ம. சிங்காரவேலர் (கி.பி.1860-1946)



தமிழகத்தின் புரட்சி இயக்கங்களின் வரலாற்றில், சிங்காரவேலர் அவர்களின் பெயர் தனித்தன்மை வாய்ந்த ஓர் இடத்தைப் பெற்றிருப்பதை வரலாறு தெரிந்த அனைவரும் ஒப்புவர். சுயமரியாதை இயக்கத்திலும், பொதுவுடைமை இயக்கத்திலும் அவரது பங்கும், பணியும் ஏராளமானவை.

1860 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 ஆம் நாள், சென்னையில் நடுத்தர வசதியுள்ள மீனவர் குடும்பத்தில் பிறந்தார். எனவே, அவரது கல்வி வாழ்க்கை எளிதாய் அமைந்தது. 1894 இல் பி.ஏ., பட்டம் பெற்றார். அதன் பின் சட்டம் பயின்று, 1907 ஆம் ஆண்டில் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் ஆனார்.

படிக்கும்போதே பல்வேறு கருத்துக்கள் குறித்து ஆழ்ந்து சிந்தித்தார். தாம் சிந்தித்து அறிந்து முடிவு செய்தக் கருத்துக்களை சிறுசிறு வெளியீடுகளாக வெளியிட்டார்.

புத்தரின் கொள்கைகள் இவரது உள்ளத்தில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியது. இவருடைய வீட்டில் புத்தர் விழாக்கள் கொண்டாடப்படுவது உண்டு. வருணாசிரமத்திற்கு எதிராகப் புத்தர் பெருமானின் கருத்துக்கள் இவரை வெகுவாய் கவர்ந்தன.

இதுகுறித்து, இந்தியன் சோஷியல் ரிபார்மர் ஏட்டில் (28.5.1899) கீழ்க்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது. அச்செய்தி இவரின் தொடக்கக் கால பொது வாழ்வுத் தொடர்பை விளக்குவதாய் அமைகிறது.

சென்ற வியாழக்கிழமை அன்று புத்தர் பிரான் மறைவின் 2443 ஆம் ஆண்டு விழா, ம.சிங்காரவேலு அவர்கள் வீட்டில் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியை ஸ்வாமி இராமகிருஷ்ணானந்தர் அவர்கள் துவக்கி வைத்தார். பின்னர், ம.சிங்காரவேலு பேசினார். ஸ்வாமி விவேகானந்தர் படைப்புகளிலிருந்தும் பல பகுதிகளை எடுத்துக்காட்டிப் பேசினார். அத்தோடு, பார்க்லி, அடால்ப் தாமஸ், மோனியர் வில்லியம்ஸ் ஆகியோர் நூல்களிலிருந்தும் சில கருத்துக்களை எடுத்துப் பேசினார். புத்தர் பிரான் வாழ்வைப் பற்றியும், அவரது போதனைகளைப்பற்றியும் தாம் தமிழில் எழுதி அச்சிட்டு வெளியிட்ட சிறு நூல்களிலிருந்தும் சில பகுதிகளைப் படித்தார். வந்திருந்தோருக்கு அந்த சிறு நூல்களும் வழங்கப்பட்டன. அயோத்தி தாச பண்டிதர் அவர்களும், பேராசிரியர் லட்சுமி நரசு அவர்களும் பேசினர்.

ஆக, சிங்காரவேலரின் பொதுவாழ்வுப் பணி என்பது, புத்தரின் நினைவு நாள் விழாவாகத்தான் தொடங்கியுள்ளது என்பது விளங்குகிறது. அதுமட்டுமன்றி அவருக்கு அவரது சமகால சீர்திருத்தவாதிகளின் தொடர்பும் இருந்தது என்பதை அயோத்திதாசர் வருகை உணர்த்துகிறது. இந்திய நாட்டுச் சிந்தனையாளர்களின் சிந்தனைகளை மட்டுமன்றி, அயல்நாட்டார் சிந்தனைகளையும் ஆழமாக இவர் கற்றிருந்தார் என்பதும் அந்நிகழ்வின் மூலம் வெளிப்பட்டது.

மேலும், விவேகானந்தர், புத்தர் இவர்களின் சிந்தனைகளை இவர் தேர்வு செய்து கருத்துக்களை வெளியிட்டதும், இராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றோரின் கருத்துக்களை ஒதுக்கியதும், இவரது கொள்கைத் தெளிவையும், கூர்மையான அறிவையும் காட்டியது.

அதுமட்டுமல்ல, சிங்காரவேலர் உலகு பற்றியும், உயிரினத் தோற்றம்பற்றியும், உலக இயக்கம் குறித்தும் நுட்பமாகச் சிந்தித்தார். டார்வின் கொள்கையால் பெரிதும் கவரப்பட்டார். அதைப்பற்றி பல இடங்களிலும் விளக்கிப் பேசியுள்ளார். இவரது இக்கருத்து திரு.வி.க.வை  வெகுவாகக் கவர்ந்துள்ளது. அவர் தமது வாழ்க்கைக் குறிப்புகள் என்ற தன் வரலாற்று நூலில் சிங்காரவேலரின் சொற்பொழிவுகள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

திருஞானசம்பந்தர் எலும்பைப் பெண்ணாக்கினார் என்ற கற்பனைக் கதையை மறுத்து சிங்காரவேலர் பேசியதையும், இன்னொரு கூட்டத்தில் டார்வினுடைய பரிணாமக் கோட்பாட்டை விளக்கிப் பேசியதையும் திரு.வி.க. சுட்டிக்காட்டியுள்ளார். சிங்காரவேலரின் அன்றைய பேச்சைக் கேட்டதிலிருந்து, டார்வினுடைய தத்துவத்தால் தாமும் ஈர்க்கப்பட்டதாக திரு.வி.க. அவர்கள் கூறியுள்ளார்கள். அந்த அளவிற்கு தலைசிறந்த பகுத்தறிவுச் சிந்தனையாளராக சிங்காரவேலர் திகழ்ந்தார்.

பகுத்தறிவுச் சிந்தனையோடு தொடங்கிய அவரது பொதுத் தொண்டு, பார்ப்பனரல்லாதார் நலத்திற்குப் பாடுபடுதல் என்ற அளவில் வளர்ந்தது. வகுப்புரிமை, வகுப்புவாரி பிரதிநிதித்துவம் வேண்டல் என்ற போராட்டங்களாக வளர்ந்து, சுதந்திரப் போராட்டத்திலும் தீவிரமாக ஈடுபடுதல் என்ற அளவில் விரிந்தது.

1919-1920 ஆம் ஆண்டுகளில் கம்யூனிசக் கொள்கைகளில் ஈர்ப்பு ஏற்பட்டு, ஒரு கம்யூனிஸ்ட்டிற்குரிய தெளிவைப் பெற்றார். பொருளாதாரத்தை முதன்மைப்படுத்திச் செயல்பட்ட கம்யூனிஸ்டு இயக்கத்தில் ஈடுபாடு அதிகம் ஏற்பட்ட போதிலும், சமுதாய சீர்திருத்தத்திலும் அதிக அக்கறை செலுத்தினார். ஜாதி ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு போன்றவற்றிற்காகப் பெரிதும் பாடுபட்டார்.

தொழிலாளர் நலனில் பெரிதும் நாட்டம் கொண்ட இவர், ஆங்கில ஆதிக்கம் உச்சநிலையில் இருந்த அக்காலத்திலே, ஹிந்துஸ்தான் தொழிலாளர் விவசாயிகள் கட்சி என்ற சட்டபூர்வமான, பெருவாரியான மக்களை உள்ளடக்கிய கட்சி ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டார். அதன் முதற்கட்டமாக 1923 இல் அக்கட்சிக்கென்று கொள்கை அறிக்கையையும் தயாரித்தார். அதில், அரசியல், பொருளாதாரம் சார்ந்த கொள்கைத் திட்டங்கள் குறிக்கப்பட்டதோடு கீழ்க்கண்ட சமூகச் சீர்திருத்தக் கோரிக்கைகளும் அடங்கியிருந்தன.

1.  வரதட்சணை ஒழிப்பு

2.  16 வயது வரை ஆண், பெண் குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி மற்றும் இலவச உணவு

3.  தீண்டப்படாதவருக்குச் சமமான அரசியல், மத உரிமைகளைச் சட்ட வாயிலாக அளித்தல்

4.  சட்டத்தினால் தீண்டாமையை ஒழிக்க நடவடிக்கை மேற்கொள்ளல்

5.  நிர்வாகம், மதம், சட்ட அமைப்புகளில் ஒடுக்கப்பட்டோருக்குச் சம உரிமை அளித்தல்

6.  தாய்மைக்கால பாதுகாப்பு

7.  அனைவருக்கும் வாக்குரிமைகாங்கிரஸ் என்பது       மதம் என்று எடுத்துக்கொண்டாலும், அதில் அடங்கிய கோவில், கோவில் சார்ந்த நிலம் எல்லாம் ஆரியப் பார்ப்பனர், முதலியார், பிள்ளைகள் பிடியில்தான் இருந்தன. இதை மாற்றுகின்ற வகையில், 1925 பிப்ரவரி மாதம், ஆட்சியிலிருந்த நீதிக்கட்சி அமைச்சரவை, ஹிந்து மத பரிபாலனச் சட்டம் என்பதைக் கொண்டு வந்தது. இதன்படி கோவில் மற்றும் அறக்கட்டளை சொத்துக்களை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது.

இதனைப் பல காங்கிரஸ் தலைவர்கள் எதிர்த்தனர். பெரியார், திரு.வி.க., பி.வரதராஜூலு போன்றவர்கள் ஆதரித்தனர். தன்னுடைய நோக்கத்திற்கு இச்சட்டம் ஏற்புடையதாக இருக்கவே, சிங்காரவேலரும் இதை ஆதரித்தார்.
ஆதிக்கவாதிகளின் கையில்தான் அப்போது இருந்தது என்பதை இச்சட்டத்தை அக்கட்சியிலிருந்த பலர் எதிர்த்தது தெளிவுபடுத்தியது.

