புரட்சியாளர் பகத்சிங் (கி.பி. 1907-1931) பகுதி - 2

இந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிக்கன் அசோஸியேஷன்
அறிவிப்பு
கேளாத செவிகளைக் கேட்கச் செய்வதற்காக இது உரத்த குரலைத் தேர்ந்தெடுக்கின்றது! என்ற பிரெஞ்சு அனார்க்கிஸ்ட் தியாகி வாலியன் முழங்கிய அழியா நிலைபெற்ற இவ்வார்த்தைகளால் எங்களது இச்செயலை உறுதியுடன் நியாயப்படுத்துகின்றோம் .... சைமன் கமிஷனிடமிருந்து சீர்திருத்தங்கள் என்ற பெயரில் மேலும் சில ரொட்டித் துண்டுகளை எதிர்பார்த்து, கிடைக்கப் போவதாக நினைக்கும் எலும்புத் துண்டுகளுக்காக மக்கள் ஒருவருக்கொருவர் எப்பொழுதும் அடித்துக் கொண்டிருக்கையில், பொதுப் பாதுகாப்பு மசோதா மற்றும் தொழில் தகராறு மசோதா போன்ற புதிய அடக்குமுறைகளை இந்த (ஆங்கில) அரசாங்கம் நம்மீது திணிக்க முயற்சிக்கின்றது. பத்திரிகை இராஜ துரோக மசோதாவை அடுத்த அமர்வில் அறிமுகப்படுத்துவதற்காக எடுத்து வைத்திருக்கின்றது. வெளிப்படையாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தொழிலாளர் தலைவர்கள் வரைமுறையின்றி கைது செய்யப்படுவது, காற்று எத்திசை நோக்கி வீசிக் கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றது.
இத்தகைய அளவற்ற கொதிப்பை உண்டாக்கக் கூடிய சூழ்நிலையில், இந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிக்கன் அசோசியேஷன் அக்கறையோடு, தனது முழுக் கடமையையும் உணர்ந்து முடிவு செய்தது. இச்சிறுமை மிக்க, வெளிநாட்டு அதிகார வர்க்கச் சுரண்டல்காரர்கள், தாங்கள் விரும்புவதைச் செய்தாலும், மக்கள்முன், அவர்களது உண்மையான தோற்றமுடன் அவர்களை வரச் செய்வதற்காக, இச்செயலைச் செய்து முடிக்குமாறு தனது புரட்சியாளர்களுக்குக் கட்டளையிட்டது.
இந்தச் சட்டமன்றப் பிரதிநிதிகள் தங்கள் தொகுதிகளுக்குத் திரும்பட்டும்; எதிர்வர இருக்கும் புரட்சிக்காக மக்களைத் தயார் செய்யட்டும். பொதுப் பாதுகாப்பு மசோதா மற்றும் தொழிற் தகராறு மசோதாவிற்கும், லாலா லஜபதிராய் படுகொலைக்கும் இந்த ஆதரவில்லா இந்திய மக்களின் சார்பாக எங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் அதே வேளையில், தனி நபர்களைக் கொல்வது எளிது. ஆனால், உங்கள் கருத்துக்களைக் கொல்ல முடியாது எனும், வரலாற்றில் மீண்டும் மீண்டும் உறுதி செய்யப்பட்ட படிப்பினையையே, நாங்களும் வலியுறுத்திக் கூற விரும்புகிறோம் என்பதை, இந்த அரசாங்கம் அறிந்து கொள்ளட்டும். மாபெரும் சாம்ராஜ்ஜியங்கள் பல தூள் தூளாக்கப்பட்டுள்ளன. ஆனால், கருத்துக்கள் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன. புரட்சியானது, வெற்றிநடை போட்டு முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில், போர்பன்களும், ஜார்களும் வீழ்ந்து மடிகின்றனர்.
மனித உயிர்களுக்கு மாபெரும் புனிதத்தை உரித்தாக்க விரும்பும் நாங்கள் - மக்கள் அனைவருக்கும் முழுமையான விடுதலை கிடைக்கும் போற்றுதலுக்குரிய எதிர்காலம் குறித்து கனவு காணும் நாங்கள் - இரத்தம் சிந்தும்படி நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம் என்பதை வருத்தத்துடன் ஒப்புக் கொள்கின்றோம். ஆனால், மனிதனை மனிதன் சுரண்டும் செயல் இல்லாமல் செய்ய மக்கள் அனைவருக்குமான விடுதலையைக் கொண்டு வரக்கூடிய மாபெரும் புரட்சியின் பலிபீடத்தில், தனி நபர்களின் உயிர்த் தியாகங்களைத் தவிர்க்க முடியாது.
புரட்சி நீடூழி வாழ்க!
குறிப்பு: வெடிகுண்டு வீசப்பட்ட அன்று (8.4.1929) மாலை தி ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையின் சிறப்பு மாலைப் பதிப்பில் இந்தத் துண்டறிக்கை முழுமையாக வெளியிடப்பட்டிருந்தது. - (ஆதாரம்: தியாகி பகத்சிங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்
- சிவவர்மா, 1986 வெளியீடு)
பகத்சிங், மற்றும் படுகேஷ்வர்தத் இருவரும் விரும்பியிருந்தால் யாரை வேண்டுமானாலும் சுட்டிருக்கலாம். ஆனால் யாரையும் சுடவில்லை.
இருவரும் தங்களிடமிருந்த கைத்துப்பாக்கிகளை காவலர்களிடம் ஒப்படைத்தனர். புரட்சி வாழ்க! ஏகாதிபத்யம் ஒழிக! என்று முழக்கம் எழுப்பினர். இந்தியாவில் இந்த முழக்கங்களை முதன் முதலில் எழுப்பிய பெருமை இவ்விருவரையும் சேரும். தங்களிடம் எஞ்சியிருந்த துண்டறிக்கைகளை அவையிலிருந்த உறுப்பினர்களுக்கு வழங்கினர்.
துண்டறிக்கைகளை அவர்கள் வழங்கி முடித்ததும், காவலர்களால் கைது செய்யப்பட்டனர்.
