புரட்சியாளர் பகத்சிங் (கி.பி. 1907-1931) பகுதி - 1

புரட்சியாளர் பகத்சிங் (கி.பி. 1907-1931)

பஞ்சாப் மாநிலத்தில், லாய்பூர் மாவட்டத்தில் பிறந்தாலும் இந்தியாவிலுள்ள அனைவரின் உணர்வுகளையும் உலுக்கிவிட்ட ஓர் உயர்ந்த மனிதர். 23 வயதில் மரணத்தின் வாயிலில் நின்றாலும் அதற்குள் இந்த உலகமே தன்னை உற்றுநோக்கும்படிச் செய்தவர். இந்த வயதிற்குள் பொதுவுடைமை சித்தாந்தத்தை ஆய்வு செய்து அரிய வழிமுறைகளைக் கூறியவர். அவர் கூறிய ஒவ்வொரு கருத்துக்களும் தேர்ந்து, தெளிந்து முதிர்ந்த பக்குவப்பட்ட ஒரு மனித நேயப் பற்றாளரின் கருத்துக்களாக இருந்தன. விடுதலைப் போராட்டத்திலும் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தவர். இவை அத்தனையையும் 23 வயதுக்குள் சாதித்தவர், ஆங்கில ஏகாதிபத்தியத்தையே நடுநடுங்கச் செய்தவர். யார் அவர்? அவர்தான் தோழர் பகத்சிங்.
பகத்சிங் என்றால் விடுதலைக்குப் பாடுபட்டவர். தீவிரச் செயல்களில் ஈடுபட்டு, மரண தண்டனை பெற்றவர். இறுதியில் தூக்கில் இடப்பட்டவர் என்ற வகையில், என்ற வரையில்தான் அவரைப் பெரும்பாலோர் எண்ணிக் கொண்டுள்ளனர்.
ஆனால், அவருடைய வரலாற்றில் அவை ஒரு சில பக்கங்கள். சிறு நிகழ்வுகள். உண்மையில் அவரின் சிந்தனைகளும், செயல் திட்டங்களும், வழிகாட்டல்களும், ஆதிக்க வர்க்கத்திற்கெதிரான அவருடைய போர்முறைகளும் இந்திய வரலாற்றில் எவரும் செய்யாதவை; வேறுபட்டவை; சரியானவை.
அவர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மட்டும் போராடவில்லை, மனிதநேயமற்ற முதலாளிகளுக்கு எதிராகத்தான் முக்கியமாகப் போரிட்டார். ஈவு இரக்கமற்ற இந்தச் சுரண்டல், முதலாளிகளால், இந்திய அரசு எந்திரத்தால் நடத்தப்பட்டாலும் எங்கள் போராட்டம் தொடரும்... என்று அவர் கூறி வந்தது அவருடைய இலக்கு என்ன என்பதைக் காட்டியது. இந்திய விடுதலைக்குப் பிறகும் அவரது போராட்டம் முதலாளித்துவச் சுரண்டலுக்கு எதிராகத் தொடரும் என்று அவர் அறிவுறுத்தியிருப்பது இதை உறுதி செய்கிறது.
கம்யூனிசத்தின் தந்தை எனப்படும் கார்ல்மார்க்ஸ் உண்மையில் கம்யூனிசக் கொள்கைகளை உருவாக்கவில்லை என்றுகூட நான் சொல்வேன். அய்ரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சியே இம்மாதிரியான பலரை உருவாக்கியது. அவர்களுள் ஒருவராக மார்க்ஸ் இருந்தார். ஆனால், அவரது காலத்தின் சக்கரத்தை ஒரு குறிப்பிட்ட வழியில் முடுக்கிவிடுவதற்கு அவரும் ஒரு கருவியாக இருந்தார்... என்று சொல்லக்கூடிய தெளிவும், துணிவும் 23 வயது இளைஞருக்கு இருந்தது என்றால், அவர் எப்படிப்பட்ட சிந்தனையாளராக, அறிவுநுட்பம் உடையவராக, உலக வரலாற்றைக் கூர்ந்து ஆய்ந்தவராக இருக்க முடியும் என்பதை எடைபோட முடியும்.
1931ஆம் ஆண்டு பிப்ரவரியில், சிறையிலிருந்து அவர் இளம் அரசியல் தொண்டர்களுக்கு எழுதியது. அவர் ஒரு முதிர்ந்த கம்யூனிஸ்ட் என்பதைக் காட்டியது.
இந்திய கம்யூனிஸ்ட்டுகளில் முதன்மையானவரான, சிவவர்மா, எங்கள் அனைவரிலும் பகத்சிங்கே மார்க்ஸியத்தை மிகச் சரியாக - விரைவாக உள்வாங்கியவர் என்று ஒப்புக் கொண்டு பாராட்டினார்.
இந்தியாவில் ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டியமைக்க முயன்றவர். காரணம் அப்போதிருந்த அரசியல் கட்சிகளில், எதுவும் அவருடைய நோக்கத்தை முழுமையாக நிறைவு செய்யவில்லை.
1931இல் கனவுலகம் என்னும் கவிதை நூலுக்கு அவர் எழுதிய விமர்சனக் கட்டுரையில், என்னுடைய அனைத்து முயற்சிகளுக்குப் பின்னருங்கூட, நாம் எதற்காகப் போராடிக் கொண்டிருக்கிறோம் என்பது பற்றிய தெளிவான கொள்கைகளை உடைய எந்தவொரு புரட்சிகரக் கட்சியையும் என்னால் தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பலருடன் அவருக்கு நேரடித் தொடர்பு இருந்தது. ஆங்கிலேயர்களின் அடக்குமுறை ஆட்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரகசியமாகச் செயல்பட்டது போலவே, பகத்சிங்கின் புரட்சிகர இயக்கமும் தலைமறைவாகச் செயல்பட்டது. தலைமறைவு இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு வைத்திருந்தனர்.
அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள், இந்திய நாட்டு மக்களைச் சுரண்டாமல் தடுக்க வேண்டும் என்றால், அவர்களைச் சுரண்ட அனுமதிக்கும் இந்திய முதலாளி வர்க்கத்தை எதிர்த்துப் போராட வேண்டும். அவர்களே இந்திய மக்களின் பிரதான எதிரிகள். அந்த முதலாளிகளுக்கு எதிரான வர்க்கப் போராட்டத்தைத் தட்டியெழுப்புவதே, பகத்சிங்கின் நோக்கம். இன்றுள்ள இளைஞர்கள் அப்பணியைச் செய்வதே பகத்சிங்கிற்குச் செய்யும் உண்மையான வீரவணக்கமாகும். மற்றபடி அவர் படத்திற்கு மாலையிடுவதும், மரியாதை செலுத்துவதும், புகழ்ந்து பேசுவதும் செய்வதால் எந்தப் பயனும் ஏற்படாது.
பகத்சிங்கின் இந்த மறுபக்கத்தை மக்களுக்குக் காட்ட பலரும் தவறியுள்ளனர். எனவே, பகத்சிங்கின் உண்மையான இலக்கு, சிந்தனை அவரது போராட்ட முறை, அவரது பல்துறை, மற்றும் பல பிரச்சினைகள் சார்ந்த வழிகாட்டுதல்கள் என்ன என்பதனை ஒவ்வொரு இந்தியனும், ஏன் ஒவ்வொரு மனிதநேயப் புரட்சியாளனும் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.
ஆங்கில ஆட்சியை அகற்றிவிட்டு, விடுதலை பெற்ற நாட்டில் நாம் வாழ வேண்டும் என்ற நோக்கமே, பெரும்பாலான போராட்ட வீரர்கள் மனதில் தீவிரம் கொண்டிருந்த நிலையில், விடுதலைக்குப் பின் எப்படிப்பட்ட சமூகப் பொருளாதார அமைப்பும், எப்படிப்பட்ட ஆட்சி முறையும் இருக்க வேண்டும் என்பதைப் பற்றிச் சிந்தித்துச் செயல்பட்டவர் இவர். விடுதலை பெற்றுவிட்டு இதற்கான ஏற்பாட்டில் நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவில்லை என்றால், அந்நிய ஆதிக்கத்தை அகற்றிவிட்டு, உள்நாட்டு முதலாளித்துவ சைதன்ய ஆதிக்கத்தில் நாம் சிக்கிக் காலமெல்லாம் நசுங்க நேரிடும் என்பதை மிகக் கவனத்துடன் கருத்தில் கொண்டு, அதற்கேற்ப செயல்திட்டங்களை வகுத்துச் செயல்பட்ட ஓர் உன்னத புரட்சியாளர் பகத்சிங்.
இத்தகு புரட்சியாளரின் வரலாற்றை மட்டுமே தெரிந்து கொள்வதைவிட, வரலாற்றோடு ஒட்டிய அவரது சிந்தனைகளை, செயல் திட்டங்களைத் தெரிந்து, தெளிந்து, தீரமும், வீரமும், எழுச்சியும், விழிப்பும் பெற வேண்டிய உயரிய நோக்கோடு அவரைப் பற்றி ஆய்வதும் அறிவதும் அவசியம்.
நாட்டுப் பற்றும் விடுதலை வேட்கையும் கொண்டவர் இவரது தாத்தா அர்ஜுன்சிங். பாட்டி ஜயகவுர் அம்மையாரும் அதே அளவு நாட்டுப்பற்றுக் கொண்டவர். இவர்களுக்கு சர்தார் கிசன்சிங், சர்தார் அஜீத்சிங், சர்தார் சுவர்ணசிங் என்று மூன்று மகன்கள். இவர்களும் நாட்டுப்பற்றோடும் நேர்மையோடும் வாழ்ந்தனர்.
இந்த மூவரில் அஜீத்சிங் வசதியோடு வாழ்ந்தார். என்றாலும், நாட்டின் அடிமை நிலையை எண்ணி மனம் கொதித்து, மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற உயரிய நோக்கில், தன் சொந்த இன்பங்களை வசதிகளைத் துறந்தார். இவரைப் பின்பற்றித்தான் லாலா லஜபதிராய் என்பவர் அரசியலில் ஈடுபட்டார்.
1905இல் வங்கப் பிரிவினை நடப்பிற்கு வந்தபோது, அப்பிரிவினைக்கு எதிராகப் போராடியவர்களுள் அஜீத்சிங், கிசன் சிங், சுவர்ணசிங் ஆகிய மூவரும் முக்கியமானவர்கள். இம்மூவரும் களத்தில் இறங்கிப் போராடினர்.
இதனால், அஜீத்சிங் கைது செய்யப்பட்டு பர்மாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். பின் ஓராண்டு ஒழித்து விடுதலை அடைந்து பஞ்சாப் திரும்பினார். கிசன்சிங், சுவர்ண சிங் இருவரும் அரசு விரோதச் செயலில் ஈடுபட்டதாகக் கூறி சிறையில் அடைக்கப்பட்டனர். சுவர்ணசிங் சிறையிலேயே உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 28.
சுவர்ணசிங் இறந்த அதே 08.10.1907ஆம் நாளில், கிசன் சிங்கின் இரண்டாவது மகனாகப் பகத்சிங் பிறந்தார். பகத்சிங்கின் அண்ணன் பெயர் ஜகத்சிங்.
பகத்சிங்கும் அவரது அண்ணனும் பாங்கா என்னும் ஊரிலிருந்து தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டு படித்தனர். பகத்சிங்கிற்குப் படிப்பில் நாட்டம் இல்லை. விளையாடுவதிலேயே ஆர்வம் செலுத்தினார். எல்லா நேரமும் தெருவில் விளையாடுவார். அவரது செயல்பாடுகளும் முரட்டுத்தனமாக இருந்தன.
பகத்சிங்கின் அண்ணன் ஜகத்சிங் தனது பதினோராம் வயதில் நோய்வாய்ப்பட்டு இருந்தார். இதனால், கிசன்சிங் மிகவும் கவலையுற்றார். லாகூருக்கு அருகிலுள்ள நாவா கோட்டிற்குக் குடிபெயர்ந்து சென்றார்.
சீக்கிய மாணவர்கள் படிப்பதற்காகவே கால்ஸா ஹைஸ்கூல் அங்கு இருந்தது. சீக்கியர்களின் குழந்தைகள் பெரும்பாலும் அப்பள்ளியிலே சேர்க்கப்பட்டனர். ஆனால், கிசன்சிங் பகத்சிங்கை அப்பள்ளியில் சேர்க்கவில்லை. அப்பள்ளியை நடத்தியவர்கள் ஆங்கில ஆட்சியாளர்களுக்கு விசுவாசிகளாக இருந்ததால், விடுதலைப் போராட்ட வீரரான தன் குழந்தைக்கும் அடிமைப் புத்தி வந்துவிடும் என்பதால் அங்குச் சேர்ப்பதைத் தவிர்த்தார். லாகூரில் உள்ள, தயானந்தா ஆங்கிலோ வைதிக் ஸ்கூலில் பகத்சிங்கைச் சேர்த்தார்.
