புரட்சியாளர் பகத்சிங் (கி.பி. 1907-1931) பகுதி - 3

சிறைத்துறை அதிகாரிக்குக் கடிதம்
டெல்லி சட்டமன்றத்தில் வெடிகுண்டு வீசிய வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற, பகத்சிங் மற்றும் படுகேஷ்வர்தத் ஆகிய இருவரும் சிறையில் இருக்கும் போது, சாண்டர்ஸ் கொலை செய்யப்பட்ட வழக்கில், பகத்சிங்கிற்கும் அவரது இயக்கத்தவருக்கும் தொடர்பு உள்ளது என்பதை ஆங்கில அரசு விசாரணையில் தெரிந்து கொண்டது.
லாகூரில் பகத்சிங்கும் அவரது தோழர்களும், வெடிகுண்டு தயாரித்த வீட்டை போலீசார் திடீரென்று சோதனை நடத்தினர். அப்போது, சுகதேவ் அவருடன் இரு தோழர்களும் கைது செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து பல தோழர்கள் கைது செய்யப்படவே, கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 24 ஆயிற்று. அந்த 24 பேர் மீது லாகூர் சதி வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு விசாரணைத் தொடங்கப்பட்ட நேரத்தில், சிறைத் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு பகத்சிங் ஒரு கடிதம் எழுதினார்.
மியான்வலி சிறைச்சாலை
17.06.1929
பெறுநர்:
இன்ஸ்பெக்டர் ஜெனரல் (சிறைகள்)
பஞ்சாப் நிறைகள்,
லாகூர்.
அன்பிற்குரிய அய்யா,
சாண்டர்ஸ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மற்ற இளைஞர்களுடன் சேர்ந்து நானும் விசாரிக்கப்படவிருக்கிற நிலையில், அதைக் கருத்தில் கொள்ளாது, டில்லி சிறையிலிருந்து நான் மியான்வலி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளேன். வழக்கு விசாரணை 26.06.1929 முதல் துவங்க இருக்கிறது. இச்சிறை மாற்றத்திற்குப் பின்னால் இருக்கும் காரணத்தை என்னால் முழுவதும் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஒரு விசாரணைக் கைதிக்கு, தன் வழக்கை நடத்துவதற்குரிய அனைத்து வசதி வாய்ப்புகளையும் தரவேண்டியது நீதியாகும். நான் இப்போது இங்கே என் வழக்கறிஞரை எவ்வாறு அமர்த்த முடியும்? எனது தந்தையுடனும், மற்ற உறவினர்களுடனும் தொடர்பு கொள்ள இயலவில்லை. இந்த இடம் முழுவதும் ஒரு தீவுபோல் உள்ளது. செல்லும் பாதையும் சரியில்லை. லாகூரிலிருந்து இது தொலைவிலும் உள்ளது.
எனவே, என்னை உடனடியாக லாகூர் மத்திய சிறைக்கு மாற்றல் செய்து ஆணைவிட வேண்டுமாய் உங்களைக் கேட்டுக் கொள்கின்றேன். விரைந்து நடவடிக்கை இருக்கும் என்றும் நம்புகிறேன்.
தங்கள்
பகத்சிங்
- (ஆதாரம்: தியாகி பகத்சிங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்)
பகத்சிங்கின் வேண்டுகோள் ஏற்கப்பட்டு, லாகூர் சிறைக்கு மாற்றப்பட்டார். கைதிகள் நல்ல முறையில் நடத்தப்பட வேண்டும் என்று கோரி லாகூர் சிறையில் கைதிகள் உண்ணாவிரதம் இருந்தனர் இந்நிலையில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பகத்சிங்கும், படுகேஷ்வர் தத்தும் ஆங்கில அரசின் உள்துறை உறுப்பினருக்கு 24.06.1929 அன்று கடிதம் எழுதினர்.
நல்ல உணவு, கண்ணியமான வேலைகள், அனைத்து நூல்களும் கிடைக்கச் செய்தல், எழுது பொருட்கள் தேவையான அளவு அளித்தல், செய்தித்தாள் வழங்குதல், அரசியல் கைதிகளை ஒன்றாக வைத்தல், கழிப்பறை வசதி, நல்ல உடைகள் வழங்கல் என்ற கோரிக்கைகள் அக்கடிதத்தில் வேண்டப்பட்டன.
வலுக்கட்டாயமாக உணவு உண்ணக் கட்டாயப்படுத்துவதைத் தவிர்க்கவும் ஆவன செய்யும்படியும் கடிதத்தில் வேண்டினர்.
- (ஆதாரம்: தியாகி பகத்சிங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்)
பஞ்சாப் மாணவர் மாநாட்டிற்கு வாழ்த்து!
