நாராயண குரு (கி.பி.1856- 1928)
கேரளம் பண்டைய சேர நாடு. தமிழர்கள் வாழ்ந்த மண். மொழிக் கலப்பால்
தெலுங்கு, கன்னடம் பிறந்து, பிரிந்ததுபோல், அங்கு மலையாளமாய் தமிழ்
மாறியது. அங்கு வாழ்ந்த மக்கள் மலையாளிகள் ஆயினர்.
இதற்கெல்லாம் காரணம் ஆரியர்களின் ஊடுருவலும், அவர்கள் பேசிய சமஸ்கிருதம்
தமிழோடு கலந்ததுமே ஆகும். மொழி சிதைந்ததுபோலவே, மக்களும் சிதைந்தனர்.
ஜாதியின்றி, மூடநம்பிக்கைகள் இன்றி வீரமும், காதலும், பகுத்தறிவும்,
நாகரிகமும், பண்பாடும் நிறைந்து வாழ்ந்த தமிழர்கள் மத்தியில் ஜாதிகள்
உருவாக்கப்பட்டன. மொழி கலந்ததுபோல் மக்களும் கலந்தனர். விளைவு பல ஜாதி.
ஆரிய சூழ்ச்சியால் உயர்ந்தவர், தாழ்ந்தவர், தீண்டத்தகாதவர் என்று மதக்
கொள்கை வழி மக்கள் பிரிக்கப்பட்டனர்.
அதுவும் இந்தியாவிலே மிகக் கேவலமான தீண்டாமைக் கொடுமைகளும், இழிவுகளும்
இங்குதான் நிலவின. அதனால்தான் விவேகானந்தர்கூட கேரளம் ஒரு பைத்தியக்கார
விடுதி என்றார். ஒரு ஜாதி, மற்ற ஜாதியாரைத் தீண்டக்கூடாது என்று விலக்கி
வைக்கப்பட்டு, அதற்கு விதிகளும் செய்யப்பட்டிருந்தன.
நாயடிகள் என்ற குறவர் குலத்தைச் சேர்ந்த மக்களைக் கண்ணால் கண்டாலே
தீட்டு என்று ஒதுக்கி வைத்தனர். நாயர்களிடமிருந்து ஈழவர்கள் எட்டு அடி
தூரம் விலகி நிற்கவேண்டும் என்ற விதியிருந்தது. 7 அடி தூரத்தில் ஈழவன்
நெருங்கி வந்தால் நாயர் தீட்டாகிவிடுவார்! ஈழவரிடம் புலையர்கள் எட்டடி
தூரம் விலகி நிற்கவேண்டும். பொது வீதிகளில் கீழ்ஜாதியினர் செல்ல தடை
விதிக்கப்பட்டிருந்தது. இந்த மூடத்தனத்தால் சாலைகளே இல்லாமல் போயின. அதனால் சந்தைகளும் இல்லாமல்
போயின. இதன் விளைவாய் உற்பத்தியும், வணிகமும் இல்லாமல் மக்கள் வறுமையில்
வாடினர்.
- (ஆதாரம்: ஜாதியமைப்பும், கேரள வரலாறும் - பி.கெ.பாலகிருஷ்ணன்)
கேரளத்தில் இருவகையான அடிமை முறைகளும் இருந்தன.
1. வாழ்நாள் அடிமையாக ஒருவன் தன்னை பிறரிடம் விற்றுக்கொண்டு வாழ்நாள் முழுவதும் அவருக்கு அடிமையாய் உழைத்தல்.
2. மன்னர்களுக்கும், நில முதலாளிகளுக்கும், கோவில்களுக்கும்
தேவைப்படும்போது மட்டும் அடிமை வேலையை இலவசமாய் செய்யும் அடிமை முறை.
அதாவது, ஊதியம் பெறாமல் உழைப்பை மட்டும் இவர்களுக்கு வேண்டும்போது இந்த
அடிமைகள் கொடுப்பர். மற்ற நேரங்களில் இவர்கள் விடுதலையுடன் வாழ்வர்.
புலையர்கள் முதல் வகை அடிமைகள்.
ஈழவர்கள் இரண்டாம் வகை அடிமைகள்.
இப்படிப்பட்ட ஒரு இழிவான சூழ்நிலை கேரளத்தில் நிலவிய நிலையில்தான் நாராயண குரு கேரளத்தில் பிறந்தார்.
திருவனந்தபுரத்திற்கு வடக்கே 12 கி.மீ. தொலைவில் செம்பழஞ்சி என்ற
சிற்றூரில் 1856 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26 ஆம் தேதி நாராயண குரு
பிறந்தார். தந்தை மாடன் ஆசான் - ஆசிரியராகப் பணிபுரிந்தார். அவருக்கு
ஓரளவிற்கு நிலங்களும் இருந்தன. தாய் கொச்சு பெண்ணு. இவரை குட்டி அம்மா
என்றும் அழைப்பர். பெற்றோர் இருவரும் தங்கள் பிள்ளைக்கு கல்வி அளிப்பதில்
ஆர்வம் காட்டினர். தங்கள் பிள்ளைக்கு நாராயணன் என்று பெயர் சூட்டினர்.
திருவனந்தபுரம் சாலைத் தெருவில் வாழ்ந்த தைக்காடு அய்யாவு என்ற
தமிழாசிரியரிடம் நாராயணன் கற்பதற்கு விடப்பட்டார். அங்கு அவர் தமிழ்
நூல்களைச் சிறப்பாகக் கற்றார்.
நாராயணனுக்கு மூன்று சகோதரிகள். அவரது தாய்மாமன் கிருஷ்ண வைத்தியர்
ஆயுர் வேத மருத்துவராகத் தொழில் செய்தார். இவரது குடும்பம் ஈழவ சமூகத்தைச்
சார்ந்தது. உழவர் என்ற சொல்லிலிருந்து வந்ததே ஈழவர் என்பது. தமிழர்கள்
செய்த தொழிலின் அடிப்படையில்தான் அடையாளங் காணப்பட்டனர். பின்னாளில்தான்
அவை ஜாதிகளாக மாற்றப்பட்டன. அயல்நாட்டிலிருந்து வந்த ஆரியர்கள் வட
இந்தியாவில் முதலில் பின்னர் தென்னாட்டில் புகுந்து, இந்த சாதிகளை
உருவாக்கினர். அக்காலந்தொட்டு நம்பூதிரி பார்ப்பனர்களின் ஆதிக்கம்
கேரளாவில் நிலவி வருகிறது. ஆரியப் பார்ப்பனர்கள் இங்கு நுழையும் வரை
உழவர்கள் (ஈழவர்கள்) சிறப்புடன், ஜாதியின்றி வாழ்ந்தனர்.
ஆரியப் பார்ப்பனர்கள் சாத்திரங்களைச் சொல்லி, வர்ணாஸ்ரம முறையைப்
புகுத்தி, அதில் நான்காவது பிரிவில் (சூத்திரப் பிரிவில்) உழவர்களைத்
தள்ளினர். அவர்களுக்கு உரிமையான நிலங்கள் பறிக்கப்பட்டன. அவர்கள் வழிபடும்
கோவில்கள் மாற்றியமைக்கப்பட்டன. ஆண்டுகள் செல்லச் செல்ல, உடலுழைப்பைத்
தந்தவர்கள் சூத்திரப் பிரிவிலிருந்து வெளியில் தள்ளப்பட்டு, அவர்ணர்
(பஞ்சமர்) என்று முத்திரை குத்தப்பட்டனர். இவர்களைத் தீண்டத் தகாதவர்களாக
நம்பூதிரி பார்ப்பனர்கள் அறிவித்தனர். புத்த நெறி பரவியிருந்தபோது
செழிப்புடனும், மானத்துடனும் வாழ்ந்த இம்மக்கள், ஆரியர்கள் வருகைக்குப்
பின் மானம் இழந்து, இழிவுகளை ஏற்றனர்.
