கயிற்றில் தொங்கிய கணபதி (கி.பி. 1911-1949) part -1
தமிழக
முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி
அவர்கள் கொடுக்கின்ற அடைமொழிகள் அனைத்துமே நிலைத்துவிடுகின்றன. அவ்வகையில், மலேசியாவில் மலையகத் தமிழர்களுக்காக அரும்பாடுபட்டு, அநேகத் தியாகங்களைச் செய்து, ஆங்கிலேயர்களால் நயவஞ்சகமாக நாணேற்றிக்
கொல்லப்பட்ட ஒரு மாபெரும் மனிதருக்கு என்ன அடைமொழி கொடுக்கலாம் என்று முயன்று முயன்று சிந்தித்தாலும், இறுதியில் கலைஞர் கொடுத்த அடைமொழியே பொருத்தமாகவும், கருத்தாழம் உடையதாகவும், உணர்வூட்டக் கூடியதாகவும் இருப்பதால் அந்த அடைமொழியோடு இங்கு அவரை (கணபதியை) அறிமுகப்படுத்தியுள்ளேன். ஆம், அவர்
அறிமுகப்படுத்த வேண்டிய நிலையில்தான் இன்றைக்கு உள்ளார். அவரைப் பற்றி
இன்றைக்கு எத்தனைத் தமிழர்களுக்குத் தெரியும்?
2006ஆம்
ஆண்டு ஜனவரி மாதம், மலேசியாவில் தமிழ், தமிழர் மீட்சிக்கும் எழுச்சிக்கும் பரப்புரை செய்ய பல இடங்களுக்கும் சென்றேன். அவ்வாறு கோலாலம்பூரில்
சென்று கொண்டிருந்தபோது, என்னுடன் காரில் பயணம் செய்த மலேசிய தோழர்கள், ஒரு சிறைச்சாலையைக்
காட்டி, இச்சிறையில் தான்
மலேசியத் தமிழர்களின் மாபெருந்தலைவர் கணபதி தூக்கிலிடப்பட்டார் என்று கூறி அவரைப் பற்றிய சில செய்திகளைச் சொன்னார்கள்.
எனவே, அவரைப் பற்றி முழுமையாக அறிந்து அந்த மாமனிதரை, மானமுள்ள தமிழரை
உலகிற்கு வெளிச்சம் போட்டு வெளிப்படுத்த வேண்டும் என்ற உணர்வும் உந்துதலும் என்னுள் அப்பொழுதே எழுந்தன. அதற்கு இந்நூல்
பொருத்தமாக அமைந்ததால், இதில் அவரைப் பற்றிய உணர்வுமிக்க, தியாகஞ் செறிந்த செய்திகளை உங்களுக்கு வழங்குவதன் மூலம், அந்த மாபெருந்
தலைவருக்கு, தமிழினத்தின் சார்பாக நன்றி செலுத்த விரும்புகின்றேன்.
தமிழகத்
தலைவர்கள் அனைவரும், இந்தியப் பிரதமர்
நேரு, ஏன்,
அய்.நா. மன்றமும்கூட ஒருவரின் தூக்குத் தண்டனையை நீக்க வேண்டி குரல் கொடுத்தது என்றால், அவரது தொண்டு, நேர்மை, உழைப்பு, தியாகம், அவர் ஏற்ற இன்னல், அவரின் சிறப்பு
கட்டாயம் உயர்ந்ததாக இருக்க வேண்டும்.
யார்
அந்த மாமனிதர்?
கயிற்றில்
தொங்கிய கணபதி! என்று கலைஞரால்
கண்ணீர்க் காவியம் வரையப்பட்ட, மலேசியத் தமிழர்களின் தலைவர், தியாகி, போராளி, தொழிற்சங்கத் தலைவர் கணபதிதான் அவர்.
மலேசியாவில்
மலையகத் தமிழர்களின் நல்வாழ்விற்கு, பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஒழிப்பிற்கு, அவர் ஆற்றிய பணிகளும், ஏற்ற இன்னல்களும், செய்த தியாகங்களும் ஏராளம், ஏராளம்...
ஆனால், அப்படிப்பட்ட மாமனிதரைப் பற்றி இன்றைய தலைமுறைக்கு அறவே தெரியாது. அவர் பெயர்கூட
உச்சரிக்கப்படுவதில்லை. எனவேதான், ம()றக்கப்பட்ட அந்த மாமனிதரை வெளிக் காட்டவும், நினைவூட்டவும் வேண்டியது
கட்டாயமாகிறது.
பிறப்பு
தமிழ்நாட்டில்
தஞ்சை மாவட்டத்தில், தம்பிக் கோட்டை என்னும் ஊரில், 23.03.1911இல் வைரம் - ஆறுமுகம் என்ற வாழ்விணையர்களுக்கு மகனாகப் பிறந்தவர் கணபதி அவர்கள்.
உடன்பிறந்தோர்
இவரது
உடன்பிறந்தவர் எஸ்.ஏ
சற்குணம் என்பவர். கணபதியின் தந்தைக்கு
இரண்டாவது மனைவியின் பிள்ளைகள் கணபதியும் சற்குணமும். முதல் மனைவிக்குத் தியாகராஜன், நடராஜன் என இரு மகன்கள்.
மலேசியா
செல்லல்
1920ஆம்
ஆண்டு தமிழகத்திலிருந்து ரஜுலா என்ற கப்பல் மூலம் தாய்மாமன் சுப்பிரமணியத்துடன் மலேசியா சென்றார் கணபதி. அப்போது கணபதிக்கு
வயது பத்து.