புரட்சி வாழ்க! ஏகாதிபத்யம் ஒழிக! என்று முழங்கியவாறு இருவரும் காவலர்களுடன் சென்றனர். இப்படிப்பட்ட செயல்களால் புரட்சியும், எழுச்சியும் விரைவில் பரவும் என்பதே இவர்கள் நோக்கம்.
வன்முறையும் கொலையும் தங்கள் நோக்கம் அல்ல; தங்கள் இலக்கு விடுதலையும் ஏகாதிபத்திய ஒழிப்புமே என்பதை இதன் மூலம் இவர்களைப் பற்றிய நன்மதிப்பு நாட்டு மக்கள் மத்தியில் உயர்ந்தது.
இருவரும் தில்லி வழக்குமன்றத்தில் நிறுத்தப்பட்டனர். அங்கும் அவர்கள் தங்கள் இலக்கை முழக்கமிட்டனர். எனவே, இருவரையும் கைவிலங்கிட்டே நீதிமன்றத்திற்கு அழைத்து வர வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தில் நீண்ட வாக்குமூலம் எழுத்துப்பூர்வமாக அளித்தனர். அவர்கள் இருவரின் சார்பாக அந்த வாக்குமூலம் அவர்களது வழக்கறிஞரால் நீதிமன்றத்தில் 6.6.1929இல் படிக்கப்பட்டது.
அதில், தங்கள் செயல்களை மறுக்காமல் ஒத்துக் கொண்டனர். இத்தாக்குதல் எந்தத் தனி நபருக்கும் எதிராகச் செய்யப்பட்டது அல்ல. நாடு முழுக்க கொள்கையைப் பரப்பியாக வேண்டும். அதன் மூலம் விடுதலை மற்றும் ஆதிக்க ஒழிப்பு உணர்வை மக்கள் பெற வேண்டும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி எங்கள் கருத்துக்களை வெளிப்படுத்திவிட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இச்சம்பவத்தில் வெளியிடப்படும் எங்கள் கருத்துக்கள் வெகுவிரைவில் பரப்பப்படும் என்பதே எங்கள் நம்பிக்கை.
நாங்கள் கொடுஞ்செயலால் நாட்டிற்கு அவப் பெயரைப் பெற்றுத் தருபவர்களும் அல்ல, நாங்கள் வெறிபிடித்த வெறியர்களும் அல்ல. தாய்நாட்டின் நிலையையும், அதன் மக்களின் விருப்பங்களையும் அறிந்த வரலாற்று மாணவர்கள் நாங்கள். போலித்தனங்களை நாங்கள் இழிவாகக் கருதுகிறோம். போலியான நாடாளுமன்றம் இந்திய அடிமைத்தனத்தின் அடையாளம். இந்தியாவின் வக்கற்ற நிலையையும், ஆங்கில மேலாதிக்கத்தையும் காட்டும் அடையாளமாக மட்டும் இது இருக்கிறது. மக்களின் கோரிக்கைகளைக் குப்பையில் ஒதுக்கும் செயலே இங்குத் தொடர்ந்து நடக்கிறது.
சுருங்கக் கூறின், இந்தியாவின் கோடானு கோடி உழைக்கும் மக்களின் (வியர்வையால் கிடைத்த) பணத்தைச் செலவு செய்து, பகட்டாக உருவாக்கப்பட்ட இந்த நாடாளுமன்றம் போலியானது.
இந்தியாவின் பொருளாதாரக் கூட்டமைப்பை உருவாக்க, தங்களது இரத்தத்தையும் வியர்வையையும் சிந்தும் தொழிலாளிகளுக்கு விரோதமான சட்ட மசோதா கொண்டு வரப்படுவதை இதயமுள்ளவன் எப்படி ஏற்க முடியும்?
இங்கிலாந்தை அவர்களின் கனவுகளிலிருந்து தட்டியெழுப்புவதற்கு வெடிகுண்டு அவசியமானது என்று சித்தரஞ்சன்தாஸ் தன் மகனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்ட அந்த வார்த்தைகளை மனதிற்கொண்டே, எம்மக்களின் ஏக்கக் குமுறலை வெளிப்படுத்த, காதுகளில் விழச் செய்ய வெடிகுண்டுகளை வீசினோம்.
கேளாத செவிகளைக் கேட்கச் செய்வதும், ஆதிக்கமும், கொடுமையும் செய்வோரை எச்சரிக்கவுமே இதைச் செய்தோம். மேலே அமைதியாயும், அடியில் கொந்தளித்துக் கொண்டிருக்கும் இந்திய மக்கள் எனும் கடலின் தீவிரத்தை அபாய அறிவிப்பாக நாங்கள் தற்போது தெரிவித்துள்ளோம்.
அஹிம்சையின் சகாப்தம் முடிந்துவிட்டது என்பதைத் தற்போது அறிவிப்பு செய்துள்ளோம். ஒருவர் வலியச் சென்று தாக்குவது வன்முறை. அதை நியாயப்படுத்த முடியாது. ஆனால், சரியான நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக செய்யப்படும்போது அது நியாயப்படுத்தப்படுகிறது. எக்காரணத்திற்காகவும் வன்முறை கூடாது என்பது கற்பனாவாதமாகும்.
நாட்டில் எழுந்துள்ள புதிய இயக்கமானது லெனின் போன்றவர்களை வழி நடத்திய கொள்கையால் எழுச்சி பெற்று எழுந்தது ஆகும்.
அயல்நாட்டு அரசாங்கமும் இந்திய மக்கள் தலைவர்களும் இந்த இயக்கம் இருப்பதையே (மறைத்து) மறுத்து, தங்கள் கண்களை இறுக மூடிக் கொண்டிருப்பதால், எங்கே ஓசையெழுப்பினால் அவர்களுக்குக் கட்டாயம் கேட்குமோ அங்கே ஓசையை எழுப்பினோம்.
மனித உயிர்களை மிகவும் மதிக்கக் கூடியவர்கள் நாங்கள். மற்றவர்களைக் காயப்படுத்துவதைவிட, மக்களின் நன்மைக்காக, விடிவிற்காக எங்களைப் பலிகொடுக்கவே விரும்புகிறோம். உளச்சாட்சி உறுத்தல் இன்றி, கொலை செய்வதற்கென்றே பயிற்றுவிக்கப்பட்ட ஏகாதிபத்திய இராணுவத்தின் கூலிப் படைவீரர்கள் அல்ல நாங்கள். மனித உயிர்களைக் காக்க முயற்சிப்பவர்கள் நாங்கள்!