இப்படிப்பட்ட ஈழவ குடும்பத்தில் பிறந்ததால், நாராயணன் வறுமையில்
வாழ்ந்து வாட நேர்ந்தது. அன்றாடப் பிழைப்பிற்கு மட்டுமே அவர் குடும்பத்தில்
வருவாய் ஈட்ட முடிந்தது. எனவே, இவரும் கடினமான வேலைகளைச் செய்தார். தன்
உழைப்பிலே தன் குடும்பத்தையும் காக்கவேண்டும் என்ற உண்மை நிலை அவருக்கு
உணர்த்தப்பட்டது. ஏழ்மையும், உழைப்பும் உள்ளவர்களுக்கு உலக அனுபவங்கள்
எளிதில் கிடைக்கும். அந்த வகையில் அவர் பல அனுபவங்களையும், உண்மைகளையும்
இளம் வயது முதற்கொண்டே அறிந்தார். தன் திறமையில் தனித்து நிற்கும் தகுதியை
ஒவ்வொருவரும் பெறவேண்டும் என்று அறிவுரையும் வழங்கினார்.
பரம்பரையாக கடவுள் நம்பிக்கையுள்ள குடும்பத்தில் பிறந்ததால், இவரும்
கடவுள் நம்பிக்கையுடனே வாழ்ந்தார். கடவுளுக்குப் படைப்பதற்காக
வைத்திருக்கும் உணவுப் பண்டங்களை முன்கூட்டியே தின்றுவிடுவார். அதற்கு அவர்
விளக்கமும் அளித்தார். குழந்தைகள் உண்டு மகிழ்ந்தால்தான் இறைவன் கூடுதல்
மகிழ்ச்சி அடைவான் என்று கூறினார்.
இளம் வயதிலேயே தீண்டாமையை வெறுத்தார். தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி
வைக்கப்பட்டவர்களுடன் சேர்ந்து பழகினார். எல்லோருடனும் அன்புடன் பழகினார்.
இரக்கம், கருணை இவரிடம் இயல்பாகவே மிகுந்திருந்தன.
இவருடைய தொடக்கக் கல்வியைத் தந்தையும், தாய்மாமனும் வழங்கினர்.
இதன்மூலம் சமஸ்கிருதத்தில் மிகுந்த புலமை பெற்றார். சமஸ்கிருதத்தில்
எழுதப்பட்டிருந்த பாடல் ஒன்றுக்குப் பொருள் புரியாமல், தாய் மாமன் கிருஷ்ண
வைத்தியர் திணறியபோது, அதற்குரிய விளக்கத்தை நாராயணன் சிறப்பாகக் கூறினார்.
இதைக் கண்டு அனைவரும் வியப்படைந்தனர். எனவே, இவரை மேலும் படிக்கச்
செய்யவேண்டும் என்று விரும்பி, காயங்குளம் அருகில் இருந்த பள்ளிக்கு
நாராயணனை அனுப்பி வைத்தனர். அங்கு சமஸ்கிருத விற்பன்னர் கும்மன்பள்ளி
இராமன்பிள்ளை ஆசானிடம் சமஸ்கிருதம் பயின்று பெரும்புலமை பெற்றார்.
அப்போது அவர் உள்ளம் தனிமையை நாடியது. சுற்றியுள்ள கிராமங்களுக்குத் தன்
விருப்பப்படிச் சென்றார். இதன்மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்தனர். அதிக
நேரம் தனிமையில் தியானத்தில் ஈடுபட்டார். தனது சிந்தனையை விரிவுபடுத்தி
கூர்மையும் செய்தார்.
தமது இருபதாவது வயதில் வாழ்வின் புதிர்களை விடுவிக்கும் சிந்தனையில்
இறங்கினார். 1876 முதல் 1879 ஆம் ஆண்டுவரை மூன்றாண்டுகள், இராமன் பிள்ளை
ஆசானிடம் உண்மை தேடலுக்கான தெளிவைப் பெற்றார். அதன் பயனாய் அடுத்த
பத்தாண்டுகள் அவர் கூர்மையான சிந்தனைகளைச் செய்து, பல்வேறு கருத்துக்களைக்
கண்டறிந்தார். அவரும் முழுமையான உள்ளத் தெளிவைப் பெற்றிருந்தார்.
மானுடத்தின் தேவை அன்பும், சேவையும். அவற்றைக் குறைவின்றி அள்ளித்
தருவது ஒவ்வொருவரின் கடமை என்பதைத் தெளிவாக உணர்ந்து, அதன் அடிப்படையிலே
தம் வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்.
மூலிகைச் செடிகளை ஆய்வு செய்து அவற்றின் மருத்துவக் குணங்களைக்
கண்டறிந்தார். பல்வேறு இடங்களுக்கும் நடந்தே செல்வதை அவர் பெரிதும்
விரும்பினார். செல்லும் வழியிலுள்ள புலையர் வீடுகளில் சென்று, அவர்கள்
தரும் உணவு, நீர் முதலியவற்றைப் பருகினார். தாழ்த்தப்பட்டவர்களின்
நோய்களுக்கும் சிகிச்சை அளித்தார்.
1879 இல் இவருக்குக் கடுமையான வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. எனவே, அவரது
தாய்மாமன் கிருஷ்ண வைத்தியர், நாராயணனைத் தம் வீட்டிற்கு அழைத்து
வந்துவிட்டார். அத்தோடு நாராயணனின் பள்ளிப் படிப்பு முடிந்தது. அவர்
வீட்டிலிருந்தபடியே நூல்களைத் தேடிப் படித்தார்.
தொடர்ந்து தாய்மாமன் வீட்டிலே தங்க விரும்பாத இவர், கடக்காவூர் சென்று,
பின் அங்கிருந்து அஞ்சு தெங்ருக்குப் போய்ச் சேர்ந்தார். இரண்டு
இடங்களிலும் அவர் நன்கு கல்வி கற்றார். தத்துவங்களைப் பேசுவதில்
பெரும்பகுதி நேரத்தைச் செலவிட்டார்.
குடும்ப வாழ்வில் அவருக்கு நாட்டம் இல்லாமையால், பிரம்மச்சரியம்
மேற்கொண்டார். கடவுள்பற்றி பாடல் எழுதுவதிலும், கடவுளைச் சிந்தனை
செய்வதிலும் காலம் கடத்தினார்.
இதைக் கண்ட பெற்றோர்கள் மனங்கலங்கி அவரை இல்வாழ்வில் ஈடுபடுத்த
முயன்றனர். தங்களின் உறவிலே பெண் பார்த்தனர். இவர் திருமணத்தை எதிர்க்கவும்
இல்லை; ஏற்கவும் இல்லை. திருமணம் முடிந்தது. ஆனால், அவருக்குக் குடும்ப
உறவில் விருப்பம் இல்லாமையால் விலகியே இருந்தார். துறவு வாழ்வை
விரும்பினார். எனவே, ஆன்மீகக் குருக்களை நாடினார். ஏராளமான நூல்களைப்
படித்தார்.
அப்போது சட்டம்பி சுவாமிகள் என்றழைக்கப்பட்ட குஞ்சன் பிள்ளையைச்
சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. இருவரிடையே நெருக்கமான நட்பு
ஏற்பட்டது. இருவருடைய எண்ணமும் ஒத்து இருந்தது. இருவரும் ஒத்த வயதினர்
என்பதால், மனம் விட்டுக் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். தமிழ்க்
காப்பியங்களையும் விருப்பமுடன் படித்தனர். சைவ சித்தாந்தங்களை ஆய்வு செய்து
தெளிவு பெற்றனர். தாங்கள் திராவிடப் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள்
என்பதில் பெருமை கொண்டனர். திராவிடத்தை ஆதரித்துப் பேசியும், எழுதியும்
வந்தனர்.