1929ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் நாள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் தலைமையில் லாகூரில் நடைபெற்ற இரண்டாவது பஞ்சாப் மாணவர் மாநாட்டிற்கு பகத்சிங் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். இதில் படுகேஷ்வர் தத்தும் கையொப்பம் இட்டிருந்தார்.
காந்தியாரின் சமரசப் போக்குகளை பகத்சிங் வன்மையாகக் கண்டித்ததோடு, காந்தியின் தலைமை சுதந்திரப் போராட்டத்தை வலுவிழக்கச் செய்துவிட்டதாகக் கூறினார். ஆனால், தேவைப்படும் போதெல்லாம் காங்கிரஸ் போராட்டத்திற்குத் துணை நிற்க அவர் தவறியதில்லை. அப்போதையைச் சூழலில் அவர் இந்த அணுகு முறையை மேற்கொண்டது நாட்டின் நலன் கருதியேயாகும்.
இந்த மாநாட்டிற்கு அனுப்பி வாழ்த்துச் செய்தியிலும், இதே அணுகுமுறையைப் பின்பற்றி எழுதியிருந்தார்.
வாழ்த்துச் செய்தி
தோழர்களே,
இன்று, துப்பாக்கிகளையும் வெடிகுண்டுகளையும் கையில் எடுக்குமாறு இளைஞர்களை நாங்கள் கூற முடியாது. அதைவிட முக்கியமான பணியொன்றை மாணவர்கள் எதிர்நோக்கியுள்ளனர். தேச வரலாற்றின் சிக்கலான இக்காலக் கட்டத்தில், மிகப் பெரும் பொறுப்பை இளைஞர்களே சுமந்தாக வேண்டும். இதற்கு முன்பும் மாணவர்கள் உயர்த்தியும்கூட செய்துள்ளனர். அதே உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும் இம்முறையும் அவர்கள் போராட வேண்டும்.
இப்புரட்சிகரச் செய்தியை நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் இளைஞர்கள் கொண்டு செல்ல வேண்டும். கிராமங்களைக்கூட விழிப்படையச் செய்ய வேண்டும். அப்போதுதான் நமக்கு விடுதலை கிடைக்கும். மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமை ஒழிக்கப்பட வேண்டும். தியாகி ஜடிந்திரநாத் தாஸிடம் எழுச்சியை எடுத்துக் கொண்டு மன உறுதியுடன் போராட வேண்டும்.
- (ஆதாரம்: தியாகி பகத்சிங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் - சிவவர்மா வெளியீடு, 1986)
மாஜிஸ்ட்ரேட் மூலம் மாடர்ன் ரிவியூ பத்திரிகைக்குக் கடிதம்
இது வரலாற்றில் வியப்பிற்குரிய செய்தியாகும். தான் எழுதிய கடிதத்தை, லாகூர் சதி வழக்கு விசாரணை நடத்திய மாஜிஸ்ட்ரேட்டிடமே கொடுத்து, மாடர்ன் ரிவியூ பத்திரிகைக்கு அனுப்பச் சொன்னார்.
மாடர்ன் ரிவியூ பத்திரிகையின் ஆசிரியர் திரு. ராமானந்த் சட்டர்ஜி, தனது தலையங்கத்தில் புரட்சி நீடு வாழ்க! என்னும் முழக்கம் அர்த்தமற்றது என்று கேலியாக எழுதியிருந்தார். அதற்குப் பதிலளித்து எழுதப்பட்டதே இக்கடிதம். இக்கடிதம் 1929 டிசம்பர் 25ஆம் தேதி டிரிபியூன் பத்திரிகையில் வெளியிடப்பட்டது
மாடர்ன் ரிவியூ ஆசிரியர் அவர்களுக்கு
..........................................................
தங்களைப் போன்றே பெருந்தகையாளர்களின் கருத்தை மறுப்பதற்கோ, தவறென உறுதி செய்வதற்கோ நாங்கள் முயற்சிப்பது இத்தருணத்தில், இந்நாட்டு மக்களுக்கு இம்முழக்கங்களைப் பரவச் செய்வதற்கேயாகும். அது எங்களது கட்டாயக் கடமையென்றும் உணர்கிறோம்.
இந்த முழக்கத்தை உருவாக்கியவர்கள் நாங்கள் அல்ல. இரஷ்யப் புரட்சி இயக்கங்களில் இம்முழக்கமே ஒலிக்கப்பட்டது. அப்டன் சின்க்லாயன் என்னும் புகழ்பெற்ற சோசலிச எழுத்தாளர் தனது போஸ்டன் மற்றும் ஆயில் ஆகிய சமீபத்திய நாவல்களில் புரட்சிகர கதாபாத்திரங்களின் மூலம் இம்முழக்கத்தைப் பயன்படுத்தியுள்ளார்.