விடுதலைப் போராட்டத்தில் தீவிரப் பங்கெடுத்த குடும்பத்தில் பகத்சிங் பிறந்து வளர்ந்ததால், இளம் வயதிலே அவர் உள்ளத்தில் விடுதலை உணர்வும், போராட்ட குணமும் வளர்ந்தன. ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே கான்பூர் காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்றார்.
பகத்சிங் மெட்ரிகுலேஷன் தேர்வில் தேர்வு பெற்றார். அதன்பின் தேசியக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். அங்கு சுகதேவ் யச்பால் என்ற இளைஞர் இவருடன் நெருங்கிப் பழகி நண்பரானார்.
அந்நேரத்தில் காந்தியார் அஹிம்சை முறையில் விடுதலைக்குப் போராட அழைப்புக் கொடுத்தார். ஆனால், பகத்சிங், சுகதேவ் போன்ற இளைஞர்களுக்கு அதில் உடன்பாடு இல்லை. அதிகார பலமும், ஆயுத பலமும் உடைய ஆதிக்க மனம் படைத்த ஆங்கில ஆட்சியை அகிம்சை வழியில் வீழ்த்தி விடுதலை பெறுவது இயலாது என்று எண்ணினர். வலிமையை வலிமையால்தான் வெல்ல முடியும். ஆயுத பலத்தை ஆயுத பலத்தால்தான் வீழ்த்த முடியும் என்று நம்பினர்.
எனவே, தங்கள் திட்டப்படி இயங்க இளைஞர்கள் ஆங்காங்கே ரகசிய சங்கங்களை அமைத்தனர். பஞ்சாபில் பப்பர் அகாலி என்ற பெயரில் ஒரு சங்கம் அமைக்கப்பட்டது. 14 வயதே நிரம்பிய பகத்சிங்கிற்கு இச்சங்கத்தின் செயல்பாடுகள் மிகவும் பிடித்துவிட்டன.
1914, 1915ஆம் ஆண்டுகளிலே, அதாவது பகத்சிங் 7 வயது சிறுவனாக இருக்கும்போதே இரகசிய சங்கங்கள் பல இயங்கின. அச்சங்கங்களுக்கு, பகத்சிங்கின் தந்தை நிதி உதவி அளித்து ஊக்குவித்திருக்கிறார். அக்குடும்பத்தில் பிறந்தவரல்லவா பகத்சிங். அவரும் அச்சங்கத்தில் ஆர்வத்தோடு ஈடுபட்டார். பகத்சிங் அச்சங்கத்தில் உறுப்பினராகவும் ஆனார்.
அச்சங்கம் நாளடைவில் சில இரகசிய திட்டங்களை தீட்டிச் செயல்பட்டதால், காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டது. அச்சங்கத்தின் உறுப்பினர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.
1923ஆம் ஆண்டில் பகத்சிங்கின் 16ஆவது வயதில் அவரது தந்தை சர்தார் கிஷான்சிங் அவர்கள். பகத்சிங்கிற்குத் திருமணம் செய்து வைக்கப் பெரிதும் முயன்றார். ஆனால், விடுதலை வேட்கையும், ஆதிக்கத்தை வீழ்த்திச் சமதர்ம சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்று எல்லா நேரமும் சிந்தித்துக் கொண்டும், அதற்கான செயல்களில் தீவிரமாய் ஈடுபட்டுக் கொண்டுமிருந்த பகத்சிங் இதற்கு இணங்கவில்லை. தன் வாழ்நாள் முழுவதையும் மேற்கண்ட உயரிய இலக்கை அடைய தியாகம் செய்ய முடிவு செய்திருந்தார். எனவே, தனது நிலைப்பாட்டை விளக்கித் தந்தைக்குக் கடிதம் எழுதினார்.
மதிப்பிற்குரிய தந்தையார்க்கு, வணக்கம்.
இது திருமணத்திற்குரிய நேரம் அல்ல. நாடு என்னை அழைக்கிறது. நான் உடலாலும், மனதாலும், பொருளாலும் நாட்டிற்குத் தொண்டு செய்ய உறுதியெடுத்துக் கொண்டுள்ளேன். சொல்லப்போனால் இவ்வாறு தியாகம் செய்வது நம் குடும்பத்திற்குப் புதிய ஒன்றல்ல. நமது குடும்பம் முழுவதுமே நாட்டுப்பற்றை முழுமையாகக் கொண்டது. நான் பிறந்து இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கழித்து 1910இல் எனது சித்தப்பா ஸ்வரன்சிங் சிறையில் இறந்தார். சித்தப்பா அஜித்சிங் அயல்நாடுகளுக்குக் கடத்தப்பட்டு வாழ்ந்தார். நீங்களும் சிறையில் நிறைய துன்பத்தை அனுபவித்துள்ளீர்கள். உங்களின் அடிச்சுவட்டையே நானும் பின்பற்றுகிறேன். அதனாலேயே இதைச் சொல்வதற்கு நான் துணிந்தேன்.
அன்புகூர்ந்து என்னைத் திருமண பந்தத்திற்குள் கட்டிப் போடாதீர்கள். அதற்கு மாறாக, என்னுடைய அரசியல் இலக்கில் நான் வெற்றி பெற என்னை நீங்கள் வாழ்த்துங்கள்.
உங்கள் கீழ்ப்படிந்துள்ள,
பகத்சிங்
- (ஆதாரம்: விடுதலை மணம்: பகத்சிங் படைப்புகள்
கே.சி.யாதவ் சிங், 2006 வெளியீடு)
பகத்சிங்கின் இக்கடிதத்திற்குப் பதில் எழுதிய அவரது தந்தை. தனது தாயின் (பகத்சிங்கின் பாட்டி) விருப்பத்திற்காகத் திருமணம் செய்துதான் ஆகவேண்டும் என்று வற்புறுத்தினார்.