குண்டு வீசும்போதுகூட நாற்காலி மேசைகள் மீதுதான் வீசினோம்; மனிதர்கள்மீது வீசவில்லை. ஆபத்தில்லா வெடிப் பொருட்களே அதில் பயன்படுத்தப்பட்டன. அழிவு நோக்கம் எங்களுக்கிருந்தால் சட்டமன்றமும் தாக்கப்பட்டிருக்கும்; அங்கிருந்தவர்களும் அழிக்கப்பட்டிருப்பார்கள். சர். ஜான் மைசன் அவர்களை நாங்கள் நினைத்திருந்தால் அங்கே கொன்றிருக்க முடியும்.
எங்கள் செயலுக்குரிய தண்டனையைப் பெறவும், தனிநபர்களை அழிப்பதன் மூலம், கருத்துக்களைக் கொல்ல முடியாது என்பதைச் சுரண்டல் ஏகாதிபத்தியத்திற்கு உணர்த்தவுமே நாங்கள் வலியச் சென்று கைதானோம்.
அடக்குமுறைச் சட்டங்களாலும், பாஸ்டில் சிறைச்சாலைகளாலும் பிரஞ்சுப் புரட்சியை நசுக்கிவிட முடியவில்லை. தூக்கு மேடைகளாலும் சைபீரியச் சுரங்கங்களாலும் ரஷ்யப் புரட்சியை அழித்துவிட முடியவில்லை. இரத்த ஞாயிறுகளாலும் பிளாக் அண்டு ட்டான்ஸ் (Black and Tans)  என்ற அய்ரிஷ் துணை ராணுவப் படையாலும், அய்ரிஷ் சுதந்திரப் போராட்டத்தை அடக்கிவிட முடியவில்லை. அப்படியிருக்க, அவசரச் சட்டங்களும், மசோதாக்களும் இந்தியாவின் விடுதலைத் தீயை அணைத்துவிட முடியுமா?
இட்டுக் கட்டப்பட்ட சதி வழக்குகளும், சிறை வைப்பும் மாபெரும் தத்துவப் பார்வை கொண்டிருக்கும், விடுதலை வேட்கையுள்ள இளைஞர்களின் புரட்சி அணிவகுப்பைத் தடுத்து நிறுத்திவிட முடியாது. ஆனால், சரியான நேரத்தில் செய்யப்படும் அவர்களின் எச்சரிக்கை அக்கறையுடன் கவனிக்கப்பட்டால், உயிரிழப்புகளையும், அளவில்லா துயரங்களையும் தவிர்க்க முடியும்.
அந்த எச்சரிக்கையை வழங்கி, எங்கள் கடமையைச் சரியாகச் செய்துள்ளோம்.
என்று அந்த வாக்குமூலத்தில் தெளிவாகக் குறிப்பிட்டு, ஆழமும், நுட்பமும், யதார்த்தமும் மனிதநேயமும் கொண்ட தங்கள் உணர்வுகளை, சிந்தனைகளை வெளிப்படுத்தினர்.
அப்போது, புரட்சி என்றால் என்ன? என்று கீழ் நீதிமன்றத்தில் பகத்சிங்கிடம் கேட்கப்பட்டது. அப்போது,
புரட்சி என்பது, இரத்தவெறி கொண்ட மோதலாகத் தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தனி மனிதர்கள் வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்கு அதில் இடமில்லை. அது வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மீதான வழிபாடல்ல! புரட்சி என்பதன் மூலம், வெளிப்படையான அநீதியை அடிப்படையாகக் கொண்ட இந்தச் சமூக அமைப்பு மாற்றப்பட வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்... என்று 23 வயதான பகத்சிங், 90 வயதுக்குள்ள முதிர்ச்சியோடு, பக்குவத்தோடு ஆழமாகப் பதில் சொன்னார்.
மேலும், பொருட்களை உண்டாக்குபவர்கள் அல்லது தொழிலாளர்கள் சமுதாயத்தின் மிக இன்றியமையா அங்கமாக இருந்தும்கூட, அவர்களது உழைப்பைச் சுரண்டுபவர்களால் அவர்கள் சூறையாடப்படுகிறார்கள். அவர்களுக்குரிய அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுகின்றன. அனைவருக்கும் தானியங்களை விளைவித்துக் கொடுக்கும் விவசாயி, தன் குடும்பத்தோடு பட்டினியாய் கிடக்கிறான்; உலகச் சந்தைக்கு ஆடைகளை உற்பத்தி செய்து கொடுக்கும் நெசவாளி, தன் உடலையும், தன் குடும்பத்தார் உடலையும் மறைப்பதற்குப் போதுமான ஆடைகள் இன்றித் தவிக்கின்றான்; நேர்த்தியான கட்டடங்களை எழுப்பித் தரும் கட்டடத் தொழிலாளர்களும், கொல்லர்களும், தச்சர்களும் இழிவு செய்யப்பட்டு, ஒதுக்குப்புறமாய் உயிர் வாழ்கின்றனர்.
ஆனால், சமுதாயத்தின் ஒட்டுண்ணிகளான முதலாளிகளும், சுரண்டல்காரர்களும் கோடிக்கணக்கான பணத்தைத் தங்கள் விருப்பம் போல் ஊதாரித்தனமாகச் செலவு செய்து, செல்வச் செழிப்பில் இன்பக் கொழிப்பில் திளைக்கின்றனர். இத்தகைய கொடுமையான ஏற்றத்தாழ்வு குழப்பத்திற்கும், கொந்தளிப்பிற்குமே வழிவகுக்கும். இந்நிலை என்றென்றைக்கும் நீடித்திருக்க முடியாது. இன்றைய ஏகாதிபத்திய ஆதிக்கவாதிகளின் மகிழ்ச்சியும், மதிப்பும் எரிமலையின் விளிம்பில்தான் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது.
ஏற்றத் தாழ்வும், ஆதிக்கமும் அற்ற, பாட்டாளி வர்க்கம் தலைமையேற்கும், முதலாளித்துவக் கொடுமையிலிருந்து மீண்ட, உலகக் கூட்டரசு ஒன்றை இறுதியாக ஏற்படுத்துவதே எங்கள் இலக்கு! இதையே புரட்சி என்றும் சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம்.