அந்த ஆதிக்கவாதிகளுக்குப் பதில் கொடுக்கும் வகையில் 13.2.1925 நவசக்தி வார ஏட்டில், சிங்காரவேலர் கீழ்க்கண்டவாறு எழுதினார்.

தரும ஸ்தாபனங்களின்மீது அரசாங்கம் ஆதிக்கம் இருக்கவேண்டாமா? என்பதைப்பற்றி இப்பொழுது சட்டசபைக்குள்ளும் அதற்குப் புறம்பாகவும் பெரிய சச்சரவு நடைபெற்று வருகிறது. சிலர் வேண்டுமென்கின்றனர், சிலர் வேண்டாம் என்கின்றனர். ஆனால், சுயராஜ்ய அரசாங்கத்தில் இந்தத் தரும ஸ்தாபனங்கள் எந்த நிலையில் இருக்கும் என்பதை அறிவிக்கவேண்டும். ஜனப் பிரதிநிதிகளுடைய தீர்மானமே அமலுக்கு வரக்கூடியதாய் உள்ள சுயராஜ்யத்தையே நாம் விரும்புகின்றோம். ஹிந்து மதத்திற்கு ஆபத்து வந்துவிட்டது என்பது சரியான காரணமாகாது. உடன்கட்டையேறுதல் எனும் வழக்கம் ஒழிக்கப்பட்ட காலத்திலும் இதே கூச்சலேஎழுந்தது. விதவா விவகாச் சட்டம் போன்ற சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட காலத்திலும், இத்தகைய கூச்சல்களே எழுந்தன. லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைச் சரியான நிர்வாகத்திற்கு உட்படுத்தக் கூடிய இச்சட்டத்திற்கு விரோதமாக ஏன் கிளர்ச்சி செய்யவேண்டும்? ஆதலின் இந்த தரும பரிபாலன சட்டம் பல வழிகளில் நன்மை தரக்கூடியது என்று ஜனங்களிடையே சென்று பிரச்சாரம் செய்வது தமிழ்நாட்டுத் தலைவர்களுடைய கடமையாகும்.

பொதுச் சொத்துக்களை அரசுக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதுதானே நியாயம்? அதற்கு ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கவேண்டும்? இந்த ஆதிக்கவாதிகளும் வைதீகர்களும் எதற்கும் கூச்சலிடவே செய்வர். உடன்கட்டை ஏறுதலையும், விதவை மறுமணத்தையும்கூட எதிர்த்த மனித நேயமற்றவர்கள்தானே இவர்கள்? இவர்களுடைய கூச்சலுக்கு அஞ்சாது, தமிழகத் தலைவர்கள், இந்த நியாயமான சட்டத்தை ஆதரித்து மக்கள் மத்தியில் நன்றாகப் பிரச்சாரம் செய்யவேண்டும் என்று அவர் கூறுவதிலுள்ள நுட்பங்களை ஆய்ந்து பார்த்தால், அவர் ஒரு தெளிவு பெற்ற, துணிவுமிக்க, பகுத்தறிவும், சமத்துவமும் மனிதநேயமுங்கொண்ட மாபெரும் தலைவர் என்பது எளிதில் விளங்கும்.

காங்கிரஸ் கட்சியில் இருந்துகொண்டே கம்யூனிஸ்டு போலப் பேசினார் இவர். 1925 நவம்பரில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் சிங்காரவேலர்.

தாழ்த்தப்பட்டவர்கள் தெருக்களில் நடக்கக்கூடாது என்று பாலக்காடு அருகிலுள்ள கல்பாத்தியில் ஆரியப் பார்ப்பனர்கள் தடை விதித்திருந்ததை எதிர்த்து சிங்காரவேலனார் பேசினார்.

பிராமணர்கள், பிராமணர் அல்லாத இந்துக்களில் சிலரைத் தெருவில் நடக்க அனுமதிக்காதது பெருத்த அக்கிரமமேயாகும். இவர்கள் (பிராமணர்கள்) உள்ளவரையும் நம் நாடு முன்னேற்றமடையாது. இந்த மூடப் பிராமணத்துவம் ஒழிந்தால்தான் சுயராஜ்ஜியம் கிடைக்கும். பிராமணர்களை நாம் கேட்டுக்கொள்வதெல்லாம் ஜாதி கவுரவத்தை விட்டுவிடுங்கள் என்பதுதான். ஜப்பானில் ஜாதி கவுரவம் ஒழிந்து தீண்டாமை ஒழிக்கப்பட்டதால்தான் அந்த நாடு முன்னேற்றம் அடைந்தது. பிராமணர்கள் தங்களுடைய வகுப்பு அகம்பாவத்தை விட்டுவிட்டாலன்றி நாட்டின் அடிமைத்தனம் நீங்காது. ஓ பிராமணர்களே! நீங்கள் எங்களைச் சமமாய் நினைக்கின்ற தினமே இந்தியாவுக்குச் சுயராஜ்ஜியம் கிடைக்கும் தினமென திண்ணமாய்ச் சொல்லுகிறேன்.
- (ஆதாரம்: குடிஅரசு, 29.11.1925)
கம்யூனிசக் கொள்கையில் நாட்டமுடையவராய் இருந்தும், அதற்குரிய தீவிரத்தோடு இவர் செயல்படவில்லை. அவரது பேச்சில் சமாதான அடிப்படையிலான கோரிக்கைகளே இருந்தன. அதனால் தான் பெரியார் காங்கிரசைவிட்டு வெளியில் வந்த பின்னரும், இவர் தொடர்ந்து காங்கிரசிலே இருந்தார். 1925 டிசம்பரில் கான்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலும் சிங்காரவேலர் கலந்துகொண்டார்.
1925 இல் அகில இந்திய கம்யூனிஸ்ட் மாநாடு கான்பூரில் நடைபெற்றபோது, அதற்கு சிங்காரவேலர் தலைமை தாங்கினார். தான் தயாரித்து அச்சடித்து எடுத்து வந்த தலைமை உரையை எல்லோருக்கும் வழங்கினார். அவ்வுரையில் தீண்டாமைபற்றி தெளிவாக ஆய்வு செய்து எழுதியிருந்தார்.
முதலில் தீண்டாமை பிரச்சினையை நாம் ஆராய்வோம். அப்பிரச்சினை பற்றிய நம் கட்சியின் நிலை குறித்து என் கருத்தைக் கூறுகிறேன். கம்யூனிச நோக்கத்திலிருந்து பார்க்கும்போது, தீண்டாமை பிரச்சினையானது, முற்றிலும் ஒரு பொருளாதாரப் பிரச்சினை என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். இவ்வகுப்பினர் ஆலயங்களிலும், குளங்களிலும், தெருக்களிலும் அனுமதிக்கப்படுகிறார்களா? என்பது நமது சுயராஜ்யப் போராட்டத்துடன் தொடர்புள்ள பிரச்சினையன்று. சுயராஜ்யம் வரும்போது இந்தச் சமூக மதக் கட்டுப்பாடுகள் தாமாகவே வீழ்ச்சியடையும். கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஜாதியோ, சமயமோ, இதர அத்தகைய பிரச்சினைகளோ கிடையாது. இந்துக்கள் அல்லது முஸ்லீம்கள் அல்லது கிறிஸ்தவர்கள் அவற்றைப் பற்றி எத்தகைய சொந்தக் கருத்துக்களையும் கொண்டிருக்கலாம். தீண்டாமை பிரச்சினையானது, இந்திய வெகுஜன மக்களின் பொருளாதார அடிமைத்தனத்தோடு அடிப்படையாகப் பிணைந்துள்ளது. அவர்களின் பொருளாதார அடிமைத்தனத்திற்கு முடிவு கட்டப்பட்ட உடனேயே தீண்டாமை எனும் இந்த சமூக அவலம் மறையத்தான் செய்யும். நிலவுடைமையில் உள்ள ஏற்றத் தாழ்வே கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட இவ்வகுப்பினரின் அடிமைத்தனத்திற்குத் தலையாய காரணமாகும். கோவில்கள், குளங்கள், சாலைகள் இவற்றைப் பயன்படுத்தும் உரிமை மட்டுமே சமூகத்தில் இந்த அவல நிலையில் உள்ளவர்களை அவர்களின் வளமார்ந்த சகோதரர்களுக்கு நிகராக உயர்த்தி விடாது. தீண்டாமை பிரச்சினை அடிப்படையில் ஒரு விவசாயப் பிரச்சினையாகும். இந்தப் பொருளாதார அடிமைத்தனத்திலிருந்து அவர்களை விடுவிக்காமல், தீண்டாமை ஒழிப்பு பற்றிய பேச்சு நேர்மையற்றதாகும். நமது சகோதரர்களைத் தீண்டத்தகாதவர்கள் என இரக்கமற்ற முறையில் நடத்தப்படுகிற அநீதி குறித்து மாறுதல் வேண்டாதார் (சட்டசபை பகிஷ்காரம் வேண்டும் காங்கிரசார்) பெரிதாகப் பேசுகிறார்கள்.

