பெம்மான் பசவர் (கி.பி.1131-1167)




பலரும் கேள்விப்படாத பெயர். ஆனால் அவருக்கு இணையான ஒரு புரட்சியாளரைப் பார்ப்பது இயலாது. இன்றைக்கு உலகில், குறிப்பாக இந்தியாவில் எதுவெல்லாம் புரட்சியென்றும், சீர்திருத்தம் என்றும் பேசப்படுகிறதோ, செய்யப்படுகிறதோ, அவற்றை 850 ஆண்டுகளுக்கு முன் செய்து காட்டியவர். அதுவும், ஜாதிக் கொடுமையும், மூடநம்பிக்கை முடைநாற்றமும் வீசிய இந்தியாவில் செய்து காட்டினார் என்றால் அவருக்கு  இணை சொல்வது எப்படி?

20ஆம் நூற்றாண்டின் புரட்சியாளரான தந்தை பெரியார் அவர்களே, பெம்மான் பசவரின் கொள்கைகளை, புரட்சித் திட்டங்களை அறிந்து, வியந்து பாராட்டியிருக்கிறார். 12ஆம் நூற்றாண்டிலே இப்படியொரு புரட்சிச் சிந்தனையாளரா? என்று பூரித்துப் போயிருக்கிறார்.

பெம்மான் பசவர் பெரும்புரட்சியை அறிந்து, மறைமலை அடிகளார் மலைத்துப் போயிருக்கிறார்மனமாரப் பாராட்டியிருக்கிறார்.

1924ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் உரையாற்றிய காந்தியார், நான் எவற்றை இச்சமுதாயத்தின் முன்னேற்றங்கள் என எண்ணுகிறேனோ, எதைச் சிந்தித்துக் கொண்டிருக்கிறேனோ, இந்திய மக்கள் மட்டுமல்ல உலகம் உய்ய வழி எது என்று நானும், மற்ற எல்லாரும் இன்று தேடிக் கொண்டிருக்கிறோமோ அதை 12ஆம் நூற்றாண்டிலேயே பெம்மான் பசவர் இந்த நாட்டில் செய்து முடித்திருக்கிறார். அஹிம்சை, தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றைக் கைக்கொண்டு வெற்றியும்கண்டார். ஹரிஜன் முதல் அனைவரையும் கோடிக்கணக்கில் வீர சைவர்களாக ஒன்றுபடுத்திவிட்டார். இவ்வுலகில் சீர்திருத்தத் தலைவர்கள் எல்லோருக்கும் ஒரு சிறந்த வழியை, உன்னத நெறியை அவர் காட்டியிருக்கிறார் என்று பசவரைப் போற்றினார்.

பசவரின் பொன்மொழிகள் வருணாசிரம முறைகளைக் களையும் கூர்வேல்கள்! குத்தீட்டிகள்! அவர் தம் முழு வாழ்க்கையையும், மக்களிடமிருந்த மூடவழக்கங்களையும், அறியாமையையும் களைந்து அழிப்பதற்கே செலவிட்டார்... என்கிறார் வீரசைவ இயக்க அமைப்பாளர் வேலா.இராசமாணிக்கம்.

திருவள்ளுவர், மகாவீரர், புத்தர் போன்ற அறிவுசார்ந்த புரட்சியாளர்கள் வரிசையில் வைத்து எண்ணத்தக்கவர் பெம்மான் பசவர் அவர்கள்.

ஆனால் அவர் பெயர், அவர் செய்த புரட்சிகள், அவர் செயற்படுத்திய சீர்த்திருத்தங்கள் முழுவதும் மறைக்கப்பட்டு விட்டன - அல்லது மறக்கப்பட்டுவிட்டன.

மனிதநேயம் வளர்த்த, அதுவும் வருணாசிரமம் வளர்ந்து கோலோச்சிய கொடுமையான காலத்தில் அதற்கு எதிராகப் போர்த்தொடுத்த ஒரு மாமனிதர் மறைக்கப்படக்கூடாது மறக்கப்படக்கூடாது என்பதற்காகவே அவரின் ஒப்பற்ற பணிகளை, உன்னதக் கொள்கைகளை உங்கள் முன் பெருமையுடன் வைப்பதில் பெருமகிழ்வும் பெரும்நிறைவும் கொள்கின்றேன்.