எங்கள் உணர்வுகள் உணரப்பட்டு, தீர்வு காணப்படவில்லை என்றால், ஒரு கடுமையான போராட்டத்தின் மூலம் அனைத்துத் தடைகளும் தகர்க்கப்பட்டு, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் நிலைக்கும். புரட்சி என்பது மனித குலத்தின் பிரிக்க முடியாத உரிமை! விடுதலை என்பது அழிக்க முடியாத பிறப்புரிமை! தொழிலாளர்களே உண்மையில் அனைத்தையும் தாங்கி நிற்பவர்கள் இத்தகு புரட்சியின் பீடத்தில் எங்கள் இளமையை, இன்னுயிரைக் காணிக்கையாக்குகிறோம்!
புரட்சி நீடூழி வாழ்க! என்று முழங்கி முடித்தார்.
இதைவிட ஓர் உயரிய மனிதநேயப் பாதையை இலக்கை, தீர்வை, இலக்கணத்தை யாரால் கூறிவிட முடியும்?
பகத்சிங்கின் வாக்குமூலம் நாடெங்கும் எழுச்சியையும் பரபரப்பையும் உண்டு பண்ணியது. வழக்கின் முடிவில் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
காதல் என்றால் என்ன?
சட்டமன்றத்தில் வெடிகுண்டு வீசச் செல்வதற்கு மூன்று நாட்களுக்கு முன், சுகதேவுக்கு எழுதிய கடிதத்தில், பகத்சிங் ஆய்வு நுட்பத்துடனும், அழகு நுட்பத்துடனும் விளக்குகிறார்.
அன்புச் சகோதரனே,
இந்தக் கடிதம் உனக்குக் கிடைக்கும் நேரத்தில், தொலைதூர இலக்கை அடைய நான் புறப்பட்டுப் போயிருப்பேன். முன்னெப்போதையும் விட நான் இன்று மகிழ்வுடன் இருக்கிறேன். இங்கு இருக்கும் எனது இனிய நினைவுகள் எல்லாவற்றையும் பொருட்படுத்தாமல், என் வாழ்வின் ஈடுபாடுகள் அனைத்தையும் பொருட்படுத்தாமல் இப்பயணத்திற்கு நான் தயாராகி விட்டேன்.
என்னுடைய அளவுக்கதிகமான வெளிப்படை இயல்பு, என்னை வாயாடுபவனாக மற்றவர்களை நினைக்கச் செய்கின்றது. என் குறைகளை நான் எப்போதும் ஒப்புக் கொள்வது என் பலவீனமாகக் கருதப்படுகிறது. அது தவறான புரிதல். நான் பலவீனமானவன் அல்ல. நம்மில் எவரையும் விட நான் பலவீனமானவன் அல்ல என் சகோதரா! தெளிவான உள்ளத்துடன் நான் சொல்கிறேன். நீயும் தெளிவடைய வேண்டாமா? ஆராயாமல் எதையும் செய்யாதே! தெளிந்த சிந்தனையுடனும், அமைதியாகவும் தொடர்ந்து செயலாற்று. சட்டென்று எடுத்த எடுப்பிலே எதையும் முடிவு செய்யாதே. பொதுமக்களுக்கு ஆற்ற வேண்டிய சில கடமைகள் உனக்கு இருக்கின்றன.
நான் இலட்சியமும் நம்பிக்கையும் நிறைந்தவன். அதே போல் வாழ்க்கையின் கவர்ச்சிகளும் நிறைந்தவன். ஆனால், தேவைப்படும் நேரத்தில் அனைத்துக் கவர்ச்சிகளையும் துறந்து விடவும் என்னால் முடியும். அதுதான் உண்மையான தியாகம். இந்தக் கவர்ச்சிகள் ஒருவருடைய பாதையில் தடையாக இருக்க முடியாது - அவன் மனிதனாக இருப்பானேயானால், விரைவில் இது உறுதி செய்யப்படுவதை நீ அறிவாய்.
காதலைப் பொறுத்தவரை அது ஓர் உணர்ச்சியே தவிர வேறொன்றும் இல்லை. அது விலங்கு உணர்ச்சி அல்ல; மாறாக மனித உணர்ச்சி. அது மிகவும் இனிமையானது. காதல் எப்போதும் மனிதனின் குணநலன்களை மேம்படுத்தவே செய்யும். அவனை ஒருபோதும் தரம் தாழ்த்தாது - அக்காதல் காதலாக இருந்தால். நாம் பொதுவாகத் திரைப்படங்களில் பார்ப்பதைப் போன்று பைத்தியக்காரத் தனமான பெண்களைக் காதலர்கள் என்று நீ கூற முடியாது. அவர்கள் எப்பொழுதும் விலங்குணர்ச்சிக்கு ஆட்பட்டவர்களாகவே இருக்கின்றனர். உண்மையான காதல் உருவாக்கப்பட முடியாது. அதுதானே வரும். அது எப்பொழுது வரும் என்று எவரும் சொல்ல முடியாது. அது இயற்கையானது.
ஓர் இளம் பெண்ணும் ஆணும் ஒருவரையொருவர் காதலிக்கலாம். அக்காதலின் உதவியோடு அவர்கள் தங்கள் உணர்ச்சிகளை வென்று தங்களின் புனிதத்தைப் பாதுகாக்கலாம்.
ஒரு இலட்சிய பயணத்தில் ஒரு மனிதன் மற்றொருவர்மீது கொள்ளும் காதலை நான் கண்டனம் செய்கிறேன். அதுவும் அந்த இலட்சிய காலக்கட்டத்தில்தான். அந்த லட்சிய காலக் கட்டத்தில், காதல் என்பது ஒரு தனி மனிதரோடு கட்டுண்டு இல்லாமல், அது உலகம் தழுவியதாக இருக்க வேண்டும்.
உனது பகத்சிங்
- (ஆதாரம்: தியாகி பகத்சிங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட
படைப்புகள் சிவவர்மா, 1986 வெளியீடு)
ஒரு புரட்சியாளரின் வாழ்க்கையில், காதல் மற்றும் உலக வாழ்வின் கவர்ச்சிகளுக்கு உரிய இடம் எது என்பதை இதில் தெளிவுபடுத்துகிறார்.