ஆனால், அவர்கள் இந்த மக்களின் பட்டினி குறித்தும், வறுமையில் வாடும் அவர்களின் இல்லங்கள் குறித்தும் பேசுவதைக் கவனமாகத் தவிர்த்து விடுகிறார்கள். இந்திய சீர்திருத்தவாதியின் முதலாளித்துவ மனப்பான்மைக்கு இது ஒரு நல்ல உதாரணம். சமூக அநீதிகள் குறித்துப் பிரமாதமாகப் பேசும் இவர்கள், கோடிகணக்கான விவசாயத் தொழிலாளர்களை, நாட்டின் முதலாளிகள் பொருளாதார அழிவில் தள்ளியிருப்பது பற்றி மவுனம் சாதிக்கிறார்கள். இந்தத் துர்பாக்கியமான மக்களைச் சமூக அழிவிலிருந்து கடைத்தேற்றும் ஒரே அறிவுப்பூர்வமான வழி, அவர்களை, அவர்களது வசதிமிக்க சகோதரர்களின் பொருளாதார நிலையின் அளவிற்கு உயர்த்துவதுதான். இதை விடுத்து தீண்டாமை ஒழிப்புப்பற்றி மட்டும் பேசுவது என்பது நேர்மையற்றது; நகைப்பிற்கிடமானது. எனவே, கம்யூனிஸ்டுகளாகிய நாம் ஒடுக்கப்பட்ட வகுப்பாரின் பொருளாதார உரிமைகளை வலியுறுத்தவேண்டும். இவர்களது வாழ்க்கைச் செலவுக்கான ஊதியம் வழங்கப்படவேண்டும். அதன்மூலமாகக் குறைந்தபட்சம் இந்த வாழ்க்கையைத் தாங்கிக் கொள்ளக்கூடியவர்களாக அவர்களை ஆக்கவேண்டும் என்று நாம் வலியுறுத்தவேண்டும்.

என்று தலைமை உரையில், தாழ்த்தப்பட்டோரின் உயர்வுக்கு எத்தகைய அணுகுமுறை வேண்டும் என்பதைத் திட்டவட்டமாக, மற்றவர்களின் அணுகுமுறையையும் விமர்சித்து விளக்கினார்.

தீண்டாமை பிரச்சினை அடிப்படையில் ஓர் விவசாயப் பிரச்சினை என்று இவர் கருதினார்.

நிலவுடைமையில் உள்ள ஏற்றத் தாழ்வே கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட இவ்வகுப்பாரின் அடிமைத்தனத்திற்கு தலையாய காரணமாகும் என்றும் கூறினார்.

ஆனால், இவரது இந்தச் சிந்தனையும், முடிவும் கூர்மையான ஆய்வுக்கு உட்படுத்தி, இந்தியச் சூழலை ஒட்டி அணுகிப் பார்த்தால், அவரது கருத்து முழுமையும் சரியானது என்று கொள்ள முடியாது.

காரணம், மற்ற நாடுகளில் உள்ளது போன்ற வர்க்கப் பேத அடிப்படையில் உள்ள ஏற்றத்தாழ்வு மட்டும் இந்தியாவில் நிலவவில்லை. மற்ற நாடுகளில் இல்லாத பிறவிப் பேத ஏற்றத்தாழ்வு இந்த நாட்டிற்கே உரிய மகா கொடுமை.
ஏழையாய்ப் பிறந்தாலும் ஆரியப் பார்ப்பனர் உயர்ந்தவர்; பணக்காரனாய் இருந்தாலும் தாழ்த்தப்பட்டவர் தீண்டத்தகாதவரே! என்ற சாத்திரங்கள் வரையறுத்து, அதையே நடைமுறைப்படுத்தப்படும் ஒரு நாட்டில் பொருளாதாரச் சமத்துவத்தால் மட்டுமே சமுதாயச் சமத்துவத்தைக் கொண்டு வர முடியாது.

நல்ல வீடு, உயர் பதவி, அதிக வருவாயை பொருளாதார சமத்துவத்தால் ஒரு தாழ்த்தப்பட்டவனுக்குக் கொடுத்துவிட முடியும். ஆனால், அவனது தீட்டை அகற்ற அப்பணத்தால் முடியாதே!

ஒரு நாட்டின் பாதுகாப்பு மந்திரி, ஏராளமான வருவாயும், வசதியும் உள்ளவர் பாபு ஜெகஜீவன்ராம், அவர் திறந்து வைத்த சிலை தீட்டாகிவிட்டது என்ற புனிதப்படுத்திய நாடுதானே இது? அறிவியல் வளர்ச்சியுள்ள, விடுதலையடைந்த, சட்ட சமத்துவம் தற்போதும் உள்ளபோது ஏன் இந்தக் கொடுமை நடக்கிறது? அப்படியென்றால் பொருளாதாரக் காரணியைத் தாண்டிய ஒரு சமூகக் காரணி இங்கு ஆழமாக வேரூன்றி நிற்கிறது என்று பொருள். அந்தக் காரணிதான் பிறவியிலே இழிவு கற்பிக்கும், பிறவியிலே தீட்டு கற்பிக்கும், பிறவியிலே ஏற்றத்தாழ்வு கற்பிக்கும், சாஸ்திரம், சட்டம், மதம் ஆகியவற்றை உள்ளடக்கிய வருணாசிரமம்.

எனவேதான், தந்தை பெரியார் அவர்கள் அதைக் கையில் எடுத்தார். சமுதாயச் சீர்திருத்தத்தைக் கையிலெடுத்த அதேவேளையில் பொருளாதாரச் சமத்துவமும் வேண்டி, பொதுவுடைமைச் சித்தாந்தத்தையும் பெரியார் ஏற்றுப் பரப்பினார். எனவே, இந்த நாட்டில் வெறும் பொருளாதாரச் சமத்துவமும் பயனளிக்காது; வெறும் சமுதாயச் சீர்திருத்தமும் பயனளிக்காது. இரண்டும் கலந்த போராட்ட முறையே இங்கு இழிவு நீக்கும், ஏற்றத்தாழ்வு போக்கும்.

அதேபோல், சுயராஜ்யம் வரும்போது இந்தச் சமூக மதக் கட்டுப்பாடுகள் தாமாகவே வீழ்ச்சியடையும் என்ற இவரது கருத்தும் ஏற்புடையதன்று. காரணம், விடுதலையடைவதால் அந்நியர் ஆட்சி அகலுமே அன்றி, உள்நாட்டிலுள்ள சமுதாய ஏற்றத் தாழ்வுகள் அப்படியேதான் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் அந்த ஏற்றத்தாழ்வு வலுப்படும். காரணம், விடுதலைக்குப்பின் ஆட்சியானது ஆதிக்கவாதிகளின் கைகளுக்கு மாறும். அவர்கள் விருப்பப்படியே அத்தனை ஏற்றத் தாழ்வுகளும், இழிவுகளும் அப்படியேதான் இருக்கும்.

எனவே, சமுதாய சீர்திருத்தம் என்பது பிறவி பேதம், கடவுள், மதம், சாஸ்திரம் சார்ந்தது என்பதால், அவற்றை நோக்கிய போராட்டமும், அவற்றை ஒழிப்பதுமே ஆகும். இதைத்தான் இன்று வரையிலான இந்திய வரலாறு நமக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது.

இன்றுவரை கோவில் கருவறையுள் ஆரியர்களைத் தவிர மற்றவர்கள் நுழைய முடியாமைக்கு என்ன காரணம்? நாடு விடுதலை அடைந்துவிட்டதே! ஏன் அந்த நிலை மாறவில்லை?

இந்த நாட்டில் எந்தவொன்றும் அதுவாகவே ஒழியாது, அதற்குரிய எதிர்ப்போராட்டங்களும், சட்டத் திருத்தங்களும், சட்ட இயற்றல்களும், எதிர்ப்போர் மீதான கடுந்தண்டனைகளும்தான் அவற்றை ஒழிக்கும்.

1925 ஆம் ஆண்டில் மேற்கண்ட கொள்கை உடையவராய் இருந்த சிங்காரவேலர், தன்னுடைய கருத்து சரியல்ல என்பதை உடனடியாகவே உணர்ந்து, தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தோடு நெருங்கிய தொடர்பு கொள்ளத் தொடங்கினார்.

1927-28 இல் தென்னிந்திய ரயில்வே தொழிலாளர்களின் மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு சிங்காரவேலர் தலைமை தாங்கினார். தந்தை பெரியார் இப்போராட்டத்தைத் தீவிரமாக ஆதரித்தார். இதன்மூலம் பெரியாருடனான இவரது பிடிப்பு மேலும் வலுப்பட்டது.

தந்தை பெரியார் அவர்கள் இப்போராட்டத்தை ஆதரித்ததற்காகக் கைது செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், 1928 ஜூலையில் சிங்காரவேலரைக் கைது செய்த அரசு அவருக்கு 10 ஆண்டு காலகடுங்காவல் சிறைத் தண்டனை விதித்தது. அப்போது அவருக்கு வயது 68. பிறகு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு அதன்மூலம் 1930 ஆம் ஆண்டு சிங்காரவேலர் விடுதலை செய்யப்பட்டார்.

சிங்காரவேலர் சிறையில் இருக்கும்போது, சுயமரியாதை இயக்கம் சிறப்பான வளர்ச்சி பெற்றது. சிங்காரவேலர் சிறையிலிருந்து வெளியில் வந்ததும் சுயமரியாதை இயக்கத்தின்மீது அதிகம் ஈடுபாடு கொண்டார். பெரியாரின் கொள்கைகள் நியாயமானவை, சரியானவை என்பதை உணர்ந்தார். காங்கிரஸ்காரர்களும் பெரியாரின் கொள்கைகளை உணர்ந்து பார்க்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

21.6.1931 இல் குடிஅரசில் ஒரு கட்டுரை எழுதினார். தமிழ் மாகாண மாநாட்டினுடைய யோசனை குறைவு என்று அக்கட்டுரைக்குத் தலைப்பிட்டிருந்தார். 1931 இல் மதுரையில் நடந்த தமிழ்நாடு காங்கிரசின் அரசியல் மாநாடு குறித்து எழுதப்பட்ட கட்டுரை அது என்பதால், அப்படியொரு தலைப்பைக் கொடுத்தார்.