பெம்மான் பசவர் பிறப்பு

கி.பி.1131 ஆம் ஆண்டு வைகாசி மாதம் - பிஜப்பூர் மாவட்டம் பாகவாடியைச் சேர்ந்த இங்குனேசுவர பாகவாடி என்னுமிடத்தில் பிறந்தார்.

வைதிக வருணாசிரமக் கொள்கையைக் கொண்டு வாழ்ந்த மாதராசையா என்பவருக்கும் அவர் மனைவி மாதவாம்பிகைக்கும் மகனாகப் பிறந்தவர் பசவர்.
இளமையிலேயே பெற்றோரை இழந்ததால், தாய்வழிப் பாட்டியால் வளர்க்கப்பட்டார். இதில்ஒரு வியப்பு என்ன வென்றால், அந்தப் பாட்டியாரே வருணாசிரமக் கொள்கையை வன்மையாக வெறுத்தவர். அவர் வளர்த்த காரணத்தினால், அக்கொள்கை பசவர் உள்ளத்தில் ஊன்றி வளர்ந்தது.

நாடு முழுவதும் வருணாசிரமக் கொள்கை கோலோச்சிக் கொண்டிருந்த வேளையில் சூழலில், தென்னாட்டில் வருணாசிரமமும் சமணமும் மோதிக் கொண்டிருந்த நிலையில், ஆரிய ஆதிக்கம் உச்சநிலையில் ஆட்சி செலுத்திக் கொண்டிருந்த காலத்தில் பசவர் பிறந்தார்; வளர்ந்தார்;

பூணூல் பூணா புரட்சி

பசவர் எட்டு வயதை எட்டியபோது, வைதீக வருணாசிரமச் சம்பிரதாயப்படி அவருக்குப் பூணூல் பூணும் சடங்கிற்கு ஏற்பாடு செய்தனர். அந்தப் பிஞ்சு வயதிலே அவருக்கு அதில் விருப்பம் இல்லை. மாறாக வெறுத்தார். இது எதற்கு? ஏன் அணிய வேண்டும், ஏன்  எல்லோரும்  அணியவில்லை? அவர்கள் அணிய முடியாததற்கு என்ன காரணம்? அதனால் என்ன பயன்? அதற்கு ஏன் விழா? அதற்கு ஏன் சடங்கு? என்று அவருக்குள் அடுக்கடுக்காய் கேள்விகள் பிறந்தன. அடுத்தவர்களிடமும் அக்கேள்விகளைக் கேட்டார்.

என்றாலும், உறவினர்கள் பிடிவாதமாக பூணூல் பூணும் சடங்கிற்கு ஏற்பாடு செய்தனர். வருணாசிரம முறைப்படி யாகம் செய்யப்பட்டது. வேத மந்திரங்கள் ஓதப்பட்டன. பசவரை அழைத்து வந்து, அவருக்குப் பூணூல் அணிவிக்க வருணாசிரமக் குருக்கள் முற்பட்டனர்.

ஆனால், ஆவேசத்துடன் எழுந்த எட்டே வயதான பசவர், நீங்கள் அணிவிக்கும் பூணூலைநான் ஏற்க மாட்டேன்! ஜாதிக் கொடுமைகளுக்கும் அர்த்தமற்ற சடங்குகளுக்கும் இடமில்லாத வீர சைவத்தை நான் ஏற்றுக் கொண்டுள்ளேன். எனவே வருணாசிரமத்தை நான் ஏற்க மாட்டேன். என்று கூறி பூணூல் அணிய மறுத்துவிட்டார்.

முளைத்து மூன்று இலை விடவில்லை. இதற்குள் என்ன இத்தனைப் பிடிவாதம்! இத்தனை எதிர்ப்பு! என்று உறவினர்களும் வருணாசிரமப் பேர்வழிகளும் கொதித்தனர்.