ஜடின் தாஸ் நீடூழி வாழ்க என்று முழங்குகிறோம். இதற்கு அவர் நீண்ட காலம் வாழ்க என்பது பொருள் அல்ல. மாறாக, அம்முழக்கத்தின் மூலம், அவரது உன்னத கொள்கைகளையும், அக்கொள்கைகளுக்காகச் சொல்லொண்ணா துயரங்களை ஏற்றுக் கொள்ளவும், அதற்காகத் தனது உயிரையும் தியாகம் செய்யவும் ஏதுவாக, அம்மாபெரும் தியாகியிடமிருந்து சொல்வதற்கரிய நெஞ்சுரத்துடனும் என்றும் வாழ வேண்டும் என்றே நாங்கள் பொருள் கொள்கின்றோம். இவ்வாறு முழங்குவதன் மூலம் அக்கொள்கைகளைச் செயற்படுத்துவதற்குரிய மன உறுதியைக் காட்ட வேண்டும் என்று விரும்புகிறோம்....
அதேபோல் புரட்சி என்ற வார்த்தையின் உள்ளடக்கம், சமுதாய மாற்றத்திற்கான வேட்கையை வெளிப்படுத்தும் உணர்வேயாகும்!
பொதுமக்கள், நிலைபெற்றுவிட்ட சமுதாய நடப்பிற்குப் பழகிப் போய்விடுகின்றனர். அதனை மாற்ற வேண்டுமென்றாலே அஞ்சி நடுங்குகின்றனர். இந்த மனநிலை புரட்சிகரமான மனநிலையால் மாற்றப்பட வேண்டும். இல்லாவிட்டால், சீரழியும் போக்கு மேலோங்கி, மனித சமுதாயம் முழுமையும் பிற்போக்காளர்களால் தவறான பாதையில் வழிநடத்தப்பட்டுவிடும்.
அத்தகைய நிலைமை, மனிதகுல முன்னேற்றத்தின் தேக்க நிலைக்கும், அழிவிற்கும் வழிவகுத்துவிடும். அத்தகு பிற்போக்குச் சக்திகள் பலம் பெற்று விடாதவாறு, மக்கள் மனதில் புரட்சி உணர்வு எப்பொழுதும் நிலைபெற வேண்டும்.
ஒரு நல்ல சமூக அமைப்பு என்பது, இவ்வுலகு சீரழியாத வகையில், பழைய அமைப்பு என்றென்றும் எப்பொழுதும் புதிய சமூக அமைப்பிற்கு ஓயாது இடம் கொடுத்து மாறிக் கொண்டே இருக்க வேண்டும்.
இந்த அர்த்தத்தில்தான் நாங்கள் புரட்சி நீடூ வாழ்க என்று முழங்குகிறோம்.
தங்கள் உண்மையுள்ள,
பகத்சிங்
பி.கே.தத்
இக்கடிதம் ஓர் உணர்வுக் காவியம் என்றே சொல்லலாம். இதில் பொதிந்துள்ள சொல்லழகும், பொருள் கூர்மையும் அவரது ஆழ்ந்த அறிவுக்கூர்மையையும், சிந்தனைத் தெளிவையும், எழுத்தாற்றலையும் வெளிக்காட்டுகின்றன. மேலும் மாடர்ன் ரிவியூ ஆசிரியரைப் பற்றிக் குறிப்பிடும்போது அவர் காட்டுகின்ற மரியாதை, மாற்றுக் கருத்துடையவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற மாண்பைக் காட்டுகின்றன.
முன்னேறும் சமூகம் புதுமைக்கு இடமளித்து ஓயாது மாறிக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற அவரது கருத்துக்கு இணையான ஒரு சிந்தனையை எவரும் அந்த வயதில் சொன்னதில்லை!
- (ஆதாரம்: தியாகி பகத்சிங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட படையெடுப்புகள்
- சிவவர்மா, 1986 வெளியீடு).
மாவீரன் லெனின் நினைவு நாள் விழா
புரட்சி என்பது இரத்தவெறி கொண்டிருக்க வேண்டுமென்பதல்ல. சில நேரங்களில் இலக்கை அடைய அது ஒரு வழியாக இருக்கலாம். சில இயக்கங்களுக்கு அதுவே முதன்மைப் பங்காற்றியும் இருக்கலாம் என்று புரட்சிக்கு விளக்கமளித்த புரட்சியாளர் பகத்சிங், புரட்சிக்கு வித்திட்ட புரட்சியாளர் லெனின் அவர்களின் நினைவு நாளுக்குத் தந்தி ஒன்று அனுப்பினார்.