அக்கடிதத்திற்கு பகத்சிங் அவர்கள் பதில் கடிதம் எழுதி, தனது நிலைப்பாட்டையும், தனது பரந்துபட்ட இலக்கையும் தெளிவாக விளக்கி, தனது தந்தை இப்படிப்பட்ட சபலங்களுக்கு ஆளாகலாமா? என்று கேட்டார்.
மதிப்பிற்குரிய தந்தையார்க்கு
உங்களுடைய கடிதத்தின் உள்ளடக்கத்தைப் படித்துப் பார்த்தேன். மாபெரும் தேசத் தொண்டரும், உள்ள உறுதி உடையவருமான நீங்களே இத்தகைய அற்பமான விஷயங்களின் செல்வாக்கிற்கு ஆளாக முடியுமென்றால், சாதாரண மனிதர்களின் நிலை என்னவாகும்?
நீங்கள் பாட்டிக்காகக் கவலைப்படுகிறீர்கள். ஆனால், 33 கோடி மக்களின் தாயான இந்தியத் தாய் எத்தனை துன்பத்தில் இருக்கிறாள். அவளுடைய நலனுக்காக நாம் எல்லாவற்றையும் தியாகம் செய்ய வேண்டும்.
உங்கள் கீழ்ப்படிந்துள்ள,
பகத்சிங்
- (ஆதாரம்: விடுதலை மணம்: பகத்சிங் படைப்புகள்
 கே.சி.பாபர் சிங், 2006 வெளியீடு)
பகத்சிங்கின் இரண்டாவது கடிதமும் அவரது தந்தையின் பிடிவாதத்தைத் தளர்த்தவில்லை. பகத்சிங் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார்.
எனவே, பகத்சிங்,
மதிப்பிற்குரிய தந்தைக்கு,
வணக்கம்.
என்னுடைய வாழ்க்கை இந்தியாவின் விடுதலை என்னும் உன்னத நோக்கத்திற்காக முன்னமே ஒப்படைக்கப்பட்டு விட்டது (அர்ப்பணிக்கப்பட்டு விட்டது). எனவே, இன்ப நுகர்வுகளுக்கும், விருப்பங்களுக்கும் என் வாழ்வில் இடமில்லை.
நான் சிறுவனாக இருக்கும்போது, எனக்குப் புனித நூல் அணிவிக்கும் நிகழ்ச்சியில் பாபுஜி (தாத்தா) அவர்கள், நான் நாட்டின் பணிக்காக ஒப்படைக்கப்படுவதாக அறிவித்தது உங்களுக்கு நினைவிருக்கும். ஆகவே, அந்த அர்ப்பணிப்பை நான் நிறைவேற்றுவேன். என்னை மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
தங்கள் கீழ்ப்படிந்துள்ள,
பகத்சிங்
- (ஆதாரம்: தியாகி பகத்சிங் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்
 - சிவவர்மா, 1986 வெளியீடு)
இக்கடிதத்தை எழுதி வைத்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறி சென்றுவிட்டார். வீட்டைவிட்டு வெளியே வந்த பகத்சிங் கான்பூர் வந்து சேர்ந்தார். ஜெயசந்திர வித்தியாலங்கரிடம் பெற்று வந்த அறிமுகக் கடிதத்தின் மூலம் கணேஷ்சங்கர் வித்தியார்த்தியுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு கான்பூரிலே 1924 முதல் 1926 வரை இருந்தார்.
அவர் கான்பூரில் இருந்தபோதுதான் பி.கே.தத், சிவவர்மா, பி.கே.சின்ஹா மற்றும் அஜய் கோஷ் ஆகியோரைச் சந்தித்துத் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார்.
1924இல், இந்தியா எங்கணும் புரட்சி இயக்கங்கள் உருவாக்கப்பட்டன. பஞ்சாபிலும் பல புரட்சி இயக்கங்கள் செயல்பட்டன. பிரிந்து கிடக்கும் இந்த இயக்கங்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
அலகாபாத்தில் புரட்சித் தலைவர்கள் ஒன்று கூடினர். ஹிந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேஷன் என்ற பெயரில் புதிய அமைப்பை ஏற்படுத்தினர். கான்பூருக்கு வந்த பகத்சிங் இதில் உறுப்பினரானார். இதன் மூலம் பலரின் வழிகாட்டுதல்களும் நட்பும் இவருக்குக் கிடைத்தன.
இந்த அமைப்பின் முதன்மைத் தலைவரான சந்திரசேகர ஆசாத்தின் தொடர்பு இவருக்குப் பெரிதும் பயன்பட்டது. புரட்சிச் செயல்பாடுகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்ட இவர், 1925இல் புரட்சிகர இயக்கத்தின் அறிக்கை வெளியிட்டார். பகத்சிங் கான்பூரில் இருந்தபோது கட்சிப் பணிகளுடன், பத்திரிகைகளிலும் எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதி வந்தார். கணேஷ் சங்கர் வித்தியார்த்தி நடத்தி வந்த பிரதாப் என்னும் ஹிந்தி வாரப் பத்திரிகையில், பல்வந்த் என்ற புனைப் பெயரில் பகத்சிங் எழுதினார்.
புரட்சி இயக்கம் தீவிரமாக வளர்ந்தது. ஆர்வமும் துடிப்பும், தியாக உணர்வும் கொண்ட இளைஞர்கள், நாட்டுக்காக எதையும் செய்ய முன்வந்தனர். ஆனால் அவர்களுக்கு ஆயுதம், வெடிகுண்டுகள் வழங்க இந்த அமைப்பிடம் நிதி வசதியில்ல. எனவே, நிதி வசதிக்கு என்ன செய்வது என்று தீவிரமாகச் சிந்தித்தனர்.
இவர்கள் இயக்கம் இரகசிய இயக்கம் என்பதால் பொது மக்களிடம் நிதி திரட்ட இயலவில்லை. எனவே, இந்திய மக்களைக் கொள்ளையடித்து, ஆங்கில அரசு சேர்த்து வைத்திருந்த கஜானாவைக் கொள்ளையடிக்க முடிவு செய்தனர். அதன்படி, ராம்பிரசாத் பிஸ்மில் தலைமையில், காகோரி இரயில் நிலையத்தில், ரயிலில் உள்ள அரசு கஜானாவைக் கொள்ளை அடிப்பதென முடிவு செய்யப்பட்டது.