ஆனால், கர்நாடகத்தைச் சேர்ந்த பசவரின் தாய்மாமன் பலதேவர், பசவரின் செயலையும், அவர் கூறிய கருத்துக்களையும் ஏற்றுக் கொண்டார்; பசவருக்கு ஆதரவாக நின்றார்.

பலதேவர், கர்நாடகாவைச் சேர்ந்த கல்யாணபுரிவை ஆண்ட பிச்சலன் என்ற மன்னரின் அமைச்சர். தனது சகோதரியின் மகன் பசவர் இச்சிறு வயதிலேயே, இவ்வளவு மதிநுட்பத்தோடும், அச்சமற்ற துணிவோடும், மனிதநேயத்தோடும் இருப்பது கண்டு, பேசுவது கண்டு, செயல்படுவது கண்டு பெருமை கொண்டார். அவனுக்குத் தாய்மாமனாக இருப்பது தனக்குப் பெருமையளிக்கிறது என்றார்.

கூடல் சங்கமம் சென்று கொள்கை பரப்புதல்

வீரசைவம் என்பது இறைநம்பிக்கை ஒன்றைத் தவிர மற்ற வகையில் முழுமையான புரட்சிச் சிந்தனைகளை, மனிதநேயக் கருத்துக்களை உடையது.

கடவுளை அவனது பிள்ளைகளான மக்கள் அனைவரும் அடையலாம்கடவுளை நேரடியாக வணங்க அனைவருக்கும் உரிமை உண்டு. உடலே கோயில்; கோயிலைத் தேடி அலையத் தேவையில்லை.

பொருளற்ற ஆசாரங்களும் சடங்குகளும் கடவுளையும் மக்களையும் பிரித்து வைக்கின்றன.

அகவழிபாடே பக்தி. ஆரவாரம் பூசைகள் பக்தி அல்ல. சொல்லும் செயலும் ஒன்றாக உள்ள உள்ளத்தில் கடவுள் இருக்கிறது.

சத்தியம் பேசுவதே சொர்க்கம். தீமை பேசுவதே நரகம்.
அடங்காத மனதை அடக்க வேண்டும்; பிறர் மனைவியைத் தாயாகக் கருத வேண்டும்.
உன் செருக்கு உன்னை அழிக்கும்.
வருணாசிரம முறைகளைத் தவறு எனக் கொண்டு வாழ்பவரே வீர சைவர்.
வீர சைவருக்கு ஜாதி வேற்றுமைகள் இல்லை. ஆண் பெண் இருவரும் சமம். பெண்களுக்கும் வழிபாட்டுரிமை உண்டு.

விதவை மணம் வீரசைவத்திற்கு ஏற்புடையது.

வீர சைவர்க்குத் திதி திவசப் புரோகிதச் சடங்குகள் ஏதும் இல்லை.
உழைத்து வாழும் தகைமையும் அன்பு, அறம், நற்பண்பு, நற்பணி செய்தல் ஆகிய குணங்களையும் உடையவர் எவரோ அவரே பெரியவர். மற்றபடி குடும்ப வழி, குலவழி, ஜாதி வழி பெரியவர் என்பதெல்லாம் இல்லை.

எக்காரணங்கொண்டும் வருணாசிரமக் கருத்துடைய புரோகிதரைத் தம் வீட்டு விழாக்களில் வீரசைவர்கள் கொண்டு வரக்கூடாது.

திருமணம் போன்ற விழாக்களில் புரோகிதர் கூடவே கூடாது.

அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல், அக்னி வளர்த்தல் திருமணத்தில் கூடாது.

குழந்தை மணம் கூடவே கூடாது

வீரசைவர்கள் அவரவர் தாய்மொழியிலேயே கடவுளை வணங்க வேண்டும். தங்களுக்குப் புரியாத மொழிகளில் எதுவும் செய்தல் கூடாது.

ஆணவம் ஆதிக்கம் மேற்படும்போது, வீரங்காட்டத் தயங்கக் கூடாது.