1930ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் நாள், லாகூர் சதி வழக்கு விசாரணைக்குக் கைதிகள் அனைவரும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். மாஜிஸ்ட்ரேட் தனது இருக்கையில் அமர்ந்ததும், சோசலிசப் புரட்சி நீடூழி வாழ்க! கம்யூனிச அகிலம் நீடூழி வாழ்க! மக்கள் நீடூழி வாழ்க!, லெனின் பெயருக்கு என்றும் மரணமில்லை, வெல்லட்டும் பாட்டாளி வர்க்கம், தோற்கட்டும் முதலாளித்துவம், மடியட்டும் ஏகாதிபத்தியம் என்று பகத்சிங்கும், அவரது தோழர்களும் வீறுகொண்டு முழங்கினர்.
பின் தந்தியின் வரிகளை நீதிமன்றத்திலே உணர்ச்சி பொங்கப் படித்தார். அத்தந்தியை மூன்றாவது சர்வதேச அகிலத்திற்கு அனுப்பி வைக்குமாறு மாஜிஸ்ட்ரேட்டைக் கேட்டுக் கொண்டார்.
தந்திச் செய்தி
லெனின் நினைவு நாளில், அந்த மாபெரும் வீரருடைய கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக இயன்றதைச் செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும் எங்களது உளப்பூர்வமான வணக்கங்கள். இரஷ்யா இன்று செய்து கொண்டிருக்கும் மகத்தான சோதனை வெற்றியடைய எங்கள் வாழ்த்துகள். சர்வதேச பாட்டாளி வர்க்க இயக்கத்தின் குரலோடு எங்கள் குரலையும் இணைக்கின்றோம். வெல்லட்டும் பாட்டாளி வர்க்கம்; தோற்கட்டும் முதலாளித்துவம்; மடியட்டும் ஏகாதிபத்தியம். - (ஆதாரம்: தியாகி பகத்சிங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் சிவவர்மா, 1986 வெளியீடு)
கம்யூனிசத்தின் மீதும், லெனின்மீதும், ரஷ்யாமீதும் அவர் கொண்டிருந்த மரியாதையை, பற்றை இது நன்கு காட்டியது.
நீதிமன்றத்தில் நீதிபதிகளிடமே கடிதங்களைக் கொடுத்து உரியவர்களிடம் சேர்க்கச் சொல்லி அதன் மூலம் தன் கொள்கைப் பிரச்சாரத்தை மேற்கொண்ட பகத்சிங், அக்காலத்திலே, அவ்வளவு இளம் வயதிலே அரசாங்கத்திற்கு எதிராகவும், நீதிபதிகளுக்கு எதிராகவும் பல்வேறு கிளர்ச்சிகளைச் செய்தார்.
லாகூர் சதிவழக்கு விசாரணை 05.05.1930ஆம் நாள் துவக்கப்பட்டது. கைதிகள் மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டனர். 1.வழக்கில் விடுதலை ஆக வாய்ப்புள்ளவர்கள். 2.பகத்சிங் போன்று தாமே வழக்காட (வழக்கறிஞர் இல்லாமல்) முன் வந்தவர்கள். 3.வழக்கறிஞரும் இல்லாமல், தாமும் வாதாடாமல் நீதிமன்ற புறக்கணிப்பு செய்த படுகேஷ்வர் தத் போன்றவர்கள். மூன்றாவது பிரிவினர், பகத்சிங் எழுதிக் கொடுத்த அறிக்கையை முதல்நாளே நீதிமன்றத்தில் படித்தனர். ஆங்கில அரசாங்கத்திற்குத் தங்களை விசாரிக்கும், அதிகாரம் இல்லையென்று அவர்கள் முழங்கினர். இது அரசு விரோதச் செயலாக பதிவு செய்யப்பட்டது.
சிறப்பு நீதிமன்ற விசாரணைத் தொடங்கிய சில நாட்களில் (12.06.1930) நீதிமன்றத்திற்குள் நுழையும்போது பகத்சிங்கும் அவரது தோழர்களும் புரட்சி முழக்கங்களை முழங்கினர். இதனால் சினமடைந்த நீதிபதி கோல்ட் ஸ்டீம், விசாரணைக் கைதிகள் அனைவருக்கும் கைவிலங்கிடுமாறு உத்தரவிட்டார். பகத்சிங்கும் அவரது தோழர்களும் கைவிலங்கிடுவதைக் கடுமையாக எதிர்த்தனர். அதனால் ஆத்திரம் உற்ற நீதிபதி, அவர்கள்மீது தடியடி நடத்த ஆணையிட்டார். பலத்த காயமடைந்த அவர்கள், அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.