அந்த முடிவின்படி, 1926ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் நாள் மாலை, அரசு கஜானாவுடன், சாகியான்பூரிலிருந்து லக்னோ சென்று கொண்டிருந்த ரயிலை, காகோரி இரயில் நிலையத்தைக் கடந்த சில நிமிடங்களில், அபாய சங்கிலியை இழுத்து நிறுத்தினர். அந்த ரயிலில் கொண்டு வரப்பட்ட அரசு கஜானாவைக் கொள்ளையடித்து விட்டு புரட்சி வீரர்கள் அனைவரும் தப்பிச் சென்று விட்டனர்.
அதிர்ச்சியடைந்த ஆங்கில அரசு, ராம்பிரசாத் பிஸ்மில், ராஜிந்தர் லாஹிரி, தாக்கூர் ரோஷன் சிங், சசிந்திர பக்க்ஷி, சந்திரசேகர ஆஸாத், கேசவ் சக்ரவர்த்தி, அஷ்பக் உலாகான் உள்ளிட்ட இருபத்தைந்து பேர்மீது வழக்குத் தொடர்ந்தது.
சந்திரசேகர ஆஸாத்தைத் தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர். புகழ்பெற்ற இந்த காக்கோரி சதி வழக்கில் புரட்சிக்காரர்களுக்காக வாதாட மோதிலால் நேரு தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில் ஜவஹர்லால் நேரு, கோவிந்த வல்லபபந் போன்றோர் இருந்தனர்.
இவ்வழக்கின் முடிவில், ராம்பிரசாத் பிஸ்மில், அஷ்பக் உலாகான், ராஜிந்தர் லாஹிரி மற்றும் ரோஷன் சிங் ஆகிய நால்வருக்குத் தூக்குத் தண்டனையும் மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை உள்ளிட்ட நீண்ட காலச் சிறைத் தண்டனைகள் வழங்கப்பட்டன.
காகோரி தியாகிகளில், தாக்கூர் ரோஷன் சிங் 1927 டிசம்பர் 16ஆம் நாள் தூக்கிலிடப்பட்டார். ராம்பிரசாத் பிஸ்மில்லும், அஸ்பக் உலாகானும் டிசம்பர் 19ஆம் நாள் தூக்கிலிடப்பட்டனர்.
இதன்மூலம் தன்னுடைய நெருங்கிய நண்பர்களை இழந்து துடித்தார் பகத்சிங். தன் நண்பர்களைத் தூக்கிலிட்ட ஆங்கில ஆதிக்கத்தை ஒழித்தே தீர வேண்டும் என்று உறுதி கொண்டார். போலீஸில் பிடிபடாமல் தப்பித்த பகத்சிங் லாகூருக்குத் தப்பிச் சென்றார்.
காகோரி வழக்கில், இயக்கத்தின் முதன்மைத் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுவிட்டதால், கட்சியை வழிநடத்த வேண்டிய பொறுப்பு பகத்சிங்கிற்று வந்தது. பகத்சிங் தான் மட்டுமே தலைவர் என்றில்லாமல் கூட்டுத் தலைமைப் பொறுப்பில் கட்சியை நடத்த முடிவு செய்தார்.
தன்னலமற்ற இளைஞர்களைக் கொண்டு, தொழிலாளர்கள், விவசாயிகள் அனைவரையும் அணி திரட்டி, முதலாளித்துவ ஆதிக்கத்திற்கும், சுரண்டலுக்கும் முடிவு கட்ட வேண்டும் என்று முடிவு செய்தனர். புரட்சி இயக்கத்தில் பெண்களையும் சேர்த்தனர். அவர்களில், தியாகி பகவதி சரண் வோராவின் துணைவியார் துர்கா தேவி குறிப்பிடத்தக்கவர்.
(துர்கா தேவியை பகத்சிங் பாபி (அண்ணி) என்று அழைப்பார். பிற்காலத்தில் சாண்டர்ஸ் கொலை வழக்கில் பகத்சிங் தப்பித்துச் செல்ல இவர் துணையாக நின்றார். கடுமையான போலீஸ் காவலுக்கும், கண்காணிப்பிற்கும் இடையே பகத்சிங் தப்பித்த போது, அவருடன் சென்றவர் துர்காதேவி மட்டுமே. பகத்சிங் ஆடம்பரமான வசதி படைத்தவர்போல் தன்னை அலங்கரித்துக் கொண்டார் (அடையாளம் தெரியாமல்). துர்காதேவி கையில் குழந்தையுடன் அவரது மனைவிபோல் சென்றார். சுகதேவ் அவர்களின் வீட்டு வேலைக்காரர்போல் சென்றார்.
இவர்களை எப்படியாவது பிடித்துவிடவேண்டும் என்று போலீஸார் தீவிரமாகத் தேடிக் கொண்டிருந்தபோது, அவர்கள் கண்முன்னே இந்த வேடத்தில் ரயில் ஏறிச் சென்றனர் இம்மூவரும். அந்த அளவிற்குத் துணிவு மிக்கவர் துர்கா).
காகோரி கொள்ளையில் பிடிபடாமல் தப்பித்தவர்களை ஒன்று சேர்த்து, சிதைந்து போன தங்கள் புரட்சி இயக்கத்தை மீண்டும் வலுப்படுத்த இரகசிய பிரச்சாரங்களை மேற்கொண்டார்.
அவருடைய முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. பெருமளவில் இளைஞர்கள் திரண்டனர். பகத்சிங்கின் செயல்பாடுகளும், துடிப்பும், எழுச்சிமிக்க பேச்சும், அவர்களை வெகுவாக ஈர்த்தன. இளைஞர்களைப் புரட்சிகரத் திட்டங்களில், செயல்பாடுகளில் வழிநடத்துவதில் பகத்சிங் தீவிரமாக பங்காற்றினார். இதனால் போலீசாரின் கவனம் பகத்சிங் மீது திரும்பியது. அவர்மீது சந்தேகம் வலுக்கவே, அவரைக் கைது செய்து, சீர்திருத்தச் சிறையில் அடைத்தார்கள். முதலில் தனியறையில் அடைக்கப்பட்டுக் கிடந்தார். அவர்மீது என்ன குற்றச்சாட்டு என்று சொல்லப்படவும் இல்லை, வழக்கு எதுவும் நடக்கவும் இல்லை. பின் விடுதலை செய்யப்பட்டார்.