இப்போது ஜாதியில்லாத அரசின்கீழ் ஜாதியுடையோர் ஆளப்பட்டு வருகின்றமையால், ஏறக்குறைய பொதுவாக நடத்தப்பட்டு வருகிறார்கள். இந்த நிலைமை மாறி, ஜாதி வித்தியாசமுடையவர்களின் ராஜாங்கம் ஏற்படுமேயாகில் வேறுபட்ட பல ஜாதியார்கள் எவ்விதம் ஒற்றுபட்டு வாழ்வார்கள்? அந்தந்த ஜாதியின் மனப்பான்மை எப்படி ஒற்றுமைப்படும்? ஜாதி வருணாசிரமத்தில் மூழ்கிக் கிடப்பவனுக்கு அதிகாரம் வந்தால், அதற்கு அந்நியப்பட்டவர்களை எவ்விதம் நடத்துவான்? ஜாதி மத வித்தியாசங்கள் முற்றிலும் ஒழிந்தால்தான்,

நமது இந்தியாவுக்குச் சுதந்திரத் தகுதியாகுமென்று சொல்ல வரவில்லை என்றாலும், இந்திய சுதந்திரத்தைக் கோரும் பெரியோர், இந்தக் கஷ்டங்களைத் தீர்க்க யோசிப்பதோடு, இவைகளுக்குச் சரியான பரிகாரம் தேடவேண்டும். பரிபூரண சுயராஜ்ஜியத்தை விரும்புவோரும், அதற்கு முயற்சிப்போரும் ஜாதி மதத்தை விட்டொழித்தோம் என்று பிரசித்தப்படும் வரை தேச மக்கள் அவர்கள்மேல் பூரண நம்பிக்கை வைக்கமாட்டார்கள் என்பது திண்ணம் என்று அக்கட்டுரையில் விளக்கியிருந்தார். தந்தை பெரியாரும் இதே கருத்தையே கொண்டிருந்தார் என்பதை இங்கு ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். பதவி பற்றில்லா சிந்தனையாளர்கள் ஒரே மாதிரிதான் சிந்தித்து முடிவு செய்வார்கள் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.

மேலும், கான்பூர் கம்யூனிஸ்டு மாநாட்டில் இவர் ஆற்றிய தலைமையுரையின்போது கொண்டிருந்த கொள்கைக்கு இது மாறுபட்டது என்பதையும் இங்கு கருத்தில் கொள்ளவேண்டும். தவறு என்று தெரிந்தால் அதைத் திருத்திக் கொண்டு, சரியானதை ஏற்று அதைப் பரப்பும் பணியைப் பெரியாரும் செய்தார், இவரும் செய்தார்.

1931 ஆம் ஆண்டு விருதுநகரில் சுயமரியாதை இயக்கத்தின் மூன்றாவது மாகாண மாநாடு நடைபெற்றது. இதில் பங்கு கொள்ளுமாறு சிங்காரவேலருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. அவரது உடல்நலக் குறைவால் அவரால் கலந்துகொள்ள இயலவில்லை. என்றாலும், மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆதரித்து 30.8.1931 குடிஅரசில் ஒரு கட்டுரை எழுதினார்.

ஜாதி என்பது நமது இந்திய தேசத்தில் மட்டும் பிறந்த ஒரு ஸ்தாபனம். இதை ஒழிக்காமல் சகோதரத்துவம் வெறும் சொல்லே. காங்கிரஸ்காரர்கள் ஆயினும், சுயமரியாதைக்காரர்களாயினும் இதை ஒழிக்காதவரை இவர்கள் நடப்பெல்லாம் வேஷம் எனக் கொள்ளவேண்டும். தீண்டாமை ஒழியவேண்டும் என்று சொல்லிக்கொண்டு, பூணூலையும், சந்தியாவந்தனத்தையும் வைத்துக்கொண்டிருந்தால், வஞ்சனையல்லாது வேறில்லை. இந்தக் கபட நாடக சூஸ்திரம் போகாமல் காங்கிரஸ்காரர்கள் பொது ஜனத் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்வது பெரும் பித்தலாட்டம் ஆகும்.  இதனைச் சுயமரியாதையோர் வற்புறுத்துவது உண்மையே. தீண்டாமையை விட்டவர்கள் ஏன் ஆச்சாரியர்கள் எனவும், அய்யர் எனவும், அய்யங்கார்கள் எனவும் அழைக்கச் சம்மதிக்கவேண்டும்? ஜாதியை உண்மையில் ஒழித்தோம் என்பார்களாயின் ஜப்பான் தேசத்தில் சாமுரே பிரபுக்கள் தங்கள் ஜாதியைப் பகிரங்கமாக ஒழித்தெறிந்த விதமாகப் பூணூலையும் அர்த்தமில்லாத வர்ணாசிரமங்களையும் ஏன் ஒழித்தெறிதல் ஆகாது? இதைச் செய்யும்வரை தீண்டாமை நீங்கவேண்டும் என்பது மதிமயக்கமே! இந்த நோக்கையும் சுயமரியாதை மாநாடு வற்புறுத்தியது முக்கிய விஷயமே!

ஜாதி ஒழிப்பில் உளப்பூர்வமான முயற்சி மேற்கொள்ளாமை குறித்து காங்கிரஸ்காரர்களை இவர் கண்டித்ததுபோலவே, சுயமரியாதை இயக்கத்தவர்கள் பொருளாதாரத்தில் நலிந்தவர்களின் நிலையையும் கருத்தில் கொள்ளவேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.

அறிவுக்கு ஆதாரமாகிய விஷயங்களைக் குறித்து நமது சுயமரியாதைக்காரர் எவ்வளவு ஊக்கத்துடன் உழைத்து வருகின்றாரே, அவ்வளவு மனவிசாலத்துடன் சீல ஆசாரம் (குணாசாரம்), பொருளாதாரம் முதலிய முக்கிய விஷயங்களைக் குறித்தும் பாடுபடவேண்டுமாய், நமது தோழர்களை வேண்டிக் கொள்கிறோம். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! என்றதையும் கவனித்தல் வேண்டும். அறிவை அந்த கார இருளில் இருந்து நீக்குவதைப்போல, உயிரையும் தாங்கொணா பசிப் பிணியிலிருந்து நீக்கவேண்டும். உணவு இன்றி, அறிவு விளங்காது. ஆகவே, உணவே உயிருக்கும், அதில் தோன்றும் அறிவுக்கும் ஆதாரம் ஆதலின் முப்பத்தைந்து கோடி மக்கள் இனிது உண்டு, உடுத்தி, வாழ்வதற்கு வேண்டிய ஆதாரங்களை, சுயமரியாதைப் பெரியோர்கள் கண்டெடுத்து அளிப்பார்கள் என்று நம்புகிறோம்.
சிங்காரவேலரின் இக்கருத்துக்கள் பெரியாரைப் பெரிதும் கவர்ந்தன. அவர் மூலமாக சோவியத் நாடு பற்றியும், பொதுவுடைமை பற்றியும் நிறைய அறிந்துகொண்டார்.

அதன் உந்துதலால் தந்தை பெரியார் அவர்கள், ரஷ்யாவைக் காணவேண்டும் என்று விரும்பி, சிங்காரவேலரின் தோழரும் இங்கிலாந்திலிருந்த கம்யூனிஸ்டுமாகிய சக்லத்வாலாவின் உதவியுடன் பெரியார் அய்ரோப்பிய - ரஷ்ய சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

1931 டிசம்பர் 13 இல் பெரியார் சென்னையில் கப்பல் ஏறி மேற்கண்ட நாடுகளுக்குச் சென்றார். அவருடன் பெரியாரின் தோழர் மற்றும் சுயமரியாதை வீரரான எஸ்.ராமநாதனும் சென்றார். 1932 நவம்பரில் பெரியார் ஈரோட்டுக்குத் திரும்பினார்.

இந்த இடைப்பட்ட காலத்தில், சிங்காரவேலர் பல சுயமரியாதை மாநாடுகளில் பங்கேற்றார். சுயமரியாதை இயக்க ஏடான குடிஅரசில் பல கட்டுரைகள் எழுதினார். இந்த வாய்ப்பின்மூலம் மார்க்சிய பொதுவுடைமைச் சிந்தனைகளை மக்களிடம் பெருவாரியாகக் கொண்டு சென்றார். இதன்மூலம் சுயமரியாதை இயக்கத்திற்கும், கம்யூனிச இயக்கத்திற்கும் ஒரு பாலமாக இவர் விளங்கினார்.

1931 டிசம்பர் 26 இல் சென்னையில் சுயமரியாதை மாநாட்டைத் தொடங்கி வைத்து, சிங்காரவேலர் பேசும்போது,

புத்தர் காலத்திலிருந்தே ஜாதியை ஒழிக்கவேண்டுமென்ற முயற்சி இருந்து வந்தது. ஒழிந்தபாடில்லை. மகமதியர்களாலும் ஜாதியை ஒழிக்க முடியவில்லை. கிறித்தவர்களாலும் முடியவில்லை. இரத்தத்தை உறிஞ்சும் அட்டைபோல் இந்து ஜன சமூகத்தைப் பிடித்த நமது தேச ஜாதி, கலப்பு மணத்தால் ஒழியுமென்று சிலர் நம்புகிறார்கள். ஆனால், கலப்பு மணம் செய்துகொண்டவர்கள் தனிப்பட்ட ஒரு ஜாதியாகின்றனர். இந்த விதங்களால் இன்னும் ஜாதி வளர்ந்து வருகிறது. இது எப்படி ஒழியுமென்று எண்ணுகிறீர்கள்? எனக்கோர் வழி தோன்றுகின்றது. பகுத்தறிவை உயர்தரக் கல்வி மூலமாக வளரச் செய்யவேண்டுமென்பது. இதிலும் கஷ்டமிருக்கிறது. சென்ற அய்ம்பது ஆண்டுகளாக உயர்தரக் கல்வியில் தேர்ச்சியடைந்து வரும் பிராமணர்கள் ஜாதியை விட்டபாடில்லை. நமது ராஜகோபாலாச்சாரியும், சத்தியமூர்த்தியும் பூணூலைக் கழற்றி எறிந்தார்களா? இல்லையென்றால் எங்கே உயர்தரக் கல்வியின் பயன்? ஆனால், உங்கள் இயக்கம் உண்மையானால், சுயமரியாதைக்காரர்கள் முற்றிலும் ஜாதியை விட்டொழிக்க வேண்டும். பிராமணர்கள் தங்கள் ஜாதியை விடாவிட்டாலும் சுயமரியாதைக் கட்சியைச் சேர்ந்த முதலியார், நாயுடு, பிள்ளை, செட்டியார் முதலியவர்கள் பகிரங்கமாக ஜாதியை விட்டொழித்தோமென விளம்பரப்படுத்தவேண்டும் என்றார்.