இப்படிப்பட்ட உயரிய கொள்கைகள் வீரசைவத்தில் வலியுறுத்தப்பட்டு, வாழ்க்கை முறையாகக் கொள்ளப்பட்டதால், பெம்மான் பசவர்க்கு இளம்வயதிலே இக்கொள்கையில் நாட்டம் ஏற்பட்டு அதையே வாழ்க்கை நெறியாகக் கொண்டார்.
இந்த நெறியின்பால் அளவற்ற ஈடுபாடு கொண்டதால், பசவர் தம் பதினாறாம் வயதில், வீட்டைத் துறந்து, கிருஷ்ணா நதியும், மாலப்பிரபா நதியும் கூடும் கூடல் சங்கமம் என்ற ஊரை அடைந்தார். அவ்வூரின் சூழல் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இவருடைய அறிவுக்கூர்மையையும், கொள்கைத் தெளிவையுங் கண்ட துறவிகள் இவரைச் சூழ்ந்து கொண்டனர். வீர சைவக் கொள்கையை விரிவாகப் பேசி அனைவரையும் தெளிவடையச் செய்தார்.

பசவரின் திருமணம்

பசவரின் அறிவுத் திறத்தையும், அஞ்சா நெஞ்சையும் கொள்கைப் பிடிப்பையுங் கண்டு பூரித்துப் போன தாய்மாமன் பலதேவர், தன் மகள் கனகாம்பிகையைப் பசவருக்கு மணம் முடிக்க விரும்பி, கல்யாணபுரிக்கு வரவழைத்தார். பசவரும் அழைப்பை ஏற்று கல்யாணபுரிக்குச் சென்றார். தம் கொள்கைக்கு ஆதரவாக நிற்கும் தாய்மாமன் பெண்ணை மணந்து வாழ்வதால், கொள்கைகளை நடைமுறைப்படுத்த வாய்ப்பாக இருக்கும் என்றும் எண்ணினார்.

ஒரே நாளில் தம் மகளின் திருமணத்தைப் பலதேவர் சிறப்புடன் நடத்தினார். செல்வாக்குமிக்க அவர் வீட்டுத் திருமணம் சிறப்புற நடைபெற்றது.

ஆரியப் பார்ப்பனர்களின் கலப்பாலும், அவர்களின் சாஸ்திர சம்பிரதாயங்களாலும் மக்களின் வாழ்வு பாழ்பட்டு நின்ற நிலையை மாற்ற வேண்டும் என்பதைத் தம் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்ட பசவர், திருமணத்திற்குப் பின் தீவிரமாக இந்தப் பணிக்காகத் தம்மை ஒப்படைத்துக் கொண்டார். மக்களிடையே காணப்பட்ட ஜாதி வேறுபாடுகளை ஒழிக்க ஓயாது பாடுபட்டார்.

மாமனார்வீட்டில் வேலையேதும் இல்லாமல் உண்டு உறங்கினால் மரியாதையில்லை என்பதை எண்ணி, மாமனார் வீட்டு வேலைகளைச் செய்தார். (விறகு உடைத்தல் போன்ற வேலைகளைப் பசவர் செய்தார்)

இல்வாழ்விலும் குறையற வாழ்ந்த பசவர் மனைவியை மகிழ்வுடன் வைத்துக் கொண்டார். இல்வாழ்வின் விளைவாய் ஓர் ஆண்குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்குச் சங்கமேசன் என்று பெயரிட்டார்.

பசவர் ஆற்றும் சமுதாயப் பணிகளையும், அவரது துணிவான நேர்மையான தூய வாழ்வையும், மக்களிடம் கொண்டுள்ள பற்றுதலையும் அறிந்த பிச்சல மன்னர் அவரிடம் அன்பும் மரியாதையும் கொண்டார். பசவருக்குப் பல்லாற்றானும் உதவிகள் செய்தார்.

முதலமைச்சர் பொறுப்பேற்றல்

இச்சூழலில் பசவரின் தாய்மாமன் இறந்து போனதால், முதலமைச்சர் பதவி காலியாய் இருந்தது. பொறுப்புள்ள, பண்புள்ள அமைச்சராய் பணியாற்றிய பலராமனின் இடத்தை வகிக்க, அவரது மருமகனும், அதற்குரிய அனைத்துத் தகுதிகளும் ஒருங்கே பெற்றவருமான பசவரே தகுதியானவர் என்று முடிவு செய்த மன்னர் அவரையே முதலமைச்சராக்க முடிவு செய்தார்.

