புரட்சியாளர் பகத்சிங் (கி.பி. 1907-1931) பகுதி - 4
எங்களைத்
தூக்கிலிடக்கூடாது: சுட்டுக் கொல்ல வேண்டும்!
அவசரச்
சட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பு, பகத்சிங், சுகதேவ், ராஜகுரு என்ற புரட்சி வீரர்களான மூன்று இளைஞர்களுக்கும் 7.10.1930 அன்று மரண தண்டனை விதித்தது. இத்தண்டனையை லண்டனில்
இருந்த பிரீவி கவுன்சில் உறுதி செய்தது. இந்திய வைஸ்ராயும்
அதை உறுதி செய்தார்.
தூக்குத்
தண்டனைக் கைதிகளின் அறையில் தூக்கிலிடப்படும் நேரத்திற்காகக் காத்திருந்த நாட்களிலும், பகத்சிங் கொஞ்சங்கூட அஞ்சவில்லை; கலங்கவில்லை. வழக்கம்போல் படிப்பதும், எழுதுவதும், வாதிடுவதும், கலகலப்பாக நகைச்சுவைத் ததும்ப பேசுவதுமாக இருந்தார்.
தன்னுடைய
மரண தண்டனையை எப்படி நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதிலும் அவர் அதிகம் சிந்தித்தார். தூக்குக் கயிற்றில் தொங்குவதைவிட சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்று விரும்பினார். சுத்த புரட்சியாளனும், வீரனுமான தான் துப்பாக்கியால் சுடப்பட்டே இறக்க வேண்டும் என்று முடிவு செய்தார். இந்த விருப்பத்தைக்
கோரிக்கையாக எழுதி அக்கடிதத்தை பஞ்சாப் மாநில ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். அதில் பகத்சிங், இராஜகுரு, சுகதேவ் மூவரும்
கையொப்பம் இட்டிருந்தனர்.
பெறுநர்
பஞ்சாப்
மாகாண ஆளுநர்,
அய்யா,
................
விரல்விட்டு
எண்ணக்கூடிய சில ஒட்டுண்ணிகளால் இந்திய உழைக்கும் மக்களும், அவர்தம் இயற்கை
வளங்களும் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும் வரை எங்கள் போர் தொடரும்; தொடரவும் வேண்டும். அவ்வொட்டுண்ணிகள் கலப்பற்ற பிரிட்டிஷ் முதலாளி இந்திய முதலாளிகளின் கலப்பாக இருக்கலாம் அல்லது கலப்பற்ற இந்திய முதலாளிகளாகக்கூட இருக்கலாம். அவர்கள் தங்களின் நயவஞ்சகமான சுரண்டல்களை, பிரிட்டிஷ் மற்றும் இந்தியக் கலப்பு அரசு இயந்திரத்தைக் கொண்டோ, கலப்பற்ற இந்திய
அரசு இயந்திரத்தைக் கொண்டோ நடத்தி வரலாம். இந்தியச் சுதந்திரப்
போராட்டத்தின் முன்னணிப் படையாகிய புரட்சிக்கரக் கட்சியானது, மீண்டும் ஒருமுறை போர்முனையில் தனித்து விடப்பட்டாலும் அதுவும் எங்களுக்கு ஒரு பொருட்டு அல்ல. ................
தங்கள்
இன்னுயிர் உட்பட, தங்கள் கணவன், உடன் பிறந்தோர், உறவினர் அனைவரையும்
தியாகம் செய்த, செய்யத் தயாராய்
இருக்கின்ற பெண் தொழிலாளர்களைப் பற்றி, சமாதானப் பேச்சு
வார்த்தையின்போது ஒரு வார்த்தைகூட பேசாமல், கண்டுங் காணாததுபோல்
இருக்குமளவிற்கு உணர்ச்சிப் பிண்டங்களாய் எம் இந்தியத் தலைவர்கள் (அஹிம்சா தலைவர்கள்) ஆகிவிட்டனர். என்றாலும், எம்போர் தொடரும். இப்போர் வெவ்வேறு காலக் கட்டங்களில் வெவ்வேறு வடிவங்களை எடுக்கும். அப்போர் வெளிப்படையாகவோ, மறைமுகமாகவோ இருக்கலாம்; வெறும் கிளர்ச்சியாகவும் இருக்கலாம். அல்லது வாழ்வா? சாவா?
போராட்டமாகவும் இருக்கலாம். இப்போர் இரத்தம் தோய்ந்ததாக இருக்க வேண்டுமா? அல்லது வேறு
வகையில் இருக்க வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டியவர்கள் நீங்கள்.
ஒரு புதிய உத்வேகத்துடன் சோசலிச குடியரசு நிறுவப்படும் வரையில், அதன் மூலம்
எல்லா வகையான சுரண்டல்களும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, மனிதகுலம் உண்மையானதும், நிரந்தரமானதுமான யுகத்துக்குள் அடியெடுத்து வைக்கும் வரையிலும் ஓயாது அப்போர் தொடுக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும்.
முதலாளித்துவ
ஏகாதிபத்தியச் சுரண்டலின் நாட்கள் எண்ணப்படுகின்றன. இந்தப் போர் எங்களோடு தொடங்கவுமில்லை; எங்கள் வாழ்நாளோடு முடியப் போவது இல்லை. வரலாற்ற நிகழ்வுப்
போக்குகளினாலும், நிலவும் சூழ்நிலைகளாலும், தவிர்க்க முடியாததே இப்போர்.
திரு
தாஸின் ஈடு இணையற்ற தியாகத்தாலும், தோழர் பகவதி சரண் துன்பம் நிறைந்த உன்னதமான தியாகத்தாலும், எங்கள் அன்பிற்குரிய ஆஸாத்தின் பெரும் பெருமைமிக்க மரணத்தாலும் பிழையின்றி அணி செய்யப்பட்ட தியாகச் சங்கிலியின் ஓர் இணைப்பு கண்ணியே (கோர்வையே) எங்களது
இந்த எளிய தியாகங்கள்!
எங்களது
இறுதி முடிவைப் பற்றிய கேள்வியைப் பொறுத்து எங்களைச் சில வார்த்தைகள் கூற அனுமதியுங்கள். எங்களைக் கொல்வதென்று நீங்கள் முடிவு செய்துவிட்டால் அதனைக் கட்டாயம் நிறைவேற்றி விடுவீர்கள். உங்கள் கையில் அதிகாரம் உள்ளது. அதிகாரமே நியாயத்தைக்
கொடுக்கிறது. நீங்கள் எது செய்தாலும் அது நியாயம்தானே! எங்கள் விசாரணையே அதற்கு ஒரு சான்று.