தாய்மாமன், மலேசியாவில் கணபதியைப் படிக்க வைத்து, வியாபாரம் செய்யவும்
கற்றுக் கொடுத்தார். உலக அறிவு பெறுவதற்கு பல செய்திகளை ஒவ்வொரு நாளும் கணபதிக்குக் கற்றுக் கொடுத்தார். நாட்டு நடப்புகள், உலகச் செய்திகள், மலேசியாவிலுள்ள நிலைமைகள் என்று பலதரப்பட்ட செய்திகளையும் கணபதிக்கு நாள்தோறும் சொன்னார்.
தமிழகத்திலே
வாழாமல் இந்தத் தமிழர்கள் ஏன் கூட்டங் கூட்டமாக மலேசியாவிற்குக் கப்பல் ஏறிச் சென்றார்கள்? காரணம் இல்லாமல் இல்லை. தாய்மண்ணைவிட்டுக் கடல் கடந்து
வேறு நாடுகளுக்குச் செல்ல யாருக்குத்தான் மனம் வரும். கால் வயிற்றுக்
கஞ்சியானாலும், அதைக் குடித்துவிட்டு அண்ணன் தம்பி, மாமன், மச்சான், உற்றார் உறவினர் நண்பர் என்று உள்ளூரிலேயே வாழ்ந்து விட வேண்டும் என்றுதான் எல்லோரும் எண்ணுவர். அப்படியிருக்கையில் ஏன் இவர்கள்
மலேசியாவிற்குச் சென்றனர்? அதற்குக் காரணம்
அன்றைய தமிழகத்தின் தரம் தாழ்ந்த நிலைதான்!
தமிழகத்தின்
அன்றைய நிலை
ஆரியப்
பார்ப்பனர்களின் ஆதிக்க வெறியால், சுரண்டல் நோக்கால், ஜாதிக் கொடுமைகளும், மூடநம்பிக்கைகளும், சடங்கு சம்பிரதாயங்களும் மலிந்து கிடந்தன.
தாழ்த்தப்பட்ட
மக்கள் விலங்கினும் கேவலமாக நடத்தப்பட்டனர். மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும்
வயிற்றுச் சோற்றுக்கே பெரும் அல்லல் உற்றனர். வயிற்றுக்கு வழி
செய்வதே அவர்களின் வாழ்க்கைப் போராட்டமாக அமைந்தது.
காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஓயாது உழைத்தபோதிலும், ஒருவேளை சோற்றுக்குக்கூட வருவாய் கிடைக்காத வறுமை நிலை.
உயர்ஜாதிக்காரர்கள்
உண்ட உணவில் மீதியும், தூற்றியெடுத்த தானியங்களில்
ஒதுக்கப்பட்ட கப்பியும் கழிவும் ஏழைப் பாட்டாளிக்குக் கூலியாகக் கொடுக்கப்பட்டன.
உப்புப்
போட்ட கஞ்சியைக்கூட மேல்ஜாதிக்காரன் கண்ணில்படாமல், மாட்டுக் கொட்டகையிலும், வாய்க்கால் வரப்புகளிலும் மறைத்து மறைத்து உண்ண வேண்டிய நெருக்கடி.
வெளிச்சமற்ற
இருட்டுப் பகுதியான சேரிப் பகுதியில்தான் வாழ்க்கை. பன்றியும் நாயும்
நடமாடும் வீதியில் மனிதனாய்ப் பிறந்த தாழ்த்தப்பட்டவன் நடமாடக்கூடாது என்ற கொடுமை!
உடல்
உறுப்புகளைக்கூட முழுமையாக மூடிக் கொள்ள உரிமையில்லாத நிலை. மறைவிடங்களை மட்டும்
மறைத்துக்கொண்டு, மனம் வெதும்பிய கேவலம். கீழ்ஜாதிப் பெண்கள்
மாராப்புத் துணிகூடப் போடக்கூடாது என்ற கட்டுப்பாடு.
உயர்ஜாதிக்காரர்கள்
நடந்து சென்றால் இவன் ஓரம் ஒதுங்கிக் கொள்ளவேண்டும். அவர்கள் போய்விட்டார்களா என்பதைக் கடைக்கண்ணால் பார்த்துத் தெரிந்துகொண்டு மீண்டும் வீதியில் நடந்து செல்லும் அடிமைநிலை.
உயர்ஜாதிக்காரன்மீது
தன் நிழலும், காற்றும் படக்கூடாது
என்பதற்கு, காலையில் மேற்குப்புறமும்
மாலையில் கிழக்குப்புறமும் ஒதுங்குவான். காற்றடித்தால் மறுதிசையில் ஒதுங்குவான். காற்றிலும், நிழலிலும் தீட்டுக் கலந்து உயர்ஜாதிக்காரன் மேல் பட்டுவிடுமாம். அதைத் தடுக்கவே இத்தனை சாலைவிதிகள்.
உயர்ந்த
ஜாதிக்காரனை எதிரில் சந்தித்தால் வீழ்ந்து வணங்க வேண்டும். கைகட்டி வாய்பொத்தி
நிற்க வேண்டும். காலில் செருப்புப்
போடக்கூடாது. வண்டியில் அமர்ந்து ஓட்டக்கூடாது.