சிறப்பு நீதிமன்ற நீதிபதிகளான, நீதிபதி கோல்ட்ஸ்டீம், நீதிபதி ஆகா ஹைதர் மற்றும் நீதிபதி ஹில்டன் இம்மூவரில் ஆகாஹைதர் மட்டும் இந்தியர். இவர் புரட்சியாளர்களுக்கு கைவிலங்கிடும் உத்தரவில் கையொப்பம் இட மறுத்துவிட்டார். என்றாலும் மற்ற இரு நீதிபதிகள் (பெரும்பான்மை) கையொப்பத்துடன் ஆணை வெளியிடப்பட்டது.
இதன் விளைவாய்ப் புரட்சியாளர்கள் நீதிமன்றத்தைப் புறக்கணித்தனர். தலைமை நீதிபதி என்கின்ற வகையில், நீதிபதி கோல்ட் ஸ்டீம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இப்படிப்பட்ட கொடுஞ்செயல் இனி நடைபெறாது என்று உறுதியளிக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்தனர்.
ஜூன் 21ஆம் நாள் நீதிபதி கோல்ட் ஸ்டீம் நீக்கப்பட்டார். அடுத்து தலைமை நீதிபதியாக வரவேண்டிய ஆகாஹைதரும் நீக்கப்பட்டார். காரணம், இவர் புரட்சியாளர்களுக்கு சார்பாக கைவிலங்கு இடுவதை எதிர்த்தார் என்பதால், இவருக்குப் புரட்சியாளர்கள் மீது அனுதாபம் உள்ளது என்று ஆங்கில அரசு கருதியது. புதிய நீதிபதிகள் இருவர் அமர்த்தப்பட்டனர். இதனால், நீதிபதி ஹில்டன் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இதைப் பகத்சிங் கடுமையாக எதிர்த்தார். சிறப்பு நீதிமன்ற ஆணையருக்கு அது குறித்து 25.06.1930இல் கடிதம் எழுதினார்.
மேலும், பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நீதிமன்றத்தையே பிரச்சார மேடையாக்க வேண்டும் என்று பகத்சிங் முடிவு செய்து அங்கேயே தனது கொள்கைகளை முழங்கினார். லாகூர் சதி வழக்கு விசாரணையை நாடெங்கும் எல்லோரும் கூர்மையாகக் கவனித்தனர். இன்னும் சொல்லப்போனால் இவ்வழக்கு உலக அளவில் உற்று நோக்கப்பட்டது. எனவே, இங்கு கூறப்படும் ஒவ்வொரு சொல்லும், கொள்கையும், முழக்கமும், உலகெங்கும் பரவும், அதன் வழி எழுச்சியும் ஆதிக்க எதிர்ப்பும் வலுக்கும் என்று பகத்சிங் முடிவு செய்து அவ்வாறு செயல்பட்டார்.
பகத்சிங்கிற்கும், அவரது தோழர்களுக்கும் நாடெங்கிலுமிருந்து ஆதரவு நாளுக்கு நாள் பெருகுவதைக் கண்ட ஆங்கில அரசு, வழக்கு விசாரணையை விரைவில் முடித்து, தங்கள் திட்டப்படி தண்டனையை நிறைவேற்றி பழி தீர்க்கவும், பிரச்சினையைத் தீர்க்கவும் முடிவு செய்தனர்.
வழக்கு விசாரணை என்பது ஆங்கில அரசின் நாடகம் தண்டனையை முன்கூட்டியே அவர்கள் தீர்மானித்துவிட்டு ஒப்புக்காக, நீதிமன்ற மரபுக்காக அவர்கள் விசாரணையை நடத்தினர்.
நீதிமன்றத்திற்கு வராத கைதிகள் சார்பாக, அரசே வழக்கறிஞர்களை அமர்த்தி, வழக்கை முடிக்க லாகூர் உயர்நீதிமன்றத்தில் அரசு கோரிக்கை வைத்தது. குற்றவியல் சட்டத்தின் அடிப்படைக்கு அது எதிரானது என்று உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. அடுத்து, வக்கீலின் சாட்சியங்களை குறைத்து, விரைவாய் வழக்கை முடிக்க உயர்நீதிமன்றம் எந்த ஆலோசனையும் அது குறித்து வழங்க மறுத்து விட்டது.