சட்டம்பி சுவாமிகள், மக்கள் மத்தியில் ஜாதிக் கட்டுப்பாடுகளைக்
கொண்டுவந்த ஆரியப் பார்ப்பனர்களைக் கடுமையாக விமர்சித்தார். இந்தியாவில்
நிலவும் ஜாதிப் பிரிவுகளுக்கு ஆரியப் பார்ப்பனர்களே காரணம் என்று சாடினார்.
ஆரியர்களின் சுயநலத்திற்காக, சமுதாயத்தையே பாழ்படுத்தி விட்டார்கள்;
பொருளாதாரத்தைச் சீரழித்துவிட்டார்கள் என்று குற்றம் சாட்டினார். இவற்றை
விளக்கி, வேதாதிகார நிரூபணம் என்ற நூலை எழுதினார்.
சட்டம்பி சுவாமிகளின் கருத்துக்களை நாராயணன் ஏற்றார். என்றாலும் அவரைப்
போன்று கடுமையாகச் சாடாமல், ஆவேசம் கொள்ளாமல், அமைதியான முறையில்
மாற்றங்களைக் கொண்டு வர விரும்பினார்.
சமுதாய மாற்றத்தை உருவாக்குவதற்காக, மக்கள் முன்னணி என்ற அமைப்பை
உருவாக்கி, அதில் மக்களைப் பெருவாரியாகச் சேர்த்தார். ஒடுக்கப்பட்டவர்கள்
விழிப்பு பெற தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். அதன் விளைவாக அம்மக்கள்
விழிப்பும், எழுச்சியும் பெற்றனர். தாம் சமுதாயத்தில் செய்ய விரும்பிய
மாற்றங்களை மெல்ல மெல்ல கொண்டு வந்தார்.
பின்னர், உண்மை தேடலில் ஆர்வம் மிகுந்ததால், நாட்டை விட்டு விலகி காடு
மேடுகளெல்லாம் சுற்றி அலைந்தார். தனிமையில் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டார்.
செல்லுமிடமெல்லாம், ஞானிகளைச் சந்தித்து அவர்கள் கருத்துகளைக்
கேட்டறிந்து, அக்கருத்துகளைத் தனிமையில் அமர்ந்து சிந்தித்தார். இவர்
நெடுநாள் தங்கி தவம் புரிந்த இடம் கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள
மருத்துவாழ் மலையில் இருந்த பிள்ளைத்தடம் என்னும் குகையாகும்.
தான் அறிந்த உண்மைகளை உள்ளடக்கி, ஆத்ம உபதேச சதகம் என்னும் 100
பாடல்களாலான நூலை எழுதினார். அதன்பின் தனிமையில் ஒதுங்கியிருக்கும் தன்
நிலையை மாற்றிக்கொண்டு, மக்களோடு கலந்து பணி செய்யத் தொடங்கினார். தன்
உள்ளத்தில் இதுவரை ஒடுக்கி வைத்திருந்த உணர்வுகளையெல்லாம் மக்கள் மத்தியில்
வெளியிட்டார்.
மக்களின் அன்றாடத் தேவைகளை நிறைவு செய்ய தாம் கண்ட உண்மைகளை எடுத்துக்
கூறினார். மதக் கருத்துக்களைக் கூறுவதாலோ, தத்துவங்களை விளக்குவதாலோ
மனிதர்களின் துயரம் தீர்ந்து போகாது. மாறாக, மக்களைத் தேடிச் சென்று
அவர்களின் குறைகளை நேரில் அறிந்து, அதற்கான வழிகளைக் கண்டு, அவர்களின்
துன்பத்தைக் களையவேண்டும் என்று முடிவு செய்தார்.
தான் இருக்கும் இடத்தை நோக்கி மக்களை வரவழைத்து உட்கார்ந்த இடத்தில்
உபதேசம் செய்யும் சராசரி சாமியார்கள்போல் இவர் வாழ விரும்பவில்லை. மடத்துச்
சன்னியாசியாக இல்லாமல், மக்கள் சன்னியாசியாகத் தொண்டு செய்தார்.
மக்கள் தொண்டு செய்யப் புறப்பட்ட இவர், செல்லும் இடங்களில், ஏழைக்
குடிசைகளிலேதான் தங்கினார். மக்களுடனே கலந்து வாழ விரும்பினார். எளிய
மக்களின் இன்ப துன்பங்களைத் தானும் பகிர்ந்து கொண்டார்.
அன்பைப் பொழியும் அவரது கண்கள், நம்பிக்கையூட்டும் சொற்கள், கனிவான
பேச்சு, பூவாக மலரும் புன்னகை இவை மக்களை இவர் வழிக்கு ஈர்த்தன. பெருமளவில்
இவரிடம் மக்கள் சேர்ந்தனர். உயரிய சிந்தனைகளை எல்லோரும் புரிந்துகொள்ளும்
வகையில் எளிமையாகப் பேசினார். இவர் செல்லும் இடமெல்லாம் இவரைச் சுற்றி
மக்கள் பெருங்கூட்டமாகக் கூடினர். அந்நிலையிலும் அவர் தம்மை மக்களில்
ஒருவராகவே கருதினார். அவர்களைவிட தான் உயர்ந்தவர் என்ற எண்ணம் அவரிடம்
ஏற்படவில்லை. தன்னை மக்கள் வழிபடக்கூடாது என்றார். குளச்சல், சுசீந்திரம்,
கன்னியாகுமரி, பூவாறு, கோவளம், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் சில காலம்
தங்கியிருந்தார். எங்கு தங்கினாலும் ஏழைகளின் வீட்டில் தங்குதல் என்ற
கொள்கையிலிருந்து அவர் மாறவில்லை. தம்மை யாரும் எளிதில் சந்திக்கும்
வகையில் ஏற்பாடுகள் செய்தார்.
தமக்கென்று தனியான பழக்கவழக்கங்கள் எதையும் அவர் பின்பற்றவில்லை. சாதாரண
மக்களின் வாழ்க்கை முறையையே பின்பற்றி வாழ்ந்தார். மீன் கறியை மக்கள்
அன்புடன் கொடுக்கும்போது, அதை மறுக்காமல் ஏற்றார்.
ஒருமுறை இவரைப் பார்க்க வந்த மீனவர்கள் அளித்த மீனைப் பெற்றுக்கொண்டு,
மலையில் தன் ஒரே மகளுடன் வாழ்ந்த ஒரு வயதானப் பெண்ணிடம் அதைக் கொடுத்தார்.
சமைத்த பின் சிறு அளவு சோறும், மீனும் வாங்கி உண்டார். அந்த ஏழைக்
குடும்பத்திற்கும் அன்று மீன் சோறு கிடைத்தது. அக்குடும்பம் வருவாயின்றி
வாடுவதைக் கண்ட நாராயண குரு, அவர்களுக்குத் தேங்காய் மட்டையிலிருந்து நார்
எடுக்கும் முறையைக் கற்றுக் கொடுத்தார். தன்னுடைய குடும்பம் பரம்பரையாக
சித்த மருத்துவக் குடும்பம் என்பதால், தனக்குத் தெரிந்த பச்சிலைகளைக்
கொண்டு, மக்களின் நோய்களைக் குணப்படுத்தி மருத்துவத் தொண்டும் செய்தார்.
ஒருமுறை தம்மை நாடி வந்த வேடுவர் ஒருவர் அழைப்பை ஏற்று, அவர்
வீட்டிற்குச் சென்று தங்கி உணவு உண்டார். அவருக்கு ஜாதி வேறுபாடு அறவே
இல்லையென்பது அப்போது அனைவருக்கும் விளங்கியது.
