அயோத்திதாச பண்டிதர் (கி.பி. 1845 - 1914)
1845 ஆம் ஆண்டு சென்னை தேனாம்பேட்டையில், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில்
கந்தசாமி என்பவருக்கு மகனாகப் பிறந்த அயோத்திதாசர், தேர்ந்த சிறந்த
ஆய்வுநுட்பங் கொண்ட மருத்துவர். தென்னகத்தில் புத்தம் மறுமலர்ச்சியடைய
காரணமாய் அமைந்தவர். மனித விரோத ஜாதி, மதம், தீண்டாமை இவற்றிற்கு எதிராய்
மிகத் தீவிரமாய்ப் போராடியவர். அவர் நடத்திய போர் அறிவு சார்ந்தது. தனது
புலமையினால், ஆய்வு நுட்பத்தினால் உண்மைகளைக் கொண்டு வந்து, எதிரிகளின்
சூழ்ச்சியை வீழ்த்தியவர்.
ஆதிதிராவிடர்கள் தொடக்கத்தில் பவுத்தர்களே என்பதை வரலாற்றுத் தடயங்களோடு
உறுதி செய்தவர். அயல்நாடுகளிலிருந்து வந்தேறிய ஆரியப் பார்ப்பனர்களின்
ஆதிக்கத்திற்கு எதிராய் உறுதியுடன் போராடியவர்.
அமெரிக்க மக்கள் உரிமைப் போராட்ட வீரர் கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட்
அவர்களின் நெருங்கிய நண்பர். தீண்டத் தகாதவர்களாய் ஒதுக்கி வைக்கப்பட்ட
மக்களின் கல்வி மேம்பாட்டிற்காகவும் பாடுபட்டவர். சென்னை அடையாறு பகுதியில்
தியோசபிகல் சொசையிட்டி யை 1884இல் நிறுவக் காரணமாய் அமைந்தவர்.
1894இல் கர்னல் ஆல்காட் அவர்களுடன் இலங்கை போன்ற பௌத்த நாடுகளுக்கு
சென்று பவுத்த தர்மக் கொள்கைகளை விளக்கிப் பேருரையாற்றியவர். தென்னிந்திய
சாக்கிய பவுத்த சங்கத்தைச் சென்னையில் நிறுவியவர். இந்தச் சங்கம்தான்
பிற்காலத்தில் தென்னிந்திய பவுத்த சங்கம் என்ற பெயரில் செயல்பட்டது.
ஒடுக்கப்பட்ட மக்களிடையே மீண்டும் பவுத்தத்தைப் பரவச் செய்ய, தமிழன் என்ற
இதழை நடத்தினார்.
ஆதிதிராவிடர்கள் பவுத்தர்கள்; அவர்களை இந்துக்களுடன் சேர்ந்து சென்செஸ்
கணக்கெடுக்கக்கூடாது என ஆங்கில அரசிடம் கோரிக்கை வைத்தார். இவரது
கோரிக்கையில் உள்ள நியாயத்தை அறிந்த ஆங்கில அரசு, 1910ஆம் ஆண்டு சென்செஸ்
முதல், ஆதிப் பழங்குடியினர் ஒரு தனித் தேசிய இனம் என்று கணக்கிடப்பட்டது.
1954-இல் சென்னைக்கு வந்த அண்ணல் அம்பேத்கர் அவர்கள், அயோத்தி தாசரின்
பவுத்த இலக்கியங்களைத் தேடி சேகரித்துத் தம்முடன் கொண்டு சென்றார்.
அம்பேத்கரின் உள்ளத்தில் உயர்ந்த இடத்தை பிடித்தவர் அயோத்திதாசர் என்றால்,
அவர் பணி எத்தகையது என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளலாம். பவுத்தம் பற்றிய
சிந்தனை அம்பேத்கர் உள்ளத்தில் வேரூன்றவும், தாழ்த்தப்பட்டவர்களுக்குப்
பௌத்தம் தகுத்த பாதுகாப்பிடம் என்பதை அவர் உணரவும் அயோத்தி தாசரே காரணமாய்
அமைந்தார். ஒடுக்கப்பட்டோரின் உரிமைகள் எங்கு பறிக்கப்படுகிறதோ, எங்கு
அவர்கள் இழிவாக, அடிமைகளாக நடத்தப்படுகிறார்களோ அங்கெல்லாம் தலையிட்டுக்
கிளர்ச்சி செய்ய வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்திய பெருமை இவரைச் சாரும்.
பின்னால் வந்த சமூகத் சீர்திருத்தத் தலைவர்களுக்கு இவர் முன்னோடியாகவும்
அமைந்தார்.
ஒடுக்கப்பட்டவர்கள் கல்வி பெறுவதன் மூலமே தம்மை உயர்த்திக் கொள்ள
முடியும் என்பதால், அவர்களின் கல்விக்காகப் பள்ளிகளைத் திறக்கவும், அங்கு
பகலுணவு இலவசமாக அளிக்கவும் பின்னால் வந்தவர்கள் செய்த விரைவான
நடவடிக்கைகளுக்கு விதையிட்டவர் இவரேயாவார்.
ஆரியப் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ளவும்,
அறிவைத் திருடவும், தமிழ் இலக்கியங்களில் அவர்கள் செய்த செருகல்கள்,
தில்லுமுல்லுகள் எல்லாவற்றையும் சான்று காட்டி வெளிப்படுத்திய மாபெரும்
பண்டிதர் இவர்.
எனவேதான் திரு.வி.க. அவர்கள், அயோத்திதாசரை, நூல் பல கற்ற சால்பினன்
என்றும், வல்லவர் போற்றும் கல்விமான் என்றும், இல்லறம் என்னும் நல்லறம்
ஏற்று விருந்தினரை ஓம்பி இருந்தவன் என்றும், செந்தமிழ் பூண்ட அந்தணன்
என்றும், பொறுமைக்கோர் உறைவிடம் என்றும் பாராட்டினார்; சிறப்பித்தார்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்து இந்தச் சிறப்புகளைப் பெற எவ்வளவு
கற்றிருக்க வேண்டும். எவ்வளவு எதிர்ப்புகளுக்கும், இடர்பாடுகளுக்கிடையேயும்
கற்றிருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்த்தால் நாம் வியப்படைய வேண்டியே
வரும். உயர்குடியில் பிறந்த கல்வியாளர்களுக்கு இணையாகவும்,
ஆய்வுநுட்பத்தில் அறிவாற்றலில் அவர்களுக்கு மேலாகவும் விளங்கினார். தமிழ்,
ஆங்கிலம், பாலி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றிருந்தார்.
மேலும், ஆகமம் புராணம் இதிகாசம் மறைகோசங்கள்
அத்வைதம் வசிட்டாத்வைதம்
சமண முனிவர்களின் பஞ்சகாவியம் கலைஞானம்
ஆயுர்வேதம் தத்துவம்
யோகநிலை சாத்திரம் சித்தர்நூல் பக்தி நெறி
யுகமோடு பலது மாய்ந்து சிறந்தவர்...
என்று அவரைப் பற்றி சிறப்பித்துப் பாடினர்.