மன்னர் விரும்பியது போலவே மக்களும் விரும்பினர். மேலும் அரண்மனையிலுள்ள அனைத்து நிர்வாகிகளிடமும் முன்னமே நற்பெயரும், மதிப்பும் பசவர் பெற்றிருந்ததால், எவ்வித கருத்து வேறுபாடும், போட்டியும் பூசலும் இன்றி பசவர் முதலமைச்சரானார்.

அமைச்சராயிருந்து ஆற்றிய பணிகள்

பசவர் அமைச்சராகப் பணியேற்றதும், அவருக்கு மாதந்தோறும் 600 பொற்காசுகள் ஊதியமாக அளிக்கப்பட்டது. அத்தொகை தம் தேவைக்கு மிக மிக அதிகம் என்று எண்ணிய பசவர், மூன்று பேர் கொண்ட சிறு குடும்பத்திற்கு இவ்வளவு பெருந்தொகை தேவை இல்லை என முடிவு செய்து அத்தொகையில் பெருந்தொகையை வீரசைவ நெறியைப் பரப்புவதற்காகச் செலவிட்டு, பெருந்தொகை விரும்பா பெருந்தகையானார்.

முதலமைச்சர் பதவியைக்கூட முதலில் பசவர் ஏற்க மறுத்தார். காரணம், அவருக்குப் பதவி நாட்டம் அறவே இல்லை. மக்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்பதிலே இலக்காக இருந்தார். ஆனால், மன்னர் வற்புறுத்தி வேண்டியதோடு, பசவரின் நிர்வாகத்தில் தலையிட மாட்டேன் என்றும், பசவர் விருப்பப்படி பணி செய்யலாம் என்றும் உறுதியளித்தார்.

மன்னரின் அன்பினை மீற முடியாமலே பசவர் பதவியேற்கச் சம்மதித்தார். வீர சைவ கொள்கைக்கு ஏற்ப மக்களுக்கு நிறைய நன்மைகளைச் செய்ய இதன்மூலம் வாய்ப்பு கிடைக்கும் என்று பசவர் எண்ணியதும் அவர் முதலமைச்சராய் பொறுப்பேற்றதற்கு முக்கிய காரணமாகும்.

ஜாதி கூடாது, சடங்கு கூடாது, கோயில் கூடாது ஆண் பெண் பேதம் கூடாது, பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை என்பன போன்ற புரட்சிக் கருத்துக்களைப் பசவர் பரப்பியபோது, நாட்டு மக்கள் அனைவரும் இவரைக் கூர்ந்து நோக்கினர். சமுதாயத்தில் அறம், ஒழுங்கு, சமத்துவம், மனிதநேயம் வளரப் பாடுபடும் ஒரு சிற்பியாக அவர் அனைவராலும் கருதப்பட்டார்.

உழைப்பே கைலாயம்!
உழைக்கும் கைகளே வணங்கத்தக்கவை
கருணைபுரிவதே தர்மத்தின் மூலம்!
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்!
என்று முழங்கினார்.

ஜாதி ஒழிப்பு வருணாசிரமத் தருமத்தில் தீண்டத் தகாதார் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களையெல்லாம் கூட்டி, அவர்களை வீர சைவர்களாக்கினார். வீரசைவர்கள் என்று ஆக்கிவிட்டால் அதன்பின் அவர்களுக்குள் ஏற்றத்தாழ்வே இல்லை; எந்தப் பேதமும் இல்லை. இம்முயற்சியின் மூலம் எல்லோரும் சமம் என்று ஆக்கினார்.

இதன்மூலம் ஜாதிக் கொடுமையில் சிக்குண்டு, அழுந்தி அடிமையான மக்கள் மானமும், விழிப்பும் பெற்ற சமத்துவ மக்களாய் மாறினர். சம உரிமையுடன் பேதமின்றி வாழ்ந்தனர். ஜாதி பாராது ஒருவருக்கொருவர் மணவுறவு கொண்டனர். மணவுறவுதான் உண்மையான ஜாதி ஒழிப்பிற்கு உகந்த வழி. எனவேதான் அம்முறையைக் கையாண்டார் பசவர்.