நாயர், ஈழவர், கிறித்துவர், இஸ்லாமியர் என்று எல்லாப் பிரிவு மக்களும்
அவரை நாடி வந்தனர். அவர் அனைவரையும் சமமாகப் பாவித்து, அன்பு பொழிந்தார்.
உலகமே ஒரு குடும்பம் என்று அவர் போதித்தார். வசுதைவ குடும்பகம் என்று அவர்
கூறியதற்கு அதுவே பொருள். வசுதை என்றால் உலகம் என்பது அகராதி தரும் பொருள்.
நான் இஸ்லாமியர்களுடன் ஒரே தட்டில் அவர்களது உணவைப் பல நாள்கள்
உண்டிருக்கிறேன். மீனும், இறைச்சியையும் சாப்பிட்டிருக்கிறேன். அவர்கள்
குழந்தைகளை என் கைகளில் சுமந்திருக்கிறேன். அவர்களோடு சேர்ந்து
விளையாடியிருக்கிறேன். பசியால் அழும் குழந்தைகளுக்கு நானே
உணவூட்டியிருக்கிறேன் என்று அவரே கூறியுள்ளார்.
அவருக்கு இஸ்லாம் மதம் மிகவும் பிடித்திருந்தது. அந்த மதத்திலுள்ள
சமத்துவமும், சகோதரத்துவமும் அவரைக் கவர்ந்தன. குரானிலிருந்து பல
நேரங்களில் மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார்.
அதேபோல, கிறித்துவிடமும் அவருக்கு ஈடுபாடு அதிகம் இருந்தது. ஏசு அன்பின் உறைவிடம், அமைதியின் வடிவம் என்று புகழ்ந்தார்.
இவ்வாறு ஜாதி, மதம், இனம், மொழி கடந்து மக்களை நேசித்து, உலகை ஒரு குடும்பமாக எண்ணும் உயரிய கொள்கை இவரிடம் இருந்தது.
கடவுளுக்கு ஜாதி, மதம், பேதம் எதுவும் இல்லை. கடவுளை அடைய அன்பு ஒன்றே
வழி. சடங்கு, சம்பிரதாயம், பூசை, புனஸ்காரங்களால் கடவுளை அடைய முடியாது.
கடவுள் அவற்றை விரும்புவதும் இல்லை. நாம் செலுத்தும் அன்பு மாசற்றதாக,
உளப்பூர்வமாக இருக்கவேண்டும் என்றார்.
இவர் கவிதைகள் பல எழுதியுள்ளார். பெரும்பாலும் மலையாளத்திலும், சமஸ்கிருதத்திலும் எழுதினார். தமிழிலும் சில பாடல்கள் எழுதியுள்ளார்.
சமஸ்கிருதத்தில் இவர் எழுதிய தரிசன மாலாவும் மலையாளத்தில் இவர் எழுதிய
ஆத்மோபதேச சதகமும் இவருக்குப் பெருமைத் தேடித் தந்தவை. ஆதிசங்கரரின்
மாயாவாத கொள்கையை இவர் ஏற்கவில்லை. அன்பும், மனிதநேயமும் இவரது முதன்மைத்
தத்துவங்களாக நின்றன.
சுவாமி விவேகானந்தர், சங்கரர் அத்வைத தத்துவத்தை மலைகளிலும்,
குன்றுகளிலும் விட்டுவிட்டார். இத்தத்துவங்களை உலக வாழ்விலும்
சமுதாயத்திலும் பரவிடச் செய்யவேண்டும் என்றார்.
நாராயண குருவும் அதே கருத்தைக் கொண்டிருந்தார். தத்துவங்கள் என்பவை
குகைகளில் ஒலிக்கவேண்டியவை அல்ல. அவை மக்களிடம் பரவி அவர்களுக்கு
உதவவேண்டும் என்று விரும்பினார். தன்னலம் கருதாது சேவை புரியவேண்டும் என்று
எல்லோரையும் கேட்டுக்கொண்டார்.
மதங்கள் உண்மையைப் பிரதிபலிக்கவேண்டும், வாழ்க்கைக்குத் தேவையானவற்றை, வாழ்வதற்குத் தேவையானவற்றை அவை வழங்கவேண்டும் என்றார்.
கோவிலில் கடவுளை வணங்குவதற்குக்கூட ஜாதித் தடைகள் ஏராளமாய் இருந்தன.
சூத்திரர்கள் கருவறைக்கு வெளியே நின்று வழிபடவேண்டும். ஈழவர் அல்லது தீயர்
எனப்படுவோர் கோவில் வெளிச்சுற்றிலிருந்து 14 அடி தூரம் விலகி நின்று கடவுளை
வணங்கவேண்டும் என்றும், சண்டாளர்கள், புலையர், பறையர் தொலைதூரத்தில்
நிற்கவேண்டும், பார்ப்பனரல்லாதார் குறுகிய தெருக்களில் நெருக்கமான
வீடுகளில் ஆடு, மாடுகளைப்போல வாழக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
பார்ப்பனர்களும், நம்பூதிரிகளும் இதைச் செய்தனர். பூர்வீக மக்களான
தமிழர்கள் வந்தேறிகளான ஆரியப் பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் வீழ்ந்து
சூத்திரர்களாகவும், தீண்டத்தகாதவர்களாயும் ஒதுக்கப்பட்டனர். கேரளப்
பகுதியில் செழித்தோங்கியிருந்த புத்தமும் புறந்தள்ளப்பட்டது. புத்தம் எந்த
அளவிற்கு அழிந்ததோ அந்த அளவிற்குப் பிராமணியம் வளர்ந்தது.
எண்ணிக்கையில் அதிகமாயிருந்த சாதாரண மக்கள் வாழ்க்கை நிலை மிக மோசமாக
இருந்தது. அவர்கள் வர்ணப் பிரிவில் வராத, தீண்டத்தகாதவர்களாக,
ஒதுக்கப்பட்டதால், அவர்களுக்குச் சரியான வழிகாட்டலும், தலைமையும் இல்லாது
போய், அவர்கள் ஆதரவற்ற அனாதைகளாய் நின்றனர். அவர்களின் உரிமைக்கும்,
விடுதலைக்கும் குரல் கொடுத்துப் பாடுபட ஒருவரும் வராத சூழலில், அவர்களின்
நம்பிக்கை நாயகராக வந்தவர்தான் நாராயணகுரு அவர்கள்.
சமூகச் சிக்கல்களின் தோற்றுவாயாக ஜாதீய முறை இருப்பதைக் கண்டுணர்ந்த
நாராயண குரு, அதை ஒழித்துக்கட்ட முடிவு செய்தார்; உறுதி பூண்டார்.
அதற்கு இரண்டு செயல் திட்டங்களை வகுத்தார். 1. ஜாதிக் கொடுமைகளை
உணர்வுகளை மக்கள் மத்தியில் களைதல் 2.அவர்களிடம் நிலவும் மூட நம்பிக்கைகளை
அகற்றுதல்.
ஜாதிக் கொடுமையை ஒழிக்க இவர் மேற்கொண்ட நடவடிக்கை புதுமையானது. முள்ளை
முள்ளால் எடுக்கவேண்டும்; பள்ளத்தை மண்ணால் நிரப்பவேண்டும்; எதனால்
இழிந்தோமோ அதனாலே உயரவேண்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக்
கொண்டிருந்தது.