பாலி மொழியிலிருந்த திரிபிடகம், வடமொழியில் (சமஸ்கிருதத்தில்) இருந்த
வேதங்கள் உபநிடதங்களையும், தமிழில் ஓலைச்சுவடிகளில் இருந்த தொல்காப்பியம்,
புறநானூறு, திருமந்திரம், சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி,
வளையாபதி, குண்டலகேசி, சூளாமணி, நல்லாப்பிள்ளை பாரதம், சிவ வாக்கியம்,
தேவாரம், பெருந்திரட்டு, சிறு திரட்டு, பெருங் குறவஞ்சி, ஏரெழுபது போன்ற
இலக்கியங்களையும், திருக்குறள், நாலடியார், திரிகடுகம், அறநெறிச்சாரம்,
நல்வழி, ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், நீதிவெண்பா, மூதுரை போன்ற அற
நூல்களையும், பட்டினத்தார், பத்திரிகிரியார், தாயுமானவர், மச்சமுனி,
இடைக்காட்டுச் சித்தர், அகப்பேய் சித்தர், கடுவெளி சித்தர் போன்ற
துறவியாரின் பாடல்களையும், ஞானத்திரட்டு, ஞானபேதம், ஞானவாசிட்டம்,
பதஞ்சலியார் ஞானம், சொரூபசாரம், தருக்க கௌமுகி, சிவயோக சாரம் போன்ற சமய
நூல்களையும், அரிச்சந்திர புராணம், வாதவூர் புராணம் போன்ற புராணங்களையும்
தெளிவாகக் கற்றார். எட்வின் ஆர்னால்டு எழுதிய ஆசியாவின் ஒளி (டுபைவ டிக
ஹளயை) என்ற நூலிலிருந்தும் மற்றைய மொழி நூல்களிலிருந்தும் அவர் மேற்கோள்களை
எடுத்துக் காட்டி எழுதியது, பேசியது, அவருக்குள்ள படிப்பறிவைக் காட்டியது.
ஆதிக்கவாதிகளான மேல்ஜாதியினருடன் எதிர்த்து மோத இந்த அறிவு அவசியம் என்ற
கட்டாயத்தில் எல்லாவற்றையும், பயின்றார். காரணம் இவர் வன்முறைப் போரை
விரும்பாமல், அறிவாயுதம் ஏந்தி எதிரியை வீழ்த்த முடிவு செய்தார்.
நம்மை நெடுநாளாக ஏமாற்றி வருகிற பிராமணக் கொள்கை மிகத் தந்திரமானது.
அதன் லக்ஷணமோ நம்மைக் கவரும் மந்திரத்தால் கட்டப்பட்டுள்ளது. அது இருண்ட
இந்தியா என்னும் பெரிய மரமாகும். அம்மரத்திற்குக் கடவுள், மதம், வேதம்,
ஜாதி என்ற நான்கு கிளைகள் உண்டு. அக்கிளைகள் நடுவில் இந்து என்னும் கூடு
கட்டியுள்ளது. அக்கூட்டில் மும்மூர்த்தி மதம் என்னும் கல் முட்டை இட்டு,
அதை ஆரியப் பார்ப்பனர் என்ற கழுகு அடைகாத்துள்ளது. தன் கல் முட்டையைப்
பொன்முட்டை என்று சொல்லி இந்திய மக்களின் மதியை மயக்கி வருதலைக் கண்ணிற்
கண்டும், காதாற் கேட்டும், மனதில் உணர்ந்தும் கவலையற்றிருக்கிறோம்.
ஆராய்ச்சி என்னும் கல்லெறிந்து அந்தக் கழுகைக் துரத்தாமலும், சமதர்மம்
என்னும் வாள்கொண்டு மரத்தை வெட்டிக் கூட்டை வீழ்த்தாமலும் பவுத்தம் என்னும்
சஞ்சீவியை அக் கல் முட்டைமீது செலுத்தி, முட்டையை உடைத்து உண்மையை
அறியாமல் அமைதியாய் இருக்கிறோம் என்று ஆய்வு நுட்பத்தோடும்,
அறிவுநுட்பத்தோடும், இலக்கிய நயத்தோடும், எளிய எடுத்துக் காட்டோடும்
பேசினார்.
- (ஆதாரம்: அயோத்தி தாச பண்டிதர் சிந்தனைகள் -1)
மேலும், பறையர் அவர் பார்ப்பார் இவர் என்ற பாகுபாட்டை வெட்டி வீழ்த்த வேண்டும் என்று சூளுரைத்தார்.
இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர்களை ஊருக்குப் புறத்தே ஒதுக்கித் தள்ளி,
அவர்கள் பொது வீதியில் நடக்கக்கூடாது, பொதுக் கிணற்றில் தண்ணீர்
எடுக்கக்கூடாது, நல்ல குடிநீர் குடிக்கக்கூடாது, படிக்கக் கூடாது, நல்ல
பெயர்களைக் கூடச் சூட்டிக் கொள்ளக் கூடாது, பொதுக்கோயிலில் வழிபடக்கூடாது,
தீண்டிக் கொள்ளக்கூடாது என்று வந்தேறிய அந்நிய நாட்டு ஆரியர்கள் அநியாயமாக
கூறுவதை ஏற்றுக் கொண்டு வாழலாமா? என்று சொந்த உரிமை பற்றியும்,
சுயமரியாதைப் பற்றியும் உணர்வூட்டினார்.
உலக வாழ்க்கையோ தேருருளை ஒத்தது. தேருருளை கீழது மேலதாய் வருவதுபோல்,
தாழ்ந்தவன் உயர்ந்தவனாகவும், ஏழை கனவானாகவும் உயரும்படியான காலம் உண்டாகும்
என்றார். அதாவது, தேர்ச்சக்கரமானது சுழலும்போது அடியிலுள்ள சக்கரப் பகுதி
மேலே வரும், மேலே இருந்த சக்கரப் பகுதி அடியில் வரும் அதுபோல, இன்றைக்கு
ஒதுக்கி, தாழ்த்தி, வீழ்த்தப்பட்டுள்ள மக்கள் விரைவில் மேலே வருவர்;
ஆதிக்கம் செலுத்தும் மேட்டுக்குடிகள் கீழே செல்வர் என்ற அனுபவப் பாடத்தைக்
கூறி எதிரிகளை எச்சரித்தார்; தம் மக்களுக்கு நம்பிக்கையூட்டினார்.
ஆதிக்கவாதிகளின் சுயநலப் போக்கைக் கண்டு கொதித்த பண்டிதர், தன் சுகத்தை
நாடாது பிறர் சுகத்தை நாடுவது உத்தமம்; தன் சுகத்தையும் பிறர் சுகத்தையும்
நாடுவது மத்திமம்; தன் சுகத்தையே நாடி, பிறர் சுகத்தைக் கெடுப்பது அதர்மம்
என்று கூறினார். ஆரியப் பார்ப்பனர்களும், ஆதிக்கவாதிகளும் மூன்றாம்
தரப்பினர் என்று அடையாளம் காட்டினார்.
ஆதிக்க வர்க்கத்தினரை வன்முறையால் எதிர்க்க விரும்பாத பண்டிதர் தன் அன்பான வார்த்தைகளாலே அவர்களைச் சுட்டார்.