கீழ்ஜாதிக்காரன்
பிள்ளை படிக்கக்கூடாது. ஆண்டைகள் வீட்டில் அடிமை வேலை செய்யவேண்டும். மாடு மேய்த்தல், வயல் வேலைகள்
செய்தல், வீட்டில் பத்துப்
பாத்திரம் தேய்த்தல், துணி துவைத்தல், விரட்டி தட்டுதல் ஆகியவை அவர்களுக்கு வேலைகளாகத் தரப்பட்டன. இடைவிடாது வேலை
செய்து களைத்துப்போன இவர்களுக்கு எச்சில் சோறும், மீதியிருக்கும் முதல்நாள் குழம்பும், தோட்டப்புறத்தில் சுவற்றோரமாய் நாய்க்கு உணவு வைப்பது போல் வைக்கப்படும். அதுதான் அன்றைய உழைப்புக்கு ஊதியம் உணவு எல்லாம்.
விளைவு
நேரத்தில் ஆண்டுக்கூலியாய், கப்பியும் கழிவும், வத்தலும், அழுகலும், சிந்தியதும், மிஞ்சியதும் வழங்கப்படும்.
சித்திரை
மாதத்தில் அதுகூட கிடைக்காது. வறட்சிக் காலம் என்பதால் வேலை வாய்ப்பும் இருக்காது. வாங்கிய கூலியும்
தீர்ந்து போய், வயிற்றுப் பாட்டிற்கே
வழியின்றி வாடுவர்.
வறண்டு
கிடக்கும் வயல்வெளி வரப்புப் பொந்துகளில், எலிகள் சேமித்து வைத்த நெல்லைத் தோண்டியெடுத்து, பசியைப் போக்குவார்கள். அதுவும் தீர்ந்தபின் அந்த எலியையே சுட்டுச் சாப்பிடுவார்கள்.
இக்காட்சியைப்
பொதுவுடைமைத் தியாகி ப. ஜீவா
அவர்கள், பரிதாபத்திற்குரிய பஞ்சமர்கள் என்ற
நூலில் தெளிவாகக் கூறியுள்ளார்கள்.
செத்த
மாட்டைத் தூக்கிச் சென்று சேரிமக்கள் தங்கள் வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்வதையும், அவர்கள்மீது உயர் ஜாதிக்காரர்கள் செலுத்திய ஆதிக்கக் கொடுமைகளையும் வேதனை வெடிக்க, உணர்வு துடிக்க, உள்ளம் நெகிழ நெகிழக் கூறியுள்ளார்கள்.
தமிழினப்
பெருந்தலைவர் கலைஞர் அவர்கள், 1949-இல் எழுதிய, கயிற்றில் தொங்கிய
கணபதி என்ற நூலில் தமிழகத்தின் அன்றையத் தாழ்நிலையை உள்ளம் உருக உருக எழுதியுள்ளார்கள்.
தஞ்சை
மாவட்டத்திலே... தங்க நிற நெல்விளையும் சோழ வள நாட்டினிலே... தம்பிக்கோட்டையில் பிறந்த கணபதி ஒரு சாண் வயிற்றுக்காக இளமையிலே மலேயாவிற்கு ஓடினார். தில்லை நடராசனுக்குத்
தங்க வீடு... திருப்பதி வெங்கடேசனுக்கு வைரக் குல்லாய்... ஏன், ஆற்றங்கரைக்
கருங்கல் கணபதிக்குக்கூட, அதிரசமும் அக்கார வடிசலும்!... ஆனால்... தம்பிக்கோட்டைக் கணபதிக்குத் தாங்காத பசி. மலேசியாவில்
வயிற்றுப் பிழைப்பு. தமிழகம் தானியக்
களஞ்சியமாயிற்றே! தங்கந் தோண்டுமிடமாயிற்றே! முத்துக் குலுங்கும் கடல்களுண்டே! கணபதி ஏன் மலேயாவிற்கு ஓட வேண்டும்?
ஒரு கணபதியா? எத்தனை கணபதிகளை... ஏ! தாழ்ந்த
தமிழகமே! நீ...
மலேயாவுக்கும் இலங்கைக்கும் மொரீஷியஸிற்கும், பர்மாவுக்கும், பிஜித் தீவிற்கும், ஜாவா, சுமத்திராவிற்கும், இந்தோசீனா, கென்யா, கானா,
நைஜிரியா, ஆப்பிரிக்கா, இன்னும்
பல நாடுகளுக்கு அடிமைக்கூலிகளாகவும், பராரியாகவும் ஏன் தமிழர்களை விரட்டி அனுப்பியிருக்கிறாய்... செப்புக் சிலைகளுக்குத் தேர்த் திருவிழாவும்!... செல்வச் சீமான்களுக்குச் சீரும் சிறப்பும்! கணபதிகள் காலந்தள்ள
இலங்கையும் மலேயாவும் ஓட வேண்டுமா? இது அடுக்குமா
தமிழகமே!
அன்பு
மகன் செத்தான் என்று அழுகின்றாயே... ஆத்திரப்படுகின்றாயே... அலறித் துடிக்கின்றாயே! அவனை நீதானே விரட்டி அடித்தாய்... அவனுக்குச் சோறில்லையென்று சொன்னது நீதானே! அவன் பொன்னையும், முத்தையும் தீண்டக் கூடாது எனத் தடைப்போட்டது நீதானே!