நாயர்கள் தங்களைத் தீண்டுவதில்லை; இழிவாக, தீண்டத்தகாதவர்களாக
நடத்துகிறார்கள் என்று ஈழவர்கள் இவரிடம் சொன்னபோது, முதலில் நீங்கள்
உங்களுக்குக் கீழாக நினைக்கும் புலையர்களைச் சமமாக நடத்துங்கள்; உங்களோடு
அவர்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
நாராயண குருவைப் பொறுத்தவரை ஒரு தெய்வம் என்பது, மனித சமத்துவ நோக்கின்
முதல்படியே! 1921 ஆம் ஆண்டு ஆலுவாயில் சகோதரன் அய்யப்பன் முயற்சியில்
கூட்டப்பட்ட உலக சகோதரத்துவ மாநாட்டில் குரு வெளியிட்ட ஒரு ஜாதி, ஒரு மதம்,
ஒரு தெய்வம் மனிதனுக்கு என்ற மய்யக் கருத்தே அவரது முதன்மையான கொள்கை.
அந்த மாநாடுதான், கேரளத்தின் மனித சமத்துவத்திற்கான செய்தியை மக்கள்
மத்தியில் ஆழமாகப் பதியச் செய்தது.
தீண்டாமையிலிருந்து, ஜாதி அழிவிலிருந்து தங்களைக் கீழ் ஜாதியார்
உயர்த்திக் கொள்ள, இக்கொடுமைகளை ஒழிக்க ஒரே வழி, அம்மக்கள் தங்களையும்
கல்வி, செல்வம், ஆன்மிகம் ஆகிய தளங்களில் மேம்படுத்திக் கொள்வதும்,
ஆதிக்கச் சக்திகளைவிட கல்வி, செல்வம், ஆன்மிகம் வல்லமை மிக்கவர்களாக
ஆக்கிக் கொள்வதுமே யாகும் என்பது நாராயண குருவின் கொள்கையாக இருந்தது.
எதிர்நிலையில் நின்று மோதுவதைவிட, நம்மை அதற்குத் தகுதிப்படுத்தி
உயர்வதே ஜாதி ஒழிப்பிற்கும், ஆதிக்க ஒழிப்பிற்கும் உரிய வழி என்று அவர்
தேர்வு செய்தார்.
அதற்கு முதற்படியாக, உயர்ந்த ஜாதியார் வணங்கும் தெய்வங்களைத் தாங்களும் வணங்குவது என்று முடிவு செய்தார்.
பவுத்தம் பரவி வளர்ந்து நின்ற காலத்தில், ஆரியர் நுழைவதற்குமுன், பவுத்த
மதத்தைப் பின்பற்றி உயர்ந்து நின்ற கேரள மக்கள், பவுத்தம் சிதைந்ததால்,
ஜாதிக் கூறுகளாக்கப்பட்டு, சிறுசிறு குழுவாகப் பிரிந்து ஆளுக்கொரு சிறு
தெய்வங்களை வழிபட்டனர். இதனால், ஆதிக்கவாதிகள் பிரிந்து தாழ்த்த வழி
ஏற்பட்டது. எனவே, இவர்கள் ஒன்றிணைந்து பெரும் குழுவாக, பெரும் சக்தியாக,
அதிக எண்ணிக்கையுள்ளவர்களாக மாற, இவர்களும் உயர் கடவுள்களை (பொதுக்
கடவுள்களை)வணங்கவேண்டும் என்று முடிவு செய்தார்.
உயர்ஜாதியினர் வணங்கும் பொதுக் கோவில்களில் இவர்களை விடமாட்டார்கள்.
எனவே, இவரே பொதுக் கோவில்களை உருவாக்கினார். அதன்மூலம் உயர் ஜாதியினர்
வழிபடும் கடவுளை வழிபட தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழி செய்தார். அதன்மூலம்,
சிறு தெய்வ வழிபாட்டில் சிதறுண்டு கிடந்த மக்களை ஒற்றுமைப்படுத்த முடியும்
என்று நம்பினார்.
1888 ஆம் ஆண்டு, திருவனந்தபுரம் அருகிலுள்ள அருவிபுரம் சிற்றூரில்,
ஆற்றிலிருந்து ஒரு கல்லை எடுத்து வந்து, சிவலிங்கமாக (பிரதிஷ்டை) பிரதிட்டை
செய்தார். ஈழவர்களுக்குப் பிரதிட்டை செய்ய உரிமை இல்லையே என்று
உயர்ஜாதியார் உரிமைக்குரல் எழுப்பியபோது, நான் நிறுவியது (பிரதிஷ்டை
செய்தது) நம்பூதிரிகளின் சிவன் அல்ல என்று அவர்கள் வாயை அடைத்தார்.
கோவிலின் முன், ஜாதி, மத பேதமில்லாமல் மக்கள் அனைவரும் வழிபடலாம் என்று
அறிவிப்பு எழுதி வைத்தார்.
இங்குதான் நாராயண குருவைச் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும். அவர் கோவில்
அமைத்தது பக்தி மேலீட்டால், ஆன்மிகம் வளர்க்க அல்ல. தன் தெய்வத்திற்குப்
பணி செய்யவேண்டும் என்பதற்காகவும் அல்ல. அப்படி எண்ணியிருந்தால்,
அக்கோவிலில் இஸ்லாமியர்களும், கிறித்துவர்களும் வழிபடலாம் என்று
எழுதியிருக்கமாட்டார். பொதுக் கோவில் வழிபாட்டின் மூலம், ஜாதியால்,
மதத்தால் பிரிந்து நிற்கும் மக்களை ஒற்றுமைப்படுத்தி ஒருங்கிணைக்கவேண்டும்
என்பதற்கேயாகும்.
ஏற்கெனவே, மக்கள் வழிபட்ட சிறு தெய்வச் சிலைகளைப் பிடுங்கி
அப்புறப்படுத்தினார். சிறு தெய்வ வழிபாட்டை ஒழித்து முற்றிலும் பொது
வழிபாட்டிற்கு வந்து மக்கள் ஒன்றுபடவேண்டும் என்பதே அவரின் முடிவு. சிறு
தெய்வச் சிலைகள் அகற்றப்பட்ட இடங்களில் பொதுத் தெய்வங்களை வைத்தார்.
தெற்குக் கேரளத்திலும் கூர்க்கஞ்சேரி, பெரிங்கோட்டுக்கரை, வடக்கே தலைச்சேரி
கண்ணூர், கோழிக்கோடு, ஆலுவா, கர்நாடகாவில் மங்களூர், தமிழ்நாட்டில்
நாகர்கோவில், இலங்கையில் கொழும்பு முதலிய இடங்களில் அவர் நிறுவிய கோவில்கள்
உள்ளன.
மேலோட்டமாகப் பார்க்கும்போது, கிராம மக்களின் சின்னங்களை (சிறு
தெய்வங்களை) அகற்றிவிட்டு, பிராமண தெய்வங்களை நிறுவினார் என்பதுபோல் இது
தோன்றும். ஆனால், பிராமண தெய்வங்களின் கருவறைக்குள் செல்லக்கூடாது;
அத்தெய்வங்களை வழிபடக்கூடாது என்று கூறி, அதன் வழி பெரும்பான்மை மக்களை
இழிவுபடுத்திய அந்த நடைமுறையைத் தகர்த்து, அந்த உரிமை எங்களுக்கும் உண்டு
என்பதை நிலைநாட்டவும், சிதறிக் கிடந்த மக்களை, பொதுத் தெய்வ வழி
ஒன்றிணைக்கவுமே இதைச் செய்தார்.
இன்றைக்குச் சங் பரிவார் அமைப்புகள், இராமன் என்ற பொது அடையாளத்தில்
பிரிந்து கிடக்கும் இந்துக்களை ஒருங்கிணைக்க முயற்சிப்பதன் அடிப்படைத்
தத்துவம் என்னவோ அதையே அறிவு நுட்பத்தோடு அன்றைக்கே நாராயண குரு செய்தார்.