சென்னை மகாசபைக் கூட்டத்தில், அவைத் தலைவரைப் பார்த்து, அய்யா,
உலகத்திலுள்ள சகல ஜாதியாருக்கும் தெய்வம் பொது என்றும், கோயில் பொது
என்றும் சொல்லக் கேட்டிருக்கேன். அங்ஙனமிருக்க இக்குலத்திலுள்ள
(தாழ்த்தப்பட்ட குலத்திலுள்ள) வைணவ மதத்தோரை விஷ்ணு கோயில்களுக்குள்ளும்,
சைவ மதத்தோரை சிவன் கோயில்களுக்குள்ளும் ஏன் சேர்க்கக்கூடாது (ஏன் செல்ல
அனுமதிக்கக்கூடாது) அப்படி சேர்ப்பதினால் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி
வாழ்க்கை சுகமடையமாட்டார்களா? மதங்களும் பிரபலமடையாதா? என்று கேட்க, உடனே
தஞ்சாவூரிலிருந்து வந்திருந்த பிரதிநிதியான ம.அ.அ.சிவராம சாஸ்திரி எழுந்து
உங்கள் குலத்தோருக்கு மதுரை வீரசாமி, காட்டேரி சாமி, கருப்பண்ண சாமி
கொடுத்திருக்கிறோம். சிவன்சாமியும் விஷ்ணுசாமியும் உங்கள் குலத்தோருக்கு
உரியதல்ல என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தார். உடனே பண்டிதர், அப்படியானால்
உங்கள் சாமி எங்களுக்கு வேண்டாம். எங்கள் குலத்துச் சிறுவர்களுக்கு
கிராமங்கள் தோறும் கல்விச்சாலைகள் வைத்து, நான்காம் வகுப்பு வரை இலவசக்
கல்வி கொடுப்பதற்கும், எம் மக்களில் நிலமற்றவர்களுக்கு, பயிரிடப்படாமல்
கிடக்கும் நிலங்களைக் கொடுத்து ஆதரிக்கும்படி, அரசாங்கத்திற்கு நீங்கள்
சிபாரிசு செய்யலாகாதோ என்று கேட்டார்.
இங்குதான் பண்டிதரின் அறிவுக்கூர்மையும், தம் இனம் முன்னேறுவதற்கான
துடிப்பும் வெளிப்படுகின்றன. கோயிலுக்குள் செல்ல அவர் உரிமை கேட்டது
உரிமையைப் பெற; கல்விக்கூடங்கள் கேட்டது படித்து விழிப்பு பெற; நிலங்கள்
கேட்டது பொருளாதாரத்தில் உயர்வு பெற. ஆக, தம் மக்கள் கல்வி, செல்வம், உரிமை
இவற்றைப் பெற வேண்டும் என்பதில் அக்கரையோடு இருந்தார் என்பதும், கோயிலைவிட
அவர் கல்விக்கூடங்கள் அமைப்பதிலேதான் ஆர்வம் காட்டினார் என்றும் இதன்மூலம்
விளங்குகிறது. எனவேதான், குலதெய்வ வழிபாடுகளைத் தலித் மக்கள் விட வேண்டும்
என்றும், ஜாதிப் பிரிவுகளைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தும் கிறித்தவ மதம்
வேண்டாம் என்றும், சமதர்மத்தையும், அறிவையும் போதிக்கும் புத்த மதத்தையே
தாழ்த்தப்பட்டோர் தழுவ வேண்டும் என்றும் கூறினார்.
இந்து மதத்துக்கு ஜாதிப் பிரிவினர்கள் ஆதாரம்; ஜாதிப் பிரிவினருக்கு
இந்து மதம் ஆதாரம் என்று கூறியவர், மேல், கீழ், ஜாதிப் பிரிவிற்குப்
பொருளாதாரமே அடிப்படையென்றும் தெளிவுபடுத்தினார்.
ஜாதி இந்துக்கள் தங்கள் மதத்தை மாற்றாமலே முன்னேறும் போது, தலித்துகளை
மட்டும் அவ்வாறு முன்னேறுவதற்காக கிறித்துவ, இஸ்லாம் மதம் மாறச் சொல்வதை
எதிர்த்தார். நல்லவை, பயனுள்ளவை, சுத்தமானவை, பொருளாதார ஆதாயமும்
ஆதிக்கமும் தரக்கூடியவை, தலித்துகளிடமிருந்து திட்டமிட்டு ஜாதியடிப்படையில்
இது சாஸ்திர அடிப்படையில் விலக்கி வைக்கப்பட்டிருப்பதை எடுத்துக்
காட்டினார். பொருளாதாரக் காரணிகள் சாஸ்திர ஆசாரங்களிலிருந்து ஒருவனை வெளிக்
கொண்டு வரும் என்று இவர் எண்ணினார். அதற்கு ஓர் எடுத்துக்காட்டையும்
கூறினார்.
பிரிட்டிஷ் இராணுவத்திலும், மருத்துவத்துறையிலும், கிறித்துவ மிஷனரி
கல்விக்கூடங்களிலும், முதலில் உயர் ஜாதிக்காரர்கள் தங்கள் ஜாதி, மத
ஆசாரங்களினால் (இவற்றில்) சேர மறுத்தனர். ஆனால் இத்தடைகள் இல்லாத
தாழ்த்தப்பட்ட தலித் மக்களின் கல்வி, பொருளாதாரம் மேம்பாடு அடைந்தது. இதைக்
கண்ட உயர்ஜாதியினர், தங்கள் ஜாதிக் கட்டுப்பாடுகள், சாஸ்திர
விதிகளையெல்லாம் ஒதுக்கி தள்ளிவிட்டு இவற்றில் சேர்ந்தனர். இதன்மூலம்
தலித்துகள் அங்கிருந்தும் வெளியேற்றப்படும் நிலை அல்லது அதில் மேற்கொண்டு
சேர முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த இடத்தில் இரண்டு சிந்தனைகள் மற்றும் முடிவுகள் நமக்குக்
கிடைக்கின்றன. ஜாதி ஒழிக்கப்பட வேண்டும் என்றால், தாழ்த்தப்பட்ட
மக்களுக்குப் பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை கொடுக்க வேண்டும்.
மற்றும் அவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களுக்கு உறுதியான ஒதுக்கீடு
வேண்டும் என்ற முடிவுகளே அவை.
உயர்ந்த ஜாதியில் பிறந்தேன், கல்வியில் சிறந்தேன் என்று
சொல்லக்கூடியவர்களெல்லாம் என்ன சாதித்தார்கள்? மதம், கடவுள், ஜாதி
சார்ந்தவற்றைப் புதிது புதிதாக வளர்த்தார்களே தவிர, மேலை நாட்டாரைப் போல,
நீர்ப்பாய்ச்ச எந்திரம், டெலிகிராப், ஸ்டீம் ரெயில், ஆலை எந்திரங்கள் என்று
எதையாவது கண்டுபிடித்தார்களா? இல்லை. ஆனால், இவைகளை ஆதிக்கவாதிகளே தம்
வசம் வைத்துக் கொண்டு, அவர்களை ஜாதி ஆதிக்கமும் மத ஆதிக்கமும் அழியாமல்
காக்க, வளர்க்க, இந்த அறிவியல் சாதனங்களைப் பயன்படுத்திக் கொண்டார்கள்
என்றால் எவ்வளவு சரியான உண்மை பாருங்கள். இன்று வந்துள்ள கம்ப்யூட்டர்,
தொலைக்காட்சி இவற்றை நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தாமல், ஜாதி, மதம்,
மூடநம்பிக்கையை வளர்க்கத்தானே பயன்படுத்துகிறார்கள்? ஆரிய சூழ்ச்சியை
எப்படிக் கணித்து கருத்துக் கூறியுள்ளார் பாருங்கள்!