இப்பொழுது
அழு! நன்றாக
அழு! கண்
இமைகள் கனத்துப் போகும் வரையில் அழு! விழிகளில்
இரத்தம் வழிய ஆரம்பிக்கும் வரையில் அழு என்று எழுதினார்.
அன்றைய
தமிழகத்தில் தமிழனின் நிலை இதுதான்! சொந்த மண்ணில்
இந்த நிலையென்பதால், கடல் கடந்து சென்றாலாவது கவலை தீராதா! மானத்துடன் மரியாதையுடன்
வாழ வழி கிடைக்காதா! மனிதர்களாக மதிக்கப்பட மாட்டோமா! என்ற ஏக்கத்தில்தான்
ஏறினர் கணபதி போன்ற தமிழர்கள் கப்பலில்.
ஆனால், ஆவலோடு வாழச் சென்றார்களே அயல்நாடுகளுக்கு, அங்கு நிலை என்ன?
சேலையில்லையென்று
சின்னாயி வீட்டுக்குப் போனாளாம். அங்கு அவள்
ஓலைப்பாயைச் சுற்றிக்கொண்டு எதிரில் வந்தாளாம்... என்ற பழமொழிக்கு ஏற்ப, மலேசியா நாட்டில்
இவர்களின் நிலை மனதை நொறுக்குவதாய் இருந்தது.
கவலை
தீர கடல் கடந்து போக விரும்பிய தமிழர்கள் எப்படிப் போவது, செலவிற்கு என்ன
செய்வது என்று திகைத்த நேரத்தில், அதைச் சரியாகப்
பயன்படுத்திச் சுரண்ட நினைத்தனர் ஆங்கிலேயர்கள்.
இந்தியாவைப்
போன்ற காலனி நாடுகள் பல ஆங்கிலேயர்களுக்கு இருந்தன. மலேசியாவும் அவர்கள்
ஆதிக்கத்தில் ஆட்சியில் இருந்தது.
அங்கு
காடுகளை அழிக்கவும், வீடுகள் கட்டவும், வீதிகள் அமைக்கவும், மலைகள் உடைக்கவும், வாய்க்கால்கள் தோண்டவும் குறைந்த கூலிக்கு நாள் முழுவதும் உழைக்க, தோட்டங்களில் கொத்தடிமைகளாய்
பாடுபட ஆயிரக்கணக்கில் கூலித் தொழிலாளர்கள் தேவைப்பட்டார்கள்.
எனவே, கடல் கடந்து போய் கைநிறையச் சம்பாதிக்கலாம் என்று துடித்த பாமரத் தமிழர்களை ஆயிரக்கணக்கில் கப்பல் ஏற்றி, மலேசியா, சிலோன், ஆப்பிரிக்கா, பஹாமஸ்? ஜமைக்கா, செனகல், நைஜீரியா, கானா,
கென்யா, இந்தோனேசியா, ஜாவா, சுமத்திரா, பிஜி தீவுகள், அந்தமான் நிக்கோபார், பர்மா, மொரிஷியஸ் போன்ற
தங்கள் காலனி நாடுகளுக்குக் கொண்டு சென்றனர்.
இந்த
நாடுகளை அந்த காலத்தில் தமிழர்கள் கைப்பற்றி ஆண்ட காலம் போய், அங்கு அடிமை
வேலை செய்ய ஆங்கிலேயர்களால் ஆயிரக்கணக்கில் கொண்டு செல்லப்பட்ட அவலம் தொடர்ந்து நடைபெற்றது.
இதற்கு
என்ன காரணம்? தமிழன் தன்
பெருமை, தன் மரபு, தன் அறிவு இழந்து ஆரியர்க்கு அடிமையாகி, இழிந்து ஜாதி, மதம், மூடநம்பிக்கை என்று
கூறுபட்டு, வேறுபட்டு, மடமையில்
மூழ்கிய முட்டாள்தனமல்லவா?
இந்தப்
பழங்கதைகளை ஏன் இன்றைக்குச் சொல்ல வேண்டி உள்ளது? இதற்கு என்ன
கட்டாயம்?
அறிவியல்
வளர்ந்து, கல்வி பெருகி, விழிப்பு வந்து, விடுதலை வந்து, தலைவர்கள் வந்து அறிவும், மானமும், சூடும்
சொரணையும் ஊட்டி நிற்கும் இக்காலத்திலும், இன்னும் மதம், ஜாதி,
கடவுள், சாஸ்திரம், சடங்கு
என்று பெருமை பேசி, ஆரியர்க்கு அடிமையாக
அந்நியமாகி நிற்கிறானே தமிழன், அவனுக்கு எச்சரிக்கையூட்டி, ஏமாறாமல் தடுக்கவே இத்தனையும் சொல்ல வேண்டியுள்ளது!
ஆம், எப்படி வாழ்ந்தவன் தமிழன்! எவ்வளவு பெரிய
நிலப்பரப்பிற்குச் சொந்தக்காரன் தமிழன்! உலகிற்கு அறிவூட்டியவன்; வழிகாட்டியவன்; வளமான வருவாய் ஈட்டியவன்; வந்தேறிகளுக்கு வாழ்வு கொடுத்தவன். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் என்று பல நாடுகளுக்கும் உரிமையாளன் தமிழன். ஆனால், பிழைக்க
வந்த பிச்சைக்கார கூட்டத்திடம், அறிவிழந்து, மானம் இழந்து, அடிமையாக, பண்பாட்டைத்
தொலைத்து, வீரத்தை இழந்து, அர்த்தமுள்ள நம் விழாக்களை இழந்து, மண்ணையும் இழந்து, மானத்தையும் இழந்து, ஆரியர்க்கு அடிமையான
சூடு ஆறுவதற்குள் ஆங்கிலேயர்க்கு அடிமையாகி கூட்டங் கூட்டமாய்க் கொத்தடிமைகளாய்க் கப்பலேறிச் சென்றான். கப்பலேறியது தமிழர்கள்
மட்டுமல்ல; தமிழர்களின் மானமும்தான்! மறக்கலாமா? மறக்கத்தான் முடியுமா?