ஆனால், மீண்டும் இரண்டரை ஆண்டுகள் கழித்துக் கைது செய்யப்பட்டு இதே சிறையில் அடைக்கப்பட்டார். எக்குற்றமும் செய்யாத இவர், மக்கள்மீது வெடிகுண்டு வீசியதாக இம்முறை குற்றம் சாட்டப்பட்டார்.
செய்யாத குற்றத்திற்குச் சிறை வாசமா? பகத்சிங் ஆத்திரம் அடைந்தார். அரசியல் கைதிகளுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்று சிறையிலேயே உண்ணாவிரதம் இருந்தார். வழக்கு நீண்ட காலம் நடந்தது.
எனவே, இவரது குடும்பத்தார் அறுபதாயிரம் ரூபாய்க்கு முச்சலிக்கா ஜாமீன் கொடுத்து, இவரை வெளியில் அழைத்து வந்தனர். வழக்கு உயர்நீதிமன்றத்திலும் பல நாட்கள் நடத்தப்பட்டது.
ஜாமீனில் வெளியில் வந்த பகத்சிங், புரட்சி செயல்பாடுகளில் ஈடுபட முடியாமல் போனாலும், நௌஜவான் பாரத சபை என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். பஞ்சாபிலுள்ள இளைஞர்களுக்கு இதன் மூலம் தேசிய உணர்ச்சிகளை ஊட்டினார். காகோரி ரயில் கொள்ளை வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றவர்களின் நினைவாக காகோரி தினம் கொண்டாடத் திட்டமிட்டார்.
மேலும், 1915-1916-ஆம் ஆண்டுகளில் லாகூர் சதி வழக்கில் உயிர் நீத்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை, காகோரி தினம் கொண்டாடுகையில் பரப்ப வேண்டும் என்றும் முடிவு செய்தார். அப்படி உயிர்நீத்த இளைஞர்களின் படங்களைத் திரட்டினார். மாஜிக்லாண்டேர் என்ற மாயவிளக்கு ஊர்வலம் நடத்தினார். லாகூரில் இவ்வூர்வலம் சிறப்புற நடந்தது.
பகத்சிங் மாணவராய் இருந்த தேசியக் கல்லூரி, மண்டபத்தில் முதல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. ஏராளமான மக்கள் மண்டபம் நிறையக் கூடினர். ஜாமீனில் இருந்த பகத்சிங் உரையாற்ற முடியாது என்பதால், அவர் எழுதித் தயாரித்த உரை படிக்கப்பட்டது. பகவதிசரண் என்ற ஒரு புரட்சியாளர் உணர்வு பொங்க அவ்வுரையை எழுச்சியுடன் எடுத்துச் சொன்னார்.
இந்தியாவில் வெறும் விடுதலை மட்டும் நோக்கமல்ல. பொருளாதார விடுதலையும் வேண்டும் என்று முழங்கினார். நௌஜவான் பாரத சபையின் செயல் திட்டங்களை கம்யூனிசக் கொள்கையின் அடிப்படையில் அமைத்தார்.
மென்மையான உள்ளமும், மனித நேயமும் கொண்ட பகத்சிங்கை, தீவிரவாத புரட்சியாளனாக மாற்றியதுகாகோரி வழக்கில் தோழர்களுக்கு அளிக்கப்பட்ட தூக்குத் தண்டனைதான். தன்னையொத்த இலட்சிய இளைஞர்களை தூக்கிலேற்றிக் கொன்ற கொடுமை அவர் உள்ளத்தில் ஆவேசத்தை எழுப்பியது.
இரஷ்ய புரட்சித் தொடர்பாக அவர் படித்த நூல்களும், அவர் உள்ளத்தில் புரட்சி வேகத்தை உருவாக்கின. எனவே நாட்டு விடுதலை, முதலாளிகளிடமிருந்து அடிதட்டு மக்களுக்கு விடுதலை இரண்டும் கட்டாயத் தேவை என்பதால், அதை அடைய தன்னையொத்த இளைஞர்கள் தங்கள் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்று சொல்லி, அதற்குத் தயார் செய்தார். தன்னுடைய சொந்தத் திட்டத்தின்படி தீவிரத்துடன் கூடிய புரட்சிப் போராட்டங்களை நடத்தினார்.
பல இடங்களில் தனித் தனியே நடந்த புரட்சி இயக்கங்களை ஒன்றிணைத்தார். 1928 ஜூலை மாதம், பல இடங்களில் செயல்பட்ட புரட்சி இயக்கங்களின் உறுப்பினர்கள் கான்பூரில் கூடினார்கள். எல்லா புரட்சி இயக்கங்களையும் ஒன்றிணைத்து, மத்திய சங்கம் அமைப்பதென அதில் முடிவு செய்தனர்.
இந்த முடிவைச் செயற்படுத்தும் நோக்கத்துடன் பகத்சிங்கும், விஜயகுமார சிங்கும் பல இடங்களுக்கும் பயணம் மேற்கொண்டனர். அங்கேயுள்ள இயக்கத் தோழர்களுடன் கலந்து பேசினர். முடிவில், 1928-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் டில்லி பழய கோட்டையில் ஒரு கூட்டத்தை நடத்தினர். கூட்டம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. பல மாநிலங்களிலிருந்தும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அக்கூட்டத்தில் புரட்சிச் சங்கங்களின் மத்திய சபை நிறுவப்பட்டது. ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளைச் செய்யும் நோக்கத்துடன் வேலைத் திட்டம் ஒன்றும் தயாரிக்கப்பட்டது. மக்களுக்கு எழுச்சி உண்டாக்கும் பிரச்சாரங்கள், செயல்பாடுகளுக்கு அதில் முன்னுரிமை அளிக்கப்பட்டது.
ஹிந்துஸ்தான் ரிபப்ளிக்கன் அசோசியேஷன் என்று இந்த மத்திய சபைக்குப் பெயரிட வேண்டும் என முடிவு செய்தனர். ஆனால், ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக்கன் அசோசியேஷன் என்று பெயரிட வேண்டும் என்று பகத்சிங் வலியுறுத்தினார். அதாவது பொதுவுடைமை நோக்கை அதில் முதன்மைப்படுத்த வேண்டும் என்று அவர் விரும்பினார். சிலர் அதற்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தனர். ஹிந்துஸ்தான் ரிபப்ளிக்கன் அசோசியேசன் என்ற பெயர் நன்கு அறிமுகமான பெயர். அதை மாற்றக்கூடாது என்பது அவர்களின் வாதமாக இருந்தது. ஆனால் பகத்சிங், சோசலிஸ்ட் என்ற சொல் சேர்க்கப்பட வேண்டியதன் கட்டாயத்தை விளக்கிக் கூறவே, எல்லோரும் ஏற்றுக் கொண்டனர்.