பொது பயனுக்காகத் தொடங்கப்படும் சங்கங்கள் அமைப்புகள் கூட தங்களுக்குள்
ஜாதி, மத நோக்கங்களை உள்ளடக்கியே தொடங்கப்படுகின்றன என்பதை
எடுத்துக்காட்டோடு விளக்கினார்.
பெனாரஸ் இந்து யுனிவர்சிட்டி என்று தொடங்கு கிறார்கள். கல்விக்கூடம்
தொடங்கப்படும்போதே ஒரு மதத்தின் சார்பு. இந்து என்னும் பெயர் தோன்றிய போதே
அதனுள் ஜாதி வித்தியாசமும், மத வித்தியாசமும் இருந்தே தீர வேண்டும் என்பதே
பிரத்தியட்ச அனுபவம் (வெளிப்படையான உண்மை) என்பதை எடுத்துக் கூறினார்.
உழைக்கும் மக்களை ஜாதியின் பேரால் ஒதுக்கி, அவர்களிடமிருந்த
நிலவுரிமையைப் பறித்துக் கொண்டதால்தான் இந்நாட்டில் அப்போதிலிருந்தே பசி,
பிச்சை, வறுமை பற்றாக்குறையென்று பலவும் வந்து சேர்ந்தன. தொடர்
வறுமைக்கும், இந்து சமுதாய அமைப்பிற்கும் உள்ள தொடர்பை முதன்முதலில்
ஆய்ந்து கூறியவர் அயோத்திதாசரே ஆவார்.
இந்து மதத்தோடும் அதன் ஜாதியத்தோடும் தொடர்பு உடைய எதுவானாலும் அது மனித
இனத்துக்குப் பொதுவான நன்மையைத் தரும் தகுதியை அற்றது என்பதே உண்மை என்ற
சரியான கருத்தைத் தெளிவாகக் கூறினார்.
இந்தி மொழி இந்து மதத்தோடு தொடர்புடையது என்பதால் அதற்குப்
பொதுமொழியாகும் தகுதி அறவே கிடையாது. ஆங்கிலம் மட்டுமே அத்தகுதிக்கு உரியது
என்று கணித்துச் சொன்னார்.
ஜாதி பேதத்தை நிலைநாட்டும் இந்துமதம், சிலருடைய தன்னலத்திற்காக,
அவர்களது பிழைப்புக்காக, அவர்களது ஆதிக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டதே தவிர,
பொது நலன்கருதி உருவாக்கப்பட்டது அல்ல என்ற அப்பட்டமான உண்மையையும்
ஆணியடித்தாற் போன்று கூறினார்.
இந்துமதம் என்று ஆரியர்கள் கூறுவது கற்பனையானதே. அது ஆகாயக் கோட்டையும்,
அந்தரப்பூவும் போன்றதே! இந்துமதம் எது என்று கேட்டால், அது சைவ மதம், வைணவ
மதம், வேதாந்த மதம், விசிட்டாத்துவ மதம் என்று வேறு வேறுபட்ட மதங்களைக்
கூறி மக்களை மயக்குகிறார்கள் என்று சரியான சவுக்கடி கொடுத்தார் பண்டிதர்.
இந்தியாவின் பொற்காலம் என்பது, புத்த மதம் ஓங்கியிருந்த காலமே!
கருணையும் அன்பும் நிலைத்திருந்த அக்காலத்தில்தான் எல்லோரும் வளமாக, நலமாக
வாழ்ந்தார்கள். ஆனால், அதைப் பொறுக்காத கயவர்கள், மக்களை ஏமாற்றி, மாற்றுக்
கருத்துக்களை கவர்ச்சியைப் புகுத்தி, தன்னல நோக்கர்கள் புத்தத்தை அழித்து,
ஆதிக்க நெறிகளை புராணம், சாஸ்திரம், மதம் என்ற பெயரில் மக்கள் மனதில்
ஏற்றி, நாட்டையும் மக்களையும் சீரழித்தனர். அதன் விளைவாய் ஆக்கப்பணிகள்
குறைந்து, பஞ்சமும் வறுமையும் பெருகின என்றார்.
ஆரியர்களுக்கென்று சொந்த அறிவுத்திறன் எதுவும் இல்லை என்றும்,
தமிழர்களுடையதை, புத்தருடையதை, வள்ளுவருடையதைத் திருடி, அதைத் தங்கள்
மொழியில் பெயர்த்து, அந்தச் சிறந்த கருத்துக்கள் தங்களால் கூறப்பட்டதாக ஒரு
பொய்ப் பிரச்சாரம் செய்து மக்களை நம்பச் செய்தனர் என்று ஆய்வு செய்து
கூறினார் அயோத்திதாச பண்டிதர்.
புத்தர் அருளிய நெறியிலிருந்தே ஆரியர்கள் தங்கள் உபநிடதங்களை உருவாக்கினர் என்பதும் இவர் கருத்து.
கவுடல்லியரின் அர்த்த சாஸ்திரம் திருக்குறளிலிருந்து திருடி
எழுதப்பட்டது. அதிலுள்ள பல செய்திகள் திருக்குறள் கருத்துகளைத் திருத்தி
தங்கள் வசதிக்கேற்ப ஆரியர்களால் எழுதப்பட்டது என்பது இவர் முடிவு.
மனு முதலான ஆரிய நூல்கள் உழவுத் தொழிலை இழி தொழில் என்று கூறிய
நிலையில், அர்த்த சாஸ்திரம் உழவுக்குச் சிறப்பிடம் அளித்தது. இது
திருக்குறளை ஏற்றதன் விளைவு என்றார். அர்த்த சாஸ்திரம் கி.பி. நான்காம்
நூற்றாண்டில் எழுதப்பட்டது என்று மேலைநாட்டு ஆய்வாளர்கள் கூறும் முடிவும்
இதை உறுதி செய்கிறது. மேலும் அர்த்த சாஸ்திரம் ஒரு தொகுப்பு நூல் மட்டுமே.
இதற்கு முன்னிருந்தோர் கூறிய கருத்துக்களைத் தொகுத்து உருவாக்கப்பட்டது
இது என்பதும் ஆய்வின் மூலம் புலப்படுகிறது.
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை என்ற குறளின் அடிப்படையில்தான் அர்த்த சாஸ்திரத்தில் உழவின் சிறப்பு கூறப்பட்டது.
அர்த்த சாஸ்திரத்தின் முதல் அத்தியாயத்திலும் பத்தாம் அத்தியாயத்திலும் அரசன் ஆராய்ந்து அறிவது பற்றி கூறப்படும் கருத்து.
அறம் பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறம்தெரிந்து தேறப் படும்
என்ற குறளிலிருந்து பெறப்பட்டது.
அமைச்சர் இயல்பு பற்றி அர்த்த சாஸ்திரத்தில் கூறப்படும் கருத்து.
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்
என்ற குறளிலிருந்து பெறப்பட்டது.