இந்தப் பேச்சின்மூலம் ஓர் உண்மை நிலையை அவர் படம் பிடித்துக் காட்டியதோடு, வேண்டியவர் வேண்டாதவர் என்ற விருப்பு வெறுப்பு இன்றி மனதில் பட்ட உண்மைகளை வெட்ட வெளிச்சமாகப் பேசினார். ஜாதி ஒழியவேண்டும் என்பதில் அவருக்கிருந்த ஆர்வமும், அக்கறையும் அவரது பேச்சுகளிலும் எழுத்துக்களிலும் தெளிவாகத் தெரிகின்றன.

நோய் தீர்க்க மருந்து காணும் மருத்துவன் தேடியலைவதைப் போன்று, இவர் ஜாதி ஒழிப்பிற்கான வழியைத் தேடித் தேடிச் சிந்தித்ததை இவை உணர்த்துகின்றன. மேலும், காங்கிரஸ்காரர்களைவிட, ஜாதியொழிப்பில், சுயமரியாதைக்காரர்களையே இவர் பெரிதும் நம்பினார் என்பதும் இவை மூலம் வெளிப்படுகின்றது. கொள்கை பேசுவோர் யாராயிருப்பினும், அவர்கள் அதில் உறுதியாய் இருக்கவேண்டும், கடைப்பிடித்தும் காட்டவேண்டும் என்பதில் அவர் கண்டிப்பாய் இருந்ததையும் இதன் வழி புலப்படுகிறது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் காந்தியாருக்கும், அம்பேத்கருக்கும் ஏராளமான கருத்து வேறுபாடுகள் இருந்தன. காந்தி இந்து மதத்தையும் விடாமல், ஜாதியையும் விடாமல் தீண்டாமை ஒழிப்பை மட்டும் எடுத்துக்கொண்டது எப்படிப்பட்ட கபட நாடகம் என்பதை சிங்காரவேலர் அன்றையப் பேச்சில் அழகுற காட்டுக்கிறார்.

ஜாதி வித்தியாசத்தால்தான் என்ன சுயராஜ்யத்தை அளிப்பது என்று பிரிட்டிஷாருக்கே சந்தேகமாயிருக்கிறது. வகுப்புவாரி பிரதிநிதித்துவ சுயராஜ்யமா? அல்லது பொது பிரதிநிதித்துவ சுயராஜ்யமா? இந்த விஷயத்தில் காங்கிரஸ் நடவடிக்கை மதில்மேல் பூனைபோல் இருந்து வருகிறது. காந்தியாருக்கு ஜாதியும் வேண்டும், மதமும் வேண்டும். ஆனால், ஆறு கோடி மகமதியர்களுக்கு வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கொடுக்கலாம். மற்ற ஆறு கோடி தாழ்த்தப்பட்டவர்களுக்கு இந்துக்களுடன் பொதுவாக பிரதிநிதித்துவம் வேண்டுமாம். தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனிப்பட வேண்டாவாம். இது என்ன சூழ்ச்சி... என்று கடுமையாகக் கேட்டார்.

காந்தியாருக்கு இந்து மதம் வலுவோடு இருக்கவேண்டும். அதிலிருந்து யாரும் பிரிந்துவிடக்கூடாது; பிரிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் அளவு கடந்த அக்கறை காட்டினார். அதற்காகத் தாழ்த்தப்பட்டோரைப் பலி கொடுக்கவும் காந்தியார் தயாராக இருந்தார்.

சிறுபான்மையினர் என்று முகமதியர்களைப் பிரித்து பிரதிநிதித்துவம் கொடுக்கும்பொழுது, தாழ்த்தப்பட்ட தீண்டப்படாதாரைப் பிரித்து ஏன் பிரதிநிதித்துவம் கொடுக்கக்கூடாது? என்று சரியான நியாயமான கேள்வியைக் கேட்டு காந்தியாரின் சாயத்தை வெளுத்தார்.

தனிப்பட்ட சுயமரியாதைச் சிந்தனையும், தனிப்பட்ட சமதர்மச் சிந்தனையும் விரும்புகின்ற விளைவை ஏற்படுத்தாது. எனவே, இரண்டும் இணைந்த ஒரு போராட்டமே சரியான பலனைக் கொடுக்கும் என்றார். இதை அப்பேச்சிலே இவர் சுட்டிக்காட்டினார்.

உங்கள் கட்சிப் பெரியார் பகுத்தறிவை உங்கள் இயக்கத்திற்கு ஆதாரமெனக் கூறுகிறார். இந்தப் பகுத்தறிவை உபயோகிப்பீர்களானால் சமதர்மமே, அதாவது மதமற்ற, ஜாதி வேற்றுமையற்ற, பொருளாதார வேற்றுமையற்ற தருமமே நமது நாட்டையும், மற்ற நாடுகளையும் காப்பாற்றவல்ல இயக்கமாகும். இந்த இயக்கத்தைச் சான்றோர்களைக் கொண்டு நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள். அதனைப் பரவச் செய்ய வேண்டிய தொழில் முறைகளை அறியுங்கள் தோழர்களே! ஒன்று சேருங்கள்! என்றார்.

ஆக, பொருளாதாரச் சீர்திருத்தத்தையும், சமூகச் சீர்திருத்தத்தையும் இரு கண்களாகக் கொண்டே செயல்படவேண்டும் என்பது இவரது கொள்கையாக இருந்தது.

அடுத்து, சேலம் மாவட்ட சுயமரியாதை மாநாடு நடந்தபோது, அம்மாநாட்டிற்கு சிங்காரவேலர் தலைமை தாங்கினார். அவரது தலைமையுரையில்,

உங்களுடைய சுயமரியாதை இயக்கம்பற்றி கீழ்வரும் வருணனை உள்ளது. உங்களுடைய சுயமரியாதை இயக்கம், இந்திய சமூக சீர்திருத்தங்கள் யாவையும் கொள்ளத்தக்க இயக்கம் என்றே எண்ணத் தகும். இந்த இயக்கத்தைப் போன்று எந்தவொரு இயக்கமும், இவ்விதமாக நமது சமூக ஊழல்களை வேர் களைய ஒரே காலத்தில் எழுந்ததை அறியோம். உங்களுடைய இயக்கத்தை One of the most comprehensive social Reforms organ   (மிகவும் விரிவானதொரு சமூக சீர்திருத்த அமைப்பு) என்று கூறக்கூடும்.

நமது தீண்டத்தகாதார் தங்கள் மானசீக சமத்துவத்தை உணராமலே தங்கள் கேவல வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இவர்களுடைய வாழ்க்கை நிச்சயமில்லாத வாழ்க்கையாகவே இருந்து வருகிறது. நாளுக்கு நாள் இவர்களுடைய வாழ்க்கை குறைவடைந்தே வருகிறது. அங்குமிங்கும் ஒரு எம்.சி.ராஜா, அம்பேத்கர், வாசுதேவ பிள்ளை, சுவாமி சகஜாநந்தர் பொருளாதாரத்தில் உயர்வு பெற்றுத் தோன்றுகிறார்களே ஒழிய, இக்கூட்டத்தாரில் இருபது பேர்கூட சொத்துரிமை பெற்றவர்கள் இல்லை. தாழ்த்தப்பட்டோர் வம்சத்தில் உதித்த இரண்டொரு முதலாளிகளால் தங்களுக்கு எதுவும் கூடி வரப் போவதில்லை. தாங்களே, தங்கள் தனி வாக்குரிமையால், மனுஷனுக்கு அத்தியாவசியமாக வேண்டிய அனுகூலங்களைப் பெறவேண்டும்.

பறையனுக்கும், பார்ப்பானுக்கும் உள்ள சமூக வித்தியாசம் போகவேண்டுமெனில், முதலில் அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள பொருளாதார வித்தியாசத்தை ஒழியச் செய்யவேண்டும். இதைச் செய்யாவிடில் தீண்டாமையை ஒழிக்க எந்த அரசாங்கத்தாலும் எந்தக் காங்கிரஸ்காரராலும், மிதவாதிக் கட்சியாலும், எந்தச் சமூகச் சீர்திருத்தக்காரராலும் முடியாது என அறிக என்று பேசினார்.

பெரியார் வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்புவதற்குள் சுயமரியாதை இயக்கத்திற்குப் பொருளாதாரப் பார்வையை சிங்காரவேலர் உருவாக்கியிருந்தார். ரஷ்யாவைக் கண்டு வந்த பெரியார், பொதுவுடைமைக் கொள்கையில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப இங்கு சுயமரியாதை இயக்கத்தை சிங்காரவேலர் பக்குவப்படுத்தியிருந்தது பெரியாருக்குப் பெரும் மகிழ்வு அளித்தது.

சிங்காரவேலரை அழைத்து, சமதர்மக் கருத்துக்களை உள்ளடக்கிய திட்டங்களை வகுக்கும்படி கேட்டுக்கொண்டார்.

சிங்காரவேலர் தயாரித்த உத்தேச திட்டம், 25.12.1932 ஆம் தேதியிட்ட குடிஅரசு இதழில், சுயமரியாதை இயக்க சமதர்மக் கட்சியாரின் உத்தேசத் திட்டம் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.

அதே இதழில், மற்றொரு தோழரால் அனுப்பப்பட்ட சுயமரியாதைக் கட்சியின் அடிப்படையான கொள்கை என்ற ஒன்றும் வெளியிடப்பட்டது.