பகட்டையும் நகையையும் வெறுத்தல்

ஆடம்பரமாக ஆடையணிதல், பகட்டாக நகையணிதல் போன்றவற்றை சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பே பசவர் வெறுத்தார் என்றால், அவரது பகுத்தறிவுப் பார்வையின் கூர்மை எத்தகையது என்பதை உள்ளத்தால் உள்ளியே உணர வேண்டும்.

ஒருநாள், அவரது மனைவி நீலாம்பிகை உறங்கிக் கொண்டிருந்தபோது, கள்வன் ஒருவன் வீட்டிற்குள் நுழைந்து, நீலாம்பிகை கையில் அணிந்திருந்த பொன் வளையல்களை மெல்லக் கழற்றினான். விழித்துக் கொண்ட மனைவி கத்தவே, மாட்டிக் கொண்ட திருடன் பசவரிடம் வருந்தி மன்னிப்புக் கேட்டான்.

அதற்குப் பசவர், குற்றம் உன்னுடையது அல்ல, உணவின்றி திருடும் மக்கள் தவறு செய்கிறார்கள் என்று கூறுவது தவறு; பணத்திமிர்க்கொண்டு போலிப் பெருமைக்கும் பகட்டிற்கும் ஆசைப்பட்டு பொன்னகை அணிகின்றவர்களும், உயர்வகை உணவைக் கூடச் சரியாக உண்ணாமல் வீணடிக்கின்றவர்களும், பளபளக்கும் உடையணிந்து, அன்பில்லா உடம்பில் தங்கத்தையெங்கும் தொங்க விட்டு உலவுகின்றவர்களும்தான் கள்வர்கள்; நீயல்ல கள்வன் என்று கூறி, அவன் திருடிய வளையல்களை அவனிடமே கொடுத்து அனுப்பினார்.

உழைக்காது உயர்வாழ்வு வாழ்வாரே கள்வர்; வறுமையில் வழியின்றித் திருடுபவர்கள் கள்வர் அல்லர்

என்ற உண்மைத் தத்துவத்தை எப்படித் தோலுரித்துக் காட்டினார் பாருங்கள்! இங்கு, ஆதிக்க ஒழிப்பும், சுரண்டல் சாடலும், வறுமைக்கு வக்காலத்தும் மேலோங்கி நிற்பதோடு, செல்வச் செருக்கும், பகட்டும் படாடோபமும் அடித்து நொறுக்கப்பட்டன. நகை மோகம் வெறுக்கப்பட்டு, நகைக்கப்படுகிறது. 800 ஆண்டுகளுக்கு முன் 12-ஆம் நூற்றாண்டிலே இப்படி ஒரு பகுத்தறிவுப் பார்வை, மனிதநேயச் சிந்தனை, ஆதிக்க வெறுப்பு, இவர் சிந்தனையில் எழுந்து நின்று எழுச்சி தந்தது என்றால் இவரின் பெருமையை என்னென்றுரைப்பது!

உயிர்நேயம் காத்தல்

மனிதநேயத்தையும் தாண்டிய மேன்மையுடையது உயிர்நேயம். அந்தப் பண்பு பசவரிடம் பதிந்திருந்தமை ஒரு நிகழ்வின்போது வெளிப்பட்டது.

ஒருநாள், பசவர் வீட்டிலிருந்து பசுமாடுகளைச் சில திருடர்கள் ஓட்டிச் சென்றுவிட்டனர். இதை அறிந்த பசவர் திருடர்கள் பசுமாடுகளை மட்டும் திருடிச் சென்றுவிட்டனரே, அவை ஈன்ற கன்றுகளை ஓட்டிச் செல்லவில்லையே! கன்றுகளைப் பிரிந்து தாய் பசுக்கள் படும் துயரை யாரால் போக்க முடியும்? என்று வருத்தப்பட்டார்

பசுமாடுகள் திருடு போனதைப் பற்றி கிஞ்சிற்றும் கவலை கொள்ளாது, கன்றுகளைப் பிரிந்த பசுக்களுக்காகவே கவலைப்பட்டார்.