நாங்கள்
எதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம் என்றால், நாங்கள் உங்கள்
அரசுக்கு எதிராய்ப் போர் தொடுத்துள்ளோம். உங்கள் தீர்ப்பிலும் அவ்வாறே சொல்லப்பட்டுள்ளது. எனவே, எங்களைப் போர்க்
கைதிகளை நடத்துவதுபோலவே நடத்த வேண்டும். அதாவது போர்க்
கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றும்போது, சுட்டுக் கொல்வதுபோல் எங்களையும் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம். அதற்கு நீங்கள் இராணுவத் துறைக்கு உத்தரவிடுவீர்கள் என்று நம்பிக்கையுடன் வேண்டிக் கொள்கின்றோம்.
தங்கள்,
பகத்சிங்
ராஜகுரு
சுகதேவ்
- (ஆதாரம்: தியாகி பகத்சிங்கின்
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், சிவவர்மா, 1986 வெளியீடு)
நான்
ஏன் நாத்திகன்?
பகத்சிங்
லாகூர் சிறையில் இருந்தபோது, பாபா ரந்தீர் சிங்கும் அச்சிறையில் (1930-31இல்) இருந்தார். அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். பகத்சிங் கடவுள்
இல்லை என்ற கொள்கை உடையவர் என்பதை அறிந்த அவர், பகத்சிங்கிற்கு கடவுள் உண்டு
என்ற நம்பிக்கையை உண்டாக்க வேண்டும், என்று பகத்சிங்
அறைக்குச் சென்றார்.
பகத்சிங்கோடு
விவாதம் செய்தார். ஆனால், பகத்சிங்கிற்குக்
கடவுள் நம்பிக்கையை அவரால் உருவாக்க இயலவில்லை. எனவே,
நிதானம் இழந்த பாபா ரவீந்தீர்சிங், உனக்குக் கிடைத்துள்ள புகழின் மயக்கத்தில் நீ உள்ளாய். அதனால், நீ
ஆணவத்தில் இருக்கிறாய். அந்த ஆணவம் உனக்கும் கடவுளுக்கும் கருப்புத் திரையாக நிற்கிறது என்று கோபத்துடன் பேசினார்.
எனவே, தான் ஏன் நாத்திகன் என்பதை எல்லோருக்கும் தெளிவுபடுத்த, தூக்குத் தண்டனை கைதிகள் அறையில் இருந்தபடி, நான் ஏன்
நாத்திகன்? என்ற கட்டுரையை
எழுதினார். இதில் தன்
வரலாற்றையும் வெளிக்காட்டி சிறப்புற எழுதினார்.
தன்னுடைய
கடவுள் மறுப்புக் கொள்கையை, அறிவியல் அடிப்படையில், இயக்கவியல் நோக்கில், மார்க்சிய பாங்கில்
விளக்கினார். வாதங்களையும் முன் வைத்தார்.
இந்தக்
கட்டுரையை முழுமையாக எழுதின் அது ஒரு சிறு நூலாக விரியும் என்பதால் அதன் முக்கிய சாரத்தை மட்டும் இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
நான்
ஏன் நாத்திகன்?
என்னுடைய
கடவுள் மறுப்பிற்கு எனது ஆணவம் காரணம் அன்று. நான் ஒரு
மனிதன். அதற்கு மேல்
எதுவும் இல்லை. மனிதனுக்கும் மேலானவன்
என்று எவரும் கூறிக் கொள்ள முடியாது. என்னுடைய கொள்கையின்மீது
நியாயமான பெருமிதம் எனக்குண்டு. ஆனால் அது ஆணவம் அன்று. எனது ஆணவத்தால்
நான் கடவுளை மறுக்கிறேன் என்று குற்றச்சாட்டு தவறானது. காரணம், எனது
நாத்திகச் சிந்தனைக்கு என்னைக் கொண்டு சென்றது எனது ஆணவம் அல்ல.
என்னுடைய
புகழின் காரணமாக நான் கடவுளை மறுக்கிறேன் என்பதும் தவறு. காரணம், கடவுள்
மறுப்புச் சிந்தனை என்னுடைய இளம் வயதிலே என்னிடம் உறுதிப்பட்டுவிட்டது. அப்பொழுதே கடவுள் நம்பிக்கையை விட்டொழித்தவன் நான்.
எனது
தொடக்கக் கல்வியை முடித்த பின்னர், லாகூரில் உள்ள
டி.ஏ.வி. (னு.ஹ.ஏ.) சேர்ந்து படித்தபோது, எனது விடுதியில் காலை மாலை மணிக்கணக்கில் காயத்ரி மந்திரங்களைச் செபிப்பேன். அப்போது நான் ஒரு முழுமையான கடவுள் பக்தன்.
ஒத்துழையாமை
இயக்கம் நடந்து கொண்டிருந்த காலத்தில் நான் தேசியக் கல்லூரியில் சேர்ந்தேன். அப்போது நான், சுதந்திரமாகச் சிந்திக்கத்
தொடங்கினேன். கடவுள் மதம் தொடர்பானவற்றை விவாதிக்கவும், விமர்சிக்கவும், ஆழ்ந்துசிந்திக்கவும் தொடங்கினேன். அப்போதுகூட நான் கடவுள் நம்பிக்கை உடையவனாக இருந்தேன். சீக்கிய மதக்
கொள்கைப்படி முடி வளர்த்தேன். புராணங்களின்மீது எனக்கு அறவே நம்பிக்கை இல்லை. இன்னும் சொல்லப்
போனால், புரட்சிகரக் கட்சியில்கூட
கடவுள் மறுப்புக் கொள்கை இல்லை.
எதிர்
தரப்பாரின் வாதங்களை எதிர்கொள்ள நிறைய கற்க வேண்டும் என்ற சிந்தனை என்னுள் பதிந்தது. அதன்படி நிறைய
படிக்கத் தொடங்கினேன். அதன் விளைவாய் என்னுடைய நம்பிக்கைகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டன.
இறையுள்
அடக்கமாக விரும்பிய விருப்பமும், குருட்டு நம்பிக்கைகளும் அகன்றன. உண்மை நிலை
எதுவோ அதுவே ஏற்புடையது என்ற கொள்கை உறுதிப்பட்டது. எதற்காகப் போராட வேண்டும் என்ற இலக்கைத் தீர்மானிப்பதில் உறுதி ஏற்பட்டது.