ஆங்கிலேயர்களால்
ஆயிரக்கணக்கில் அயல்நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் தெரியுமா?
சிங்கமும், புலியும், சிறுத்தையும், பாம்பும்
கொடிய விஷப் பூச்சிகளும், யானையும், காட்டெருமையும் நிறைந்த காடுகளுக்குள்
நுழைந்து, அவற்றுடன் போராடி, அக்காடுகளைத் திருத்தி கழனியாக்கி, மேடுகளை வெட்டி, பள்ளங்கள் நிரப்பிப்
பதப்படுத்தி, கல்லும் முள்ளும் நிறைந்த கரடுமுரடான பாதையில் நடந்து காலெல்லாம் காயமாகி, இரத்தம் சொட்டச்
சொட்ட, சாலை அமைத்துத்
தரும் கடுமையான வேலைகளைச் செய்து தரும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர்.
கொடிய
விலங்குகளால் குதறப்பட்டும், குட்டையில் கிடக்கும் நச்சுநீரைக் குடித்து வாந்தி பேதி கண்டும், கொசுக்கள், கொடிய
பூச்சிகள் கடித்துக் கடுமையான நோய்கள் தாக்கியும் கூட்டங் கூட்டமாய்த் தமிழர்கள் மடிந்தனர்; மாண்டனர்.
ஆம். மலேய தோட்டங்களில் உள்ள மண்ணில் தமிழன்தான் எருவாகப் போடப்பட்டான். வருவாய் ஈட்ட வாரியைக் கடந்து வந்தவர்கள் எருவாய்ப் போனார்கள்.
உழைக்கத் தகுதியற்ற
தமிழர்கள், சந்தைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டு, விற்கப்பட்டனர். அங்கும் விலை போகத் தகுதியற்ற தமிழர்கள் கொன்று புதைக்கப்பட்டார்கள். அவர்களை வைத்து யார் சோறு போடுவது; அவர்கள் சுமைதானே
என்று கணக்குப் போட்டவர்களுக்கு, அவர்கள் நட்டக் கணக்காக அமைந்ததால் வெட்டிப் புதைத்தார்கள்.
சுமார் 250
ஆண்டுகளுக்குமுன் முதல் தலைமுறைத் தமிழர்கள், இரண்டாம் தலைமுறைத்
தமிழர்கள் மலேசியா நாட்டில் இப்படித்தான் வாட்டப்பட்டனர், வதைக்கப்பட்டனர்; நசுக்கப்பட்டனர்; புதைக்கப்பட்டனர்.
அவர்களின்
மூன்றாந் தலைமுறையினர்தான் ஓரளவுக்கு உரிமையும் பெற்றனர்; வருவாயும் பெற்றனர். ஒப்பந்தக் கூலிகளாய் பணியாற்றும் நிலைக்கு உயர்ந்தனர். நல்ல குடிநீரும், கொசுவிலிருந்து பாதுகாப்பும் தங்களுக்கு வேண்டும் என்று தங்கள் கண்காணிப்பாளர்கள் மூலம் கேட்கும் துணிவுபெற்றனர். கழிவறைகள், கிணறுகள், மின்விளக்குகள்
போன்ற தங்கள் தேவைகளை, அஞ்சி அஞ்சித்
தயங்கித் தயங்கிக் கேட்டுப் பெற்றனர்.
குறை
தீர்க்கும் கோரிக்கைகளை வைப்பதற்கும், தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதற்கும், தமிழர்கள் ஒன்று சேர்ந்து போராட முடிவு செய்தனர்.
மலையகத்
தமிழர்களின் மாபெரும் தலைவர் கணபதி
1914-ஆம்
ஆண்டிற்குப் பின் தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்குக் குழுக்கள் அமைத்துத் தங்கள் உரிமைகளுக்காகப் போராடினர். தொழிற்சங்கங்கள் மூலம் ஊதிய
உயர்வு கேட்கத் தொடங்கினர். உரிமைகளை, தேவைகளைப் பெற
வேலை நிறுத்தம் செய்யும் வழிமுறையையும் பின்பற்றினர்.
இப்படிப்பட்ட
தொழிலாளர் போராட்டங்களுக்கு வழிகாட்டியும் தலைமை தாங்கியும் செயற்பட்டார் கணபதி.
1925 முதல்
இந்திய அரசின் தலையீட்டால் மலேசியாவின் பல்வேறு பகுதிகளிலும் தேசிய தொழிற்சங்கங்கள் அமைக்கப் பட்டன.
1930, 1932, மற்றும்
1935ஆம் ஆண்டுகளில் தேசிய தொழிற்சங்கங்கள் மூலம், தொழிலாளர்கள் கூலி
உயர்வு கேட்டுப் போராட்டங்களிலும், வேலை நிறுத்தங்களிலும் ஈடுபட்டனர்.