இந்த அமைப்பை இரண்டு பிரிவுகளாகப் பிரித்து, களத்தில் இறங்கி வேலை செய்யும் குழுக்கள் ஒரு பிரிவாகவும், இயக்கத்தின் மீது பற்றுக் கொண்டு அதனை ஆதரிப்போரைக் கொண்டது இன்னொரு பிரிவாகவும் அமைக்கப்பட்டது.
களத்தில் நேரடியாக ஈடுபட்டுச் செயல்படும் உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து ஒரு படையை அமைத்தனர். அதற்கு, ஹிந்துஸ்தான் சோசலிஸ்டு ரிபப்ளிக்கன் ஆர்மி என்று பெயரிட்டனர். ஆயுதங்களைத் திரட்டுவதும், இந்த அமைப்பின் தீர்மானங்களைச் செயல்படுத்துவதும், மக்களுக்குத் தேவையான தொண்டுகளைச் செய்வதும் இப்படையின் முதன்மைக் கடமைகளாகக் கொள்ளப்பட்டன.
இக்கூட்டத்தில் ஒரு நிர்வாகக் குழுவும் அமைக்கப்பட்டது. பஞ்சாப், இராஜபுதனம், பீகார் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இதில் அதிகம் இடம் பெற்றனர்.
மக்களிடையே பிரச்சாரம் செய்யும் மாபெரும் பொறுப்பு பகத்சிங்கிடம் ஒப்படைக்கப்பட்டது. படைப் பிரிவின் தலைவராக சந்திரசேகர ஆஸாத் நியமிக்கப்பட்டார். இவர் பகத்சிங்கின் நெருங்கிய நண்பர். இவரைப் பண்டிட்ஜி என்று அழைப்பர். பல்வேறு சதிவழக்குகளில் தொடர்புடைய இவரைப் போலீசாரால் பிடிக்க இயலாமல் திணறினர். அப்படிப்பட்ட ஆற்றலாளர் இவர்.
இப்படையில் சேருகின்றவர்கள், குடும்பப் பற்றைத் துறந்து, இயக்கப் பணிகளுக்காகவே தன்னை முழுநேரமும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அவர்கள் மதச் சின்னங்கள் எதையும் அணியக்கூடாது, மத அடையாளங்களை அகற்றிவிட வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இம்முடிவின்படி, தன் சீக்கிய மதக் கொள்கைப்படி வைத்திருந்த நீண்ட தலைமுடியையும், தாடியையும் பகத்சிங் சிரைத்து விட்டார். முதன்முதலாக இந்த அமைப்பின் தலைமையலுவலகம் ஜான்சியில் செயல்பட்டது. அதன் பின்னர் அது ஆக்ராவிற்கு மாற்றப்பட்டது.
ஆக்ராவில் இரண்டு வீடுகளை வாடகைக்கு எடுத்து அவற்றில் புரட்சி இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்களைத் தங்க வைத்தனர்.
இந்த அமைப்பிற்கென்று நிதி எதுவும் இல்லாமையால் இவர்களுக்கு உணவுகூடச் சரியாகக் கிடைக்கவில்லை. பல வேளைகள் பட்டினியாக இருந்தனர். சிலவேளைகள் ஒரு கோப்பைத் தேநீருடன் கழிந்தன. வீட்டைத் துறந்து வெளியில் வந்துவிட்டதால், வீட்டிலிருந்து எவ்வுதவியும் பெற இயலவில்லை. போதிய உடையில்லாமலும், கடுங்குளிருக்குப் போர்த்திக் கொள்ள போர்வையில்லாமலும் சிரமப்பட்டனர்.
பகத்சிங் இப்படிப்பட்ட இன்னல்களை அதுவரை அனுபவித்தவர் அல்லர். என்றாலும், எல்லோருடனும் சேர்ந்து அந்த இன்னல்களை ஏற்றுக் கொண்டு செயல்பட்டார்.
இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு கொள்கைத் தெளிவும், விழிப்புணர்வும், கல்வியறிவும் வேண்டும் என்பதனால், அங்கே ஒரு நூலகத்தையும் பகத்சிங் அமைத்தார். அதில் பொருளாதாரம் பற்றிய நூல்களே அதிகம் இருந்தன. இலக்கியத்திலும் பகத்சிங்கிற்கு ஈடுபாடு இருந்தது. தரமான இலக்கிய நூல்களை விரும்பிப் படித்தார். உரையாடும்போது அவற்றிலிருந்து ஏராளமான மேற்கோள்களைக் காட்டுவார். தன்னை மிகவும் கவர்ந்த பாடல்களை வாய்விட்டு உல்லாசமாகப் பாடுவார். பகத்சிங் இருக்கும் இடமே விவாத அரங்கமாகவே இருக்கும். அந்த அளவிற்கு விவாதங்கள் நடக்கும்.
பகத்சிங் தன் துணிவான செயல்பாடுகளாலும், ஆற்றல்மிகு பேச்சாலும் இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்து இயக்கத்தில் சேர்ந்தார்.
அப்போது, மாணவர்கள் அரசியலில் பங்கு கொள்ளக்கூடாது என்று சிலர் கூறிக் கொண்டிருந்த வேளையில் அதனை மறுத்து, மாணவர்கள் அரசியலில் பங்குகொள்ள வேண்டும் என்று கூறி, தனது வலுவான வாதங்களை ஒரு கட்டுரை மூலம் 1928-ஆம் ஆண்டு ஜுன் மாதம் கீர்த்தி இதழில் வெளியிட்டார்.
படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் அரசியலில் பங்கெடுக்கக் கூடாது என்று சிலர் வீட்டின் கூரைமேல் நின்று கொண்டு உரக்கக் கத்துகின்றனர். பஞ்சாப் அரசாங்கமும் அதே கருத்தைக் கொண்டுள்ளது.