இந்த இரண்டாவது கொள்கையில் தீவிரமான அரசியல் மற்றும் பொருளாதாரத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

பிரிட்டிஷ் முதலிய எவ்வித முதலாளித்தன்மை கொண்ட ஆட்சியிலிருந்தும், இந்தியாவைப் பூரண விடுதலை அடையச் செய்வது. தேசத்தின் பேரால் கொடுக்கப்படவேண்டிய கடன்களையெல்லாம் ரத்து செய்வது, எல்லாத் தொழிற்சாலைகளையும், ரயில்வேக்களையும், பாங்கிகளையும், கப்பல், படகு நீர்வழிப் போக்குவரத்துச் சாதனங்களையும் பொதுமக்களுக்கு உரிமையாக்குவது! எவ்விதமான பிரதி பிரயோஜனமும் கொடுபடாமல் தேசத்தில் உள்ள எல்லா விவசாய நிலங்களையும் காடுகளையும் மற்ற ஸ்தாவர சொத்துக்களையும் பொது ஜனங்களுக்கு உரிமை ஆக்குவது.
அடிமைப்பட்டிருந்த இந்தியாவில் இவையெல்லாம் இயலுமா? என்பதைப்பற்றியெல்லாம் சிந்திக்காமல் தன் உள்ளத்திலிருந்த சோசலிசத் திட்டத்தை அத்தோழர் எழுதியிருந்தார். ஆனால், சிங்காரவேலர், அப்போதைக்கு நடைமுறைப்படுத்த இயலக்கூடிய திட்டங்களை வகுத்தறித்திருந்தார். எடுத்துக்காட்டாக, கோவில், பிரார்த்தனை இடங்கள் முதலிய மத ஸ்தாபனங்களின் சொத்துக்கள் - வரும்படி ஆகியவைகளைப் பொது ஜனங்களின் தொழில், கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, அநாதைப் பிள்ளைகள் விடுதி ஆகியவைகளுக்குப் பயன்படுத்த அனுமதி பெறவேண்டும். இந்திய சமூகத்தில் ஜாதி, மத, பிரிவு முதலியவைகளைக் குறிக்கக் கூடிய குறிப்புகள் எதையும் பொது ஆதாரங்களிலிருந்து (ரிக்கார்டுகளிலிருந்து) எடுத்து விடுவதற்கும், அம்மாதிரி பட்டம் உடையவர்களைப் பொது வேலைகளில் இடம்பெறாமல் இருக்கும்படி செய்வதற்கும் அனுமதி பெறுதல் போன்றவை இடம்பெற்றிருந்தன.

மேற்கண்ட இரண்டு திட்டங்களும் ஈரோட்டில் கூட்டப்பட்ட கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, ஆதரவு மற்றும் எதிர்ப்புக் கருத்துக்கள் கருத்தில் கொள்ளப்பட்டு, திருத்தப்பட்டப்படியான கொள்கை மற்றும் திட்டம் 1.1.1933 ஆம் தேதியிட்ட குடிஅரசில் வெளியிடப்பட்டது. பெருமளவு திருத்தங்கள் இன்றி வெளியிடப்பட்டிருந்த அத்திட்டம் பெரியார் சிங்காரவேலரால் உருவாக்கப்பட்ட அத்திட்டம் ஈரோட்டுத் திட்டம் என்று பின்னாளில் அழைக்கப்பட்டது.

தந்தை பெரியார் அவர்கள் சமூகப் பொருளாதார சமத்துவத்தை முன்னிறுத்தி போராட்டங்களையும், பிரச்சாரங்களையும் மேற்கொண்டதால், சுதந்திரப் போராட்டத் தளத்தில் அவரது பங்கு விலகிவிட்டது. இதனால் காங்கிரஸ் தமிழகத்தில் அரசியலில் வலுப்பெற வாய்ப்பு கிடைத்து விட்டது. அரசியல் செல்வாக்கு, ஆதரவு என்பது விடுதலை போராட்டத்தை ஒட்டியே வந்ததால், அரசியல் களத்தில் கம்யூனிஸ்டுகளும் அதிகம் வலுப் பெற இயலாமல் போயிற்று.

பெரியாரிடம் முரண்பாடு

பெரியாரும் அவரது சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியுடன் நெருக்கம் கொள்வதை சிங்காரவேலர் விரும்பவில்லை. பார்ப்பனர், பார்ப்பனர் அல்லாதார் அடிப்படையில் மட்டும் பார்த்துப் பெரிய, முதலாளிகளையெல்லாம் கூட்டுச் சேர்த்து நீதிக்கட்சியை நடத்துவது, முழுப் பொதுவுடைமைவாதியான சிங்காரவேலருக்குப் பிடிக்கவில்லை. சமதர்மக் கொள்கையையும், விடுதலைப் போராட்டத்தையும் விட்டு விலகிச் செல்கிறார் பெரியார் என்று இவர் வருத்தப்பட்டார். பெரிய பெரிய பணக்காரர்களையெல்லாம் கட்சியில் வைத்துக்கொண்டு, சுயமரியாதை இயக்க மாநாடுகளை பெரியார் நடத்துவதாக வேதனைப்பட்டார்.

தொழிலாளி கூட்டத்திற்கு ஒரு முதலாளியைத் தலைமை தாங்க வைப்பது நண்டைச் சுட்டு நரியைக் காவல் வைப்பதை ஒக்கும். ஆதலின் சமதர்மக் கூட்டங்களுக்குச் சமதர்மியைப் பொறுக்கியெடுத்துத் தலைவராக அங்கீகரித்தல் வேண்டும். சுத்த சமதர்மி கிடைக்காவிடின், சமதர்மிகளே தலைமை வகித்துக் கொள்ளவேண்டும் என்று 8.10.1933 குடிஅரசு ஏட்டில் சிங்காரவேலர் எழுதினார்.

அதுமட்டுமல்ல, பெரியாருக்கும், அவரது ஏடான குடிஅரசு இதழிலே வேண்டுகோள் விடுத்தார்.

நமது தலைவர் அவர்களுக்கு ஒரு விண்ணப்பம். இயக்கம் பிளவுபடுமென்று தயங்குவது அதைரியமாகும். காலத்தை எதிர்நோக்க வேண்டுமே ஒழிய, பின் பார்க்கலாகாது. பின்நோக்கியவர்கள் கல்லாகவோ சாம்பலாகவோ சபிக்கப்பட்டவர்கள் என்ற கதையை மறக்கலாகாது. எதிர்காலம் நமதல்ல. இளைஞர்களுடையதே.

சிங்காரவேலரின் இந்த வேண்டுகோளுக்குப் பிறகும் பெரியார், விடுதலைப் போராட்டம், பொருளாதாரச் சமத்துவம் இவற்றைப் புறக்கணித்தே வந்தார். இதனால் ஜீவா போன்றவர்களும் வெறுப்படைந்தனர்.

1935இல் அக்டோபரில் நடந்த திருச்சி மாவட்ட சுயமரியாதை மாநாட்டில் ஜீவா கீழ்க்கண்டவாறு பேசினார்.

பாழாய்ப் போன தேர்தல் காரணமாகச் சுயமரியாதை வீரர்கள் பெரிய மலையுச்சியிலிருந்து கீழே தரைக்கு வந்துவிட்டார்கள். பிராமணியத்தை ஒழித்து, அதனை வேரறுத்துத் தூளாக்கிக் கயிற்றில் பறக்கவிட வேண்டுமென்று எண்ணுகிறவர்களில் நான் முதலானவன். சமயத்தைக் காக்கும் மத விஷயத்தில் காங்கிரஸ், ஜஸ்டிஸ் கட்சியார் திட்டத்திற்கும் சுயமரியாதைத் திட்டத்திற்கும் எவ்வளவோ வித்தியாசம் இருக்கிறது. சமதர்மக் கொள்கையை நிலை நிறுத்த வேண்டும். பிராமணியத்திற்கு அடிப்படையான சாஸ்திரம், பகவத்கீதை, கோவில், மதம், கடவுள் முதலியன யாவும் ஒழிய வேண்டும். சமதர்மம் நிலைநாட்டப்பட வேண்டும். சமதர்ம முறையில் ராசாங்கம் ஏற்படுத்திப் பொருளாதார சமதர்ம இயக்கத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றார். - (குடிஅரசு: 27.10.1935)

சுயமரியாதை இயக்கம், காங்கிரஸ் மற்றும் கட்சி இரண்டிலிருந்தும் வேறுபட்ட, தனித்தன்மை வாய்ந்த கட்சியாக இருக்க வேண்டும் என்று இருவரும் ஆசைப்பட்டனர். ஆனால் பெரியார், ஜஸ்டிஸ் கட்சியில் பற்றுடன் செயல்பட்டார். இதனால் ஜீவா போன்ற பொதுவுடைமை, சமதர்மவாதிகள் பெரியாரின் இயக்கத்திலிருந்து விலகிச் சென்றனர். அவ்வாறு சென்றவர்கள் சுயமரியாதை சமதர்மக் கட்சியை உருவாக்கும் முயற்சியில் இறங்கினர். இவர்களுக்கு உறுதுணையாக சிங்காரவேலர் இருந்தார்.

பெரியாருடன் கொள்கை முரண்பட்டதால், புதிய உலகம் என்ற ஏட்டில் தன் கருத்துக்களை சிங்காரவேலர் அதிகம் எழுதினார். இவரது எழுத்துகள் ஜீவா போன்றோருக்கு வழிகாட்டி நின்றது.

புதிய உலகம் என்ற ஏட்டை புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், கீழ்க்கண்டவாறு புகழ்ந்து பாராட்டினார்.
நல்லறிவும் பெருநோக்கும் கேட்பீராயின்
நம் தோழன் சிங்காரவேலன் கண்ட
வெல்லுதமிழ்ப் புதுஉலகம் என்னும் மாத
வெளியீட்டை வாசித்தல் வேண்டும் என்போம்
புல்லறிவின் தூக்கத்தில் பேசும் பேச்சைப்
புதுஉலகில் எவ்விடத்தும் கண்டோமில்லை
இல்லையெனில் இந்நாட்டில் விஞ்ஞானந்தான்
புதுஉலகில் விஞ்ஞானம் எதேஷ்டம் காண்பீர்
புதுஉலகம் மாதமொரு முறை கிடைக்கும்
புலன் அடைந்த மாசையெல்லாம் அது துடைக்கும்
இது உண்மை உபச்சார வார்த்தையல்ல.
எல்லாரும் வாங்கி வாசித்தல் வேண்டும்
அது என்ன இது என்ன என்று தேடி
ஆயிரமாயிரம் நூல்கள் உண்மை கண்டவர்
சதுர ருளத்திலிருந்து வரும் சரக்கை வாங்கா
தமிழருண்டா? கரும்பு தின்னக் கூலி ஒன்றா?