தங்கள் திட்டத்திற்கு உயர்நீதிமன்றம் உடன்பட்டு வராது என்பதை உணர்ந்துகொண்ட கவர்னர் ஜெனரல் இர்வின், குற்றம் சாட்டப்பட்டவர் வலிய நீதிமன்றம் வர மறுத்தால், அவர் இல்லாமலே விசாரணையைத் தொடரலாம் என்று ஒரு மசோதாவை, செப்டம்பர் 9ஆம் நாள் (1930) டெல்லி நாடாளுமன்றத்தில், உள்துறை உறுப்பினர் ஜேம்ஸ் கிரெரரின் மூலம், கொண்டு வந்தார். இந்த வழக்கில் பகத்சிங் போன்றவர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக (ஒரு சிலருக்காக) ஒட்டுமொத்த சட்டத்தையே திருத்த முன்வந்தது ஆங்கில அரசு.
ஆனால், அம்மசோதாவிற்கு சட்டமன்றத்தில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இம்மசோதாவை எதிர்த்து முகம்மது அலி ஜின்னா ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்புடையது. இறுதியில், அம்மசோதா அரசால் கைவிடப்பட்டது.
புரட்சியாளர்களை விரைவில் தீர்த்துக் கட்ட, தான் மேற்கொண்ட எல்லா முயற்சிகளும் தோற்றுப் போனதால், தனது சொந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஓர் அவசரச் சட்டத்தை, இந்த வழக்கிற்காகவே கொண்டு வந்தார். இது குற்றம் சாட்டப்பட்டவர் இல்லாமலே வழக்கை நடத்த வகை செய்தது. இது ஆங்கில அரசின் அடிப்படைச் சட்டக் கொள்கைக்கே எதிரானது. என்றாலும் கொலை வெறிகொண்டு நின்ற இர்வின் எதையும் பொருட்படுத்தவில்லை. எப்படியாவது விரைவாய் தண்டனையை நிறைவேற்றிவிட வேண்டும் என்பதிலே குறியாய் இருந்தார்.
மேலும், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. அதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவோ, அதில் உயர்நீதிமன்றம் தலையிடவோ கூடாது என்று இச்சட்டத்தில் குறிப்பிட்டார். இப்படியொரு அநீதி உலக வரலாற்றிலே இல்லை என்று கூடச் சொல்லலாம். மேல்முறையீட்டு வாய்ப்பே பகத்சிங்கிற்கும் அவரது தோழர்களுக்கும் மறுக்கப்பட்டது. இதைச் சட்டத்தை மீறிய சட்டம் என்று விமர்சித்து, கடுமையாக பகத்சிங் எதிர்த்தார்.
அதிலும் கொடுமை என்னவென்றால், இந்த அவசரச் சட்டம் 01.05.1930 அன்று பிறப்பிக்கப்படுகிறது. உடனே அது சிறையிலுள்ள கைதிகளுக்குப் படித்துக் காட்டப்படுகிறது. அன்றைக்கே லாகூர் தலைமை நீதிபதியின் தலைமையில் சிறப்பு நீதிமன்றமும் அமைக்கப்பட்டுவிடுகிறது. வழக்கமான நடைமுறையென்றால், இத்தனை சடங்குகளையும் நிறைவேற்ற எத்தனை மாதங்கள் ஆகும்? ஆனால், அத்தனையும் ஒரே நாளில் செய்யப்பட்டது.
ஆம், ஒப்பில்லா புரட்சியாளர் பகத்சிங் உள்ளிட்ட உன்னதத் தியாகிகளின், உயிரைக் குடிப்பதில் அத்தனை அவசரம் காட்டியது ஆங்கில அரசு. உண்மை அந்த அளவிற்கு அவரைக் கண்டு அஞ்சியது ஆங்கில அரசு. ஒரு சரியான புரட்சியாளனை அவனது ஆற்றலை அவன் சார்ந்த மக்களைக் காட்டிலும், எதிரிகள் தான் சரியாக எடைபோட்டு, புரிந்து வைத்திருப்பார்கள் என்பது பகத்சிங் வாழ்வில் மிகச் சரியாக அமைந்தது.
தண்டனையை எதிர்நோக்கியுள்ள கைதிகள், பொதுவாக, விடுதலையடைவதற்கான வழி வகைகளை திறமையான வழக்கறிஞர் மூலம் ஆய்வு செய்து, விடுதலை அடையவே முயற்சிப்பர். ஆனால், பகத்சிங் அதை விரும்பவில்லை. தன்னுடைய விடுதலைக்காக வாதங்களை முன்னிலைப்படுத்தப்படும்போது, தன்னுடைய புரட்சியின் எழுச்சி பின்னுக்குத் தள்ளப்பட்டு, எதற்காகத் தியாகம் செய்ய முன்வந்தோமோ அது நிறைவேறாமல் போகும். அதைவிட, நீதிமன்றத்தையே பிரச்சார மேடையாக்கி, நமது புரட்சிச் சிந்தனைகளைச் பரவச் செய்வதே சரியென்ற திடமான முடிவில் செயல்பட்டார். அதனடிப்படையில் அவர் நீதிமன்றத்தில் முன்வைத்த கருத்துகள் அரசியல் மற்றும் விடுதலை முக்கியத்துவம் உடையதாய் அமைந்தன.