அனார்கிஸ்ட்
தலைவர் பக்குனியின் கருத்துக்களைப் படித்தேன். மார்க்ஸின் சிந்தனைகளைச்
சிறிதளவு படித்தேன். அவர்கள் இருவரும்
கடவுள் மறுப்பாளிகள். நான் படித்த நிர்லம்ப சுவாமியின் கருத்துக்கள் ஆன்மீகம் சார்ந்த நாத்திகமாய் இருந்தது.
1926-ஆம்
ஆண்டில் கடவுள் இல்லை என்ற உண்மை என்னுள் உறுதியாயிற்று. அக்கொள்கையை நண்பர்களுக்கு விளக்கினேன். என்னுடைய கடவுள் மறுப்பிற்கு என்னிடம் தெளிவான, உறுதியான காரணங்கள்
இருந்தன.
1927ஆம்
ஆண்டு மே மாதம், காகோரி ரயில்
கொள்ளை தொடர்பான வழக்கில், என்னைக் காவலர்கள்
கைது செய்தனர். முதலில் போலீஸ்
காவலுக்கும், அடுத்த நாள் இரயில்வே போலீஸ் சிறைக்கும் கொண்டு செல்லப்பட்டேன். என்மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அரசு தரப்பிற்கு
ஆதரவாக நான் சாட்சி சொன்னால் (அப்ரூவராக மாறினால்) என்னை வழக்கிலிருந்து விடுதலை செய்வதாகக் கூறினார்கள். நான் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை.
சில காவல்துறை அதிகாரிகள் இருவேளையும் தவறாமல் கடவுளைப் பிரார்த்திக்கும்படி அறிவுரை கூறினர். அதன் மூலம்
எனக்கு விடுதலை கிடைக்கும் என்று அவர்கள் நினைத்தனர். என்னால், அதை ஏற்க
முடியவில்லை. உயிருக்கு ஆபத்தான சூழலிலும் என்னுள் கடவுளை வணங்க வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை. கடவுள் இல்லை
என்பதில் என் மனம் உறுதியாக இருந்தது அப்போது தெளிவாயிற்று. இவ்வாறு நான் அப்போது உறுதிமிக்க கடவுள் மறுப்பாளனாக விளங்கினேன்.
மரணத்திற்குப்
பிறகு சொர்க்கம் நரகம் என்ற நம்பிக்கைகள் என்னுள் இல்லை. என் கழுத்தில்
சுருக்கு மாட்டப்பட்டு, எனது காலடியில் இருக்கும் பலகைகள் அகற்றப்படும் அடுத்த வினாடியே எனது இறுதி வினாடி என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். அதற்கு மேல் எதுவும் இல்லை என்பதையும் நான் உறுதியாக நம்புகிறேன்.
விமர்சனமும்
சுய சிந்தனையும் ஒரு புரட்சியாளனின் இரு கண்கள். மகாத்மா ஒரு
பெரிய மனிதராக இருக்கிறார் என்பதனால் அவர் கருத்துக்களை அவரது செயல்பாடுகளை விமர்சிக்கக்கூடாது; அவர் சொல்லும் செயலும் அனைத்தையும் அப்படியே ஏற்க வேண்டும்; நமக்கு உடன்பாடு
இல்லை யென்றாலும் பெரியவர்கள் சொல்வதை அப்படியே ஏற்க வேண்டும் என்று எண்ணும் மனநிலை ஒருபோதும் நம்மை முன்னேற்றத்தை நோக்கி இட்டுச் செல்லாது என்பது மட்டுமல்ல, அது பிற்போக்கு
நிலையும் ஆகும். கடவுள் நம்பிக்கை
வாழ்க்கையை எளிமையாக்கும், சுமைகளைக் குறைக்கும் என்பதெல்லாம் ஒரு மயக்கமேயன்றி உண்மையல்ல. யதார்த்தவாதியான நான் அம்மயக்கத்தில்
நிவாரணம் காண விரும்பவில்லை.
நம் முன்னோர்கள் இவ்வுலகின் புரியாத புதிர்களுக்கு விடை காண முற்பட்டு, நேரடி நிரூபணங்கள்
எதுவும் கிடைக்காததால், தங்களுடைய சொந்த முடிவுகளை விடையாகக் கூறியுள்ளனர். அவை மதக் கோட்பாடுகளாக மாறின. ஆனால் அந்தக்
கோட்பாடுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நின்றன.
குருட்டுத்தனமான
மதநம்பிக்கை முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை என்பதை உணர வேண்டும். அத்தகைய குருட்டு
நம்பிக்கைகளை ஆழமான சிந்தனையாலும் பகுத்தறிவினாலும் மட்டுமே அகற்ற முடியும். அறிவு ரீதியான
நம்பிக்கைகள் மாற்றத்திற்கு உட்படும். அதனால் பாதிப்பில்லை. உண்மையென்று உணரப்படும்போது மாற்றம் அடைந்து சரியானது ஏற்கப்படும். ஆனால், குருட்டு நம்பிக்கைகள்
மாற்றத்திற்கோ, மறுப்புக்கோ உட்படாமல், ஆய்விற்கும் உட்படாமல்
ஆக்கப்பட்டிருப்பதால் அவை பாதிப்பைத் தருவனவாகும். குருட்டு நம்பிக்கையைத் தூள் தூளாகத் தகர்க்க பகுத்தறிவால் முடியும். பகுத்தறிவுக்கு முன் குருட்டு
நம்பிக்கை நிலைத்து நிற்க இயலாது.
இயற்கை
என்பது உண்மை. ஆனால், இயற்கைக்குப்
பின்னால் இருந்து இயக்கும் சக்தி எதுவும் இல்லை.
கடவுள்
உலகத்தைப் படைத்தது என்றால், துயரம் இன்னல்
நிறைந்ததாக அதை ஏன் படைத்தது? ஆதிக்க அகமகிழ்விற்காக
ஆயிரமாயிரம் மக்களைக் கொன்று குவிக்கும் மனிதர்களுக்கு எதிராக சர்வ வல்லமை படைத்த கடவுளின் நடவடிக்கை ஒன்றும் இல்லையே!