சமதர்மம் விரும்பியவர்களை ஓரணியில் கொண்டு வர புதிய உலகம் உதவியது. பெரியாரிடமிருந்தும், காங்கிரஸிலிருந்தும் விலகியவர்கள் ஒன்று சேர்ந்து ஒரு கட்சியைத் தொடங்க, 1931 பிப்ரவரியில் திருத்துறைப்பூண்டியில் மாநாடு நடத்தினர். அம்மாநாட்டில், சுயமரியாதை சமதர்மக் (சோசலிஸ்டு) கட்சியை ஜீவாவும் அவரது தோழர்களும் உருவாக்கினர். பெரியாருடன் அமைப்பு ரீதியான உறவு இவ்வகையில் முடிவிற்கு வந்தது. சமதர்மவாதிகள் அனைவரும் கம்யூனிசப் பாதையில் நடக்கத் தொடங்கினர். அவ்வகையிலே அவர்களது பிரச்சாரங்களும் போராட்டங்களும் அமைந்தன.

ஆனால், இவர்களின் இந்தத் தனிப்பட்ட இயக்கம் ஒன்பது மாதங்களே நீடித்தது. அதன்பின் 1936 திருச்சியில் நடந்த சுயமரியாதை சமதர்மக் கட்சியின் மாநாட்டில், இக்கட்சி கலைக்கப்பட்டு, காங்கிரஸில் இருந்த காங்கிரஸ் சோசலிஸ்ட்டுக் கட்சியில் இணைந்து செயல்பட முடிவு செய்தனர்.
இவ்வாறு சமதர்மக் கட்சி காங்கிரஸில் இணைய, சுயமரியாதைக் கட்சி ஜஸ்டிஸ் கட்சியுடன் கலக்க, காங்கிரஸ் கட்சியும், ஜஸ்டிஸ் கட்சியும் என இரு அணிகள் நிலைத்து நின்றன.

சிங்காரவேலரும் பெண் விடுதலையும்!

இந்திய மாதா என்ற நூல், மிஸ் காதரைன் மேயோ என்ற அமெரிக்கப் பெண்ணால் 1927இல் வெளியிடப்பட்டது. இங்குள்ள பெண்களின் நிலையை நேரில் அறிந்து உள்ளது உள்ளவாறு எழுதப்பட்ட நூல்.

இந்த நூலை ஆரியப் பார்ப்பனர்கள் எதிர்த்தபோது, தந்தை பெரியாரும் சிங்காரவேலரும் இந்நூலைப் பெரிதும் ஆதரித்தனர்.

1932இல் சேலம் மாவட்டத்தில் நடந்த சுயமரியாதை மாநாட்டிற்குத் தலைமை தாங்கி உரையாற்றிய சிங்காரவேலர்-

பால்ய தாய்மார் வதை இந்த ஊரைத் (நாட்டை) தவிர மற்ற எந்த நாட்டிலும் காண்பது அரிது. சொத்துரிமை பெண்களுக்கு இல்லாமையால், இவர்கள் அடிமைகளாகவே கருதப்படுகிறார்கள். சமூக வாழ்க்கையில் நாமாகிய இந்தியர் வேத காலத்தில் இருந்தவாறே இன்றைக்கும் இருந்து வருகிறோம். இதற்கு அத்தாட்சி வேண்டுமானால், மிஸ், மேயா நம் வாழ்க்கையைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கும் சில ஊழல்களே போதும். அவைகளைச் சின்ன திருத்தம் செய்து கொள்வது நமது கடமையாகும் என்றார்.

1931இல் விருதுநகரில் நடைபெற்ற சுயமரியாதை மாநாடு பற்றி எழுதியபோது, அவர் இதே உறுதியுடன், நமது தமிழ்நாட்டுப் பெண்மணிகள் செய்த தீர்மானங்கள் (சுயமரியாதை மாநாட்டின் ஒரு பகுதியாக நடந்த பெண்கள் மாநாட்டுத் தீர்மானங்கள்) போற்றத்தக்கவை. இதுவரை தங்களுக்குள் உள்ளடக்கி வைத்திருந்த சுதந்திரத்தை விருதுநகரில் முழங்கியது பெருத்த ஆச்சரியத்தை உள்ளடக்கியது. சமுதாயிகள் பல ஆண்டுகளாகப் பெண்கள்பால் பரிந்து வாதித்து வந்த சுதந்திரங்களெல்லாம் நேற்றைய தினம் நிறைவேறிய கூட்டத்தில் தமது தங்கையர் கோஷ்டி வற்புறுத்தியதைப் பொதுவுடைமைக் கட்சியினர் அனைவரும் எந்த வேளையிலும் ஆதரிப்பார்கள். சமுதாய கோஷ்டியார் பெண்களின் சமத்துவத்தைத் தலைமேல் கொண்டுள்ளார். பொதுவுடைமைக் கட்சியார் கொண்டுள்ள தலைமையான விஷயங்களாகிய சகலருக்கும் உணவு சமத்துவம், ஆடை சமத்துவம், வாழும் இடம் சமத்துவத்துடன், பெண்கள் சமத்துவமும் ஒன்று என அறிக. ஆணுக்கும் பெண்ணுக்கும் உலக வாழ்க்கையில் எல்லா விஷயங்களிலும் சமத்துவம் இல்லையாகில், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் வெறும் சொற்களே! இதன் உண்மைச் சமத்துவத்தை நமது தமிழ்நாட்டுப் பெண்மக்கள் கோரியது மிகவும் சிலாகிக்கத்தக்கது - பாராட்டத்தக்கது! என்று எழுதினார். சுயமரியாதை இயக்கத்தவர் பெண்கள் விடுதலைப் பற்றி பாடுபட முன்வந்தது அவருக்குப் பெரிதும் மகிழ்ச்சியை உண்டு பண்ணியது. எனவே, தன்னுடைய பாராட்டுகளைத் தயக்கமின்றி வெளியிட்டார். சமூக வாழ்க்கையில், புகுந்துகொண்டு தீங்கிழைத்துவரும் பலவித பழக்க வழக்கங்களைப் போக்குவான் வேண்டி, சுயமரியாதைக் கல்யாணம் என்ற வீண் சடங்குகள், வீண் செலவினங்கள் இல்லாத கல்யாணங்களை ஆதரித்தும் அனுகூலப்படுத்தியும் வருகின்றீர்கள்... என்று சடங்குகளற்ற, சுயமரியாதையுள்ள, செலவில்லா சுயமரியாதைத் திருமணங்களையும் வரவேற்றார்.

ஸ்திரீ (பெண்) புருஷ (ஆண்) சம்பந்தத்தில் சுயமரியாதையோர் செய்ய வேண்டிய கடமைகள் பல உள்ளன. ஸ்திரீகள் சமத்துவம் பெற வேண்டும் என்கிறோம். விதவைகள் மறு கல்யாணம் செய்து கொள்ளலாம் என்கிறோம். ஸ்திரீகள் கல்வியும் ஞானமும் பெற வேண்டும் என்கிறோம். பெண்கள் இச்சுதந்திரங்களைப் பெற்றும் பொருளாதாரச் சுதந்திரத்தைப் பெறாவிடில் இவ்வுரிமைகள் என்னாகும்? பொழுது விடிந்தவுடன் தன் சீவனத்திற்குப் புருஷனை எதிர்பார்க்க வேண்டுமென்றால், மேற்கண்ட சுதந்திரங்கள் பெற்றும் பிரயோஜனம் (பயன்) என்ன? பெண்ணின் அடிமைநிலை மாற வேண்டும் என்றால், பெண்ணுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் வேண்டும் இல்லையென்றால் ஆணிடம் அவள் தாழ்ந்து பணிந்துதான் நடக்க வேண்டி வரும்... என்று கூறி, பெண்களுக்குச் சுயவருவாய் ஈட்டும் வாய்ப்யும், சொத்துரிமையும் வேண்டும் என்றார்.

மேலும், இல்லாதார் வீட்டில் கர்ப்பம் தரிப்பதும் துக்கம். கர்ப்பம் தரித்துக் காப்பதிலும் வளர்ப்பதிலும் துக்கம். பெற்ற பிறகு வளர்ப்பதும் துக்கம். வளர்ந்தபின் கல்வி, கேள்வி கொடுக்க முடியாததும் துக்கம். இத்தனை துக்கங்களையும் பெண்களே பெரிதும் ஏற்கின்றனர். இக்கொடிய மனப்பான்மையை அகற்றி, பிள்ளைகளைப் பெற்று வளர்த்தல் சமூகப் பொறுப்பு என்ற மனப்பான்மையை ஆதரிக்கும் சமதர்ம சமூகம் ஒன்றில் தான் பிள்ளைப்பேறு பெறுவதும், வளர்ப்பதும், தாய் செய்த பாக்கியம் எனலாம்... என்று நுட்பமாகச் சிந்தித்துக் கருத்துக்களை வெளியிட்டார். பிள்ளையை வளர்க்கும் பொறுப்பு சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாக இருந்தால்தான் பெண்களின் இன்னலும் தீரும், பிள்ளைகளும் சமவாய்ப்புப் பெற்று வளர்வர். இல்லையென்றால், ஏழையின் பிள்ளை தாழ்ந்து ஏங்கவும், வசதியானவன் பிள்ளை வளத்தில் செழிக்கவும் வேண்டி வரும். பிள்ளைப் பருவத்திலே ஏற்படும் இந்த ஏற்றத்தாழ்வுகள் ஆதிக்க மனப்பான்மைக்கும், அடிமை நிலைக்கும், சமூக வன்முறைகளுக்கும், சீர்கேடுகளுக்கும் வழிவகுக்கின்றன; காரணமாய் அமைகின்றன என்பதை உணர்ந்தே இக்கருத்துக்களை இவர் வலியுறுத்தினார்.