அதைப் பின்பற்றித்தான் இவர்கள் செய்கிறார்கள் - இவர்களின் சொந்த மூளையால்
அல்ல.
களவங்கோடு என்னும் இடத்தில் மூலவராக - கருவறைக் கடவுளாக -
நிலைக்கண்ணாடியை அமைத்து, அத்தோடு கோவில்கள் போதும், இனி கல்விப் பணியில்
கவனம் செலுத்தவேண்டும் என்றார். நிலைக் கண்ணாடியை வைத்தார் என்ற நடவடிக்கை
நுட்பமுடையாது. அவருக்குக் கோவில் என்பது பொது அடையாளம் அவ்வளவே. அதில் கல்
இருந்தால் என்ன? கண்ணாடியிருந்தால் என்ன? என்பதே அவர் நிலைப்பாடு. இது
அவரது உள்ளத்தைத் தெளிவாகக் காட்டும் கண்ணாடியாய் என்றென்றும் நிற்கிறது.
தன்னுடைய முடிவின்படி இரண்டாவது பணியாகக் கல்விப் பணியில் கருத்தைச்
செலுத்தினார். இக்காலத்தில்கூட கேரளத்தில் மிக அதிகமாகக் கல்வி நிறுவனங்களை
நடத்துவது நாராயண குரு தொடங்கிய பேரியக்கமே. இதன்மூலம் ஈழவ சமுதாயமும்
படிப்பு மிக்கச் சமுதாயமாக மாறியது. ஆங்கிலக் கல்வியை நாராயண குரு பெரிதும்
வரவேற்றார். தன் மாணவரான நடராஜ குருவை அய்ரோப்பாவிற்கு அனுப்பி கற்று வரச்
செய்தார். ஆங்கிலத்தை உலகை அறியும் ஊடகமாகவும், அதன் வழி உலக அளவில்
உயர்ந்தும் பரவியும் சென்று இழிவை நீக்கிக் கொள்ள முடியும் என்றும் அவர்
கருதினார். தங்கள் குடும்பத்தினர் சமஸ்கிருதத்தை நன்கு கற்றவர்கள்
என்றாலும், ஆங்கிலம் கற்கவேண்டும் என்பதையே அவர் வற்புறுத்தியதன்மூலம்
அவரது மதிநுட்பம், ஆரிய சூழ்ச்சிக்கு ஈடுகொடுத்த திறன் புலப்படுகிறது.
மூன்றாவதாக ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட சமுதாயத்தினர் பொருளாதாரத்திலும்
உயர்ந்து வர, தொழில்முறைப் பயிற்சி பெற்று தொழில் தொடங்க வற்புறுத்தினார்.
கேரளத்தில் கயிறு மற்றும் ஓடுகள் தயாரிக்கும் தொழில் வளர்ச்சி பெற்றதற்கு
நாராயண குருவே அடிப்படைக் காரணம். பொதுவுடைமைக் கொள்கை கேரளத்தில் பரவி
நிற்பதற்கு நாராயண குருவே முதன்மைக் காரணம் என்று ஈ.எம்.எஸ்.(நம்பூதிரி)
எழுதினார். - (ஆதாரம்: பி.கெ.பாலகிருஷ்ணன் எழுதிய நாராயண குரு தொகை நூல்)
ஆக, கோவில் கல்வி நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் என்ற அமைப்புகளின்மூலம் அடித்தட்டு மக்களை மேலே கொண்டு வந்தார் நாராயண குரு.
அவர் அமைத்த கோவில்கள் நற்பணி மன்றங்களாகச் செயல்பட்டன. ஏழை, எளியவர்கள்
அதன்மூலம் பயன் பெற்றனர். அவர்களிடமிருந்த வேறுபாடுகள், ஏற்றத் தாழ்வு
எண்ணங்கள் மறைந்தன. அதன் வழி சமத்துவ நிலை உருவாகியது. தாழ்ந்து
கிடந்தவர்கள் தலைநிமிர்ந்தனர். அன்பும், சகோதரத்துவமும் அவர்களிடம்
தோன்றின. நல்லொழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை என்ற நற்குணங்கள் வளர்ந்தன.
இந்த நிறுவனங்கள் நிதி நிலையையும் மேம்படுத்தின. நிதி வீணடிப்பு
இல்லாமல் முறையாகச் செலவிடப்பட்டது. கல்வி, செல்வம், தன் மதிப்பு என்று
ஒவ்வொன்றாகப் பெற்ற மக்கள் தன்னம்பிக்கையும் பெற்றனர்.
மதம்பற்றி நாராயண குரு கூறுகையில், மதத்திற்காக மனிதன் இல்லை;
மனிதனுக்காகவே மதம் என்று நறுக்குத் தைத்தாற்போன்று சொன்னார். இன்றைக்கு
மதவெறி கொண்டலைவோர் இதை மனதில் கொள்ளவேண்டும்.
இந்தியா முன்னேற வழி என்ன என்று கேட்டபோது, ஜாதி மதங்களுக்கிடையே
நிகழும் போட்டிகளிலிருந்து விடுபடுவதே வழி என்று நாராயண குரு பதில்
சொன்னார். இதுவும் இன்றைக்கு முழுக்கப் பொருந்துவதாகும்.
கடவுளை வழிபட மட்டுமே கோவில்கள் என்று இருந்ததை மாற்றி, கல்வி, தொழில்,
சமூக நலம் என்ற பன்முக நோக்கங்களுக்கு மக்கள் நலன் கருதிப் பயன்படுத்திய
பெருமை இவரையே சாரும்.
பொதுமக்களை ஒன்று சேர்த்து, மக்கள் முன்னணி என்ற அமைப்பை உருவாக்கினார்.
இவர் கூறிய யோகம் மூன்று படிகளைக் கொண்டது.
ஒன்று, கல்வி அறிவு பெறல். கல்வி பெற்றால் மட்டுமே ஒரு சமூகம் அல்லது
ஒரு குழு நிரந்தரமான முன்னேற்றத்தையும், சுபிட்சத்தையும் பெற முடியும்.
நமது சமுதாயத்தில் தொடக்கக் கல்வி பெறாமல் யாரும் இருக்கக்கூடாது. இதற்காக
நாம் ஒவ்வொருவரும் கடுமையாக உழைக்கவேண்டும். அடித்தட்டு மக்கள்
ஒவ்வொருவரும் எழுதப் படிக்கக் கற்றிருக்கவேண்டும் என்பது.
இரண்டு, கல்வி பெற்ற மக்கள், ஒழுக்கம், கட்டுப்பாடு இவற்றை ஆழமாக மனதில்
கொண்டு நேர்மையாக உழைத்து, உற்பத்தி செய்து வருவாய் ஈட்டி, வளமோடு
வாழவேண்டும் என்பது.
மூன்று, பொருளாதார முன்னேற்றம். தொழில் செய்து வருவாய் ஈட்டவேண்டும்.
கிடைக்கின்ற பொருள்களைக் கொண்டு கைத் தொழில்கள் செய்யவேண்டும்.
அதிகப்படியான பொருள்களை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பொருளீட்டவேண்டும்
என்பது.
இவற்றைச் செயல்படுத்தியும் காட்டினார். கேரளம் கல்வியில்
உயர்ந்ததற்கும், கேரளத்தில் நார்த் தொழில், ஓடு தயாரிக்கும் தொழில்
வளர்ந்ததற்கும், கேரளம் பொருள்களை ஏற்றுமதி செய்ததற்கும் நாராயண குருவே
அடிப்படைக் காரணம்.
காந்தியின் கைத்தொழில் சார்ந்த சிந்தனைக்கு நாராயண குருவே பெருங்காரணம்.
அது மட்டுமல்ல, காந்தியிடமிருந்த பல குழப்பங்களை இவரே நீக்கினார்.