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு
என்ற குறளின் கருத்தையே,
பொருளை அடைதலும், பெற்றன காத்தலும், காத்தவற்றை வளர்த்தலும், அவற்றை
நல்வழியில் பயன்படுத்தலும்.. என்ற அர்த்த சாஸ்திரப் பகுதி ஏற்றுக்
கூறுகிறது.
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம்
என்று வள்ளுவர் கூறியதையே,
கொடுந்தண்டம் மக்களை நடுக்கமுறச் செய்யும்; குறைந்த தண்டம்
அவமதிக்கப்படும்; தகுதியான தண்டம் நன்கு மதிக்கப்படும் என்று அர்த்த
சாஸ்திரத்தில் விளக்கப்பட்டுள்ளது.
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்
என்ற வள்ளுவர் கருத்தையே,
மகிழ்ச்சியுடையாரை மிகுதியாகப் போற்றுதல் வேண்டும். மகிழ்ச்சியல்லாதாரை
மகிழ்விக்கும் பொருட்டுப் பொருட் கொடையாலும், இன்சொற்களாலும் சிறப்பிக்க
வேண்டும் என்று அர்த்த சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
பொருள்கருவி மூலம் வினைஇடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்
என்று குறள் கூறுவதை,
காரியத்தைத் தொடங்குவதற்குரிய உபாயம், வினை செய்வாரும் பொருளும் நிரம்ப
உடைமை, ஏற்ற காலம், இடங்களை அறிதல், இடையூறு களைதல், காரியத்தின் பயன்
என்னும் அய்ந்தும் சூழ்ச்சிக்கு உறுப்புகளாகும்.. என்று அர்த்த சாஸ்திரம்
கூறுகிறது.
அமைச்சர்க்குரிய குணங்கள் நிறைந்த தொழில் தலைவர் எல்லோரும் அவரவர்
ஆற்றற்கேற்பக் காரியங்களில் நியமிக்கத் தக்கவராவர்.. என்று அர்த்த
சாஸ்திரம் கூறுகிறது.
இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
என்ற குறளிலிருந்து பெறப்பட்டது.
அது மட்டுமல்ல, மனு, பிருகஸ்பதி, சுக்கிரன், துரோணாச்சாரியார், பராசரர்,
நாரதர், வீட்டுமர், உத்தமர், இந்திரன் போன்றவர்களின் கருத்துக்களை தாம்
எடுத்துக் கூறியதாகக் கூறும் (ஒத்துக் கொள்ளும்) கவுடில்யர்,
வள்ளுவரிடமிருந்து எடுத்ததாகக் கூறவில்லை. தமிழன் அறிவைப் பயன்படுத்துவதைத்
திட்டமிட்டு மறைத்திருக்கிறார் என்பது விளங்கும். திருவள்ளுவர்தான்
எழுதினார் என்பது தெரியாமல் போயிருப்பினும், திருக்குறளில் இருந்து
எடுக்கப்பட்டதை ஒப்பியிருக்க வேண்டுமல்லவா?
அர்த்த சாஸ்திரம் போலவே சுக்கிர நீதியும் ஒரு தொகுப்பு நூல். மேலும்
ஏராளமான இடைச் செருகல்களையும் உடைய நூல். சுக்கிர நீதியும் திருக்குறள்
கருத்துக்களைப் பல இடங்களில் எடுத்தாள்கிறது.
சுக்கிர நீதியும் உழவுத் தொழிலைக் குறள்வழி நின்று ஏற்றிப் போற்றுகிறது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்
என்ற குறள் கருத்தும்
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்
என்ற குறள் கருத்தும் சுக்கிர நீதியின் முதல் அத்தியாயத்திலும், மூன்றாம் அத்தியாயத்திலும் எடுத்தாளப்படுகிறது.
திருக்குறள் எழுதப்பட்டு பல நூற்றாண்டுகள் கழித்தே சுக்கிர நீதி
எழுதப்பட்டது என்பதை கா.சுப்பிரமணியம் பிள்ளை தனது ஆய்வின் மூலம்
கூறுகிறார். சுக்கிர நீதியின் காலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டு என்கிறார்.
அதேபோல், காம சூத்திரம், வள்ளுவரின் காமத்துப் பாலிலிருந்து
கருத்துக்களைப் பெற்றே பல செய்திகளைக் கூறுகிறது. ஆனால், காம சூத்திரம்,
காம உடல் உணர்வை விளக்குவது. வள்ளுவம் உள்ளத்து உணர்வுகளை மென்மையாய்
கூறும் இலக்கியம்.
தமிழ் நூலான திருக்குறளை மூலமாகக் கொண்டே, ஆரிய நூல்களான சுக்கிர நீதி,
அர்த்த சாஸ்திரம், காம சூத்திரம் போன்றவை எழுதப்பட்டன என்ற அயோத்தி தாசரின்
ஆய்வு, அவரது கூர்மையான ஆய்வுநுட்பத்தைக் காட்டுவதோடு ஆரியர் சூழ்ச்சியைச்
சரியாக வெளிக் கொணர்ந்து அவர்களின் மோசடியை, முகத்திரையைக் கிழித்த
திறத்தையும் காட்டுகிறது.
அதேபோல் திருவள்ளுவரின் பெற்றோர் பற்றி ஆரியர்கள் எழுதிச் சேர்த்த அயோக்கியத்தனமான கட்டுக்கதையை, பிய்த்து எறிந்தார் பண்டிதர்.
1825ஆம் ஆண்டு, ஆங்கில அறிஞர் எல்லீஸ், ஒரு தமிழ்ச்சங்கத்தை ஏற்படுத்தி,
அதற்குப் பல்வேறு இடங்களிலிருந்தும் ஓலைச்சுவடிகளை திரட்டிக் கொடுத்தார்.
அப்போது ஆரிங்டன் என்பவர் தன்னிடமிருந்த திருக்குறள் மூலம், திருவள்ளுவ
மாலை, நாலடியார் ஆகிய மூன்று நூல்களைப் பட்லர் கந்தப்பன் என்பவர் மூலம்
எல்லீசுக்கு அனுப்பி வைத்தார். எல்லீஸ் 1831ஆம் ஆண்டு, தாண்டவராய முதலியார்
மற்றும் மானேஜர் முத்துசாமிப் பிள்ளை இருவரையும் கொண்டு திருக்குறளை
அச்சிட்டு வெளியிட்டார்.
இவ்வாறு வெளியிடப்பட்ட திருவள்ளுவ மாலையில், திருவள்ளுவர் பற்றிய இழிவான
கட்டுக்கதை ஏதும் இல்லை. ஆனால், 1835இல் விசாகப் பெருமாள் அய்யர் என்பவர்
அச்சிட்டு வெளியிட்ட திருக்குறள் நூலின் இறுதியில்தான், ஆதி என்ற
பறைச்சிக்கும், பகவன் என்ற பிராமணனுக்கும் ஏழு குழந்தைகள் பிறந்தன என்றும்,
அதில் ஒருவர் வள்ளுவர் என்றும், அவர் ஒரு வைசியக் குல பெண்ணைத் திருமணம்
செய்து வாழ்ந்தபோது, திருக்குறளை எழுதினார் என்றும் ஒரு சிறு அகவற்பா
சேர்க்கப்பட்டது. விசாகப் பெருமாள் அய்யரின் தம்பி சரவணப் பெருமாள் அய்யர்
1837இல் வெளியிட்ட நூலில் இதில் மேலும் பல பொய்களைச் சேர்த்தார்.