தற்கொலை முயற்சி கூடாது
பகத்சிங்கின் நெருங்கிய நண்பரான சுகதேவ், தனக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டதால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக பகத்சிங்கிற்குக் கடிதம் எழுதியிருந்தார். ஒன்று தனக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் அல்லது விடுதலைச் செய்யப்பட வேண்டும் இரண்டிற்கும் இடைப்பட்ட தண்டனையில் எனக்கு உடன்பாடு இல்லை என்று அக்கடித்தில் எழுதியிருந்தார்.
அக்கடிதத்திற்கு பதில் எழுதிய பகத்சிங்,
அன்புள்ள சகோதரனே,
உன்னுடைய கடிதத்தை நான் பலமுறை படித்துவிட்டேன். வெளியே இருக்கும்போது நீ வெறுத்து ஒதுக்கிய விஷயங்கள் இப்போது உனக்கு அவசியமாக மாறிவிட்டன.
ஒருநாள் தற்கொலையைப் பற்றி உன்னிடம் நான் விவாதித்தேன். அப்போது நான், சில சூழ்நிலையில் தற்கொலை நியாயப்படுத்தக் கூடியதாய் இருக்கலாம் என்று கூறினேன். ஆனால், அப்போது என் கருத்துக்கு நீ எதிர்ப்புத் தெரிவித்தாய். அப்படியொரு கோழைத் தனமான செயலை ஒருபோதும் நியாயப்படுத்தமுடியாது என்று நீ இகழ்வாய்ச் சொன்னாய். ஆனால், நீ இப்பொழுது இந்த விஷயத்தில் தலைகீழாய் மாறியிருப்பதை நான் பார்க்கிறேன். சில சூழ்நிலைகளில் தற்கொலை தவிர்க்க முடியாதது என்று நீ தற்போது எண்ணுகிறாய். முன்பு நீ என்ன கருத்து கொண்டிருந்தாயோ அக்கருத்தை நான் தற்போது கொண்டிருக்கிறேன்; அதாவது, தற்கொலை என்பது ஒரு கொடுமையான குற்றம். அது முழுக்க முழுக்க ஓர் கோழைத்தனமான செயல். புரட்சியாளர்களை விடு, எந்தவொரு தனிமனிதனும் அத்தகைய செயலை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது.
நாம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, கைதிகளுக்கு உரியதைச் செய்ய வேண்டும் என்று நாம் உண்ணாவிரதம் இருந்தோம். கோரிக்கை நிறைவேறுவதற்கு உண்ணாவிரதம் இருந்து இறப்பதற்கும் தயாராய் இருந்தோம். இதுவும் தற்கொலைதானே என்று நீ சொல்கிறாய்? இல்லை. உயர்ந்த இலட்சியத்திற்காக ஒருவர் தம் உயிரை வருத்துவதும், தியாகம் செய்வதும் ஒருபோதும் தற்கொலையாகாது.
இரஷ்ய இலக்கியத்தில் காணப்படும், துன்பத்தைத் தாங்கிக் கொள்ளும் அவர்களின் மனஉறுதியே அவர்களது இலக்கியத்தில் ஒரு தீவிரத்தையும் துன்புறும் வேதனையிலும் தருகிறது என்றே நான் சொல்வேன். அதுவே அவர்களது கதாபாத்திரங்களுக்கும், இலக்கியத்திற்கும் பெருஞ்செறிவையும், உயர்ந்த இடத்தையும் அளிக்கிறது.
எல்லாவிதத்திலும் புரட்சியாளர்களாய் இருப்பதில் பெருமைப்பட்டுக் கொள்ளும் நம்மைப் போன்றவர்கள், நம்மால் துவக்கப்பட்ட போராட்டங்களின் மூலம் நமக்கு நாமே வரவழைத்துக் கொண்ட சிரமங்கள், கவலைகள், வேதனைகள், துன்பங்கள் அனைத்தையும் தாங்கிக் கொள்வதற்கு நாம் எப்பொழுதும் தயாராய் இருக்க வேண்டும். அதனாலேயே நாம் நம்மை புரட்சியாளர்கள் என்று கூறிக் கொள்கிறோம்.
ஒருவரது சுய விசாரணையின் மிகச் சிறந்த பகுதியே அவர் துன்பத்திற்கு ஆளாவதுதான். அதன் மூலமே நாம் சிறந்த பாடங்களைக் கற்க முடியும். இரஷ்யச் சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் அனுபவித்த துன்பங்களே, ஜார் மன்னரின்ஆட்சி தூக்கி எறியப்பட்டபின், சிறை நிர்வாகத்தில் புரட்சிகரமான நல்ல மாறுதல்கள் வருவதற்குக் காரணமாய் அமைந்தது என்பதை நீ அறிவாய்.
இந்தியாவிலும் அது போன்ற சிறைக் கொடுமைகளை அனுபவிக்கின்ற அனுபவம் புரட்சியாளர்களுக்குத் தேவையல்லவா? அதை வேறு யாராவது ஒருவர் செய்வார் என்று எதிர்பார்க்கலாமா?
புரட்சியின் பொறுப்புகளை அடுத்தவர்களின் தோள்மீது சுமத்துவது முற்றிலும் நேர்மையற்றது. வெறுக்கத்தக்கது என்று கருதும் நாம், தற்போதிருக்கும் அமைப்பு முறைக்கு எதிரான போராட்டத்தை இப்பொழுதே நாம் தொடங்க வேண்டும். ஆனால், இவற்றிலிருந்து நீ உன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள விரும்புவதுதான் என்னால் புரிந்து கொள்ள இயலாததாய் உள்ளது.
சிறை வாழ்க்கை உண்மையிலேயே தன்மானத்திற்கு இழுக்கு ஏற்படுத்துவதாய் உள்ளது என்று நீ கருதினால், கிளர்ச்சிகள் மூலம் அந்த நிலையை சீர் செய்ய நீயேன் முயற்சிக்கக்கூடாது?
