானார். பெரியாரைப் போலவே வீட்டை விட்டுப் புறப்பட்டு வெளியே சென்றார். அப்படிப்பட்டவரின் உன்னத வரலாறு இன்று பலருக்குத் தெரியாமல் மறைக்கப்படுகின்றது. வரலாற்றில் ஓரிரு வரிகளில் அவர் சுருக்கப்படுகிறார்.
எனவே, அப்பெருமகனாரை இன்றைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவதன் மூலம், விழிப்பூட்டி தெளிவூட்ட முடியும் என்பதால் அவரது வரலாறு இங்கு சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது.
வங்காளப்பகுதி என்றாலே பல நூற்றாண்டுகளாகப் பெருமை பெற்ற பகுதியாகும். அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி ஒப்பற்ற தலைவர்களை அளித்த மண் அது.
அத்தகு வங்காளத்தில் பர்த்துவான் மாவட்டத்தில், ராதா நகரம் என்னும் ஊரில் 1777ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் நாள், இராமகாந்தர் என்பவருக்கும், தாரிணி என்ற அம்மையாருக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் இராஜாராம் மோகன்ராய் அவர்கள். இவரது அண்ணன் பெயர் ஜக்மோகன். உடன்பிறந்த சகோதரி ஒருத்தி.
இராமகாந்தாருக்கு மூன்று மனைவிகள். அதில் இரண்டாவது மனைவிதான் தாரிணி. அக்காலத்தில் ஒருவருக்குப் பலமனைவியர் என்பது பரவலாகக் காணப்பட்டது. அது தகுதியின் அடையாளமாகவும் கொள்ளப்பட்டது.
அதேபோல், குழந்தைகளுக்கு மணம் செய்கின்ற வழக்கம் ஆரியர் தொடர்பால் பிறருக்கும் பரவியது. அவ்வகையில் இராஜாராம் மோகன்ராய்க்கும் 5 வயது நிரம்பிய பொழுதே திருமணம் செய்விக்கப்பட்டது. குழந்தை பிறந்தவுடன் திருமணம் செய்துவைக்கின்ற கொடுமைகூட இருந்தது.
இராஜாராம் மோகன்ராய்க்கு மணம் செய்து வைக்கப்பட்ட பெண் சிறிது காலம் கழித்து இறந்து போகவே உடன் இரண்டாம் திருமணம் அவருக்குச் செய்து வைக்கப்பட்டது.
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றவர்களெல்லாம் இதற்கு என்ன பதில் சொல்வார்கள்? இதுவும் இறைவன் கொடுத்த வரந்தானா? இப்படிக் கேட்டால் பதில் சொல்ல வக்கற்றவர்கள் விதண்டாவாதம் என்று அறிவோடு கேட்கின்றவர்களைப் பார்த்துச் சொல்வார்கள்.
இப்படிப்பட்ட விமர்சனங்களை இராஜாராம் மோகன்ராய் நிறையவே பெற்றிருக்கிறார். காரணம், அவர் 12 வயதிலேயே பல அறிவிற்குகந்த கேள்விகளைக் கேட்பார். பழைய மூடநம்பிக்கைகளை, பழக்கங்களை அப்படியே பின்பற்றுகின்றவர்கள் இவரது கேள்விகளால் எரிச்சல் அடைந்த நிகழ்வுகள் ஏராளம்.
பெற்றோரிடமே வாதம் புரிந்த பிஞ்சு உள்ளம்
இராஜாராம் மோகன்ராய் தன்னுடைய அறையில் சிறுவனாக இருந்தபோது அடிக்கடி எதையாவது எழுதிக் கொண்டேயிருப்பார்.
அப்படி என்னதான் எழுதுகிறான்?இன்றைக்குப் பார்த்துவிட வேண்டும்! என்றார் தந்தை.
அவன்தான் வெளியில் போயிருக்கிறானே, போய் எடுத்துப் படித்துப் பாருங்கள்! என்றார் தாய்.
இருவரும் இராஜாராம் மோகன் அறைக்குச் சென்று, மேசையுள் தேடினர். ஒரு மூலையில் கற்றையாக எழுதி வைக்கபட்டிருந்த தாள்களை எடுத்துப்படித்தனர்.
இருவர் முகத்திலும் கடுகடுப்பு.
அவன் வரட்டும்! என்று வேகப்பட்டார் தந்தை.
இப்போதே கண்டித்து வையுங்கள்! என்றாள் தாய்.
இராஜாராம் மோகன்ராய்க்கு இது தெரியாது. வெளியிலிருந்து வீட்டிற்கு வந்தவர் வழக்கம்போல் அறைக்குச் சென்றார். உடனே அவரைப் பார்த்த தந்தை, இராஜாராம் மோகன் எழுதிய தாள்களைக் காட்டி, என்னடா இது? என்று கோபத்துடன் கேட்டார்.
நான் ஒரு புத்தகம் எழுதுகிறேன். அதற்காக எழுதியவை தான் இவை என்றார் இராஜாராம் மோகன்.
பெரிய மேதை. அதற்குள் புத்தகம் எழுத ஆரம்பித்து விட்டாயா? முளைச்சு மூன்று இலை வரவில்லை. அதற்குள் ஊருக்கு உபதேசமா?
சொன்னால் உங்களுக்கு வருத்தமாக இருக்கும்! என் அறிவுக்கு எட்டியதை எழுதியுள்ளேன்..
என்னதான் எழுதியுள்ளாய் சொல்!
கடவுள் ஒருவரே; பல கடவுள் இல்லை; அவருக்கு உருவம் கொடுத்து வழிபட வேண்டியதில்லை என்பதை இந்நூலில் விளக்கப் போகிறேன்!
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நம் முன்னோர்கள் பெரியவர்கள் உருவ வழிபாடு செய்கின்றனர். அவர்களை விட நீ பெரிய அறிஞனா?
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நம் முன்னோர் பெரியோர் நம்பியதால் அது உண்மையாகிவிடாது; செய்ததால் அது சரியாகிவிடாது. உருவ வழிபாடு பகுத்தறிவிற்கு ஏற்புடையதாய் இல்லை! என்றார்.
சிறுவனாக இருந்தபோதிலும், தந்தையுடன் தெளிவாக, உறுதியாகத் தன் கருத்தைச் சொன்னார் இராஜாராம் மோகன்ராய்.
இவரது பெற்றோர்கள் இருவருமே வைதீக நெறியில் பிடிப்பு உள்ளவர்கள், அதைப் பின்பற்றுகின்றவர்கள். கடவுள் நம்பிக்கையும் உருவ வழிபாட்டையும் உடையவர்கள். இப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்ததால், இவர் சிறுவராய் இருக்கும்போதே இருவருக்கு இராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற நூல்களைக் கற்றுக் கொடுத்தார்கள். இவற்றைப் படிக்கவில்லையென்றால் சாப்பாடு கிடையாது என்ற கண்டிப்பும் அக்குடும்பத்தில் உண்டு.
ஆகையால், ஆன்மீகம், கடவுள், புராணம் சார்ந்த பல செய்திகள் சிறுவனாக இருக்கும்போதே அவருக்கு அத்துப்படியானதால், அது பற்றிய சிந்தனைகளும், அது சார்ந்த வினாக்களும் அவர் மனதில் அடிக்கடி எழுந்தன. அதன்விளைவே, அவர் நூல் எழுத முனைந்ததற்கான காரணம்.