வர்ணாசிரம தர்மம் இறைவனால் அளிக்கப்பட்டது என்று காந்தி நம்பினார்.
எனவே, ஜாதி அமைப்பு சரிதான் என்று அவர் எண்ணினார். நாராயண குருவின்
ஆசிரமத்தில் இருந்த மாமரத்தின் இலைகளைக் காட்டி ஒரே மரத்தில் சிறிய இலை,
பெரிய இலை இருக்கிறது அல்லவா? என்று காந்தி கேட்டார்.
இலைகள் உருவத்தால் வேறுபட்டாலும், அவற்றின் சாற்றின் தன்மை ஒன்றுதானே? என்று நாராயண குரு கேட்டார்.
காந்தியின் கேள்வி அறியாமை. காரணம், இலைகளில் சிறியது, பெரியது
இருப்பதுபோல், மனிதர்களில் உயரமானவர், குட்டையானவர் உண்டு. ஆனால்,
யாராயிருந்தாலும் உணர்வு ஒன்றல்லவா? இதை உணராது காந்தி கொடுத்த உதாரணம்
மிகவும் தவறு. ஆனால், நாராயண குருவின் பதில் மிகச் சரி என்பது மட்டுமல்ல,
அறிவுநுட்பம் உடையது. ஆக, காந்தியாரைவிட மேலானவர் நாராயண குரு என்பது
விளங்குகிறது. ஆனால், மகாத்மா காந்தி வெளிச்சம் போட்டுக் காட்டப்படுவதில்
ஆயிரத்தில் ஒரு பங்குகூட நாராயண குருவிற்கு இல்லை. ஆகையால்தான்
ம()றக்கப்பட்ட மாமனிதர்கள் என்ற இந்த நூல் தேவைப்படுகிறது.
நாராயண குருவின் பெருமையைக் காந்தியாரே ஏற்றுக்கொள்கின்றார்.
தனக்கிருந்த அய்யங்கள் பலவும் நாராயண குருவைச் சந்தித்த பின்பே நீங்கின
என்றார். தாழ்த்தப்பட்டவர்களுக்காகப் பாடுபடல், மது ஒழிப்பு இரண்டும்
காந்தியார் நாராயண குருவிடமிருந்து பெற்ற ஊக்கத்தின் விளைவுகள்.
1923 இல் கன்னியாகுமரிக்கு வந்த தாகூர், நாராயண குரு பாரத தேசத்தில்
தோன்றிய மகா ரிஷிகளில் ஒருவர். அவர் ஒரு பரமஹம்சர் என்று புகழ்ந்தார்.
ஆனால், இந்த ரிஷிகள், மகான்களை விட இவர் மேம்பட்டவர். தனித்தன்மை
வாய்ந்தவர், மக்கள் வாழ வழி சொன்னவர்.
நாராயண குரு சென்னைக்கு இரயில் வண்டியில் சென்று கொண்டிருந்தபோது,
நாகரிக உடையணிந்திருந்த ஒரு இந்தியர் இவரைப் பார்த்து, உங்கள் பெயர் என்ன?
என்று கேட்க, நாராயணன் என்று இவர் பெயர் சொல்ல, என்ன ஜாதி? என்று அவர்
அடுத்துக் கேட்க, உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது என்று இவர் கேட்டார்.
தோற்றத்தை வைத்துக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அவர் சொன்னார்.
என்னைக் கண்ணால் கண்டபின் கண்டுபிடிக்க முடியவில்லை. சொல்வதைக் கேட்டு
எப்படித் தெரிந்துகொள்வாய்? என்றார்.
அதாவது ஜாதிக்கு அடையாளம் இல்லை; பிறப்பு வழி திணிக்கப்படுகிறது என்பதை நுட்பமாகக் கூறினார்.
இந்த நிகழ்வை, சென்னையில் ஒரு கூட்டத்தில் இவர் பேசியதைக் கேட்டு
ஆத்திரமுற்ற இளைஞர் ஒருவர், உங்களைக் கேள்வி கேட்டவன் பூணூலை அணியும்
உயர்ஜாதியானாகத்தான் இருப்பான். உயர்ஜாதியினர் பூணூலை அறுத்து நெருப்பில்
போடவேண்டும் என்றான்.
இவ்வுணர்வு கொண்ட அரை டஜன் (ஆறு) இளைஞர்கள் இருந்தால் போதும், ஜாதி
என்னும் தீண்டாமையை அழித்துவிடலாம் என்ற நாராயண குரு, ஜாதி உணர்வுள்ள
மனிதனை ஒரு உவமையைச் சொல்லி சாடினார்.
ஒரு நாய் இன்னொரு நாயைப் பார்த்தவுடன் இது நம் இனம் என்று அடையாளம்
கண்டுவிடுகிறது. மனிதனைத் தவிர அனைத்து விலங்குகளும் அவ்வாறே காணுகின்றன.
மனிதனுக்கு மட்டும்தான் சந்தேகம் வருகிறது. எனவே, மனிதன் விலங்குகளைவிட
எவ்வளவு கீழானவன்! என்றார்.
தந்தையின் தொழிலை பிள்ளை செய்தால் சிறப்பு. எனவே, ஜாதி வழி தொழில்
சரிதானே என்று ஒரு சீடர் கேட்க, தந்தையின் திறமை பிள்ளைக்கு இயல்பாய்
வருமென்றால், அவனே செய்துவிட்டுப் போகிறான். இதில் கட்டாயப்படுத்த என்ன
இருக்கிறது; இதில் ஜாதி எப்படி நுழைந்தது என்று சம்மட்டியடியாகக் கேட்டார்.
அதேபோல், வீணான சடங்குகளையும் இவர் சாடினார். திருமணத்தில் மாலை
மாற்றல், தாலி அணிதல் போதும் என்றார். தாலி கட்டுவதைத் தவிர்த்தல் நல்லது
என்றார். கணவன் இறந்தாலோ, விவாகரத்து செய்தாலோ தாலியை அகற்றிவிடவேண்டும்.
காரணம், அவனது அடையாளம் எதுவும் இருக்கக்கூடாது என்றார். ஆனால் ஒரு ஆண் பல
பெண்களைத் திருமணம் செய்வதோ, ஒரு பெண் பல ஆண்களைத் திருமணம் செய்வதோ
கூடாது; அது கேவலம் என்றார். குடும்பச் சொத்து அனைவருக்கும்
கிடைக்கவேண்டும், பெண்களுக்கும் வேண்டும் என்றார். இல்லையென்றால்,
திருமணம், குடும்பம் இவற்றிற்கெல்லாம் அர்த்தமே இல்லையென்றார்.
நாராயண குரு மிகச் சிறந்த புரட்சியாளர் என்பதை அவருடைய சில பதில்களே தெளிவாகக் காட்டுகின்றன.
ஃஇறந்த உடலைப் புதைப்பதா? எரிப்பதா? என்று ஒருவர் கேட்க, நன்றாக
இயந்திரத்தில் அரைத்து உரமாக்கி, தென்னம்பிள்ளைக்கு வைப்பதே அறிவுடைமை
என்றார்.
ஃநாவிதரிடம் செல்லாமல் தாங்களே முகச்சவரம் செய்துகொள்வது தவறல்லவா?
என்று ஒருவர் கேட்க, மலம் கழித்தவுடன் அவனே சுத்தம் செய்துகொள்வது அதைவிட
பெருந்தவறு என்று சொல்லலாமா? என்று குரு கேலியுடனும், கூர்மையுடனும் கேட்க,
கேட்டவர் வாயடைத்து நின்றார்.