மாறாக, குற்றமற்ற மனிதர்கள்தானே துன்பம் அடைகின்றனர். நல்லவர்களுக்கு இதமும் சுகமும் இல்லையே. இவ்வாறு கேட்டால், அடுத்த பிறவியில் நலம் கிடைக்கும். சுகம் கிடைக்கும் என்று கூறுவது எப்படிச் சரியாகும்? உங்கள் உடம்பில்
இதமான, மென்மையான மருந்தை
பிற்காலத்தில் தடவுவதற்கு இப்போதே ஏன் உங்கள் உடலில் காயங்களை ஏற்படுத்த வேண்டும்? அவ்வாறு ஏற்படுத்துபவர் (கடவுள்) நியாயவானா?
எல்லாம்
வல்ல கடவுள் ஆறு நாட்கள் ஏன் உலகைப் படைக்க வேண்டும்? வெறும் வார்த்தையால்
படைக்கும் ஆற்றல் உள்ள அக்கடவுள் ஒரே நாளில் படைத்திருக்கலாம் அல்லவா? படைத்தது எல்லாம்
நன்றாக இருந்தது என்கிறாரே? இங்கு எது
நன்றாக இருக்கிறது?
நோய், பட்டினி, ஏழ்மை, கொடுமை, ஆதிக்கம், சுரண்டல், பதுக்கல், கொள்ளை எல்லாம் இருக்கும்போது எல்லாம் நன்றாக இருக்கிறது என்று எப்படிக் கூறலாம்?
முற்பிறவியில்
பாவம் செய்தவர்க்கு இப்பிறவியில் தண்டனை கொடுத்தால், அந்தப் பாவத்திற்குத்தான் இப்போது தண்டனை அனுபவிக்கிறோம் என்பது அவருக்குத் தெரியுமா? அத்தண்டனை அவரை
உணரச் செய்யப் பயன்படுமா? அந்தந்தப் பிறவியில்
தண்டனை கிடைத்தால்தானே அவரால் உணர முடியும்?
ஓர் ஏழை, கல்வியில்லாதவன், தாழ்ந்த ஜாதியில் பிறந்ததால் வெறுத்து ஒதுக்கப்பட்டவன். கல்வி மறுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, வெறுக்கப்பட்டு, சமூக இழிவுகளைச் சுமந்து வேதனைப்படுபவன் கொதிப்படைந்து குற்றம் செய்கிறான் என்றால், இந்தக் குற்றத்திற்கு
யார் பொறுப்பு? சமுதாயமா? சமுதாயத்தைப்
படைத்த கடவுளா? அல்லது அவனா? குற்றம் செய்ய அவனை நெருக்குகின்றவர்களை விட்டுவிட்டு அவனுக்குத் தண்டனை கொடுக்கலாமா?
மதக்
கொள்கைகள் எல்லாம் சமூகத்தில் செல்வாக்குப் பெற்று இருப்பவர்களின் கண்டுபிடிப்புகளே. அவர்கள் அபகரித்து வைத்திருக்கின்ற அதிகாரம், செல்வம், உயர்தகுதி
இவற்றை, மதக் கொள்கைகளின்
உதவியால் நியாயப்படுத்திக் கொள்ளவும், பாமரர்களை ஏய்க்கவும்
உருவாக்கப்பட்டவையே!
எல்லாம்
வல்ல கடவுள் ஒரு மனிதன் பாவம் செய்யும் போதே தடுத்து நிறுத்துவதில்லையே ஏன்? இது
அவருக்கு மிக எளிதான காரியமாயிற்றே! பல்லாயிரக்கணக்கான உயிர்களை அழிக்கும் போர், இயற்கைச் சீரழிவுகளை
சர்வவல்லமை உடைய கடவுளால் மிக எளிதில் தடுத்துவிட முடியுமே ஏன் தடுப்பதில்லை? வல்லமையிருந்தும் தடுக்காமல் இருக்கும் அவரல்லவா எல்லோரையும் விடக் கொடியவர், மோசமானவர், பாவம்
செய்பவர்?
கடவுள்
விரும்புகிறார் என்பதால் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நடைபெற விரும்பவில்லை. அவர்கள் அதிகாரத்தையும் ஆயுதத்தையும் வைத்திருப்பதாலே நடைபெறுகிறது!
ஒரு நாட்டின்மீது இன்னொரு நாடு ஈவிரக்கமற்ற சுரண்டலை வெற்றிகரமாகச் செய்து கொண்டிருக்கிறது. கடவுள் எங்கே இருக்கிறார்? இருந்தால் இதைத் தடுக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறார்? அப்படி இருந்து இவற்றை வேடிக்கைப் பார்க்கிறார் என்றால், நீரோ மன்னன், செங்கிஸ்கான் மன்னன் போன்ற கொடுங்கோலர்களைவிட அவர் (கடவுள்) மோசமானவர். எனவே, முதலில் அவரை (கடவுளை) ஒழித்துக் கட்டுங்கள்.
கடவுள்
இல்லாமல் இந்த உலகம் எவ்வாறு தோன்றியது? என்று நீங்கள்
கேட்கிறீர்கள். இது ஓர் நீண்ட கால நிகழ்வு. பூமி உருவாவதில்
நடைபெற்ற இயல்பான வளர்ச்சியே, உயிர்கள் தோன்றி பரிணாமம் பெற்றதிலும் நடந்துள்ளது. டார்வின் எழுதிய உயிரினங்களின் தோற்றம் (Origin
of species) என்ற
நூலைப் படியுங்கள். மனிதனின் தோற்றத்திற்குப் பின், நடைபெற்று வரும்
வளர்ச்சி, முன்னேற்றங்கள் எல்லாம், மனிதன்
இயற்கையோடு நடத்தி வரும் இடைவிடாத போராட்டங்களின் விளைவாகவும், அவனது முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகவும் ஏற்பட்டவையாகும்.
கடவுள்
இல்லையென்றால், கடவுள் நம்பிக்கை மக்களிடையே எப்படி வந்தது என்று நீங்கள் கேட்கலாம். இதற்கு என்னுடைய
சுருக்கமான பதில் இதுதான்: பேய் பிசாசுகள்
இருக்கிறது என்று எப்படி நம்பினார்களோ, அதுபோலத்தான் கடவுள் உண்டென்றும் நம்பினார்கள்.