இராமனையும், கிருஷ்ணனையும், சக்தியையும், சிவனையும் மகன் நம்பவில்லை என்பதறிந்து வேதனைப்பட்டனர்.
பாட்னாவுக்கு இவனைப் படிக்க அனுப்பியதால் வந்த விளைவு இது. அங்கு முஸ்லீம்களோடு சுற்றி மவுல்விகளோடு பழகி இவன் புத்தி கெட்டுவிட்டது! என்று காரணம் கற்பித்துக் கவலைப்பட்டனர்.
இனி இவனை காசிக்கு அனுப்பி பண்டிதர்களிடம் படிக்கச் சொன்னால்தான் சரி வரும்! என்று தந்தை கூறியதைத் தாயும் ஆதரித்தார்.
வீட்டை விட்டு வெளியேறிய கொள்கைவாதி
ஆனால் இந்த முடிவைச் செயற்படுத்துவதற்கு முன்னமே, பெற்றோருக்கும் இவருக்கும் கடுமையான வாக்குவாதம் வந்து விட்டது.
குடும்ப வழக்கத்திற்கு மாறாக உன் விருப்பப்படியெல்லாம், நீ நடக்க இயலாது. நாங்கள் சொல்கிறபடிதான் நீ கேட்க வேண்டும்! என்றார் தந்தை.
நீங்கள் சொல்வது உண்மையானால் அதை ஏற்று நடப்பேன். இல்லையென்றால் அதன்படி நடக்க மாட்டேன்! என்று நறுக்கென்று பதில் சொன்னார் இவர்.
அவ்வளவு பெரிய மனிதனாகிவிட்டாயா நீ?
இனி உனக்கு இந்த வீட்டில் வேலையில்லை. நீ வெளியே போகலாம்! தந்தை கண்டிப்பாகக் கூறினார்.
வீட்டைவிட்டு விரட்டினால் பயந்து நம் வழிக்கு வந்துவிடுவான் என்று பெற்றோர் எண்ணினர். ஆனால், பிள்ளையின் முடிவு பிடிவாதமாய் இருந்தது.
வீட்டைவிட்டு வெளியே சென்ற இராஜாராம் மோகன்ராய் இரவு வீடு திரும்பவில்லை. தாய் பதறித் துடித்தாள். தந்தையும் தவித்தார். எப்படியும் திரும்பி வந்துவிடுவான் என்று தந்தை நம்பினார். ஆனால் எதிர்பார்த்தப்படி வராமல் போகவே, அவனது மேசையுள் தேடினார்கள். அவர்கள் எதிர்பார்த்ததுபோலவே கடிதம் இருந்தது.
தங்கள் கட்டளைப்படி நான் வெளியேறுகிறேன். வீணாக என்னைத் தேடாதீர்கள்! என்று கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
பெற்றோர் செய்வதறியாது கலங்கினர். கண்ணீர் வடித்தனர். காவல்நிலையத்தில் புகார் செய்தனர். உயிரோடு இருக்கிறானா? இல்லையா? என்பதுகூட அறிய முடியாமல் அல்லாடினர்.
விடாது தொடர்ந்த விவாதங்களும் விரட்டல்களும்
வீட்டைவிட்டு வெளியேறிய இராஜாராம் மோகன் விரும்பும் இடமெல்லாம் நடந்தார். காரணம், எங்கு செல்வது? யாருடன் தங்குவது? என்ன செய்வது என்றே தெரியாமல் நடந்து கொண்டிருந்தார். வீட்டைவிட்டுப் புறப்பட்டபோது அவருக்கு 12 வயதுதான். சிந்தனைத் தெளிவு பெற்ற சிறுவன் என்பதால், தீரத்துடன் நடந்தார். எங்கு கோயில்கள் உள்ளனவோ அங்கு சென்றார். அங்குள்ள பண்டிதர்களுடன் வாதிட்டார். சிறுவன்தானே என்று எண்ணி அவரிடம் பேசத்தொடங்கி வாதிட்ட பண்டிதர்கள், அவரது அறிவுக்கூர்மையையும், வாதத் திறமையையும் கண்டு திகைத்தனர். வியந்தனர். தன் வாதத்திற்கு சாத்திரங்களிலிருந்தெல்லாம் மேற்கோள் காட்டிப் பேசியதைக் கண்ட பண்டிதர்கள், அவரோடு வாதிட முடியாமல், தங்கள் இயலாமையை மறைக்க, அதிகப்பிரசங்கி! உனக்கென்ன தெரியும், போய் விடு இங்கிருந்து! என்று விரட்டினார்கள். மழுப்பல்வாதமும், குழப்பல்வாதமும்தானே வைதீகர்களின் வழக்கம். எனவே கருத்துக்குக் கருத்தை வைக்க இயலாமல் வெறுத்து விரட்டினர்.
இவ்வாறு அவர் செல்லும்
இடமெல்லாம் விவாதங்களும் விரட்டல்களுமே தொடர்ந்தன. கால்நடையாகவே தொடர்ந்து நடந்து திபெத்தை அடைந்தார்.
தட்டிக் கேட்டதால் வெட்ட வந்தனர்
லாஸா நகருக்குச் சென்றவர் புத்தரின் கொள்கைகளைக் கற்க விரும்பினார். ஆனால், அங்கு பவுத்தர்கள், தலாய்லாமாவைப் பூசிப்பதை கண்ட அவர் அதிர்ச்சியடைந்தார். புத்தர் கடவுளைப் பற்றியே சிந்திக்காதவர். அப்படிப்பட்டவரைப் பின்பற்றுகின்றவர்கள் தலாய்லாமாவைக் கடவுளாகக் கும்பிடுவது தவறு! என்று இவர் பேசினார்.
பவுத்த துறவியர் முதலில் இவரது பேச்சைப் பொருட்படுத்தவில்லை. ஏதோ சிறுபையன் தெரியாமல் பேசுகிறான் என்று எண்ணினர். ஆனால், இவருடைய பேச்சுக்கு ஆதரவு மக்களிடையே கூடிக் கொண்டு வரவே, இவரைக் கொன்றுவிடத் தீர்மானித்தனர்.
இதையறிந்த அவர் அங்கிருந்து தப்பிக்க முடிவு செய்து கொண்டிருந்தபோது, திபெத்திய பெண் ஒருத்தி, இவர் மீது இரக்கம் கொண்டு லாமாக்களின் கையில் சிக்காமல் காப்பாற்றி, திபெத்திலிருந்து வெளியேற உதவி செய்தாள்.
வீட்டைவிட்டு வெளியில் வந்து இரண்டு ஆண்டுகள் கழிந்தன. எத்தனையோ எதிர்ப்புகள், இன்னல்கள், பசி,
பட்டினி, உயிருக்கே ஆபத்து என அந்த இரண்டு ஆண்டுகளில் அனைத்தும் அனுபவித்தார். உயிருக்கே ஆபத்தான நிலை வந்ததும் இராஜாராம் மோகன்ராய் வீட்டிற்குத் திரும்ப முடிவு செய்தார். எனவே, இராதா நகரம் நோக்கி நடந்தார்.