இப்படி எல்லா நிலைகள் பற்றியும் அக்கறையுடனும், மனித நேயத்துடனும் சிந்தித்துச் செயல்பட அந்த மாமனிதரால் 1935-ஆம் ஆண்டிற்குப் பின் தீவிரமாகச் செயல்பட இயலவில்லை. அவரது முதுமையும், அவரைத் தாக்கிய பக்கவாத நோயும் அவரது செயல் வேகத்தைக் குறைத்தன. என்றாலும், நாட்டு நடப்புகளைக் கூர்ந்து கவனித்து வந்து தன்னுடைய கருத்துக்களை அவ்வப்போது வெளியிட்டு வந்தார்.

மொழிப்போரில் இவரின் பங்கு

தேச விடுதலைக்கு ஹிந்தி பாஷையைக் கற்றுக் கொள்வது அவசியம் என்ற காங்கிரஸாரின் வாதத்தை மறுத்து சிங்காரவேலர், 26.06.1938 நாளிட்ட குடிஅரசு இதழில் தொலைநோக்குப் பார்வையோடு கீழ்க்கண்ட கருத்துக்களை வெளியிட்டார்.

தமிழ்நாடு அரசியலை நடத்துவோர் ஹிந்தி பாஷையால் ஒற்றுமை ஏற்பட்டு, பூரண சுயராஜ்யத்துக்கு உதவி செய்யுமென்று பறைசாற்றுகின்றனர். ஹிந்தி பாஷை பேசுகின்றவர்கள் பெரும்பான்மை என்று இந்தக் காங்கிரஸ்காரர்கள் அறிவிக்கிறார்கள். உ என்று மிகத் துல்லியமாகச் சிந்தித்து, கணக்கிட்டு கருத்துக்களை வெளியிட்டதோடு, காங்கிரஸாரின் வாதங்களைத் தவிடு பொடியாக்கினர். மேலும் சமதர்மவாதிகளின் சார்பாகவும் மொழிக் கொள்கையினை விளக்கினார்.

தமிழ்நாட்டுச் சிறுவர்களுக்கு ஹிந்தி கட்டாயப் படிப்பு அளிப்பதற்கு நமது ஆட்சேபனைகள் என்னவெனில், 1) இனிவரும் நமது சந்ததியாருக்கு ஹிந்தி பாஷை ஒரு பிரயோசனத்தையும் தராது. 2) குடும்ப சம்பாஷணைக்கு (உரையாடலுக்கு) உதவாது, 3) சாதாரண நடவடிக்கைக்கும் உதவாது. 4)தமிழ் மாகாணக் கட்சியின் உத்தியோகங்கள் பெற ஹிந்தி பாஷை வேண்டியது இல்லை. 5) சகலவிதி விவகாரங்களும், சட்டம், நீதி, நிர்வாகம், விஞ்ஞானம், பொருளாதாரம், தொழிற்சங்கம் முதலிய பல்லாயிர ஸ்தாபனங்களும், இலாகாக்களும் தமிழ்பாஷை மூலமாய் நடத்தப்படுமாயின் ஹிந்தியை கனவில்கூட நினைக்க இடமில்லை. பூரண சுயராஜ்யத்தில் தமிழ் மாகாண அரசியலில் ஹிந்திக்கு எந்த இடமும் இல்லை என்று வற்புறுத்துகிறோம். தமிழ்நாட்டு சமதர்மவாதிகளாகிய நாங்கள் எங்கள் தமிழ்நாட்டில் தமிழ்பாஷையிலன்றி மற்ற எந்த அந்நிய பாஷையிலும் எங்கள் நாட்டு அரசியலை நடத்தவிட மாட்டோம்.

எனவே, மொழிப் பிரச்சினையில் கம்யூனிஸ்டுகள் தெளிவாகவும், உறுதியாகவும் இருந்தார்கள் என்பதும், மற்றவர்களுக்கும் விழிப்பூட்டி, உறுதியடையச் செய்தார்கள் என்பதும் இதன் மூலம் விளங்குகிறது.
பொது பாஷை ஒன்று வேண்டுமல்லவா? என்று கேட்டவர் களுக்கு, சிங்காரவேலர் சிறிதும் தயங்காது பளிச்சென்று பதில் சொன்னார்.

இனி கட்டப்படப் போகும் (பத்து வருஷத்துக்குப் பின்னோ 100 வருஷத்துக்குப் பின்னோ) Constituent Assembly  என்ற பிரதிநிதித்துவ சபை கூட்டத்தில் அந்தந்த மாகாண சுயராஜ்யம், அந்தந்த மாகாண பாஷையில்தான் நடத்தப்பட வேண்டும் என்று அரசியல் திட்டம் ஏற்படும் என்று அறிக.

ருஷ்யாவில் 18கோடி மக்கள், தோட்டி முதல் தொண்டமான் வரையும் ஒவ்வொருவரும் அவரவருடைய தாய்பாஷையில் சோவியத் ரஷ்யா அரசாட்சியை நடத்தி வருவது கண்டும், நமது துரதிஷ்ட இந்தியாவில்தானா அகிலஇந்திய பொது பாஷையாக ஹிந்தியை ஏற்படுத்த வேண்டும்? அந்தக் காலத்தில் ஏதாவதொரு பொது பாஷை வேண்டியிருப்பின், அந்தக் காலத்தில் கூடும் பிரதிநிதித்துவ சபையால் அவர்களே நியமிக்கட்டும். இன்றைக்கோ நாளைக்கோ விலகப் போகும் காங்கிரஸ் மந்திரிகளுக்கு அகில இந்திய பொது பாஷையை ஏற்படுத்த ஓர் அதிகாரமும் இல்லை என அறிக... என்று எடுத்துக்காட்டோடு எதிரிகளின் வாயடைத்தார்.

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே யூகித்துச் சொன்னமாமனிதர் இவர். ஆம், இவர் இவ்வாறு எழுதி 10 ஆண்டுகள் கழித்து, அரசியல் நிர்ணய சபையானது, அந்தந்த மாநிலங்களில் அந்தந்த தாய்மொழிகளில் ஆட்சி மொழியாக இருக்கலாம்எனப் பிரகடனப்படுத்தியது.
தமிழுக்காக சிறைக்குச் சென்றவர்களுக்காக குரல் கொடுக்கும் கடமையையும் இவர் செய்தார். தனதுஇறுதிக் காலம் வரை இந்தி எதிர்ப்பில் உறுதியாய் நின்றார்.

ஜாதி ஒழிப்பு, ஆதிக்க ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு, இந்தி ஆதிக்க ஒழிப்பு என்று அனைத்து ஆதிக்கங்களையும் ஒழிக்கத் தொடர்ந்து போராடிய சிங்காரவேலர், பொதுவுடமையும் சமதர்மமும் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காகப் பெரிதும் பாடுபட்டார்.

சிறந்த பேச்சாளர், சிறந்த எழுத்தாளர், சிறந்த சமுதாயத் தொண்டர் என்று பன்முகம் கொண்ட இவர் சிறந்த பத்திரிகையாளராகவும் தனது திறமையை வெளிப்படுத்தினார். எச்சூழ்நிலையிலும் எவருக்காகவும் தனது சுயமரியாதைக் கொள்கையை, சமதர்மக் கொள்கையை, பொதுவுடமைக் கொள்கையை, மனிதநேயக் கொள்கையை இவர் மாற்றிக் கொண்டதில்லை என்பது மட்டுமல்ல; கொள்கையில் செயல்பாடுகளில் யாருடனும் சமரசம் செய்து கொள்ளவும் இல்லை.

தவறு செய்பவர் யாராய் இருந்தாலும் சுட்டிக்காட்டினார்; தட்டிக் கேட்டார். நாட்டுக்கும் மக்களுக்கும் எது தேவை என்பதை முன்கூட்டியே கணித்துச் சொன்னார். தலைமுறைகளைப் பற்றிச் சிந்தித்த தன்னிகரில்லா பெருந்தலைவராய் சிங்காரவேலர் சீர்மை கொண்டு நின்றார்.

1945-இல் சென்னை அச்சுத் தொழிலாளர்கள் சங்க மாநாட்டில் அவர் பேசியதே கடைசிப் பேச்சாகும்.

இப்பொழுது என் வயது 84. எனினும் தொழிலாளி வர்க்கத்திற்கு என் கடமையைச் செய்ய நான் இங்கு வந்துள்ளேன். உங்களிடையே இருந்து, நீங்களும் நானும் ஓர் உயிராக, உங்களில் ஒருவனாக இருப்பதைக் காட்டிலும் மற்றெதை நான் விரும்ப முடியும்? என்று கடைசிப் பேச்சில் அப்போது பேசினார். ஆம் அவர் தன்னலத்தை, தன் குடும்பத்தை நேசித்தார் அல்லர். மக்களை, குறிப்பாகத் தொழிலாளர்களை, ஏழைகளை, தாழ்த்தப்பட்டவர்களை, பெண்களைத் தன் உயிரினும் மேலாக நேசித்தார். அப்படிப்பட்ட மாமனிதர் 1946-ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் நாள் இறந்து பட்டார். அதன்மூலம் ஒரு பொதுவுடைமை விதை ஊன்றப்பட்டது.
வாழ்க சிங்காரவேலர் புகழ்!


நூல் - மறைக்கப்பட்ட மாமனிதர்கள்  
ஆசிரியர் - மஞ்சை வசந்தன்


Comments

Popular posts from this blog

கயிற்றில் தொங்கிய கணபதி (கி.பி. 1911-1949) part-2

மகாத்மா ஜோதிராவ் பூலே (கி.பி. 1827-1890)

பெம்மான் பசவர் (கி.பி.1131-1167)