குழந்தைகள் பிறந்தபோதே வெண்பா பாடின என்ற கதையெல்லாம் அவரால்
சேர்க்கப்பட்டது.
இந்த இருவரும் செய்த மோசடிக் கதையளப்பை வேதகிரி முதலியார் 1847இல் தாம்
வெளியிட்ட நூலில் மேலும் விரிவாக்கம் செய்து எழுதினார். அதில் பிரம்மன் ஒரு
யாகம் செய்து, அதில் கலைமகள் (சரஸ்வதி) பிறக்க, அவளையே பிரம்மன் மணம்
புரிந்து பின் அகத்தியராகத் தோன்றி சமுத்திரக் கன்னிகையை மணந்து
பெருஞ்சாகரமென்பாரைப் பெற, அப்பெருஞ்சாகரன் திருவாரூர்ப் புலைச்சி
ஒருத்தியைக்கூடி, பகவனைப் பெற்றதாகவும், அப்பகவன் பிரம்ம வம்சித்து
தவமுனிக்கும் அருண்மங்கை என்னும் பிராமணப் பெண்ணுக்கும் பிறந்து,
உறையூர்ப் பெரும்பறையனால் வளர்க்கப்பட்ட ஆதியை மணந்து ஏழு பிள்ளைகளைப்
பெற்றதாகவும் கதையை விரிவாக்கம் செய்தார். இதில் சங்கப் புலவர்கள் சிவனை
அவமதித்ததால் சிவன் சங்கத்தை அழிக்க வேண்டி பிரம்மாவைத் திருவள்ளுவராகவும்,
சரஸ்வதியை அவ்வையாகவும், விஷ்ணுவை இடைக்காடராகவும் அவதரிக்கச் செய்தார்
என்றும் கூறப்பட்டுள்ளது. துணைக் கதையும் கூறப்பட்டுள்ளது. என்று
திருவள்ளுவர் பிறப்பு பற்றி மோசடியாகச் சேர்க்கப்பட்ட கதைகளைக் கண்டறிந்து
கூறினார். இந்த மோசடிக் கதையை முதலில் ஆரியப் பார்ப்பனர்கள் எழுதியதன்
நோக்கம், அறிவும் புலமையும் ஆரியர்களுக்கே உரியது என்பதை நிலை நாட்டவே
ஆகும்.
உலகில் ஒப்பற்ற நீதி நூலை, அறிவுநுட்பத்தோடு ஒரு தமிழன் எழுதியதை
ஆரியர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, திருக்குறளை எழுதியவன்
ஒரு ஆரிய பார்ப்பானுக்குப் பிறந்தவன் என்ற கதையை எழுதினர். அதாவது, அறிவு
என்பது ஒன்று ஆரியப் பார்ப்பானுக்கு உண்டு. அல்லது ஆரியப்
பார்ப்பானுக்குப் பிறந்தவர்களுக்கே உண்டு என்று நிலைநாட்டவே இக்கதையை எழுதி
சேர்த்தனர். திருவள்ளுவர் அவ்வளவு சிறந்த அறிவாளியாக இருந்ததற்குக் காரணம்
அவர் ஆரிய பார்ப்பானுக்குப் பிறந்ததால்தான் என்று கூறுவதற்கே இக்கதையை
எழுதினர். அதன் மூலம் திருக்குறளை எழுதிய பெருமை ஒரு தமிழனுக்குப்
போய்விடக்கூடாது; அதுவும் ஆரியர்களுக்கே போய்ச் சேர வேண்டும் என்பதற்காகவே
இம்மோசடிக் கதையைச் சேர்த்தனர். இந்த மோசடியை அம்பலப்படுத்தி ஆரியர்களின்
அயோக்கியத்தனத்தை வெளிப்படுத்தியதோடு, தமிழரின் இழிவையும் நீக்கினார்.
திருக்குறள் புத்தரின் திரிபிடகத்திலிருந்து எழுதப்பட்ட வழிநூல்
என்றும், முதல் அதிகாரத்தில் குறிக்கப்படுபவர் புத்தரே என்றும் கூறும்
அயோத்திதாச பண்டிதரின் முடிவுகள் அறவே ஏற்புடையவை அல்ல என்றாலும்,
ஆரியர்களின் சூழ்ச்சியைத் தோலுரித்துக் காட்டுகின்ற பணியைப் பொறுத்தவரை
மிகச் சிறப்பாகவே செய்தார் என்பதை இங்கு குறிப்பிட வேண்டியது கட்டாயம்
ஆகும். திருக்குறள் பற்றிய சரியான முடிவுகளைத் தெரிந்துகொள்ள என்னால்
எழுதப்பட்டுள்ள, திருவள்ளுவர் எழுதாதத் திருக்குறள் மணிவாசகர் பதிப்பகம்,
சிங்கர் தெரு, சென்னை (குறளகம் அருகில்) என்ற நூலைப் படித்துத் தெரிந்து
கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன். ஒவ்வொரு தமிழரும், உலகெங்கும் உள்ள
ஆய்வாளர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் அது.
தமிழன் வார இதழில் 1907 முதல் 1914 வரை ஏழாண்டுகள் அயோத்தி தாசர் எழுதிய
அரசியல் கட்டுரைகள் அவரது புலமையைப் புலப்படுத்தின. ஒரு தாழ்த்தப்பட்ட
சமுதாயத்தில், அதுவும் கல்வி மறுக்கப்பட்ட, தீண்டப்படாத சமுதாயத்தில்
பிறந்து, இத்தனை மொழிகளை இத்தனை இலக்கியங்களை, இத்தனை மத நூல்களைப் படித்து
ஆய்வு செய்து உண்மைகளை, முடிவுகளை வெளிக் கொணர்ந்தார் என்றால் அது எளிய
சாதனையல்ல.
அந்தக் காலக்கட்டத்தில் வெளிவந்த சுதேசமித்திரன், இந்தியா போன்ற தமிழ்
இதழ்கள் வெளியிட்ட கட்டுரைகளுடன் அயோத்தி தாசர் எழுதிய கட்டுரைகளை
ஒப்பிட்டு நோக்கினால், அவரது கட்டுரைகள் நுட்பமும் திட்பமும் நிறைந்தவை
என்பதை அறியலாம்.
தமிழகத்தை ஆண்ட தமிழ் அரசர்களின் அவையில் இருந்த ஆரிய அமைச்சர்கள்
எவ்வாறெல்லாம், அரசர்களையும், நாட்டையும் கெடுத்தார்கள் என்பவற்றை யெல்லாம்
தெளிவாக எழுதினார். பாமர மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில்
உவமைகளை அடிக்கடி எழுதுவார். அவை வாழ்க்கையின் பல்வேறு பகுதிகளை விளக்கப்
பயன்படுத்தப்பட்டன. நாடு கெட்டதற்கு ஜாதிப் பிரிவுகளே காரணம் என்று
உறுதியாய் எழுதினார். ஜாதியையும் மதங்களையும் நோய் பரப்பும் கொசுக்களை
உற்பத்தி செய்யும் சாக்கடைக்கு ஒப்பிட்டார்.