பாசத் துடிப்பும் காசிப் படிப்பும்
வீடு திரும்பிய மகனைப் பார்த்ததும் பெற்றோர் பெருமகிழ்ச்சி அடைந்தனர். குடும்பத்தார் அனைவரும் நிம்மதியடைந்தனர். கட்டி அணைத்துக் கண்ணீர் வழிய முத்தமிட்டனர். பாசமழையில் இராஜாராம் மோகன்ராய் திக்குமுக்காடித் திளைத்தார்.
தாங்கள் முன்னமே செய்திருந்த முடிவுப்படி 1886-இல் அவரை காசிக்கு படிக்க அனுப்பினர். நான்கு ஆண்டுகள் காசியில் தங்கி, வேதங்கள், உபநிடதங்களை விரிவாகக் கற்றார். படிப்பு முடிந்துவீட்டுக்கு வந்தவரைக் கண்ட பெற்றோர், மகன் கற்றதன் பயனாய் முற்றிலும் மாறியிருப்பான் என்று எண்ணினர். ஆனால், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
முன்னைவிட, தற்போது உருவ வழிபாட்டைக் கடுமையாகக் கண்டித்தார். உருவ வழிபாடு தவறுதான் என்று உறுதியாய்ச்
சொன்னார். பெற்றோர் மீண்டும் வெறுப்படைந்தனர். ஒத்துவராத சூழலிலே ஆண்டுகள் சில கழிந்தன.
சீரழிந்தது குடும்பம்! சிறை தந்தது மரணம்!
இவரது தந்தை இராமகாந்த ராய் இராதா நகரத்தைவிட்டு விலகிச் சென்று லங்கர் பாடாவில் வாழத் தொடங்கினார். அங்கு பெரிய வீட்டில், அனைத்து வசதிகளுடனும் வாழ்ந்தனர். இவரது அண்ணன் ஜக்மோகன் வணிகத்தில் ஆர்வத்தோடு ஈடுபட்டுப் பெரும் பொருள் ஈட்டினார். இராஜாராம் மோகனும் அதைப் போல பொருளீட்ட வேண்டும் என்று தந்தை விரும்பவே, இவரும் வணிகத்தில் ஈடுபட்டுப் பெருமளவு வருவாய் ஈட்டினார்.
தனியாளாக, வருவாயின்றி வாழ்ந்தபோதே வாதங்களை அஞ்சாது முன்வைத்த இவர், தற்போது வருவாய் ஈட்டத் தொடங்கியதும், கூடுதல் பலத்துடன் தன் கருத்துகளை வெளியிட்டார். பொருளாதாரப் பலத்துடன் இவர் இருந்ததால், முன்பைவிட எதிர்ப்புகள் குறைவாகவே இருந்தன. வயது கூடக்கூட அவரது சிந்தனைகளும் கூர்மையடைந்தன. பகுத்தறிவுச் சிந்தனைகளை, சமூகத்தின் அவலங்களைத் தெளிவாக எடுத்து வைக்க மக்களை மூடச் செயல்பாடுகளிலிருந்தும், முறையற்ற வழக்கங்களிலிருந்தும் விடுவிக்க முயன்றார்.
இந்நிலையில், அங்கு ஏற்பட்ட அரசியல் மாற்றம், இவரது குடும்பத்தைப் பெரிதும் பாதித்தது. இவரது தந்தை இராமகாந்தராய் அரண்மனையில் பணியாற்றியவர். இராணியிடம் நம்பிக்கைக்குரியவராக இருந்து பொறுப்புடன் செயலாற்றினார். ஆனால், இராணி இறந்ததும், அவரது மகன் ஆட்சிக்கு வரவே, சூழல் மாறியது.
இராமகாந்த ராய் மீதும், ஜக்மோகன் ராய் மீதும் மோசடிக் குற்றத்தைச் சுமத்தி, இளவரசன் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கில் இருவருக்கும் தண்டனை கிடைக்கவே சிறையில் அடைக்கப்பட்டனர்.
இராஜாராம் மோகன் ஏராளமான பணத்தைச் செலவிட்டு, உயர்நீதிமன்றம் சென்று, புகழ்பெற்ற வழக்கறிஞர்களை வைத்து வாதிட்டார். அதன்மூலம் இருவரும் விடுதலை அடைந்தனர். அப்போதுதான் இராஜாராம் குடும்பத்தவர்மீது வைத்திருந்த பற்றையும், பாசத்தையும் அனைவரும் அறிந்தனர். மதிப்பும், நற்பெயரும் கொண்டு வாழ்ந்தவர்களுக்கு, இப்படிப்பட்ட பழியும் தண்டனையும் மனஉளைச்சலை ஏற்படுத்தியது. இராமகாந்த ராய் அதை எண்ணி எண்ணியே உடல்நலம் குன்றினார். உடல்நிலை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டதன் விளைவாய் 1803-ஆம் ஆண்டு மே மாதம் அவர் மரணமடைந்தார்.
உற்றார் உறவினர் ஒதுக்கி வைத்தனர்
பெற்றோர்மீதும் சுற்றத்தார் மீதும் இராஜாராம்மோகன் அளவுகடந்த பற்றும் பாசமும் வைத்திருந்த போதிலும், அவருடைய கொள்கைப் பிரச்சாரங்களினால் அனைவரும் அவரை வெறுத்தனர்.
இராமகாந்த ராயின் நினைவுநாளின்போது (சிரார்த்தத்தின் போது) இவரது தாய் தாரிணியே இவரை ஒதுக்கி வைத்தார். அந்த நிகழ்ச்சிக்கு இவரை அழைக்கவே இல்லை. தாய் ஒதுக்கி வைத்தது போலவே உற்றார் உறவினரும் இவரை வெறுத்து ஒதுக்கினர்.
ஆனால், இவற்றையெல்லாம் எதிர்கொண்ட இராஜாராம் மோகன், சற்றும் மனம் தளராது, தன் கொள்கையில்இன்னும் பிடிப்புடன் செயல்பட்டார். தந்தை இறந்த அதே ஆண்டில் தன்னுடைய முதல் நூலை வெளியிட்டார். அந்நூலிற்கு, கடவுள் ஒருவரே என்று நம்புகிறவர்களுக்கு அன்பளிப்பு என்று பெயரிட்டிருந்தார். இந்நூலில் தன்னுடைய கொள்கைகளை மிகத் தெளிவாகவும், ஆழமாகவும் எழுதியிருந்தார். பல மதங்களின் கொள்கைக் கோட்பாடுகள், இந்நூலில் இவரால் நுட்பமாக ஆய்வு செய்யப்பட்டு, கருத்துகள் கூறப்பட்டிருந்தன.
கடவுள் ஒருவரே. அவரே உலகம் முழுமையும் ஆளுகிறார். எங்கள் கடவுள் உயர்ந்தவர்; உங்கள் கடவுள் தாழ்ந்தவர் என்று நம்புவதும் கூறுவதும் அறியாமை என்று இந்நூலில் கூறியிருந்தார். இதனைப் படித்த சனாதனிகள், வைதீகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பரபரப்படைந்தனர். இதன்மூலம் சமுதாயத்தின் எதிர்ப்பும் இவருக்குக் கிடைத்தது.