ஒருவேளை அப்படிப்பட்ட போராட்டத்தால் ஒரு பயனும் விளையாது என்று நீ கூறலாம். ஆனால் அப்படிக் கூறுவது, இயக்கத்தில் பங்கெடுப்பதைத் தவிர்க்க விரும்புகின்றவர்கள் வாடிக்கை; அது பலவீனமானவர்களின் சாக்கு, சமாதானம், அதை நீ செய்ய முடியுமா?
தற்போது நம் இயக்கத்தில் விரல்விடக் கூடிய புரட்சியாளர்களே எஞ்சியுள்ளனர். இவர்களால் என்ன சாதித்துவிட முடியும் என்று சலிப்படைந்து, நாம் துவக்கிய இலட்சியப் போராட்டத்தை விட்டுவிடலாமா? இதுவரை பெரிய தவறைச் செய்துவிட்டோம் என்று ஒதுங்கிவிடலாமா?
நமக்கு வெற்றி கிடைக்காவிட்டாலும், நாம் காலத்தின் தேவையால் உருவாக்கப்பட்டவர்கள். நம் பணி, தியாகம் கட்டாயமான ஒன்று.
கம்யூனிஸத்தின் தந்தையென்று அழைக்கப்படும் மார்க்ஸ், உண்மையில் கம்யூனிசக் கொள்கையை உருவாக்கவில்லை என்றுகூட நான் சொல்வேன். அய்ரோப்பாவில் தோன்றிய தொழிற் புரட்சியே இம்மாதிரியான பலரை உருவாக்கியது. அவர்களுள் ஒருவராக மார்க்ஸ் இருந்தார். அவரது காலத்தின் சக்கரத்தை முடுக்கி விடுவதில் அவரும் ஒரு கருவியாக இருந்தார்.
அதேபோல் நாம் வாழும் காலக்கட்டமும் சூழலுமே நம்மை உருவாக்கியுள்ளன. எனவே, நாம் கொண்ட பொறுப்பைத் தொடர்ந்து நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டியது நம் கடமை. துன்பங்களிலிருந்து தப்பிச் செல்வதற்காக நாம் செய்யும் தற்கொலைகள் மக்களை வழிநடத்தப் பயன்படா! மாறாகத் தற்கொலைகள் பிற்போக்கு நடவடிக்கைகளாகவே இருக்கும்.
ஏமாற்றங்களும், நிர்ப்பந்தங்களும், சிறைச் சட்டங்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளும் நிறைந்த சோதனையான சூழ்நிலைகளையும் பொருட்படுத்தாமல் நமது செயல்பாட்டைத் தொடர்ந்தோம்; அப்போது பல்வேறு துன்பங்களை அடைந்தோம். மாபெரும் புரட்சியாளர்கள் என்று தம்மைத் தாமே அறிவித்துக் கொண்டவர்கள்கூட நம்மைவிட்டு ஓடிப் போனார்கள். இவையெல்லாம் நமக்கு வந்த உச்சக்கட்ட சோதனைகள் அல்லவா? அதன் பின்னரும் நாம் போராட்டத்தைத் தொடரத்தானே செய்தோம்.
தாம் பற்றுக் கொண்ட கொள்கைகளுக்காக, சிறைகளில் துன்பங்களை அனுபவித்துத் திரும்பிய பின்னரும், இன்னமும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தோழர்கள் நம்மிடையே இல்லையா? இருக்கிறார்களே!
தங்களுடைய தண்டனைக் காலத்தை நிறைவு செய்ய தங்களின் வாழ்நாளில் பெரும்பகுதியைச் சிறையிலே கழித்த புரட்சியாளர்கள் இன்று இரஷ்ய அரசின் பெரும் பொறுப்புகளில் அமர்ந்திருப்பது உனக்குத் தெரியாதா?
மனிதன் தான் கொண்ட கொள்கைகளில் இருந்து பிறழாமல் இருப்பதற்குப் பெருமுயற்சி செய்ய வேண்டும் வருங்காலத்தில் என்ன நடக்கும் என்பதை யாரும் சொல்ல முடியாது.
நான் உன்னுடைய சிந்தனைக்குக் கொண்டு வர விரும்பும் கருத்து ஒன்று உள்ளது. கடவுளிடத்திலோ, சொர்க்கம், நரகம், தண்டனை, வெகுமதி என்பனவற்றிலோ நமக்கு நம்பிக்கையில்லை. ஆகவே, பொருள் முதல்வாத பார்வையின்படியே நாம் வாழ்வையும், இறப்பையும் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
நம்மைப்போல் கொள்கைகளும் கோட்பாடுகளும் உள்ள ஒரு மனிதன், பயனின்றி இறந்து போவதே ஒருபோதும் நினைத்துப் பார்க்க முடியாது.
நம்முடைய உயிருக்கு அதிகப்பட்ட மதிப்பைப் பெறவே நாம் விரும்புகிறோம். குறிப்பாக வாழ்க்கையின் எந்த இடத்திலும் துன்பமோ வருத்தமோ இல்லாத நம்மைப் போன்றவர், தற்கொலையைப் பற்றி ஒருபோதும் நினைத்துப் பார்க்கவே முடியாது. இயன்ற மட்டும் மக்களுக்காகச் சேவை செய்ய விரும்புகிறவர்கள் நாம். நமக்கு இந்த எண்ணங்கள் வரக்கூடாது.
எனக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்பது உறுதி. இதைக் காட்டிலும் குறைந்த தண்டனையை அல்லது பொது மன்னிப்பை நான் எதிர்பார்க்கவில்லை. நமக்கு எக்காலத்திலும் பொது மன்னிப்பு வழங்க மாட்டார்கள். என்றாலும், நம்மை விடுவிக்கக் கோரி நாடு முழுவதும் கோரிக்கையும், கிளர்ச்சியும் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். அவ்வாறு அக்கிளர்ச்சி உச்சக்கட்டம் அடையும்போது, நாம் தூக்கிலிடப்பட வேண்டும் என்றும் விரும்புகிறேன். நாம் தூக்கிலிடப்படுவதன் மூலம் இந்த நாட்டு மக்களின் உள்ளங்களில், அழிக்க முடியாத சில நினைவுகள் பதியப்பட வேண்டும். நான் விரும்புவது இது மட்டுமே!
உன்
பகத்சிங்
என்று எழுதினார்.