ஆனால், பகத்சிங்கின் தந்தை கிஷான்சிங் அவர்கள், தன் மகனை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்பதில் முனைப்புக் காட்டினார். சட்ட ஓட்டைகளைச் சாதகமாகப் பயன்படுத்தி மகனை விடுவித்துவிடலாம் என்று நம்பினார். பிள்ளைப்பாசம். அதுவும், அறிவான, அழகான, ஆற்றலுள்ள, வாலிபமான தியாகச் சீலரை இழக்க யாருக்குத்தான் மனம் வரும்?
எனவே, வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தில் இருந்தபோது, சிறப்பு நீதிமன்ற நீதிபதியிடம் மனு ஒன்றை அளித்தார்.
தன் மகனுக்கும் இக்கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்பதை உறுதி செய்ய தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும், பகத்சிங்கிற்காக வாதாட அனுமதி வழங்க வேண்டும் என்றும் அம்மனுவில் கேட்டிருந்தார்.
தன்னுடைய விருப்பத்திற்கு எதிராக, தன் சம்மதம் இல்லாமல், இப்படியொரு மனுவை தன் தந்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருப்பதை அறிந்த பகத்சிங் கடுங்கோபம் கொண்டார்.
உடனே தன் எதிர்ப்பை ஒரு கடிதம் மூலம் தன் தந்தைக்கு எழுதினார். அது கடிதம் என்பதைவிட பகத்சிங் மாண்பை பாருக்கெல்லாம் காட்டுகின்ற அடையாளம் எனலாம்.
இதோ அந்த உணர்ச்சிக் காவியம்:
1930 அக்டோபர் 4
அன்புள்ள தந்தைக்கு,
எனது எதிர்வாதம் தொடர்பாக சிறப்பு நீதிமன்ற உறுப்பினர்களிடம் நீங்கள் மனு ஒன்றை அளித்திருப்பதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன். உள்ளத்தைக் கொதிப்பேற்றியதோடு, பலத்த அடியையும் இச்செய்தி கொடுத்தது. இது என் மன அமைதியை அறவே நிலைகுலையச் செய்துவிட்டது. இந்நேரத்தில் இப்படியொரு மனுவை அளிப்பது பொருத்தமானது என்று எப்படி முடிவெடுத்தீர்கள் என்று புரியவில்லை. தந்தைக்குரிய பாசவுணர்வு தங்களுக்கு இருந்தாலும், என்னை கலந்து பேசாமல் அப்படிச் செய்ய உங்களுக்கு உரிமையிருப்பதாக நான் நினைக்கவில்லை. அரசியலில் என்னுடைய பார்வையும், தங்கள் பார்வையும் மாறுபட்டவை என்பது தங்களுக்குத் தெரியும். நீங்கள் ஏற்றுக் கொண்டாலும், எதிர்த்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் நான் என் விருப்பப்படிச் செயல்பட்டுள்ளேன்.
எனது தரப்பு வழக்கை சிரத்தையுடன் எதிர்கொண்டு எதிர்வாதம் செய்ய என்னை நீங்கள் தொடக்கத்திலிருந்து வற்புறுத்தி வருவதை உங்களால் நினைவுபடுத்தி பார்க்க முடியும் என்று நம்புகிறேன். ஆனால் அதனை எப்பொழுதும் நான் எதிர்த்தே வந்துள்ளேன் என்பதும் தங்களுக்குத் தெரியும். எனக்காக எதிர்வாதம் செய்வதை நான் ஒருபோதும் விரும்பியதில்லை. அதைப் பற்றி அக்கறையுடன் சிந்தித்ததும் இல்லை. இது வெறும் வறட்டுத் தத்துவமா என்பதைப் பற்றியும் நான் விவாதிக்க விரும்பவில்லை.
இவ்வழக்கு விசாரணையில் நாங்கள் ஒரு உறுதியான கொள்கையில் உள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனது செயல்பாடுகள் ஒவ்வொன்றும் அதற்கு முரண்படாதிருக்க வேண்டும்...