மறுமணமும் மகப்பேற்று விந்தையும்
பெற்றோர், உற்றார் உறவினர், சுற்றியுள்ள மக்கள் என்று அனைத்து தரப்பின் வெறுப்பிற்குள்ளான இராஜாராம் மோகனுக்கு குழந்தையில்லாத குறையும் வாட்டி வதைத்தது. எனவே, இன்னொரு திருமணம் செய்து கொண்டார். திருமணமான
18ஆவது மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
ஆனால், அதில் வியப்பு என்னவென்றால், குழந்தை பிறந்தது புதிய மனைவிக்கு அல்ல. பிள்ளையில்லாமலிருந்த பழைய மனைவிக்கு! ஆம்.பல ஆண்டுகளாய் குழந்தையில்லாமல் இருந்தவளுக்கு அப்போதுதான் குழந்தை பிறந்தது. குழந்தை இல்லையென்பதற்காக மறுமணம் செய்யும் மடையர்களுக்கு அது மண்டையடியாக அமைந்தது. சீர்திருத்தவாதியான இராஜாராம்கூட அதில் தவறுதான் செய்தார். குழந்தையில்லாமைக்கு மனைவியே காரணம் என்ற மடமையும், ஆண்களும் காரணமாவர் என்ற அறிவியல் உண்மை தெரியாமையும், குறைகளைச் சரிசெய்து குழந்தை பெறலாம் என்ற அறிவியல் மேம்பாடு அப்போது இல்லாமையும் இத் தவறுக்குக் காரணங்களாக அமைந்தன.
21ஆம் நூற்றாண்டிலே இக்குற்றங்கள் நடக்கின்றபோது, 17ஆம் நூற்றாண்டில் அத்தவறுகள் நடந்தன என்பது இயல்பான ஒன்றே. இவ்வாறு செய்வது சரியல்ல என்று அவருக்குத் தெரிந்திருந்தால் இராஜாராம் மோகன்ராய் அப்படிச் செய்திருக்க மாட்டார் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்.
கிழக்கிந்தியக் கம்பெனியில் கீழ்நிலை
1804-ஆம் ஆண்டு ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியில் இவருக்கு வேலை கிடைத்தது. அப்போது இந்திய நாட்டை இங்கிலாந்து அரசாங்கம் ஆளவில்லை. கிழக்கிந்தியக் கம்பெனிதான் ஆண்டது. இக்கம்பெனியில் பணியாற்றுவது ஒரு மதிப்புக்குரிய நிலையாக அக்காலத்தில் கருதப்பட்டது.
ஆனால், அங்கு பணியாற்ற இராஜாராம் மோகன் விரும்பவில்லை. கைநிறைய சம்பளம் கிடைத்தாலும் மானம் உள்ள வாழ்வாக அது அமையவில்லை என்று அவர் கருதினார். வெள்ளையரான ஆங்கிலேயர்களுக்கு முன்னால் கறுப்பர்களான இந்தியர்கள் சமமாக உட்காரக்கூடாது எனவும், வெள்ளையர்களைக் கண்டால், எழுந்து நின்று பேச வேண்டும் என்றும் கட்டாயப் படுத்தப்பட்டனர். இதை ஏற்றுக் கொள்ள இவருக்கு விருப்பம்இல்லை; தன்மானமுள்ள அவர் அதை ஒப்பவில்லை. எனவே, தன்னுடைய வேலையைத் துறக்க முடிவு செய்தார். வேலை வேண்டாம் என்று கடிதம் கொடுத்துவிட்டு வெளியில் வந்தார்.
கொள்கைக் கூட்டாளியுடன் பத்தாண்டுப் பணிகள்
வெளியில் வந்தவர் மூர்ஷிதாபாத்திலிருந்து ராம்காட் நகருக்குச் சென்றார். அவரைப் பற்றியும், அவரது சீர்திருத்தக் கொள்கைகள் பற்றியும், சமூக நலத்தில் அவருக்குள்ள அக்கறை குறித்தும் முன்கூட்டியே அறிந்திருந்த ஜான் டிக்பி என்பவர் அவரை அன்புடன் வரவேற்றார்.
அவரது வற்புறுத்தலுக்கு இணங்கி, அவர் பணியாற்றுகின்ற இடத்திலே, இராஜாராம் மோகன் கணக்காளராகப் பணியில் சேர்ந்தார். இருவரும் இணைந்து 10 ஆண்டுகள் அங்கு பணியாற்றினர்.
மக்களின் மூட நம்பிக்கைகளை ஒழித்து, விழிப்பையும் அறிவையும் அவர்களுக்கு நீங்கள்தான் உருவாக்க வேண்டும் என்று ஜான்டிக்பி கேட்டுக் கொண்டார்.
இவருடைய தூண்டுதலால் உந்தப் பெற்ற இராஜாராம் மோகன் வேதாந்த சாரம் என்னும் நூலை எழுதினார். அதைப் படித்த ஜான்டிக்பி வியப்படைந்து பாராட்டினார்.
1815-ஆம் ஆண்டு ஜான்டிக்பி இங்கிலாந்து சென்றார். இவர், கல்கத்தாவிற்குத் திரும்பினார். அங்கு சென்றதும், முதல் வேலையாக இந்நூலின் ஆங்கில மொழிப்பெயர்ப்பை வெளியிட்டார். அதே ஆண்டில் அந்நூல், வங்காள மொழியிலும் வெளியிடப்பட்டது.
ஆரிய பார்ப்பனர்களின் ஆவேசமும் எதிர்ப்பும்
இவற்றைக் கண்ட ஆரிய பார்ப்பனர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மறைபொருளாகக் காத்து மதிப்பாக வைத்திருந்த வேதம், உபநிடதம் போன்றவற்றை விமர்சித்து அதன் புனிதத்தைக் கெடுத்துவிட்டாரே என்றும் இவற்றிலுள்ள மூடத்தனங்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டாரே, இதனால் தங்களின் ஆதிக்கமும், மதிப்பும், செல்வாக்கும் சிதறிப்போகுமே என்றும் கோபம் கொண்டனர்.
வேதங்களையும் உபநிடதங்களையும் மற்றவர்கள் தீண்டுவதே குற்றம் என்று, கோலோச்சி வாழ்கின்றவர்கள் ஆரிய பார்ப்பனர்கள் அதில்
கைவைத்து, அலசி எடுத்து அச்சிட்டு, அதிலுள்ள சீர்கேடுகளை இவர் அம்பலப்படுத்தியதால், அதற்கு எதிர்நடவடிக்கை மேற்கொள்ள ஆரியர்கள் முடிவு செய்தனர்.
சமஸ்கிருதம் வேதமொழி. அம்மொழியில் உள்ளவற்றை நீசமொழியான ஆங்கிலத்தில் எழுதினால், வேதங்களின் புனிதம் போய் விடும் என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து, இராஜாராம் மோகன்ராய் மீது மக்கள் எதிர்ப்புக் கொள்ளும்படிச் செய்தனர்.
19-ஆம் நூற்றாண்டிலே வங்காளத்தில் பிறந்த விவேகானந்தர் புரட்சிக் கருத்துக்களைச் சொன்னபோது, அவரையே கடுமையாக எதிர்த்தவர்கள் பார்ப்பனர்கள் என்னும்போது 18-ஆம் நூற்றாண்டில் என்ன செய்திருப்பார்கள் என்பதை நாம் கற்பனை செய்து தெரிந்து கொள்ளலாம். விவேகானந்தரின் சிந்தனைகளுக்கு இவர் வித்திட்டதோடு, அவருக்குரிய இடர்பாடுகளை இவர் குறைத்துச் சென்றார் என்பதே உண்மை.