இரண்டாம்
உலகப்போருக்கு முன்னமே, தொழிலாளி முதலாளி
என்ற பிரச்சினைகளும், கூலிப் போராட்டங்களும் தீவிரம் அடைந்தன.
இரண்டாம்
உலகப் போரினால் கிழக்காசிய நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. ஜப்பான் இராணுவம் கடல்வழியாகவும், தரை வழியாகவும், விமானத் தாக்குதல் மூலமாகவும் படையெடுத்து வந்து ஆங்கில ஆதிக்கத்தை வீழ்த்தியது. 1942-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் மலேசியாவைச் ஜப்பான் இராணுவம் ஆங்கிலேயர்களிடமிருந்து கைப்பற்றியது.
இதன்
மூலம் ஆங்கில ஆட்சி அங்கு முடிவிற்கு வந்து ஜப்பானின் ஆட்சி நடைபெற்றது.
ஜப்பானியர்களுக்கும்
ஆங்கிலேயர்களுக்கும் இடையே ஏற்பட்ட இப்போரில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.
எங்கு
பார்த்தாலும் பிணக்குவியல். பிணங்கள் அழுகி தொற்று நோய்கள் கடுமையாகப் பரவின. போதிய மருத்துவ
வசதியின்றி மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். குடிநீர் வசதியும், மின்வசதியும் இல்லாமல்
பெரும் இன்னல் அடைந்தனர்.
ஜப்பான்
இராணுவம், மலேசிய மக்கள்
வாழும் பகுதிகளில் திடீரென நுழைந்து, துப்பாக்கியைக் காட்டி, அச்சுறுத்தி, மக்களை வாகனங்களில் ஏற்றிச் சென்று, போரினால் பாதிக்கப்பட்ட
பகுதிகளைச் செப்பனிடப் பயன்படுத்திக் கொண்டனர். அங்கு அவர்கள்
கடுமையாக வேலை வாங்கப்பட்டனர். வேலைக்கு அஞ்சி தப்பியோடிய மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏராளமான தமிழ் மக்களும் இதில் பாதிக்கப்பட்டனர்.
மக்களுக்குப்
போதிய உணவுகூட கிடைக்கவில்லை. மரவள்ளிக் கிழங்குகளை உண்டுதான் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர்.
இதுபோன்ற
நேரங்களில் தலைவர் கணபதி இரவென்றும் பகலென்றும் பாராது தமிழ் மக்களுக்காகப் பாடுபட்டு அவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். அவர்களுக்குத் தேவையானவற்றை கிடைக்கும்படிச் செய்தும், அவர்களின் உயிருக்கும்
உடைமைகளுக்கும் பாதுகாப்பளித்தும் உதவினார்.
இந்திய
தேசிய இராணுவத்தில் சேர்தல்
1943ஆம்
ஆண்டு, நேதாஜி சுபாஷ்
சந்திரபோஸ் அவர்கள் சிங்கப்பூர் வந்தார். இந்திய விடுதலைக்காக, ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராட இந்திய தேசிய படையொன்றை அமைத்தார். இதே நோக்கத்துடன்
ராஷ்பிகாரி போஸ் என்பவர் இந்திய சுதந்திரக் கழகம் என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தி அதில், சிங்கப்பூர் மலேசியாவைச்
சேர்ந்த ஏராளமான இந்தியர்களைப் படைவீரர்களாகச் சேர்த்து வைத்திருந்தார். நேதாஜியின் வருகைக்குப் பின் ராஷ்பிகாரி தன் படைகளையும் நேதாஜியின் படையோடு
சேர்த்தார். தனக்கு வயதாகிவிட்டதால் முழுப் பொறுப்பையும் நேதாஜியிடம் அளித்தார்.
9.7.1943ஆம்
ஆண்டு சிங்கப்பூர் முனிசிபல் கிரவுண்டில் மாலை 4.30 மணியளவில் திரு ராஷ்பிகாரி போஸ் தலைமையில், நேதாஜி சுபாஷ்
சந்திரபோஸ், முழு இராணுவ உடையில் தோன்றி வளர்ச்சிப் பேருரை ஆற்றினார். ஆயிரக்கணக்கான மக்கள்
உணர்ச்சிப் பெருக்கில் ஆரவாரம் செய்து அவரது பேச்சைக் கேட்டனர். சுமார் 60,000 பேர்
அக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தலைவர் கணபதி
அவர்களும் கலந்து கொண்டார்.
இந்திய
விடுதலைக்காக இரத்தம் சிந்துவோம்! என்று நேதாஜி உணர்ச்சி பொங்கக் கூறினார். கூடியிருந்த அத்தனை
ஆயிரம் மக்களும் இரத்தம் சிந்தத் தயார் என்று உணர்வு பொங்க ஆரவாரத்துடன் கூறினர்.
அப்போது
மேகமும் உணர்வு பொங்கியதுபோல் கொட்டோ கொட்டு என்று மழையைக் கொட்டியது. என்னே வியப்பு! அப்படிப் பட்ட மழையிலும் ஒருவர்கூட அசையாமல், அப்படியே நின்று
நேதாஜியின் உரையைக் கேட்டனர்.
நேதாஜியின்
இந்திய தேசிய இராணுவத்தில் (Indian National Army) இலட்சக்கணக்கானோர் வீரர்களாய்ச் சேர்ந்தனர். இலட்சக்கணக்கான தொகையை நிதி உதவியாகவும் அளித்தனர்.