வழக்கு விசாரணை முழுவதிலும் எனக்கு ஒரே ஒரு நோக்கம்தான் உள்ளது. எங்கள் மீதான குற்றச்சாட்டைப் பொருட்படுத்தாமல், வழக்கு விசாரணையை முழுமையாகப் புறக்கணிப்பதே அது. அனைத்து அரசியல்வாதிகளும் அப்படியிருக்க வேண்டும் என்பதே என் கருத்து. அவர்கள் நீதிமன்றத்தில் நடக்கும் வாதச் சண்டையைப் பற்றிக் கவலைப்படாமல், தங்களுக்குக் கிடைக்கும் அதிகபட்சத் தண்டனையை அஞ்சாமல் ஏற்க வேண்டும்.
அவர்கள் தங்கள் சார்பில் எதிர்வாதம் செய்யலாம். ஆனால், கலப்பற்ற நோக்கினடிப்படையில் அது எழ வேண்டும். தனிநபரின் நோக்கிலிருந்து அது ஒருபோதும் எழக்கூடாது. இவ்வழக்கு விசாரணையில் எங்கள் நிலை இதன்படியே உள்ளது. அதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோமா இல்லையா என்று முடிவறிவது எனக்குத் தேவையற்றது. நாங்கள் எப்பொழுதும் இம்மியளவும் தன்னலமின்றி எங்கள் கடமையை மட்டுமே செய்கிறோமே.... நீங்கள் என்னோடு கருத்து வேறுபாடு கொள்ளலாம். ஆனால், என்னைக் கலக்காமல், என் சம்மதம் பெறாமல் இச்செயலை நீங்கள் செய்திருக்கக் கூடாது. என் உயிரை நீங்கள் மதிக்கிற அளவிற்கு நான் மதிக்கவில்லை. கொள்கையை விற்று உயிரை வாங்க நான் விரும்பவில்லை.... என்னைப் போலவே பாதிக்கப்பட்ட அனைவரும் நாங்கள் தேர்ந்தெடுத்த கொள்கையில் உறுதியாக உள்ளோம். கடைசி வரை அதில் உறுதியாக நிற்போம். அதற்கு எந்த விலை கொடுக்க நேர்ந்தாலும் சரி... உங்களுடைய இந்தச் செயலை விமர்சிக்கும்போது, எனது வார்த்தைகள் கொஞ்சம் கடுமைமிக்கதாக ஆகலாம். நான் நேர்மையானவனாக இருக்க என்னை அனுமதியுங்கள். என் முதுகில் குத்தப்பட்டதாகவே நான் உணர்கிறேன். வேறு எவரேனும் இவ்வாறு செய்திருப்பின், அதனை நம்பிக்கைத் துரோகம் என்று கருதியிருப்பேன். ஆனால், உங்களைப் பொறுத்தவரை இதனை ஒரு பலவீனம் என்றே - மிக மோசமானதொரு பலவீனம் என்றே நான் கருதுகிறேன்.
ஒவ்வொருவரின் மனவுறுதியும் சோதிக்கப்படும் தருணம் இதுவாகவே இருக்கும். நீங்கள் அதில் தோற்றுவிட்டீர்கள் என்பதைக் கூற என்னை அனுமதியுங்கள் தந்தையே! நீங்கள் ஓர் உண்மையுள்ள தேசபக்தர் என்பதை நான் அறிவேன். இந்திய சுதந்திரத்திற்காக உங்களது வாழ்க்கையை அர்ப்பணித்து விட்டீர்கள் என்பதையும் நான் அறிவேன். ஆனால், இந்த நேரத்தில் ஏன் இப்படியொரு பலவீனத்தைக் காட்டினீர்கள்? என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை. முடிவில், உங்கள் இந்தச் செயல்பாட்டினை நான் ஒப்புக் கொள்ளவில்லை என்பதை உங்களுக்கும், எனது மற்ற நண்பர்களுக்கும், தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். இப்போதும்கூட நான் எதிர்வாதம் எதனையும் முன்வைக்க விரும்பவில்லை...
இந்த வழக்கு சம்பந்தமாக லாகூர் பார்ஸ்டல் சிறையில் உள்ள என் நண்பர்கள், நான் அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டதாய் எண்ணுவார்கள். என்னுடைய நிலையை அவர்களுக்குத் தெரிவிக்க எனக்கு வாய்ப்புக் கிடைக்காமல் போகலாம்.
இது பற்றிய அனைத்து விவரங்களும் மக்களுக்குத் தெரிய வேண்டும். எனவே, இக்கடிதத்தைப் பொதுமக்கள் அறியுமாறு வெளியிட உங்களை வேண்டுகிறேன்.
உங்கள் அன்புள்ள
பகத்சிங்


நூல் - மறைக்கப்பட்ட மாமனிதர்கள்  
ஆசிரியர் - மஞ்சை வசந்தன்

Comments