ஆரியர்களின் எதிர்ப்பு வலுக்க வலுக்க, இவருக்குக் கொள்கை மீதும் சீர்திருத்தச் செயல்பாடுகளிலும் பிடிப்பு அதிகமாயிற்று. தன் சீர்த்திருத்தப் பணிகளை இன்னும் தீவிரமாகச் செய்தார். யார் எதிர்த்தாலும் உண்மையைச் சொல்வதிலிருந்து ஒதுங்கமாட்டேன் என்று உறுதி கொண்டார்.
ஆரியர்கள் இவருக்கு எதிராக நூல்கள் வெளியிட்டு எதிர்த்தனர். இவர் அவர்களின் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் ஆதாரத்தோடு பதில் கூறினார். இந்துக்களின் உண்மையான எதிரிகள் ஆரியர்களே. அவர்கள்தான் சுயநலத்திற்காக எல்லாவற்றையும் சீரழித்தவர்கள் என்று சாடினார்.
மற்ற மதங்களின் மடமைகளையும் சாடல்
இந்துமத செயல்முறைகளையும் கோட்பாடுகளையும் கண்டித்ததோடு இவர் நிற்கவில்லை. மற்ற மதங்களின் மடமைகளையும் விமர்சித்தார். இவருக்கு ஏராளமான கிறித்துவ நண்பர்களும், இஸ்லாமிய நண்பர்களும் இருந்தனர். எல்லோருடனும் சமமாகவும் அன்பாகவும் பழகுவார். அவர்களும் அவ்வாறே பழகினர்.
மற்ற சமயங்களின் நூல்களையும் ஆழமாகக் கற்றார். அவற்றிலுள்ள அறிவிற்கொவ்வாத கருத்துகளை எதிர்த்தார்.
ஏசுநாதர் கடவுள் அல்ல. அவர் நம்மைப்போன்ற மனிதர். அவரது கோட்பாடுகள் சரியென்றால் ஏற்கலாம். அதற்காக அவரைக் கடவுளாக வழிபடுவது தவறு என்றார். இதனால் கிறித்தவர்களுடைய எதிர்ப்பிற்கும் ஆளானார். ஏசுவின் ஆதரிசம் என்ற நூலை எழுதி வெளியிட்டார்.
கிறித்தவ மதத்திற்கு எதிரான கருத்துகளை இவர் அச்சிட கிறித்தவ அச்சகத்தார் மறுத்தனர். எனவே, சொந்தமாக ஓர் அச்சகத்தை அமைத்தார். தி பிராமனிகல் மாகஸின் என்ற பத்திரிகையைத் தொடங்கினார். தன்னுடைய கருத்துகளை இதில் அவ்வப்போது வெளியிட்டு வந்தார்.
உருவ வழிபாடு இஸ்லாம் மதத்தில் இல்லாததால் அதைப் பற்றி அதிகம் விமர்சிக்கவில்லை. அதனால் இவர் இஸ்லாம் மதத்தில் சேரப் போகிறார் என்ற வதந்தி கூட வந்தது.
உடன்கட்டை ஏற்றப்படும் வழக்கத்தை ஒழித்தல்
இராஜாராம்மோகன் காலத்தில் பெண்களின் நிலை மிகவும் தரம் தாழ்ந்திருந்தது. ஆணாதிக்கம் அளவுக்கு மீறி நின்றது. ஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் மணக்கலாம், வேண்டாதவளை எப்போது வேண்டுமானாலும் விலக்கலாம் என்ற கொடிய நிலை அதிகம் காணப்பட்டது. ஆண்களுக்குள்ள உரிமைகள் பெண்களுக்குக் கொடுக்கப்படவில்லை.
பெண்கள் படிக்கக்கூடாது, சுதந்திரமாக வெளியில் செல்லக்கூடாது ஆண்களுடன் பழகக்கூடாது, ஆணுக்கு அடிமையாக இருந்து, அவனுக்குரிய வேலைகளைச் செய்து அவனுடைய நலனுக்கே முன்னுரிமை அளித்து வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர்.
கணவன் இறந்துபோனால், அவனைக் கொளுத்துகின்ற சிதையிலே உயிருடன் இருக்கும் அவன் மனைவியையும் தள்ளிப் பொசுக்க வேண்டும் என்ற கொடுமை நடப்பில் இருந்தது. மனைவி விரும்பவில்லையென்றாலும் வலுக்கட்டாயமாக அவளைத் தீயில் தள்ளி எரிப்பர்.
உயிருள்ள பெண்ணை தீயில் தள்ளி எரியவிட்டால் அவள் எரிந்து சாகும் வரை என்ன பாடுபடுவாள். எப்படியெல்லாம் துடிப்பாள், அவள் அடையும் வேதனையை வார்த்தையாலும் எழுத்தாலும் வெளிக்காட்ட முடியுமா? அதைவிட ஒரு கொடுமை இந்த உலகில் வேறு இருக்க முடியுமா?
இப்படிப்பட்ட ஒரு கொடுமையை நாம் அனுபவிக்கப் போகிறோம் என்று தெரிந்த ஒரு பெண் எப்படி மனமாற விரும்பி தீயில்இறங்குவாள்? இக்கொடுமைக்கு, வேதனைக்கு அஞ்சி அவள் தப்பித்து ஓடினாலும் விடமாட்டார்கள். பிடித்துஇழுத்து வந்து நெருப்பில் தள்ளுவார்கள். வெந்து உடல் புண்ணாகும்போது வேதனை பொறுக்க முடியாமல் எழுந்து ஓட முயன்றால், தடியாலும், கழியாலும் அடித்து மீண்டும் அந்த நெருப்பிலே தள்ளுவார்கள். வேதனையையும் பொறுக்க முடியாமல், வெளியிலும் ஓட முடியாமல் துடியாய்த் துடித்துத் துடித்துஅப்பெண் சாவாள். அவள் துடித்துக் கத்தும்போது, அந்த சத்தம் வெளியில் உள்ளவர் காதில் விழாமல் இருக்க தாரைத் தப்பட்டைகளைப் பலமாக அடித்து முழக்குவார்கள்.
எரித்து முடித்த காட்டுமிராண்டிகள் அந்தப் பெண் கற்புக்கரசி, சதிமாதா என்று புகழ்ந்து பெருமை கொள்வார்கள். இப்படிப்பட்ட கொடுமையைக் காலஞ்சென்ற சங்கராச்சாரி, சந்திரசேகர சரஸ்வதி அவர்கள் மிகவும் சிறப்பித்து எழுதியுள்ளார். பேசியுள்ளார். அவர்தான் நடமாடிய தெய்வம் என்றும் சிலர் சொல்லிக் கொள்கிறார்கள். மனித நேயமே அற்றவர்களெல்லாம் மகான்கள் தெய்வங்கள். இவர்களெல்லாம் தாயைப் போற்றுகின்றவர்கள். எல்லாப் பெண்களுமே யாரோ ஒருவருக்குத் தாய்தானே! தாயை மதிக்கின்றவன் இப்படியா செய்வான்?
இப்படிப்பட்ட கொடுமைகளை இராஜாராம் மோகன்ராய் கடுமையாக எதிர்த்தார். சதி என்ற உடன்கட்டை ஏற்றப்படும் வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
உடன்கட்டை ஏற்றப்படும் செய்தி கிடைத்தால், உடனே அங்கு செல்வார். அதன் கொடுமையை, அவ்வாறு செய்கின்றவர்களின் அறியாமையை தெள்ளத் தெளிவாக அம்மக்களுக்கு விளக்குவார்.