இப்படையில்
தமிழர்களே பெருமளவில் இருந்தனர். இதனால் நேதாஜி
அவர்கள், தான் மீண்டும்
பிறந்தால் தமிழனாகப் பிறக்க விரும்புகிறேன் என்றார். அந்த அளவிற்கு
நேதாஜி அவர்கள் தமிழர்களை நேசித்தார்.
தலைவர்
கணபதி அவர்கள் நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து துடிப்புடன் பணியாற்றினார். அவருடன் தோழர்கள், வீரசேனன், கே.எஸ். நாதன், வீரபாபு, வீரமர்மன், இராஜகோபால், டாக்டர் இராஜமாணிக்கம், நல்லத்தம்பி, புஷ்பராஜ், இரணியன், ஜெயபாரதி, ரே. இராமசாமி, இந்திரஜித் போன்றவர்களும் சேர்ந்தனர்.
கணபதி
அவர்கள் சிறந்த பகுத்தறிவுவாதியும், புரட்சிச் சிந்தனையாளரும் ஆவார். தன் குடும்பத்தைக்கூட
கவனிக்காமல் முழுக்க முழுக்க தமிழர் நலனுக்காகவே பாடுபட்டார்.
இந்நிலையில்
அமெரிக்க விமானப்படை பைலட் பால்ஸ்டீபெட்ஸ் என்பவரின் உத்தரவின்படி எனோலாகே விமானம் மூலம் ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாஹி ஆகிய
நகரங்களின் மீது 1945ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9ஆம் நாள்
அணுகுண்டுகளை வீசியது. இதில் ஏறத்தாழ
4,47,000 பேர்
கொல்லப்பட்டனர். ஜப்பான் பேரழிவைச் சந்தித்ததன் விளைவாய் சரணடைந்தது.
ஜப்பான்
சரணடைந்த செய்தி கிடைத்தபோது, நேதாஜி அவர்கள் தலைமையலுவலகத்தில் இல்லை. அவர் மலேசியாவிலுள்ள
செராம்பன் என்ற இடத்திற்குச் சென்றிருந்தார். இந்த அதிர்ச்சியூட்டும் செய்தியை நேதாஜிக்கு உடனடியாகத் தெரிவிக்க தொலைபேசி வசதியோ, தந்தி வசதியோ
இல்லாத இடத்தில் நேதாஜி இருந்தார். எனவே,
ஆள் மூலமாகச் செய்தி அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
அவ்வாறு
செய்தி கொண்டு சென்றவர் தலைவர் கணபதி என்பது வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய முதன்மைச் செய்தியாகும். அவருடன் காரில் டாக்டர் இலட்சுமய்யாவும் சென்றார்.
கணபதியும்
இலட்சுமய்யாவும் நேதாஜி இருக்கும் இடத்தை அடைந்தபோது நன்றாக இருட்டிவிட்டது. காரில் இருந்து இறங்கிய இருவரும் ஓட்டமும் நடையுமாக நேதாஜி அறைக்குள் சென்றனர். பதற்றத்துடன் அலங்கோலமாய்
ஓடிவந்த இருவரையும் நேதாஜி ஏறிட்டுப் பார்த்தார். ஏதோ முக்கியமான செய்தி கொண்டு வந்துள்ளார்கள் என்பது மட்டும் நேதாஜிக்குப் புரிந்தது.
தங்கள்
தலைவரைப் பார்த்த கணபதிக்கும் இலட்சுமய்யாவிற்கும் பேச இயலவில்லை. அதிர்ச்சி தரும்
அச்செய்தியை எப்படிச் சொல்வதென்று தயங்கினர். என்றாலும், சொல்லியாக
வேண்டும் என்ற கட்டாயத்தில் ஜப்பான் சரணடைந்த செய்தியைக் கூறினர்.
எந்த
அதிச்சிக்கும் கலங்காத, அதிராத எஃகு
உள்ளம் உடைய அந்த இணையற்ற தலைவர் நேதாஜி, எந்தவித அதிர்ச்சியும்
இன்றி மெல்ல புன்னகைத்தார்.
ஓ! அப்படியா! ஏன் இப்படிக்
கலங்குகிறீர்கள்! ஜப்பானின் சரணாகதி இந்தியாவின் சரணாகதி அல்லவே... என்றார்.
கணபதியும்
அவருடன் வந்தவரும் வியப்பில் மூழ்கினர். எவ்வளவு பெரிய
அதிர்ச்சித் தகவல் அதை எவ்வளவு எளிதாகவும் அறிவுபூர்வமாகவும் எடுத்துக்கொண்டு புன்னகைக்கிறார். எப்படிப்பட்ட வீரர் அவர் என்று நேதாஜி வீரத்திற்குத் தலைவணங்கினர்.
அதன்பின்
நேதாஜி இவர்கள் இருவரிடமும் விடைபெற்றுக் கொண்டு தனது அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காகப் புறப்பட்டார்.
கணபதி
தன் இனத்தின் எதிர்காலத்திற்குரிய காரியங்களை செய்ய வேண்டி தனது தோழர்களைச் சந்திக்கச் சென்றார்.
ஜப்பான்
சரணடைந்ததன் விளைவாய் உலகப்போர் முடிவிற்கு வந்தது. அதன் விளைவாய்
மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் மீண்டும் ஆங்கிலேயர்களின் இராணுவ ஆட்சி ஏற்பட்டது.