தற்கொலை செய்யக்கூடாது என்ற கருத்தை சுகதேவிற்குச் சொல்லுகின்ற பாங்கில் எத்தனையெத்தனை சிந்தனைகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார் பாருங்கள். அதுவும் 23 வயதில்!
அது மட்டுமல்ல, தன்னை விடுவிக்கக் கோரி நடத்தப்படும் கிளர்ச்சி உச்சக்கட்டம் அடைந்து, தான் தூக்கிலிடப்பட வேண்டும் என்கிறார்.
அப்படியாயின் அவர் உள்ளக் கிடக்கை என்ன? அதன் மூலமாவது ஆதிக்கம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற எழுச்சி பரவ வேண்டும். மக்கள் எழுச்சி பெற வேண்டும் என்று விரும்புகிறார். மேலும், நான் தூக்கிலிடப்படுவதன் மூலம், மக்கள் உள்ளத்தில் அழியாத உணர்வுகளை (விடுதலை உணர்வை, ஆதிக்க ஒழிப்பு உணர்வை, புரட்சி உணர்வை) பதியச் செய்ய வேண்டும் என்றும் விரும்புகிறார்.
அப்படியென்றால் அவர் எண்ணம் முழுவதும் மக்கள் விரைவில் எழுச்சி பெற வேண்டும், அதற்கு ஏதாவது உணர்ச்சியை உசுப்பிவிடும் நிகழ்வு நடக்க வேண்டும், அதற்குத் தங்களுடைய உயிர் கருவியாகப் பயன்படுத்தப்படவேண்டும் என்று விரும்புகிறார்.
வெடிகுண்டு வீசியதுகூட யாரையும் அழிக்க வேண்டும் என்பதற்காக அல்ல. பரபரப்பை உண்டு பண்ணி, அதன் மூலம் மக்கள் மத்தியில் விடுதலை உணர்வும், எழுச்சியும் பரவ வேண்டும் என்பதற்காகவே. ஆக, தன்னைப் பலி கொடுப்பதன் மூலம் மக்களுக்கு எழுச்சியூட்டவே அவர் விரும்பினார். அதனால், தற்கொலையைத் தானும் வெறுத்தார், சுகதேவையும் வெறுக்கும்படிச் செய்தார்.
மதப் போராட்டங்கள் ஒழிய வர்க்கப் போராட்டமே வழி!
பகத்சிங் 20 வயது நிறையும்போதே பல்வேறு சிந்தனைகளை எழுதியுள்ளார்; பல்வேறு சிக்கல்களைத் தீர்க்க தீர்வுகளும் கூறியுள்ளார். சாண்டர்ஸ் கொலை செய்யப்பட்டபோது, பகத்சிங் தனிநபர் பயங்கரவாதத்தில் நம்பிக்கை வைத்திருந்தார் என்றும், அவர் சிறையில் தான் மார்க்ஸியத்தையே கற்றுக் கொண்டார் என்றும் சிலர் அவருடைய ஆய்வு பற்றியும், முதிர்ச்சி பற்றியும், அறியாமையால் தவறாகக் கூறுகின்றனர். உண்மையில் அவர் சிறைக்குச் செல்லும்போதே முழு முதிர்ச்சியுடனும், தெளிவுடனும் இருந்தார் என்பதை இக்கட்டுரை விளக்குகிறது. இக்கட்டுரை சாண்டர்ஸ் கொலைக்கு 6 மாதங்களுக்கு முன்பே எழுதப்பட்டது. மேலும், நீதிமன்றத்தில் அவர் அளித்த வாக்குமூலம் முழுவதையும் படித்தால், மேற்கண்டவாறு அவரைப் பற்றித் தவறாகக் குறிப்பிடுகின்றவர்கள் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்ள முடியும். அது பின்வரும் பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. எனவே, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்கட்டுரையின் கருத்துக்களை, மத மோதல்கள் நிறைந்த இக்காலத்தில் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயம்.
இக்கட்டுரை 1928 ஜூன் கீர்த்தி இதழில் பகத்சிங்கால் எழுதப்பட்டது. அதன் சாரத்தை அடியில் வடிக்க விரும்புகிறேன்.
இந்தியாவின் தற்போதைய நிலை மிகவும் வருந்தத்தக்கதாக உள்ளது. ஒரு மதத்தார் மற்றொரு மதத்தாருக்குப் பிறவி எதிரியாகக் கொள்ளப்படுகிறார். அண்மையில் லாகூரில், சீக்கியர்களையும், இந்துக்களையும் எவ்வளவு கொடுமையாக முஸ்லீம்கள் கொலை செய்தார்கள்! சீக்கியர்களும் அதே விதத்தில் பதிலுக்குச் செய்தார்கள். இக்கொலைகளில் தனிப்பட்ட மனிதரின் வெறுப்பு காரணமாக அமையவில்லை. மாறாக, அவர்கள் குறிப்பிட்ட மதத்தார் என்பதற்காகவே கொலை செய்யப்பட்டார்கள். தனக்குச் சம்பந்தம் இல்லாதவர்களைக்கூட, தனக்கு எதிர் மதத்தான் என்பதால் கொலை செய்கிறார்கள்.
இப்படிப்பட்ட மதம் சார்ந்த கொலைகள் இந்தியாவின் மதிப்பைக் குலைத்துவிட்டன.
பொதுவாக மதவாதத் தலைவர்களும், செய்தித்தாள்களுமே, இக்கலவரங்களின் பின்னணியில் உள்ளார்கள். புனிதமாகக் கருதப்பட்ட பத்திரிகைத் தொழில்கூட இன்றைக்கு மோசமாகச் சீரழிந்து வருகிறது. பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகளால் மூண்ட கலவரங்கள் ஏராளம்.
மக்களுக்கு அறிவூட்டி, குறுகிய மனப்பான்மையிலிருந்து அவர்களை விடுவித்து, மத நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டியது பத்திரிகைகளின் உன்னதமான கடமையாகும். ஆனால், மாறாக அவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி, மதத்தைப் பரப்ப, உணர்வைத் தூண்டி மோதச் செய்கின்றன. இக்கலவரங்களால் ஒரே நாட்டு மக்கள் என்கின்ற உணர்வு சிதைக்கப்படுகிறது. இதை எண்ணும்போது எம் கண்களில் ரத்தக்கண்ணீர் வருகின்றது. இந்தியாவின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி பிறக்கிறது. அது நம் இதயத்தைப் பிளக்கிறது.