இவரது வார்த்தைகளைக் கேட்டு இக்கொடிய வழக்கத்தைக் கைவிட்டவர்கள் சிலர், ஏற்க மறுத்தவர்கள்பலர்.
இவரது அண்ணன் ஜக்மோகன் மரணமடைந்தபின், இவரது அண்ணியை கட்டாயப்படுத்தி உடன்கட்டை ஏற்றி, தீயில் வேகவைத்து கொன்றதை நேரில் பார்த்திருக்கிறார். தீயின் நாக்கு உயிருள்ள அண்ணியின்மீது பட்டதும், அவர் கதறித் துடித்து ஓட முயன்றார். சுற்றியுள்ளவர்கள் அவரை வலுக்கட்டாயமாக நெருப்பில் மீண்டும் மீண்டும் தள்ளி, வேக வைத்த காட்சியை அவரால் என்றுமே மறக்க இயலவில்லை.
எனவே, இவ்வழக்கத்தை அறவே ஒழிப்பதே தன் வாழ்வின் நோக்கம் என்று உறுதி கொண்டார்.
சதி வழக்கம் சட்டவிரோதமானது என்று அறிவிக்கும்படி ஆட்சியாளர்களிடம் வற்புறுத்தினார். 1829-இல் அரசுப் பிரதிநிதிகளாக இருந்த லார்ட் வில்லியம் பெண்டிங்க் இவரது கருத்தை ஏற்றுக் கொண்டார். உடன்கட்டை ஏறுவதைச் சட்ட விரோதம் என்று அறிவித்தார். பெண்களுக்கு எதிரான இக்கொடிய வழக்கம் இராஜாராம் மோகன்ராய் அவர்களின் அரிய முயற்சியால் சட்டரீதியாகத் தடை செய்யப்பட்டது.
இராஜாராம் மோகன்ராய் செய்த தொண்டில் இது முதன்மையானது. என்றென்றும் நிலைத்துநிற்கும் வரலாற்றுச் சாதனை. பெண்ணிய வரலாற்றில் பெரிய இடத்தை இவர் பிடித்தார். ஆயிரக்கணக்கான பெண்களுக்கு இழைக்கப்பட்ட இந்த மாபெரும் கொடுமையை இவர் ஒழித்துக்கட்டியதன் மூலம், பெண்ணினமே பெருமூச்சு விட்டு நிம்மதியடைந்தது.
ஆனால், இக்கொடிய வழக்கத்தை ஒழிக்க, இவர்பட்ட இன்னல்கள்,இடர்கள், இழிவுகள் ஏராளம். ஆரியப் பார்ப்பனர்களும் வைதீக சனாதனிகளும் வரிந்து கட்டிக் கொண்டு இவரை எதிர்த்தனர். கடுமையாகச் சாடினர்.
தர்மசபை என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தி அதற்கு நிதி திரட்டினார். படித்த பண்டிதர்கள் பலர் இதில் உறுப்பினரானார்கள். இந்த அமைப்பின் மூலம் இராஜாராம் மோகன்ராயை எதிர்த்தனர்; எதிர்க்கேள்விகள் கேட்டனர்.
ஆனால், இவர் எதற்கும் அஞ்சவில்லை; அத்தனை கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமாகப் பதில் சொன்னார். தான் அளித்த பதில்களைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டார்.
விதவைத் திருமணம்
கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்துகொள்ள தடைவிதிக்கக்கூடாது என்று கூறினார். விதவைகள் மறுமணம் செய்துகொள்ள துணிவுடன் முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். வங்காளத்தில் விதவைப் பெண்களை இவர் ஏராளமாகப் பார்த்திருக்கிறார். அவர்களின் வேதனைகளை இவர் நன்கு அறிந்திருந்தார். எனவே, விதவைப் பெண்கள் திருமணத்தைப் பெரியவர்கள் முன்னின்று நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மனைவியை இழந்தவன் வயதான காலத்தில் கூட உடனடியாக மறுமணம் செய்துகொள்ளும் போது இளம் விதவைகள் மறுமணம் செய்யக்கூடாது என்பது எவ்வகையில் சரி?
என்று வினா எழுப்பினர்.
பெண்களுக்கு வேண்டும் சொத்துரிமை
ஆண்களைப் போலவே, பெண்களுக்கும் சொத்துரிமை வேண்டும் என்று கோரினார். பெண்களுக்குச் சொத்துரிமையில்லாத காரணத்தால்தான், ஆண்களுக்கு அடிமையாக வாழ வேண்டிய அவலம் ஏற்படுகிறது. ஆணை நம்பியே பெண் வாழ வேண்டிய கட்டாயத்தையும் இது உருவாக்குகிறது. எனவே பெண்களுக்கும் சொத்துரிமை வேண்டும் என்றார்.
பிரம்ம சமாஜம்
தர்மசபை என்று ஆரிய பார்ப்பனர்கள் ஓர் அமைப்பை ஏற்படுத்தி, மூடக் கொள்கைகளுக்கு முட்டுக் கொடுக்க முயன்றதால், அதை எதிர்த்து மக்களுக்கு விழிப்பூட்டவும், சீர்திருத்தக் கொள்கைகளைப் பரப்பவும் பிரம்ம சமாஜம் என்ற அமைப்பை இவர் உருவாக்கினார்.
தன் தவறுகளைக் கூட இவர் பிற்காலத்தில் மாற்றிக் கொண்டார். குழந்தை வேண்டும் என்பதற்காக வேறு பெண்ணைத் திருமணம் செய்த இவரே, பிற்காலத்தில் மனைவி உயிருடன்இருக்கும்போது இன்னொரு திருமணம் செய்யக்கூடாது என்றார். பலதார மணத்தை சட்டவிரோதமாக அறிவிக்க வேண்டும் என்று ஆட்சியாளர்களை வற்புறுத்தினார்.
கணவன் இறந்தபிறகு அவன் சொத்து முழுவதும் மனைவிக்குச் சேர வேண்டும் என்று வற்புறுத்தினார். பெண்களை விற்கும் கொடிய வழக்கத்தை எதிர்த்தார்.
பத்திரிகை சுதந்திரத்திற்காகப் பாடுபட்டார்
இவர் ஒரு சமூகச் சீர்திருத்தக்காரர், எழுச்சிமிகு பேச்சாளர், ஆற்றல்மிகு எழுத்தாளர், ஆளுமை மிக்க பத்திரிகையாளராய் பன்முகத் திறமை பெற்று விளங்கினார்.
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஓயாது எழுதினார். தன் கொள்கைகளைப் பரப்ப பத்திரிகையைத் தொடங்கிய இவர், பின்னாளில் நாட்டுப் பற்றையும், விடுதலை உணர்ச்சியையும் ஊட்டுவதற்குப் பத்திரிகைகளைக் கருவியாகப் பயன்படுத்தினார்.
வங்காள மொழியில் சம்வாத கவ்முதி என்ற வாரப் பத்திரிகை நடத்தினார். அதன்பின், மிராத்-உல்-அக்பர் என்ற முதல் பார்ஸி பத்திரிகையைத் தொடங்கினார். அரசியல், அறிவியல்,இலக்கியம், வரலாறு என்று பல துறை சார்ந்த செய்திகளையும் அவ்வார ஏட்டில் அதிகம் வெளியிட்டு சமுதாயம் பயனுறச் செய்தார்.