தொழிற்சங்கத்
தலைவர் கணபதி
இரண்டாம்
உலகப் போர் முடிவுற்றபின் காலனி நாடுகளில் விடுதலை உணர்வு விரைந்து வளர்ந்தது.
உலகத்
தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்... என்ற முழக்கத்தின் மூலம் தொழிலாளர்கள் ஒன்றிணையத் தொடங்கினார்கள்.
ஜெனிவாவில்
உலகத் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் 1945ஆம் ஆண்டின் இறுதியில் ஒன்று கூடினர். அந்த மாநாட்டின்
விளைவாய் சர்வதேச தொழிலாளர் சங்கம் உருவாக்கப்பட்டது.
அதன்படி,
1945இல் மலேசியாவிலும் தொழிலாளர் சங்கங்கள் அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சிங்கப்பூரில் தொழிற்சங்கவாதிகள் ஒன்று கூடினர்.
மலேசியா, சிங்கப்பூர் இரண்டு நாடுகளுக்கும் பொதுவாக, பொது தொழிலாளர்
சங்கம் அமைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில்
தலைவர் கணபதியும் கலந்துகொண்டு முடிவுகள் மேற்கொண்டார். கணபதி அவர்களின் முயற்சியால், மலேசியா முழுவதும் பொது தொழிலாளர் சங்கம் அமைக்கப்பட்டது.
அதன்மூலம்
தொழிலாளர்களிடையே விழிப்புணர்ச்சியும் எழுச்சியும் ஏற்பட்டது. இச்சட்டம் சட்டப்படி
பதிவும் செய்யப்பட்டது.
லெமனேட்
தொழிற்சாலை சங்கம், டிராம்வே தொழிற்சாலை
சங்கம், தபால் தந்தி
தொழிலாளர் சங்கம், இரப்பர் தொழிற்சாலை
தொழிலாளர் சங்கம், இரும்புத் தொழிற்சாலை
தொழிலாளர் சங்கம், டிரைவர்கள் சங்கம், இரப்பர் தோட்டத் தொழிலாளர் சங்கம் என்று ஒவ்வோர் துறைக்கும் ஒரு தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டது.
மலேசியா
பல மாநிலங்களைக் கொண்ட ஒரு நாடு. எனவே,
மேற்படி தொழிற்சங்கங்கள் மாநில வாரியாக அமைக்கப்பட்டு, பின் மலேசியா முழுமைக்குமான நாடு தழுவிய சங்கங்கள் உருவாக்கப்பட்டன.
அகில
மலேயா தொழிற்சங்க சம்மேளனம் என்ற பெயரில் ஒருங்கிணைந்த தொழிலாளர்கள் சங்கம் ஒன்றும் உருவாக்கப்பட்டது. இது உருவாகாமல் தடுக்க ஆங்கில ஆட்சியாளர்கள் கொடுத்த அனைத்து தடைகளும், தொல்லைகளும் தகர்க்கப்பட்டு
இச்சம்மேளனம் உருவாக்கப்பட்டது.
1946ஆம்
ஆண்டு கோலாலம்பூர், அம்பான் பகுதியில் பெரிய மூன்று மாடிக் கட்டடத்தில், இச்சங்கம் இயங்கியது. இதன் தலைவராக
நமது தியாகி கணபதி அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்.
அகில
மலேயா பொதுத் தொழிற்சங்க சம்மேளனத்திற்கு அனைத்து சமூகத் தலைவர்களும் தலைமை தாங்கி செயல்பட்டனர். இந்தியத் தொழிலாளர்களின் தலைவராக தியாகி கணபதி அவர்கள் செயல்பட்டார்.
சம்மேளனத்
தலைவர் கணபதி அவர்கள் தலைமையில் தொழிற்சங்கக் குழு, ஒவ்வொரு பொதுத்
தொழிலாளர் சங்கங்களுக்கும் சென்று, தொழிலாளர்களைச் சந்தித்து, கலந்து
பேசி, குறைகள் அறிந்து, அவர்களை ஊக்கப்படுத்தி, அவர்களுக்கான நலத் திட்டங்களையும் வகுத்தது.
மலேசிய
தொழிற்சங்க சம்மேளனத்திற்கு முன்னணி பாட்டாளி முரசு என்ற தமிழ்ப் பத்திரிகை தொடங்கப்பட்டது. அதன் ஆசிரியராக தியாகி கணபதி பொறுப்பேற்றார்.
தியாகி
கணபதியின் சீரிய தொண்டுகள்
கொத்தடிமைகளாய்
இன்னலுற்ற தமிழ்த் தொழிலாளர்களின் இன்னலைப் போக்க இடைவிடாது பாடுபட்டார். அவர்களுடைய இன்னல்களைப் போக்கவும், தேவையான வசதிகள்
கிடைக்கவும், உரிய ஊதியம் வழங்கப்படவும், வேலை நேரம் வரையறுக்கப்படவும் தீவிரமாகப் பாடுபட்டார்.
சிறந்த
தொழிற்சங்கவாதியாகச் செயல்பட்டது போலவே, சிறந்த பகுத்தறிவுவாதியாகவும்
செயல்பட்டார் கணபதி. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம், மக்களிடையே மூடநம்பிக்கை ஒழியவும், விழிப்பு ஏற்படவும், ஜாதி உணர்வுகள் நீங்கவும் விரிவுரையாற்றினார்.
Comments
Post a Comment