ஒத்துழையாமை இயக்கத்தின்போது நம் மக்களிடையே இருந்த நாட்டுப்பற்று, இன்று மதப் பற்றாக மடை மாற்றப்பட்டு, சிதறுண்டு சீர்கெட்டு நிற்கிறார்கள். இந்த நிலை பிரிட்டிஷாருக்கு எவ்வளவு ஆதரவானது என்பதை உணர வேண்டும்.
இம்மதக் கலவரங்களின் ஆணிவேர் எங்கு இருக்கிறது என்று ஆழமாகச் சென்று பார்த்தால், அது பொருளாதாரக் காரணிகளில் இருப்பதை நாம் அறியலாம். அது மட்டுமல்ல, எல்லாப் பிரச்சினைகளுக்கும் அடிப்படையாக இருப்பது பொருளாதாரக் காரணிகளேயாகும். இது கார்ல் மார்க்ஸ்-ன் கோட்பாடுகளில் ஒன்று.
இந்தியாவில் ஒருவனுக்கு வெறும் நாலணா கொடுத்து, மற்றொருவனைத் தாக்கச் செய்ய முடிகிறது. பட்டினி கிடக்கும் மக்களால் உயர்ந்த கொள்கைகளைப் பின்பற்ற இயலாது. தான் உயிர் வாழ்வதற்காக ஒருவன் எந்த எல்லைக்கும் செல்வான்.
நம் மக்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை நிறுத்துவதற்கு அவர்கள் மத்தியில் நாம் வர்க்க உணர்வைத் தட்டியெழுப்ப வேண்டும். ஏழை விவசாயிகளும், உழைப்பாளிகளும் தங்கள் உண்மையான எதிரிகள் முதலாளிகளே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இவர்கள் முதலாளிகளின் கைப்பாவையாகி விடக்கூடாது. தங்களது ஜாதி, மதம், இனம் ஆகியவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டு, தங்கள் அனைவரது நலனும் பொதுவானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள், தங்கள் ஜாதி, மத, இன வேறுபாடுகளை மீறி, ஒன்றுபட்டுப் போராடி அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலே குறியாக இருக்க வேண்டும். அதன் மூலமே அவர்கள் நலமும், வளமும், சமநிலையும் பெற முடியும். இதற்காக அவர்கள் இழக்கப் போவது எதுவும் இல்லை; அவர்களது அடிமை விலங்குகளைத் தவிர.
இரஷ்யாவின் வரலாற்றை அறிந்தவர்கள், அவர்களது நிலையும், நம்முடைய நிலையைப் போன்றே இருந்தது என்பதை நன்கு உணர முடியும். ஜார் மன்னனின் ஆட்சிக் காலத்திலும், அந்நாட்டு மக்கள் நம்மைப் போன்றே பல குழுக்களாகப் பிரிந்து மோதிக் கொண்டனர். ஆனால், தொழிலாளர்கள் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், ஒட்டுமொத்த சூழலும் மாறிவிட்டது. இப்போது இங்கு கலவரங்கள் நடப்பதில்லை. மனிதர்கள் அங்கே மனிதர்களாக நடத்தப்படுகிறார்கள். பல்வேறு மதத்தைச் சேர்ந்தவர்களாக நடத்தப்படுவதில்லை. மக்கள் அங்கே வர்க்க உணர்வு கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.
கல்கத்தாவில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டு ஒருங்கிணைந்தவர்கள், மதக் கலவரங்களில் ஈடுபடுவதில்லை. வேறுபட்ட மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், தங்களுக்குள் ஒற்றுமையாகவே இருக்கின்றனர். கலவரங்களைத் தடுக்கவும், ஒடுக்கவும் அவர்கள் பணியாற்றும் மனப்பக்குவத்தையும் பெற்றிருந்தனர். இதற்கு என்ன காரணம்? அவர்கள் வர்க்க உணர்வு பெற்று இருந்தமையே அதற்குக் காரணம்.
இந்தியாவில் உள்ள இளைஞர்கள் மத வேறுபாடு இல்லாமல், முதலில் மனிதர்கள், அதன்பின் இந்தியர்கள் என்ற உணர்வுடன் உள்ளனர். அவர்களிடையே வர்க்கவுணர்வை வளர்த்துவிட்டால் அவர்கள் இதே உள்ளத்துடன் உறுதியாய் இருந்து ஒற்றுமை வளர்ப்பர். அதன் வழி இந்தியாவின் எதிர்காலம் சிறப்பாய் இருக்கும்.

மதத்தை அரசியலிலிருந்து பிரித்துவைக்க வேண்டும். மதம் என்பது தனிநபர் விவகாரம் - தனிப்பட்ட விவகாரம். அதைச் சமூக வாழ்க்கையில் கலக்கவிடக்கூடாது. ஏனென்றால், அது சமூகம் ஒன்று படுவதற்கான வளர்ச்சிப் போக்கை தடை செய்கிறது என்று 1914இல் தியாகிகள் கூறினர். அதன்படியே செயல்பட்டனர். அப்போது அனைத்து மதத்தவரும் ஒன்றுபட்டு, நாட்டிற்காக இன்னுயிரைத் தியாகம் செய்தனர். எனவே, மதத்தை அரசியலிலிருந்தும், சமூக வாழ்க்கையிலிருந்தும் பிரித்து வைத்து, அதனைத் தனிப்பட்ட விவகாரமாகக் கொள்வதோடு, வர்க்க உணர்வை ஊட்டி, ஒன்றிணைத்து ஆதிக்கத்தை அழிக்க வேண்டும்.



நூல் - மறைக்கப்பட்ட மாமனிதர்கள்  

ஆசிரியர் - மஞ்சை வசந்தன்

Comments

Popular posts from this blog

கயிற்றில் தொங்கிய கணபதி (கி.பி. 1911-1949) part-2

மகாத்மா ஜோதிராவ் பூலே (கி.பி. 1827-1890)

பெம்மான் பசவர் (கி.பி.1131-1167)