கடவுள்
தோற்றுவிக்கப்பட்டதற்குரிய காரணம் என்னைப் பொறுத்தவரை இதுதான் என்று கூறும் பகத்சிங் கீழ்க்கண்ட கருத்தைக் கூறுகிறார்:
தனக்கு
இருக்கும் வரம்புகளை உணர்ந்துகொண்ட மனிதன், தனது பலவீனங்களையும், பற்றாக்குறையையும் கணக்கில் கொண்டு, கடும் சூழல்களை, சோதனைகளை எதிர்கொள்ளவும், செல்வச் செழிப்பில் தேவையான துணிவைக் கொடுப்பதற்காக (உருவாக்கிக் கொள்வதற்காக) கடவுள் என்ற கற்பனையை கற்பித்துக் கொண்டான். கற்பித்த கடவுளுக்கு
இயல்புகளையும் இவனே கற்பிக்கின்றான். தான் மற்றவர்களால் கைவிடப்படும் போது, தனக்கு ஆதரவாக
இருப்பதாக எண்ணி மனதைத் திடப்படுத்திக் கொள்ள அவனுக்குக் கடவுள் தேவைப்பட்டது.
மதத்தின்
குறுகிய கண்ணோட்டத்தையும், உருவ வழிபாட்டையும் எதிர்த்துப் போராடுவதுபோலவே, கடவுள் நம்பிக்கையையும் எதிர்த்துப் போராட வேண்டும். தன்னம்பிக்கையுடனும், மன
உறுதியுடனும் அஞ்சாது எதையும் எதிர்கொள்ளும் ஒருவருக்குக் கடவுள் தேவையற்றது. அந்த நிலையை ஒவ்வொருவரும் பெற வேண்டும்.
நான்
எனது கடைசி மூச்சு இருக்கும் வரை தூக்குமேடையில் கூட நான் நாத்திகனாகவே நிற்பேன்!
- (ஆதாரம்: தியாகி பகத்சிங்கின்
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் சிவவர்மா, 1986 வெளியீடு)
தூக்குக்
கயிற்றை நெருங்கிக் கொண்டிருந்த பகத்சிங் தனக்குப் பின் தங்களுடைய புரட்சி இயக்கம் முடங்கிவிடக்கூடாது என்ற துடிப்பில், இவ்வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற படுகேஷ்வர் தத்துக்கு ஒரு கடிதம் எழுதினார்.
மத்திய
சிறைச்சாலை,
லாகூர்,
நவம்பர்,
1930
அன்புச்
சகோதரனுக்கு,
தீர்ப்புச்
சொல்லிவிட்டார்கள். எனக்கு மரண தண்டனை விதித்துள்ளார்கள். இச்சிறைச்சாலையில் என்னைப் போலவே தூக்கிலிடப்படுவதற்காகக் கைதிகள் பலர் உள்ளனர். தூக்குக் கயிற்றிலிருந்து
தப்பிவிட வேண்டும் என்பதுதான் இவர்களின் ஒரே பிரார்த்தனை...
நான்
அக மகிழ்வோடு தூக்கு மேடையில் தாவி ஏறுவேன். (கொள்கைக்காக) நோக்கத்திற்காகத் தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்யும் புரட்சியாளர்களின் நெஞ்சுரம், எப்படிப்பட்டது என்று இவ்வுலகிற்கு
உணர்த்துவேன்.
உனக்கு
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீ உயிருடன் வாழ இருக்கிறாய். நீ வாழும் காலத்தில், புரட்சியாளர்கள் தங்கள் இலட்சியத்திற்காக
உயிரை விடுபவர்கள் மட்டுமல்ல; எத்தனை பேரிடர்கள்
எதிர் வந்தாலும் அதை வீரத்துடன் தாங்கக் கூடியவர்கள் என்பதை இந்த உலகிற்கு நீ உணர்த்த வேண்டும்.
உலகத்தின்
வேதனைகளிலிருந்து தப்பிச் செல்வதற்கான வழியாக மரணம் இருக்கக்கூடாது. எதிர்பாராத விதமாக மரண தண்டனையிலிருந்து தப்பி, ஆயுள் தண்டனை
பெற்ற புரட்சியாளர்கள், தூக்குக் கயிற்றை சந்திக்கும் உறுதியும் பெற்றவர்கள்; இருட்டுச் சிறையில் இழைக்கப்படும் மிகக் கொடிய சித்ரவதைகளையும் தாங்கக் கூடியவர்கள் என்பதை இந்த உலகிற்கு வாழ்ந்து காட்ட வேண்டும்.
உன்
பகத்சிங்
- (ஆதாரம்: தியாகி பகத்சிங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்
சிவவர்மா,
1986 வெளியீடு)
கடைசிக் கடிதம்
பகத்சிங்
உட்பட மூன்று இளைஞர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதும் நாடே கொந்தளித்தது. அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று, நாட்டு மக்கள்
அனைவரும் ஒரே குரலில் கோரிக்கை எழுப்பினர். இரத்தத்தால் கையொப்பம் இடப்பட்ட இலட்சக்கணக்கான மனுக்கள் ஆங்கில அரசுக்கு அனுப்பப்பட்டன.
காந்தி-இர்வின் ஒப்பந்த நிபந்தனைகளில் ஒன்றாக, பகத்சிங், இராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவரின் தூக்குத் தண்டனையும், ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, சேர்க்கப்பட வேண்டும்
என்று காங்கிரஸ்காரர்கள் பலர் கோரிக்கை வைத்தனர். காந்தியடிகள் நினைத்தால்
இந்த மூன்று இளைஞர்களையும் காப்பாற்ற முடியும் என்று எல்லோரும் நம்பினர். ஆனால், 05.03.1931 அன்று
கையெழுத்தான காந்தி இர்வின் ஒப்பந்தத்தில் இவர்கள் விடுதலைப் பற்றி ஒரு வார்த்தைக்கூட இடம் பெறவில்லை. வன்முறையில் ஈடுபடா
குற்றங்களுக்குச் சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று மட்டுமே அவ்வொப்பந்தத்தில் எழுதப்பட்டிருந்தது.
எழுச்சியும், தியாகமும், உறுதியும், வீரமும், நாட்டுப்பற்றும் கொண்ட ஒப்பற்ற மூன்று இளைஞர்களின் உயிர்களைக் காப்பாற்ற காந்தியார் தவறிவிட்டார் என்ற குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் எழுந்தது. காங்கிரஸில் இருந்த
இளைஞர்கள், காங்கிரஸில் இருந்த
பெரும்பான்மை உறுப்பினர்கள், பொதுமக்கள் என்று எல்லோரும் கொதித்துப் பொங்கினர்.
இந்த
ஒப்பந்தம் 29.03.1931இல் கராச்சி மாநாட்டில் நிறைவேற்றப் பட்டால்தான் செல்லுபடியாகும் என்ற நிலையிருந்ததால், அதற்கு முன்னமே அவசர அவசரமாக தூக்குத் தண்டனையை நிறைவேற்றிவிட ஆங்கில அரசு முடிவு செய்தது. எனவே,
23.03.1931 அன்றே
தூக்குத் தண்டனையை நிறைவேற்ற அது முடிவு செய்தது.