இந்தியர்களால் வெளியிடப்படும் பத்திரிகைகள்,நாட்டு விடுதலை வேட்கையைப் பெரிதும் ஏற்படுத்தியதால், பத்திரிகைகளுக்கு ஆங்கில அரசு அதிகக் கட்டுப்பாடுகளை விதித்தது. 1823ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் நாள் பத்திரிகை கட்டுப்பாட்டுச் சட்டத்தை இயற்றி, நடைமுறைப்படுத்தியது.
இச்சட்டத்தைக் கண்டித்து தனது, வாரப் பத்திரிகையில் (மிராத் - உல்-அக்பரில்) கட்டுரைகள் எழுதினார். இவரது இடைவிடாத போராட்டத்தின், வற்புறுத்தலின் விளைவாய், பத்திரிகைகள் மீதான கட்டுப்பாடு ஓரளவிற்குத் தளர்த்தப்பட்டது.
கல்விச் சீர்திருத்தம்
எந்த மக்களும் விழிப்பு பெறவும், அறிவு பெறவும், ஆற்றல் பெறவும், உயர்வு பெறவும் உண்மை காணவும், தன்மானம் பெற்று தலைநிமிரவும், அடிமை நிலையை அகற்றி விடுதலை பெறவும் அடிப்படையானது கல்வி என்பதைத் திட்டவட்டமாக உறுதி செய்தார்.
எனவே, ஒரு சிலரிடம் மட்டும்சிக்கிக் கிடக்கும் கல்வியைப் பரவலாக்கவும், பாமர மக்களுக்குக் கொண்டு செல்லவும் விரும்பினார். அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கும் கல்விக் கூடங்களில் கூட,
சாஸ்திரங்களும், புராணங்களுமே கற்பிக்கப்படுவதை எண்ணி வேதனைப்பட்டார். காலத்திற்கு ஏற்ப உலக அறிவையும், அறிவியல் கருத்துக்களையும், கணிதம், வரலாறு, புவியியல், பொருளாதாரம், அரசியல் போன்ற வாழ்க்கைக்கு உதவும் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்று கூறினார். உலகத் தொடர்புக்கு ஆங்கில மொழி அவசியம் என்றார். சமஸ்கிருதம் பற்றி பெருமை பேசுவதால் எப்பயனும் இல்லை. அதில் அனைத்தையும் பெற முடியாது என்றார்.
ஆங்கிலம் பயில வேண்டும் என்றதால், தாய்மொழியைப் புறக்கணிக்க வேண்டும் என்று அவர் எப்போதும் சொல்லவில்லை. தாய்மொழிக் கல்வி அடிப்படை. அத்தோடு ஆங்கில அறிவு கட்டாயம் என்பதே அவரது கொள்கை. அவரும் பல மொழிகளைக் கற்றார். பார்ஸி, ஹீப்ரு, அரபி, கிரீக், லத்தீன், ஆங்கிலம், பிரெஞ்ச் மொழிகளில் இவர் தேர்ச்சி பெற்று விளங்கினார்.
கல்வியென்றால் சமஸ்கிருதம் என்ற நிலையை மாற்றி, தாய்மொழிக் கல்விக்கும் ஆங்கில மொழி அறிவிற்கும் இவர் வகை செய்தார். இவரது முயற்சியால் ஆங்கில வழிக்கல்வி பரவியது. அதன் மூலம் அறிவியல் மனப்பான்மை வளர்ந்தது. சனாதனப் பிடியிலிருந்து மக்களை மீட்கவும், ஆரிய ஆதிக்கத்திலிருக்கும் மக்களை விழிப்படையச் செய்யவும் அது பயன்பட்டது.
இங்கிலாந்து பயணமும் ஏற்பட்ட இடர்களும்
சதி சட்டவிரோதம் என்று பெண்டிங் பிரபு அறிவித்ததை எதிர்த்து சனாதனப் பேர்வழிகளும் ஆரிய பார்ப்பனர்களும் ஆங்கில ஆட்சியாளர்களிடம் (இங்கிலாந்து) மேல்முறையீடு செய்திருந்தனர். அதை ஆராயப் போவதாக ஆங்கில ஆட்சியாளர்கள் அறிவித்த செய்தி இவருக்குக் கிடைத்தது. எனவே, உண்மையை எடுத்து அவர்களுக்கு விளக்கி, சட்டத்தை உறுதி செய்ய வேண்டும் என்று இவர் முடிவு செய்தார். இல்லையென்றால், ஆரிய பார்ப்பனர்கள், ஆங்கிலேயர்களைக் குழப்பி, ஏமாற்றி சதியை மீண்டும் கொண்டு வரச் சதி செய்துவிடுவார்கள். எனவே, அதில் ஏமாந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கையாக இருந்தார்.
அத்துடன் இவரது நெருங்கிய நண்பரான டில்லி பாதுஷா, தன்னிடமிருந்து ஆங்கில அரசு பறித்த அதிகாரங்களை மீண்டும் பெற, தன் சார்பில் ஆங்கில ஆட்சியாளர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டுமென்று கேட்டுக் கொண்டதால், அவருக்காக வாதாடவும் இங்கிலாந்து செல்ல முடிவு செய்தார்.
ஆனால், கடல் கடந்து செல்வது சாஸ்திர குற்றம், மத விரோதம், என்று கூறி இவரது பயணத்தைத் தடை செய்ய ஆரிய பார்ப்பனர்கள் வெகுவாக முயன்றனர்; வேகமாக முயன்றனர். அவரது குடும்பத்தாரும் ஆரியர்களின் வற்புறுத்தலை ஏற்று, போக வேண்டாம் என்று தடுத்தனர்.
12வயதிலே பிடிவாதமாக வீட்டைவிட்டு புறப்பட்டவர் அல்லவா இராஜாராம் மோகன்ராய், இந்த கூப்பாடுகளையெல்லாம் பொருட்படுத்தவில்லை. 1830-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 15ஆம் நாள், கப்பல் ஏறி இங்கிலாந்திற்குப் பயணமானார்.
பயணத்தின்போது, ஹீப்ரு, மற்றும் சமஸ்கிருதம் படித்துக் கொண்டே சென்றார். இவரது பெயர் இங்கிலாந்திலும் முன்னமே பரவியிருந்ததால், இவரை வரவேற்க மக்கள் ஆவலாய் இருந்தனர். 1831-ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் நாள் லிவர்பூல் சென்றடைந்தார். பல நண்பர்களும் தங்கள் வீடுகளில் தங்கும்படி அழைத்தனர். ஆனால், அவர் உணவு விடுதியில் தங்கினார்.
இராஜாராம் மோகன்ராய்க்கு லண்டனில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆண்,
பெண், சிறியவர் பெரியவர் என்று எல்லோரும் கூடி வரவேற்றனர். பல பத்திரிகையாளர்களும் அவரைப் பாராட்டிப் பேசினர். சதி என்னும் கொடிய வழக்கத்தை ஒழித்து, பெண்ணினத்தைக் காத்த பெருந்தகை என்று பலரும் புகழ்ந்தனர்.