ஆரியர்களின் அட்டூழியங்களை, மோசடிகளைக் கண்டித்தும் எதிர்த்தும் வந்த
அயோத்திதாசர், ஆங்கில ஆட்சியாளர்களை ஆதரித்தார். ஆங்கிலேயர்கள் தங்கள் நலன்
கருதியே நம் நாட்டிற்குச் சில நன்மைகளைச் செய்கிறார்கள் என்று கூறப்படுவதை
மறுத்து எழுதிய பண்டிதர்.
பிள்ளையார் முதுகைக் கிள்ளிவிட்டு நெய்வேத்தியம் கொடுப்பதுபோல (படையல்
செய்வது போல) ஆங்கிலேயர் ஆயிரம் இரண்டாயிரம் சம்பளம் பெற்றுக் கொண்டு
பஞ்சத்திற்குப் பரிந்து பாடுபடுகிறார்கள் என்றும், இத்தேசத்தில் இரயில்
வண்டிகள் ஓடுவது ஆங்கிலேயர்களுக்குச் சுகமென்றும், இரண்டு பத்திரிகைகளில்
வரைந்துள்ளதைக் கண்டு மிக்க விசனிக்கிறோம் (கவலைப்படுகிறோம்) குதிக்க
மாட்டாதவன் கூத்தைப் பழித்தான் என்னும் பழமொழிக்கிணங்க, சாமிக் கதைச்
சொல்லும்போதே, சூத்திரன் கேட்கக் கூடாதென விரட்டும் பாவிகள், சாப்பாடு
போடும்போது யாருக்கிட்டு யாரை விலக்குவார்கள் என்பது தெரியாதோ. ஆடு
நனையுதென்று ஓநாய் குந்தியழுவது போல ஏழைகள் அனைவரும் பஞ்சத்தால்
பீடிக்கப்படுகிறார்கள் என்று கூச்சலிடும் கனவான்கள் (பணக்காரர்கள்) தங்கள்
திரவியங்களைச் செலவிட்டுப் பஞ்சத்தை நிவர்த்திப்பதுண்டோ இல்லையே! என்று
எழுதினார்.
காங்கிரஸ் கட்சி இரண்டாய்ப் பிரிந்து 1908இல் இரண்டு கூட்டங்கள் நடத்தப்
போவதாய் செய்தி வந்ததும், ஜாதிகளில் 1008 ஜாதி அடுக்கடுக்காய்ப் பிரிவது
போல், காங்கிரஸும் காலத்திற்குக் காலம் பிரிய வேண்டும் போலும் என்று
கேலியாக அதே நேரத்தில் சரியாகச் சுட்டிக் காட்டியும் எழுதினார்.
ஆங்கில ஆட்சியை அவர் ஆதரித்த போதிலும், தவறு இழைக்கும்போது, கடுமையாகக்
கண்டித்தார். அவ்வாறு சுட்டிக்காட்டும் போதெல்லாம் வஞ்சகப் புகழ்ச்சியிலே
எழுதுவார்.
சுரேந்திரநாத் பானர்ஜி என்ற வங்க அறிஞர் ஆங்கிலத்தில் சிறப்பாகப் பேசக்
கூடியவர். அவர் இந்தியாவிலுள்ள அமைதியற்ற சூழ்நிலைக்கு ஆறு காரணங்களைச்
சுட்டிக் காட்டி எழுதினார். அதை மறுத்து உண்மைக் காரணங்களை அயோத்தி தாசர்
எழுதினார். அவரது அறிவு நுட்பத்தை அறிவிப்பதாய் அது அமைந்தது.
பானர்ஜி:இந்தியக் குடிகளை அரசாங்கம் அடியோடு அவமதித்ததே அமைதியற்ற நிலைக்குக் காரணம்.
அயோத்திதாசர்:இந்தியாவில் வாழும் அறுபது லட்சத்திற்கும் அதிகமான மக்களை
ஆடு, மாடு, கழுதை, நாய் இவற்றினும் கீழாய் அவமதித்து நடத்துவதுடன், மிக
இழிவாகவும் கூறி கேவலப்படுத்தி வருகிறார்களே - இதை பானர்ஜி அறியார் போலும்.
பானர்ஜி:சில ஜாதியாரை அரசு பாரபட்சமாக நடத்துவதே அமைதியின்மைக்குக் காரணம்.
அயோத்திதாசர்:ஓர் அய்ரோப்பியர் கலெக்டராக வருவாராயினும் மற்ற தலைமை
எழுத்தர், தாசில்தார் போன்ற வேலைகளுக்கு அய்ரோப்பியர்கள் வருவதில்லையே!
ஆனால் இந்த நாட்டில் பிராமணர் என்று சொல்லிக் கொள்வோர்களில் ஒருவர்
தாசில்தாராக அல்லது உயர் அதிகாரியாக வருவாரேயானால் அந்த அலுவலகம் முழுவதும்
பிராமணர் என்று சொல்லிக் கொள்வோர் நிரம்பி விடுகிறார்களே. இதில்
ஆங்கிலேயர் பராபட்சமுடையவர்களா? இந்தியர்களான ஆரியர்கள்
பராபட்சமுள்ளவர்களா?
பானர்ஜி:இராணியார் இந்துக்களுக்குக் கொடுத்துள்ள வாக்குறுதிகளை
நிறைவேற்றாது, அரசாங்க நிர்வாகத்தில் ஒதுக்கி வைப்பதே அமைதியின்மைக்குக்
காரணம். அயோத்திதாசர் : தற்போது கிடைத்துள்ள சுதந்திரங்களை, அனைத்து
ஜாதியினரும் அநுபவிக்கும் படியாக (ஆரியர்கள்) வழிகளைத் திறக்கிறார்களா?
அல்லது அடைத்து வைத்திருக்கிறார்களா? என்பதை பானர்ஜி அறியார் போலும்!
பானர்ஜி:அய்ரோப்பியர்கள் இந்தியர்களை இழிவாக நடத்துவதே அமைதியற்ற செயலுக்குக் காரணம்.
அயோத்திதாசர்:இந்நாட்டிலுள்ள மக்களில் ஆறு பேருக்கு ஒருவராக இருந்து,
உடலை வருத்திச் சம்பாதிக்கக் கூடியவர்களும், ஜாதி பேதமில்லாத விவேகிகளும்
ஆனவர்களை பறையர்கள் என்றும், தீயர்கள் என்றும், சண்டாளர் என்றும் இழித்து
கூறி வருவதும், மற்ற ஜாதிக்காரர்கள் இந்நாட்டில் பெறும் சுதந்திரங்களை
இவர்கள் அடையவிடாமல் இழிவுபடுத்தி தாழ்த்தி வருவதும் நமது பானர்ஜிக்குத்
தெரியாது போலும்.
பானர்ஜி:ஆங்கிலோ இந்திய பத்திரிகைகள் இந்தியர்களின் நியாயமான
விருப்பங்களை நிந்தித்துப் பேசி வர, அப்பத்திரிகைகளை அரசு மதித்து
நடத்துவதே அமைதி இன்மைக்குக் காரணம்.