எனவே, கராச்சி மாநாட்டிற்குக் காந்தியார் சென்றபோது அவருக்கு மக்கள் கருப்புக்கொடி காட்டினர்; எதிர்ப்பு முழக்கங்களை
எழுப்பினர். இந்திய வரலாற்றில், காந்தியின் வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வு. காரணம் காந்திக்கு
எதிரான கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் இது. காந்தியின்
குற்றம் குத்திக் காட்டப்பட்டதோடு, பகத்சிங்மீது மக்களுக்கிருந்த பற்றும் பறைசாற்றப்பட்டது. பகத்சிங் பசும்பொன் என்பதும் மாற்றுக் குறைந்தார் மகாத்மா என்பதும் இதன் மூலம் உறைத்துக் காட்டப்பட்டது.
காந்தி
காப்பாற்ற முயன்றார். ஆனால், இர்வின்
பிரபு ஒத்துக்கொண்டபோதும், பஞ்சாப் மாகாண அதிகாரி ஒத்துக்கொள்ளவில்லை என்பன போன்ற காரணங்கள் கூறப்பட்டன என்றாலும், மதிப்பில்லா, இணையில்லா
ஒரு புரட்சியாளனை இந்த நாடு இள வயதிலே இழந்ததற்குக் காந்தியைப் போன்ற தலைவர்களின் பொறுப்பின்மையும், பகத்சிங்கின் சிறப்பும் திறனும் அவர்களால் புரிந்து கொள்ளப்படாமல் போனதும், அவர்களிடையே இருந்த
பத்தாம்பசலிக் கொள்கைகளுமே காரணம்.
அம்மூவரும்
உயிர் வாழ விரும்பவில்லை என்று காந்தியடிகள் சமாதானம் கூறினார். உயிர் வாழ
ஏன் விரும்பவில்லை? அவரது உன்னத இலட்சியமும், அணுகுமுறையும், சமதர்ம நோக்கும், முதலாளித்துவத்தை வீழ்த்த வேண்டும்
என்ற அவரது தீவிரமும் காந்தி போன்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, நாடு தழுவிய போராட்டமாக அது மாறவில்லை என்பதால், தாங்கள் இறந்தாவது
அந்தக் கொள்கையைப் பரவச் செய்ய நினைத்தனர் என்பதே உண்மை. இதைப் பின்வரும்
அவருடைய இறுதிக் கடிதத்திலே சுட்டுகிறார். வாழ்ந்து, புரட்சியின் மூலம்
ஆதிக்கத்தை வீழ்த்தி, சமத்துவத்தை விடுதலையைப்
பெற வேண்டும்; இல்லையென்றால், இறந்தாவது
எழுச்சியைத் தூண்ட வேண்டும் என்பதே அவர் முடிவு.
பணக்காரர்களின்
நிழலிலே நின்ற காந்தியால், பகத்சிங்கின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள இயலவில்லை. நேரு அனுசரித்து
நடந்துகொண்ட நல்ல பிள்ளையாய், செல்லப் பிள்ளையாய் மாறிப் போனார்.
ஆம். நேதாஜியின் கொள்கையும் நேருவுக்குப் பிடித்தது; பகத்சிங்கின் கொள்கைகளும்
நேருவுக்குப் பிடித்திருந்தன. ஆனால், இவர்களைப்போல் நேரு
வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற தெளிவான நிலைப்பாட்டை எடுக்காமல், வளைந்து கொடுத்தும், சமரசம் செய்து கொண்டும், காந்தியோடு ஒத்துப்போய், இரண்டு புரட்சியாளர்களையும் விட்டுக் கொடுத்தார்.
இந்த
இரண்டு புரட்சியாளர்களும், உயர்த்தி நிறுத்தப்பட்டிருந்தால், இந்தியாவின் எதிர்காலமே மாறியிருக்கும். ஏன் உலக வரலாற்றையே மாற்றியிருப்பர். ஆம், ஆங்கில
ஆதிக்கத்திற்கும், அமெரிக்க ஆதிக்கத்திற்கும் முடிவு கட்டியிருப்பர். இந்த இரண்டு இணையில்லா புரட்சியாளர்களின் இலக்கு அதுவாகவே இருந்தது.
உறுதியான
மரம் ஒடிந்து சாயும்; வளையும் நாணல்
வளர்ந்து வரும் என்பது வரலாற்றிலும் உறுதியானது. நாணல் கரையைக் காக்குமே தவிர, மதிப்புமிக்கப் பொருட்களை உருவாக்கப்
பயன்படாது. ஆம்,
நாணல் தலைவர்களால் இந்த நாட்டின் உரிமை காக்கப்பட்டதே தவிர, வளர்ச்சியும் முன்னேற்றமும்
முடக்கப்பட்டன. ஆனால், மரம் போல்
நின்ற மகத்தான தலைவர்கள், கொள்கை உறுதியால்
ஒடிந்து மடிந்தனர்; நாணல் தலைவர்களே
நமக்குக் கிடைத்தனர்.
பகத்சிங்கின்
அருமை தெரிந்த தோழர்கள், அவர் உயிர்
வாழ விரும்புகிறாரா? என்று கேட்டு, சீட்டு அனுப்பினர். அக்கேள்விக்கு அந்த புரட்சியாளன் அளித்த பதில் கடிதமே அவரது கடைசிக் கடிதமானது.
22.03.1931
தோழர்களே,
வாழவேண்டும்
என்ற ஆசை இயற்கையானதே. அது என்னிடமும் உள்ளது. அதை நான்
மறைக்க விரும்பவில்லை. ஆனால் அந்த ஆசை நிபந்தனைக்கு உட்பட்டது.
ஒரு
சிறைக்கைதியாக, நிபந்தனை வரம்பிற்குள் உட்பட்டு வாழ எனக்கு விருப்பமில்லை. உயிர் வாழ்ந்தாலும் எட்ட முடியாத உயரத்தில், நான் புரட்சிக்
கட்சியின் கொள்கையாலும், தியாகங்களாலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளேன். புரட்சியின் அடையாளச் சின்னமாக நான் இப்போது நிற்கிறேன். விடுதலையடைந்து வெளியில் வந்தால் அச்சின்னம் களங்கப்பட வாய்ப்புண்டு. அல்லது அது முற்றிலுமாக மறைந்தும் போகலாம். என்னிடமுள்ள பலவீனங்களால்
இவை நிகழலாம்.