உடனே பணியாளர்களை அழைத்து, இக்கன்றுகளின் பசுக்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டிருந்தாலும் அங்குக் கொண்டு சென்று கன்றுகளை விட்டுவிடுங்கள்!... என்று ஆணையிட்டார்.

திருடர்களைக் கண்டுபிடித்து பசுக்களைக் கொண்டு வாருங்கள் என்று ஆணையிடவில்லை. மாறாகத் திருடர்களிடம் கொண்டு சென்று கன்றுகளையும் விட்டுவிடச் சொன்னார். ஆட்கள் பல இடங்களுக்கும் சென்று பசுக்களைத் தேடினர். இச்செய்தி எங்கும் பரவியது. இதைக் கேள்விப்பட்ட திருடர்கள், மனம் திருந்தி, பசவரிடம் மன்னிப்புக் கேட்டனர்.

கன்றைப் பிரிந்து பசுக்கள் படுந்துயரைக்கூடப் பொறுக்க இயலாத உயிர் நேயங்கொண்டவர் பசவர் என்பதை இந்நிகழ்வு உலகிற்கு உணர்த்திற்று. உயிர்நேயம் கொண்ட வடலூர் வள்ளல் பெருமானுக்கு இந்த பெம்மான் பசவர் முன்னோடியாகத் திகழ்ந்தார்.

கோமான்களைக் கவர்ந்த கொள்கையாளர்

கி.பி.1161-இல் சிறந்த தத்துவஞானியான அல்லமப் பிரபுதேவர் என்பவர் பசவரைப் பற்றிக் கேள்விப்பட்டு, அவரை நேரில் சந்திக்க கல்யாணபுரிக்கு வந்து, பசவரோடு உரையாடி, அவருடைய கொள்கைகளை அறிந்து தெளிவடைந்தார்.

மாசய்யா அக்கமாதேவி போன்ற சைவர்களும் பசவரைப் பற்றிக் கேள்விப்பட்டதும், அவரை நேரில் வந்து சந்தித்துக் கருத்துக்களைக் கேட்டறிந்து 

வியப்படைந்தனர். பசவரின் மனிதநேயச் செயல்பாடுகளை மனதாரப் பாராட்டினார்.

காஷ்மீர் நாட்டு மன்னன் மகாதேவ பூபாலன் பசவர் கொள்கையால் ஈர்க்கப்பட்டு கொள்கைப் பற்றின் காரணமாக அரசர் பதவியையே துறந்துவிட்டு, பசவர் இருக்கும் இடத்திற்கு வந்து அவருடன் இணைந்து பணியாற்றினார். கோலோச்சிய கோமான்களையெல்லாம், கொள்கை வீச்சால், பேச்சால் தம்பக்கம் ஈர்த்து மக்கள் பணிக்கு மடைமாற்றினார் பசவர் என்றால் அவரது சிறப்பை என்னென்று கூறுவது!
சித்தராமேசுவரர் கோலாப்பூரிலிருந்தும், மருளசங்கர தேவர் என்பவர் ஆப்கானிஸ்தானிலிருந்தும், பொம்மையா என்பவர் ஆந்திராவிலிருந்தும், சுக்ளாநி தேவர் என்பவர் ஒரிஸாவிலிருந்தும், மேலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல பெரிய மனிதர்களும் பசவரை நேரில் கண்டு கொள்கைத் தெளிவு பெற்றனர்.

நேபால், காபூல், சிங்களம் போன்ற நாடுகளிலிருந்தும் பசவரைக் காண வந்தவர்கள், அவரின் புரட்சிச் சிந்தனைகளை நேரில் கேட்டுத் தெளிவுபெற்று, அதைப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இத்தனை ஈர்ப்பிற்கும் என்ன காரணம்?