அயோத்திதாசர் : இந்த நாட்டிலுள்ள பூர்வீகக் குடிகளும், அனைத்து
ஜாதிகளிலும் பெருந் தொகையினராகவும் உள்ள பறையர்களை, தாழ்ந்த ஜாதிகள் என்று
வகுத்து, பொய்க் கதைகளை ஏற்படுத்தி, புத்தகங்களில் அச்சிட்டு, கூத்து
மேடைகளில் அக்கதைகளைச் சொல்லி அவமானப்படுத்தி வரும் செயல்களை, நமது பானர்ஜி
அறியார் போலும்.
பானர்ஜி:வங்காளத்தை இரண்டாக பிரித்ததே அமைதியின்மைக்குக் காரணம்:
அயோத்திதாசர்:இந்த நாட்டில் மக்களை, ஜாதியுள்ளவர்களாகவும் (நான்கு
வர்ணத்தார்) ஜாதியில்லாதவர்களாகவும் (பஞ்சமர்) பிரித்து, ஜாதியுள்ளவர்கள்
சகலமானவற்றையும் கற்றுக் கொள்ளவும், பஞ்சமர்களான தாழ்த்தப்பட்டவர்கள்
எதையும் கற்கக்கூடாது என்றும், ஆரியப் பார்ப்பனர்கள் வாழும் இடங்கள்,
நாடார் வாழும் இடங்கள் என்று உயர்ஜாதியாருக்கென்று வசதியான இடங்களை
எடுத்துக் கொண்டு, தாழ்த்தப்பட்டவர்களைத் தனியே பிரித்து அவர்கள் வாழும்
இடங்களைச் சேரி என்று பெயர் எழுதி வைத்து, பிரித்து இழிவு செய்கிறார்களே,
இந்த அநீதியான பிரிவினையை பானர்ஜி அறியார் போலும்.
அந்தோ! நமது மகா கனம் பொருந்திய பானர்ஜியார், இந்தியாவிலுள்ள
இப்படிப்பட்ட ஒற்றுமைக் கேடுகளை உணராது, அமைதி கெட்டதற்காக அவர் கூறும் ஆறு
வகைக் காரணங்களும் விணேயாகும்! என்று மண்டையில் அடித்தாற் போன்று,
மறுப்பு எழுதினார் அயோத்திதாச பண்டிதர் அவர்கள்.
பார்ப்பனர் அல்லாதார் சங்கம் தொடங்கி நடத்தியபோது, இந்த அமைப்பில்
உள்ளவர்கள் ஜாதிப் பாசத்தைத் தங்களுக்குள் வைத்துக் கொண்டு சங்கம்
அமைத்துச் செயல்படுவதால் என்ன பயன் ஏற்படும்? என்று கேட்டார்.
தாழ்த்தப்பட்ட மக்களை ஒதுக்கி வைத்து விட்டு, பார்ப்பனர்களுக்கு எதிராக சங்கம் அமைப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்? என்றார்.
அதாவது, ஆரியப் பார்ப்பனர்களை எதிர்க்க எதிர் அணி அமைப்போர் முதலில்
ஜாதி உணர்வு அற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதை இவர் வலியுறுத்தினார்.
இல்லையென்றால் அப்படிப்பட்ட அமைப்பால் பயனில்லை என்றார்.
கடவுள் பெயரைச் சொல்லி பிழைப்பு நடத்துகின்றவர்களைச் சாடுவதற்கு கள்ளுக்கடை வைத்திருப்பவர்களோடு அவர்களை ஒப்பிட்டுக் காட்டினார்.
கள்ளுக்கடை வைத்திருப்பவன் தன் கைப்பொருளைக் கொடுத்து, கள்ளை வாங்கி
விற்று அதில் கிடைக்கும் லாபத்தில் வாழ்கிறான். கறிதோசை விற்பவனோ தன்
கைப்பொருளைக் கொண்டு சரக்குகளை வாங்கிக் கறிதோசை செய்து அவற்றை விற்று
அதனால் வாழ்கிறான்.
குடிப்பவர் இல்லையென்றால் விற்பவர்கள் இருக்க மாட்டார்களென்பது உறுதி.
ஒரு பொருளை வாங்குவோர் இல்லை என்றால் விற்பவர் இருக்க மாட்டார்.
ஆனால், கடவுள் கடை வைத்திருப்பவர்களோ, அவர்கள் சாமி சரக்கை தாங்களே
காணாதிருப்பினும் ஏதேனும் ஒரு பொய்யைச் சொல்லி, எங்கள் தேவனே தேவன்;
மோட்சத்திற்கு நேரில் கொண்டு போய்விட்டு விடுவார். எங்கள் உண்டியலில்
பணத்தைப் போடுங்கள் என்று கூறி பிழைப்பார்கள்.
இங்கு, கடவுளே கடைச்சரக்காய் இருக்கின்றபடியால், கள்ளுக்கடைக்குக்
கைமுதல் வேண்டியிருப்பதைப் போல, கடவுள் கடைக்குக் கைமுதல் தேவையில்லை.
இன்னும் கடையை விருத்தி செய்ய வேண்டுமாயின் சொத்துள்ள கைம்பெண்கள் எங்கு
இருக்கிறார்கள் என்று அறிந்து அவர்களை அணுகி... தங்கள் மதக்கடை கணக்கில்
சேர்த்துக் கொண்டு, சாமி வியாபாரத்தைச் சம்பிரமாகச் (மதிப்போடு) செய்து
வருவார்கள். தங்களுடைய சொத்துக்களை மறந்தும் மதக்கடை பெயரால் எழுதுவார்களோ,
ஒருக்காலும் எழுத மாட்டார்கள் என்று கிண்டலும் கேலியுமாய்ச் சாடினார்.
ஆங்கிலேயர்கள் அடிப்படைப் பொருட்களுக்கு வரியை உயர்த்திய போது, அதை எதிர்த்து, மதுபானங்கள் மீது வரியை உயர்த்த சொன்னார்.
சாராயத்திற்கு இன்னும் வரியை அதிகம் உயர்த்த வேண்டும் என்கிறோம் ஏனென்றால், மனிதர்களை மிருகமாக்குகிறது சாராயம்.
புகையிலைக்கு அதிகம் வரி போட வேண்டும். ஏனென்றால், சிறுவயதிலே மக்களின்
மார்பு வறண்டு இரத்தம் கக்கச் செய்வது புகையிலை... என்று ஒவ்வொரு
துறையிலும் அக்காலத்திலே தவற்றைக் கண்டித்து, சரியான வழிகாட்டினார்
அயோத்திதாச பண்டிதர். இப்படிப்பட்ட ஒரு மாபெரும் மனிதர், ஒதுக்கப்பட்ட
சமுதாயத்தில் உருவாகி உயர்ந்ததுதான், அதுவும், அக்கொடுமையான காலத்தில்
உயர்ந்துதான் சாதனை. அதுவும் ஆதிக்க அதிகார பேர்வழிகளை எதிர்த்து
முழக்கமிட்டது; எழுதியது இன்னும் பெரிய சாதனை. இத்தகு மாபெரும் மனிதர்
05.05.1914 அன்று மரணம் அடைந்தார். அவரை என்றென்றும் மறக்காமல்
போற்றுவதும், அவர் விருப்பத்தை நிறைவேற்றுவதும் நமது கடமையாகும்.
வாழ்க அயோத்திதாச பண்டிதர் புகழ்!
நூல் - மறைக்கப்பட்ட மாமனிதர்கள்
ஆசிரியர் - மஞ்சை வசந்தன்
Comments
Post a Comment