ஆனால், இன்றுள்ள புரட்சி மற்றும் எழுச்சி அடையாளங்களோடு, புன்முறுவல் பூக்கும் துணிவோடு நான் தூக்குமேடையேறினால், அது இந்தியத் தாய்மார்களின் உணர்வுகளைத் தூண்டும், தங்கள் பிள்ளைகளும்
என்னைப்போல் ஆக வேண்டும் என்று விரும்புவார்கள். இதன் மூலம் தியாகம் செய்ய தயாராய் இருக்கும் புரட்சியாளர்களின் எண்ணிக்கை உயரும். அதன்பிறகு, புரட்சிப்
பேரலையை ஏகாதிபத்தியம் எதிர்கொள்ள இயலாமல் போகும். அப்போது அவர்கள்
ஆயுதங்களைக் கொண்டு தடுக்க முயன்றாலும் அது முடியாது போகும்.
ஆம். ஒரு கருத்து என்னை இன்றைக்குக்கூடத் துளைத்துக் கொண்டிருக்கிறது.
மனித
இனத்திற்கும், என் நாட்டிற்கும் ஏதாவது செய்ய வேண்டிய இலட்சியங்களை என் உள்ளத்தில் நாளும் வளர்த்தேன். ஆனால், அதில் ஆயிரத்தில்
ஒரு பங்கைக்கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை. ஒருவேளை நான் உயிரோடிருந்தால் அதை நிறைவேற்றக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைக்கலாம். நான் சாகக்கூடாது என்ற எண்ணம் என் உள்ளத்தில் உண்டாகும் என்றால், அது இந்த
நோக்கத்திற்காக மட்டுமே உருவாகும்.
இந்நாட்களில்
என்னைப் பார்த்து நானே பெருமைப்பட்டுக் கொள்கிறேன். கடைசிக் கட்ட சோதனைக்காக நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். அந்த நாள் வெகு விரைவில் வரவேண்டும் என்றும் விரும்புகிறேன்.
உங்கள் தோழன்,
பகத்சிங்
ஆதிக்கம்
அழிந்த, விடுதலைப் பெற்ற, சமதர்ம நாடாக இந்நாடு திகழ வேண்டும் என்பதே அவரது இலக்கு, எண்ணம், விருப்பம்
எல்லாமும். அதற்கான திட்டத்தை
அவர் வைத்திருந்ததையும், அதற்குரிய தகுதி அவருக்கு இருந்ததையும், அவரைப்போல அறிவுநுட்பம், திறமை, தியாகம், வீரம், துணிவு மிக்க ஒருவரை, ஒருசேர இயற்கைப்
பெற்றவரை, கோடியில்கூட தேடிப்
பிடிக்க முடியாது என்பதை ஆங்கில ஆட்சியாளர்கள் துல்லியமாகக் கணித்து வைத்திருந்தனர். அவருக்கு மரண தண்டனை விதித்தது அவர் செய்த குற்றத்திற்காக அல்ல. அவரை ஒழித்துக்
கட்டியே தீரவேண்டும் என்ற அவர்களது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளவே. அவர் உயிரோடு
இருந்தால் எதிர்காலத்தில் லெனினைப் போன்ற ஒரு பெரும் புரட்சியைச் செய்வார் என்பதே அவர்களின் அச்சம்.
23 வயதிலே இத்தனை திறமை, இத்தனை நுட்பம், இணையற்ற தீரம் இருக்கிறது என்றால், வாழவிட்டால், அவர்களின்
ஆதிக்கம் தூள் தூளாகிவிடும் என்பதை ஆங்கிலேயர்கள் திட்டவட்டமாக கணக்கிட்டு வைத்திருந்தனர். எனவே, அவசர அவசரமாக
அவரை தூக்கிலிட்டு விட வேண்டும் என்று விரைவு காட்டினர்.
எதிரி
எடை போட்டு அறிந்து அவரை அழிக்கத் துடித்தான். ஆனால், இந்த நாட்டுத்
தலைவர்கள், அவரது ஆற்றலையும்
அருமையையும் உணரத் தவறியதோடு, காப்பாற்றவும் தவறினர். காந்தியின் பஜனை மயக்கத்தில் காவு கொடுத்தனர்.
பகத்சிங்
வாழ விரும்பவில்லை! என்று தன் இயலாமைக்கு காரணம் கூறிய காந்தி, மகாத்மா என்ற
பட்டத்திற்கு எப்படித் தகுதியானார்? என்பதே கேள்விக்குறியாகிறது!
தற்கொலை
செய்துகொள்ளக்கூடியவர்கூட வாழ விரும்பாமல் தான் தற்கொலை செய்கிறார். அதனால், அவரைச் சாகவிடலாமா?
தற்கொலை
செய்பவரையே காப்பாற்ற வேண்டியது சராசரி மனிதன் கடமையென்னும்போது, செத்தாவது இந்த நாட்டிற்கு எழுச்சியூட்ட விரும்பும் தியாக வீரரை வாழ விரும்பாதவர் என்று வகைப்படுத்தி, சாகவிட்டது மகாத்மாவிற்கு எப்படித் தகும்?
இது
வெறும் வினாக்குறியல்ல. இதுவே பகத்சிங் கழுத்தை இறுக்கிய சுருக்குக் கயிறு என்பதை நுட்பத்தோடு ஆய்வு செய்தால் அறியலாம். அஹிம்சை மயக்கத்தில், இணையில்லா புரட்சித் தியாகிகள் எல்லாம், காந்தியாரின் கண்களுக்கு, வன்முறையாளர்களாகப்பட்டு, மதிப்பிழந்ததால்தான், காந்தியார் கருத்திலும் (உள்ளத்திலும்) அவர்கள் மதிப்பிழந்தனர். மதிப்பில்லாத உயிர்களைக் காப்பாற்ற மகாத்மா மனம் தீவிரம் காட்டவில்லை என்பதே உண்மை.
குழந்தையைக்
கொத்த வந்த பாம்பைக் கடித்து குதறிச் சாகடித்துவிட்டு, வாயில் இரத்தத்தோடு வந்த கீரியைப் பார்த்த தாய், குழந்தையைக் கடித்துக்
கொன்றுவிட்டதாகக் கருதி, விசுவாசமுள்ள கீரியை
அடித்துக் கொன்றாள் என்பது கதையில் மட்டுமல்ல, பகத்சிங் வாழ்விலும்
காந்தியார் செய்கையால் நிகழ்ந்தேறிய நிஜம்.