இந்திய விவசாயிகளுக்காக இங்கிலாந்தில் பேசினார்
இந்தியாவை ஆளும் பொறுப்பை இங்கிலாந்து அரசு கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வழங்கியிருந்தது என்று முன்னமே கண்டோம். அந்த உரிமை அவ்வப்போது புதுப்பிக்கப்பட வேண்டும். அதற்காக 1831 மற்றும் 1832-ஆம் ஆண்டிற்குப் புதுப்பிக்கும் பணி நடந்தது.
அந்த அதிகாரம் அளிக்கப்படுவதற்குமுன் ஆங்கில ஆட்சியாளர்கள் கருத்துகளைக் கேட்டறிவது வழக்கம். அப்போது இராஜாராம் மோகன்ராயிடம் கருத்து கேட்கப்பட்டது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, பல கருத்துகளை ஆங்கில ஆட்சியாளர்களிடம் சொல்லி நிவாரணம் பெற்றார்.
இந்திய விவசாயிகளை ஜமீன்தார்கள் இடையில் நின்று சுரண்டுவதைத் தடுத்து, ஏழை விவசாயிகளுக்கு உதவும்படி வேண்டினார்.
இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகம் அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தனது கோரிக்கைகளையும், இந்தியாவின் நிலையையும் விளக்கி கையடங்கு நூல் ஒன்று தயாரித்து ஆங்கில ஆட்சியாளர்களிடம் கொடுத்தார். அதைப் படித்த அவர்கள் மிகவும் தெளிவு பெற்றனர். ஆரிய பார்ப்பனர்களும் சனாதனிகளும், ஜமீன்தார்களும் அப்பாவி மக்களைச் சுரண்டாமல் தடுக்க, அந்த நூல் பெரிதும் உதவியது.
இங்கிலாந்துக்காரர் இவர் பெயர் இட்டார்
டேவிட்சன் என்னும் ஆங்கிலேயர் இவரின் நெருங்கிய நண்பர். இவர் மேலுள்ள அளப்பரிய அன்பினால், பற்றுதலால், தன் மகனுக்கு ராமமோகன் என்று பெயர் சூட்டி பெருமையும் மகிழ்வும் கொண்டார்.
பிரான்சு மன்னர் அளித்த பெரும் வரவேற்பு
இங்கிலாந்தில் பல கூட்டங்களில் கலந்துகொண்ட இராஜாராம் மோகன்ராய், அங்கிருந்து பிரான்சு நாட்டுக்குச் சென்றார். அங்கும் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இவர் வந்ததை அறிந்த மன்னர், இவரை அன்புடன் அழைத்து மிகப் பெரிய வரவேற்பளித்தார். இவர் பிரெஞ்சு மொழியிலும் வல்லவர் என்பதால் மன்னருடன் பிரெஞ்சு மொழியில் பல்வேறு கருத்துக்களைப் பற்றிப் பேசினார். அந்நாட்டைச் சேர்ந்த பல அறிஞர்களும், கல்வியாளர்களும் இவரைச் சந்தித்து உரையாடினர்.
இவரைக் காணத் திரண்ட இங்கிலாந்து கிராம மக்கள்
அதன்பின் 1833-இல் அங்கிருந்து இங்கிலாந்துக்குத் திரும்பினார். இங்கிலாந்திலுள்ள கிராமங்களைப் பார்க்க வேண்டும் என்று விரும்பியவர், பிரிஸ்டல் நகரத்தையொட்டியுள்ள, ஸ்டேவல்டன் குரோவ் என்ற இடத்திற்குச் சென்றார். அங்குள்ள இயற்கைக் காட்சிகள் அவரைப் பெரிதும் கவர்ந்தன. அங்குள்ள விவசாயிகளையும், தொழிலாளர்களையும் சந்தித்து, அவர்களுடன் உரையாடி மகிழ்ந்தார்.
அருகிலுள்ள கிராமங்களுக்கும் அவர் வந்திருக்கும் செய்தி பரவவே, அந்த மக்களும் இவரைச் சந்திக்க ஆவலுடன் வந்தனர். எல்லோருடனும் இன்முகத்துடன், கவர்ச்சியான வார்த்தைகளால் பேசினார்.
இதன் விளைவாய் அங்கு ஒரு பெருங்கூட்டமே கூடிவிட்டது. அவருடைய சொற்பொழிவைக் கேட்க மக்கள் திரண்டனர். அவருடைய பொருள் பொதிந்த, அறிவு நிறைந்த, சரளமான ஆங்கிலப் பேச்சில் அனைவரும் மயங்கினர். மக்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கும் அவர் பதில் அளித்தார். மக்கள் அனைவரும் இவரைப் பற்றியே பல நாள்கள் பேசினர். கிராமத்து வாழ்க்கை இவருக்கு மிகவும் பிடித்துப் போனதால், அங்கேயே தங்கினார்.
அந்நிய மண்ணில் அடக்கமான அதிசய மனிதர்
1833ஆம் ஆண்டு செப்டம்பர் 19-ஆம் நாள் இராஜாராம் மோகன்ராய் அவர்களுக்குக் கடுமையான காய்ச்சல் வந்தது. நாளுக்கு நாள் அது அதிகமாயிற்று. திறமைமிக்க மருத்துவர்கள் பலர், அக்கறையுடன் மருத்துவம் பார்த்தனர். நண்பர்கள் பலரும் அருகிலிருந்து அனைத்தும் செய்தனர். என்றாலும் வென்றது நோய்! நின்றது மூச்சு. ஆம்.
1833ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் நாள் இராஜாராம் மோகன்ராய் மரணமடைந்தார்.
உயிர் பிரிவதற்கு முன், கிறித்துவச் சடங்குகள் படியோ, அல்லது கிறித்துவர்கள் கல்லறைப் பகுதியிலோ தன் உடலைப் புதைக்கக்கூடாது என்று கேட்டுக் கொண்டார்.
அவரின் விருப்பப்படியே ஒரு தனியார் தோட்டத்தில், எவ்விதச் சடங்கும் இன்றி, அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
அதன்பின், இரவீந்திரநாத் தாகூரின் தாத்தா தேவேந்திரநாத் தாகூர் இங்கிலாந்திற்குச் சென்றபோது, இராஜாராம் மோகன்ராயின் உடலை அங்கிருந்து எடுத்து, பிரிஸ்டல் நகரில் ஓர் அழகான இடத்தில் அடக்கம் செய்து, அழகிய சமாதி அமைத்தார். இன்றும் அங்கு அதைக் காணலாம்.
துள்ளித் திரிகின்ற பள்ளிப் பருவத்திலே, மக்களைப் பற்றியும், மடமை ஒழிப்புப் பற்றியும் சிந்தித்து, சீர்திருத்தங்கள் பலவற்றைச் செய்து, பெண்ணுரிமை பெற்றுத் தந்து உடன்கட்டை ஏற்றப்பட்ட கொடிய வழக்கத்தினின்று பெண்களைக் காத்து அரும்பணியாற்றிய அம்மாமனிதரை மறக்கலாமா? மறைக்கலாமா? அவர் பெருமை போற்றுவோம், அகிலத்தை மாற்றுவோம்!
வாழ்க இராஜாராம் மோகன்ராய் புகழ்!
நூல் - மறைக்கப்பட்ட மாமனிதர்கள்
ஆசிரியர் - மஞ்சை வசந்தன்
Comments
Post a Comment