இந்த நாட்டின் அதிகாரம் யாருடைய கைகளுக்குச் செல்லப் போகின்றதோ, அந்த இளைஞர்களுக்குத் திருப்தியற்ற விதத்தில் கல்வி அளிக்கப்படுகிறது.
மாணவர்களின் முதன்மைக் கவனம் அவர்களது படிப்பில் இருக்க வேண்டும். அவர்களது நேரமும் சக்தியும் முழுவதும் அதற்காகவே அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் ஒத்துக் கொள்கின்றோம். ஆனால், நமது நாட்டின் நிலைமையையும் அந்நிலைமையை மேம்படுத்துவதற்கான வழிவகைகளையும் புரிந்து கொள்ளக்கூடிய திறனை வளர்த்துக் கொள்வது அவர்களின் கல்வியின் ஒரு பகுதியல்லவா? அப்படியில்லையென்றால் அவர்களுக்குக் கொடுக்கப்படும் கல்வி பயனற்றது என்றே நான் கருதுகின்றேன். அக்கல்வி நம்மை வெறும் எழுத்தர்களாகவே ஆக்கக் கூடியது என்றால், அதனை நாம் பெறுவதில் ஒரு மகிழ்ச்சியும் இல்லை. அத்தகைய கல்வி நமக்குத் தேவையா?
தந்திரக்காரர்கள் சிலர், மாணவர்களே, நீங்கள் அரசியலைப் பற்றிப் படிக்கலாம்; அதைப் பற்றிச் சிந்திக்கலாம். ஆனால், அரசியலில் மட்டும் ஈடுபடக்கூடாது. படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி, உங்கள் திறனை வளர்த்துக் கொண்டால், நீங்கள் நாட்டிற்கு அதிகம் பயனுள்ளவர்களாக இருப்பீர்கள்... என்று கூறுகின்றனர்.
வெளிப்படையாகப் பார்க்கும்போது இது ஒரு நல்ல யோசனை. இது ஒரு மேலோட்டமான கருத்து என்பதால், இதனை நான் மறுக்கிறேன்.
ஒரு மாணவன், இளைஞர்களுக்கு அறைகூவல் (ஹயீயீநயட வடி வாந லடிரபே) என்ற நூலை (பிரின்ஸ் க்ரொபுதின் என்ற இரஷ்ய பொருளாதார மேதை எழுதியது) படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த ஒரு பேராசிரியர், நீ அரசியல் புத்தகங்களைப் படிக்கலாமா? என்று கண்டித்தார். பொருளாதாரத்தில் க்ரொபுதின் பெயரைக் கேள்விப்படாதவர்கள் இருக்க முடியாது. அப்படியிருக்க அவர் நூலைப் படிப்பதையே இப்பேராசிரியர் கண்டிக்கிறார் என்றால் அப்பேராசிரியரிடம் மாணவர் என்ன கற்றுக் கொள்ள முடியும்?
அரசியல்வாதிகளுக்கு மாணவர்கள் வரவேற்பு கொடுப்பதும் அரசியல்தானே. பின் அது ஏன் ஏற்றுக் கொள்ளப்படுகிறது? அது அரசாங்கத்தை மகிழ்விக்கிறது. அரசாங்கத்தை மாணவன் தெரிந்து கொள்வது அரசாங்கத்தை அச்சுறுத்துகிறது. இதுதானே காரணம்?
இப்போது இந்தியாவிற்குத் தேவை அரசாங்க விசுவாசிகள் அல்ல. இந்த நாட்டிற்காக உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்ய தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்களே!
தங்களது குடும்பம் மற்றும் உலக வாழ்க்கைத் தொடர்பானவற்றைக் கவனித்துக் கொண்டிருக்கும் புத்திசாலியான மனிதர்களிலிருந்து அத்தகைய தேசபக்தர் வர முடியாது! இவற்றில் பிடிப்பில்லாத (சுயநலமில்லா) இளைஞர்களிலிருந்துதான் அப்படிப்பட்டவர்கள் வர முடியும்.
இளைஞர்களுக்கு அரசியல் சார்ந்த நடைமுறை அறிவு கொடுக்கப்பட்டால் மட்டுமே, அவர்களிடம் தேசபக்தர்கள் உருவாகுவார்கள். கணிதம், புவியியல் கேள்விகளுக்கு உரிய விடைகளைக் குருட்டு மனப்பாடம் செய்வோரில் இவர்கள் உருவாக முடியாது.
இங்கிலாந்து நாட்டு மாணவர்கள் கல்லூரிகளைத் துறந்துவிட்டு, ஜெர்மனிக்கு எதிராகப் போருக்குச் சென்றார்களே, அது அரசியல்  இல்லையா?
தங்களது கல்லூரியைத் துறந்து பரதோலியில், விடுதலைப் போராட்ட வீரர்களுக்குத் துணை நின்றார்களே அந்த அகமதாபார் தேசியக் கல்லூரியின் மாணவர்கள், அவர்கள் என்ன முட்டாள்களா?
ஒவ்வொரு நாட்டு விடுதலையிலும் மாணவர்களே முன்னின்றுள்ளனர். இந்தியாவில் மட்டும் மாணவர்கள் ஒதுங்கியிருக்க வேண்டுமா?
மாணவர்கள் படிக்க வேண்டும். கட்டாயம் படிக்க வேண்டும். ஆனால், அதனுடன் கூடவே, அவர்கள் அரசியல் அறிவையும் பெற வேண்டும். நேரடி நடவடிக்கை கட்டாயம் தேவைப்படும்போது அரசியலில் குதிக்க வேண்டும்! தன் வாழ்க்கையையும் அர்ப்பணிக்க வேண்டும்! என்று அறிவுப்பூர்வமாக விளக்கினார்.
- (ஆதாரம் : விடுதலை மணம் : பகத்சிங் படைப்புகள்
கே.சி. யாதவ் - பாபர்சிங், 2006 வெளியீடு.)


நூல் - மறைக்கப்பட்ட மாமனிதர்கள்  

ஆசிரியர் - மஞ்சை வசந்தன்

Comments

Popular posts from this blog

கயிற்றில் தொங்கிய கணபதி (கி.பி. 1911-1949) part-2

மகாத்மா ஜோதிராவ் பூலே (கி.பி. 1827-1890)

பெம்மான் பசவர் (கி.பி.1131-1167)