பரிதாபத்திற்குரிய
பாச கீரிதான், தேசத்தின் நேசத்திற்குரிய
நம் பகத்சிங். தவறிழைத்த தாய்தான்
காந்தி!
கதையில்
கீரிக்காவது பெருமை நிலைத்தது. ஆனால், இங்கு
அந்தப் பெருமையையும் தவறிழைத்தவர் அல்லவா தட்டிப் பறித்துக் கொண்டார்.
மனித
குலத்திற்கும் என் நாட்டிற்கும் ஏராளமாய்ச் செய்ய, ஏகாதிபத்தியத்தை அழிக்க என்
இதயத்தில் குறிக்கோள்களை வளர்த்தேன். அந்தக் குறிக்கோளில் ஆயிரத்தில் ஒரு பங்கைக்கூட என்னால் நிறைவேற்ற முடியவில்லை. ஒருவேளை, நான் உயிரோடு
இருந்தால், அவற்றை நிறைவேற்றுவதற்கான
வாய்ப்பு எனக்குக் கிடைக்கலாம். அதற்காக மட்டுமே நான் வாழ விரும்புகிறேன் என்று உயரிய இலட்சியத்திற்கு உழைக்கத் துடித்த ஓர் உன்னத புரட்சியாளரைக் காப்பாற்ற முடியாமல் கயிற்றிலே துடிக்க விட்டனர் இந்த நாட்டுத் தலைவர்கள்.
ஆம். அவரைத் தூக்கிலிடத் தீர்மானிக்கப்பட்ட நாள் (23.03.1931) வந்தது. அன்று மாலை
7.30 மணிக்குத் தூக்கிலிட நேரம் குறித்தனர். பொதுவாக விடியற் காலையில்தான் தூக்கிலிடுவார்கள். ஆனால், ஆங்கில ஆதிக்கவாத
அரசுக்கு அதிலும் அவசரம்.
தன்
மகனைப் பார்க்கத் துடித்த தந்தைக்குக்கூட அனுமதி மறுக்கப்பட்டது. பொழுது இருட்டியது. சிறைக் கதவுகள் அடைக்கப்பட்டன. சிறைக் கண்காணிப்பாளர்கள், நீதிபதி, காவல் துறைக்
கண்காணிப்பாளர்கள் ஓர் அறையில் இருந்தனர்.
ஏழரை
மணியை கடிகார முள் எட்டியது.
பகத்சிங், சுகதேவ், ராஜகுரு மூவரும்
அறையிலிருந்து வெளியே அழைத்து வரப்பட்டனர்.
அவர்களுடைய
கண்கள் கட்டப்பட்டன.
மூவரும்
தூக்குமேடையில் ஏறி நின்றனர்.
முதலில்
பகத்சிங்கின் கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டப்பட்டது.
வருகிறேன்
சுகதேவ்! வருகிறேன் ராஜகுரு! கலங்காத குரலில் கம்பீரமாய் விடைபெற்றார்.
பகத்சிங்
வாழ்க! சுகதேவும், இராஜகுருவும்
பலமுறை முழங்கினர். மூவர் உள்ளத்திலும் உணர்வுக் கொந்தளிப்பு.
சரியாக
மணி 7.35
இன்குலாப்
ஜிந்தாபாத்!
(புரட்சி நீடூழி வாழ்க!)
பகத்சிங்கின்
இறுதி முழக்கம் எங்கும் எதிரொலித்தது!
ஆம்
அடுத்த நொடியில் சுருக்குக் கயிறு, அந்த அரிய
புரட்சி மனிதரின் கருத்தை நெருக்கியது! இணையில்லா எதிர்காலத்தை இந்தியா இழந்தது!
அடுத்து
ராஜகுருவும், அதற்கடுத்து சுகதேவும் தூக்கிலிடப்பட்டனர்.
அவர்களின்
உடலையாவது இறுதியாகப் பார்க்கலாம் என்று எதிர்பார்த்து சிறைக்கு வெளியே காத்திருந்த உறவினர்களுக்குக்கூட காட்டாமல், இறுதிச் சடங்கிற்கு
ஏற்றிச் சென்றனர்.
இந்து
புரோகிதர் ஒருவரும், சீக்கிய புரோகிதர்
ஒருவரும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
யாருடைய
உடல்கள் என்ற விவரம் புரோகிதர்களுக்குச் சொல்லப்படவில்லை. விளக்கொளியில், இறந்தவர்களின் வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் இரத்தம் வருவதை மட்டும் அவர்கள் கண்டனர். அச்சத்தில் வாய்
தடுமாற மந்திரங்களை அவர்கள் ஓதினர். ஒரு காவலர்
உடல்களிலிருந்து ஆடைகளைக் கிழித்தான். ஒரே சிதையில் மூன்று உடல்களையும் அடுக்கினர். மேலும் கீழும் விறகு எளிதில் எரிய மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டது.
ஆதிக்கத்திற்கு
அடங்காத ஆற்றலாளர்களின் உடல்கள் அல்லவா! அடம்பிடித்து எரிய
மறுத்தன. செத்தும் எதிர்ப்பா? எரிச்சல் அடைந்த காவலர்கள், அவர்களின் உடலை
துண்டுத் துண்டாக நறுக்கி தீயில் போட்டனர்.
இரண்டு
மணி நேரம் போராடி எரித்து முடித்த சாம்பலை ஒரு கம்பளியில் அள்ளினர். சட்லஜ் ஆற்றில்
அச்சாம்பல் கரைக்கப்பட்டது.
ஓடும்
நீரில் சாம்பலாய் அவர்கள் கரைந்தாலும், ஒவ்வோர் இந்தியர் உள்ளத்திலும், ஏன் உலக மக்களின் உள்ளத்திலும் நிறைந்து உணர்வூட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
வாழ்க
பகத்சிங்கின் புகழ்!
எரியும்போது
ஒன்றாக எரிந்து, சாம்பலாய் ஒன்று
கலந்த அம்மூவரும்.
எனவே, பகத்சிங்கோடு கலந்து சுகதேவும் இராஜகுருவும் என்றென்றும் புகழ் பெறுவர்!
வாழ்க பகத்சிங்
புகழ்!
நூல் - மறைக்கப்பட்ட மாமனிதர்கள்
ஆசிரியர் - மஞ்சை வசந்தன்
Comments
Post a Comment