ஃதிருவனந்தபுரத்தில் ஒரு கடவுள் சிலையை குரு நிறுவினார் (பிரதிஷ்டை
செய்தார்). அப்போது ஒருவர், இப்போது நல்ல முகூர்த்த வேளையா? என்று
கேட்டார். நான் செய்துவிட்டேன். இனி இப்போது எந்த நேரம் என்பதை நீயே
தெரிந்துகொள் என்றார். கேட்டவருக்குப் புரியாமல் விழித்தார்.
சுபமுகூர்த்தம் பார்த்தா குழந்தை பிறக்கிறது? பிறந்த பின்தானே எந்த நேரம்
என்று பார்க்கிறோம், ஜாதகம் எழுதுகிறோம். பிரதிஷ்டை முடிந்துவிட்டது. இனி
எந்த நேரத்தில் நிறுவப்பட்டது என்று நீயே தெரிந்து பலன் பார்த்துக் கொள்
என்று பளிச்சென்று சொன்னார். எவ்வளவு பெரிய அறிவுநுட்பம் உடையவர்
பாருங்கள்.
ஃபலாப்பழம் திருடி மாட்டிக் கொண்டவனைப் பார்த்து திருடுவதற்கு மிகவும்
சிரமப்பட்டிருப்பாய்; நெடுநேரமும் ஆகியிருக்கும் அல்லவா? என்றார். திருடன்
வெட்கத்தால் பேச முடியாமல் நின்றான். அடர்ந்த இருள், கொட்டும் மழை,
கல்லிலும், முள்ளிலும் காயப்பட்டு ஊர்ந்து செல்லவேண்டும். பாம்பு,
பூச்சிகளிடமிருந்து தப்பிப் பிழைத்து இதைத் திருட மிகுந்த கஷ்டம்
அடைந்திருப்பாய். நீயே எடுத்துக்கொள் என்றார்.
இதற்குச் செலவிட்ட உழைப்பை, நேரத்தை, அடைந்த இன்னலை உழைத்துச்
சம்பாதிக்கச் செய்திருந்தால், திருடவேண்டியதில்லையே என்பதை எவ்வளவு
பண்பாட்டோடு உணர்த்தியுள்ளார் பாருங்கள்.
ஃ குருவின் ஆள் உயரப் படத்திற்கு பூஜை செய்து கொண்டிருந்தார்கள்.
அப்போது அங்கு வந்த குரு, காலையிலிருந்து பசியோடு உயிருள்ள குரு இங்கே
உணவிற்காகக் காத்து நிற்கிறேன். ஆனால், என்னை விட்டுவிட்டு என் படத்திற்கு
எப்படிப்பட்ட பூஜை பாருங்கள். இதுதான் மதம்! என்றார் மண்டையில்
அடித்தாற்போல.
நாராயண குரு தம் வாழ்வின் பெரும்பகுதியை மக்களுக்குத் தொண்டு செய்வதில்,
அவர்களுக்கு விழிப்பூட்டுவதில், அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதிலுமே
செலவிட்டார். இவருடைய சீடர்களான டாக்டர் பல்ப்பு குருவிற்கு மிகவும்
நெருக்கமாக இருந்து தொண்டாற்றினார். குமாரன் ஆசான் சிறந்த கவிஞர்; சத்திய
விரதன் அவரது கொள்கைகளை வெகுவாகப் பரப்பினார்; குஞ்சுராமன் கடவுள்
மறுப்பாளராக இருந்தும், குருவின் மக்கள் நலத் திட்டங்களுக்குப் பெரிதும்
உதவினார்; சி.கிருஷ்ணன், மூர்க்கொத்து குமரன், ஆனந்ததீர்த்தர் ஆகியோர்
குருவின் தொண்டில் துணை நின்றார்கள்.
மதுரைக்கு அருகிலுள்ள திருவேடகத்திற்கு 1926 அக்டோபர் 11 ஆம் தேதி
வந்தபோது, அங்குள்ள செல்வந்தர்களைப் பார்த்து எளிய மக்களுக்கும் ஆதரவற்ற
பெண்களுக்கும் ஒரு அமைப்பை ஏற்படுத்தி உதவவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஆக, அவர் எங்கு சென்றாலும், எதைச் செய்தாலும் எல்லாம் மக்கள் நலம்
சார்ந்தவையாகவே இருந்தன.
குரு இறப்பதற்குமுன் தமது அமைப்பின் சார்பில் கோட்டயத்தில் நடந்த பொது
நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதுவே, அவரது கடைசிப் பொது நிகழ்ச்சி. அவர்
அமைப்பில் 50,000-த்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்தனர்.
உறுப்பினர்கள் பதிவு செய்யப்பட்டனர். அவர்களுக்கு அதற்குரிய சான்றும்
வழங்கப்பட்டது.
கோட்டயம் மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பிய அவருக்கு, சிறுநீர்ப்
பாதையில் நோய் ஏற்பட்டது. அளிக்கப்பட்ட சிகிச்சைகள் அனைத்தும் பயன்
தராததால், 1928 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி வியாக்கிழமை மாலை 3
மணிக்கு நாராயண குரு மரணமடைந்தார். மனித நேயம் பரப்பி, மக்களை உயர்த்தி
வாழ்வித்த அந்த மாமனிதரை இவ்வுலகம் இழந்தது.
பிராமணிய மதத்தால் சீரழிந்த காலத்தில் புத்தர் மகான் தோன்றினார். ஈழவ
மக்கள் சமூக, பொருளாதார நிலையில் ஒடுக்கப்பட்ட காலத்தில் சுவாமி (நாராயண
குரு) தோன்றினார் என்று மலையாள மனோரமா புகழ்ந்து எழுதியது.
இம்மாமனிதரின் தியாக வாழ்க்கை பலவாறு பிரிந்து கிடந்த ஒரு பெரிய
சமுதாயத்தை ஒருங்கிணைத்து, அதனை மேம்படுத்தும் கடினமான பணியைச் செய்தது
என்றால், அது மிகையல்ல. மதக் குருமார்களைச் சுற்றி மூட நம்பிக்கைகள்
இருப்பது வழக்கம். ஆனால், நாராயண குருவின் மதம் பற்றிய பார்வை விசாலமானது.
பரந்த மனம் கொண்டது. அவரது ஒரு ஜாதி, ஒரு மதம் என்பது, மனிதனுக்கு
ஜாதியும், மதமும் தேவையில்லை என்ற கருத்தைத் தெரிவிப்பதாகும். கடந்த இரண்டு
மூன்று நூற்றாண்டுகளில் குருவைப்போல சமூகச் சேவகரும், தலைவரும்
தென்னிந்தியாவில் தோன்றவில்லை என்று அதிகாரப்பூர்வமாகக் கூறலாம். மதக்
கோட்பாடுகளில் புதுமைகளைப் புகுத்தியவர் என்று பார்ப்போமானால், குருவுக்கு
நிகர் யாரும் இல்லையென, நாம் உறுதிபடக் கூறலாம் என்று மிதவாதி புகழ்ந்தது.
மனிதனை மனிதன் பன்றியினும் கேவலமாய் நடத்திய கேரளப் பகுதியில் பிறந்து,
அம்மக்களை மானமும், அறிவும் உயர்வும் பெறச் செய்து, மூட நம்பிக்கைகளை
ஒழித்து, மதிமயக்கத்தை அகற்றி, பெரிய பெரிய மாமனிதர்களே தன்னை
வணங்கும்படியாக வாழ்ந்து, மக்களுக்குத் தொண்டு செய்து உலகிற்கு வழிகாட்டிய
அந்த உத்தமரை இந்த உலகம் என்றும் நினைவில் கொண்டு வாழவேண்டும். அதுவே
அவருக்குச் செய்யும் நன்றிக் கடன்!
நூல் - மறைக்கப்பட்ட மாமனிதர்கள்
ஆசிரியர் - மஞ்சை வசந்தன்
Comments
Post a Comment