சுமார் 800  ஆண்டுகளுக்கு முன் பசவர் போல், பகுத்தறிவுப் பார்வையோடு சிந்தித்துக் கருத்துச் சொன்னதோடு, சொன்னவற்றை அப்படியே நடைமுறைப் படுத்தியவர்கள் வேறு எவரும் இலர்.

வியப்புக்குரிய, செயற்கரிய சீர்திருத்தங்களையெல்லாம் அவர் செயல்படுத்திக் காட்டவே, கேள்விப்பட்டவர்களெல்லாம், அப்படியொரு புரட்சியாளரா! என்று வியப்படைந்தனர். அவரை நேரில் காண ஆவல் கொண்டனர். மாறுபட்ட சிந்தனைகள், மக்கள் நலம் சார்ந்த புரட்சிகள், பழமைகள் தகர்க்கப்பட்டமை, சமத்துவத்திட்டங்கள், நலிந்தோர் நல திட்டங்கள் என கேட்டறியா பார்த்தறியா பணிகளையும் கொள்கைகளையும் பசவர் கொண்டிருந்ததால் அச்செய்தி அயல்நாடுகளுக்கும் விரைந்து சென்றது அதன் விளைவாகவே இவ்வளவு பெரிய ஈர்ப்பு ஏற்பட்டது.

வியப்பூட்டும் வீரப் புரட்சிகள்
ஜாதி மறுப்பு மணம்

பசவர் உயர்நிலை வாழ்க்கை வாழக்கூடிய உயரிய வாய்ப்புகள், குடிப்பிறப்பு பெற்ற போதிலும் தாழ்த்தப்பட்டவர்களுடன் உடன் பிறந்த உணர்வுடன் பழகினார். தீண்டதகாதவர்களாக ஒதுக்கி வைக்கப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று உணவு உண்டார். தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கு உயர்ஜாதியில் உள்ளவர்களைக் ஜாதி மறுப்பு மணம் செய்து வைத்தார்.
பசவரின் புரட்சிக் கொள்கைகளால் கவரப்பட்டவர்களுள் மதுவரசன் என்பவர் ஒருவர். இவர் வருணாசிரம நெறியில் வாழ்ந்த பிராமணர் ஆவார். அதேபோல் இவரது கொள்கையால் ஈர்க்கப்பட்டவர் ஹரளய்யா என்னும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்.

மதுவரசன் மகளுக்கும், ஹரளய்யாவின் மகனுக்கும் இடையே காதல் பிறந்தது. ஒருவரை ஒருவர் உயிருக்குஉயிராய் விரும்பினர். சமுதாயத்தில் உயர்நிலை ஜாதியான பிராமண ஜாதியில் பிறந்த பெண்ணுக்கும், அடிநிலைச் சமுதாயமாய் ஒதுக்கி வைக்கப்பட்ட, தீண்டத்தகாத சமுதாயமாய்க் கருதப்பட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த ஆணுக்கும் காதல் பிறக்கலாம். ஆனால், திருமணம் நடப்பதென்பது அன்றைக்கு வாய்ப்பே இல்லாத நிலையாகும். என்றாலும் இந்தக் காதல் செய்தி பசவர் காதுக்கு எட்டியது.

இருதரப்புப் பெற்றோரும் பசவரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர்கள் என்பதால், பிள்ளைகளின் விருப்பத்திற்குத் தடை சொல்லவில்லை. இருதரப்பாரும் பசவரைச் சந்தித்து தங்கள் விருப்பத்தைக் கூறினர். பசவர் மகிழ்ச்சியடைந்தார் திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார். குறிக்கப்பட்ட நாளில் திருமணமும் சிறப்புற நடைபெற்றது. வீரசைவர்கள் அனைவரும் உளம் மகிழ மணமக்களை வாழ்த்தினர்.

இச்செய்தி காட்டுத்தீயாக விரைந்து பரவியது. பிராமணப் பெண்ணுக்கும், தீண்டத் தகாத கீழ்ஜாதிக்காரனுக்கும் திருமணமா? இது அடுக்குமா? இதுமுறையா? நீதியா? என்று வைதீகப் பார்ப்பனர்களும் ஜாதி வெறியர்களும் வெகுண்டு வெறிகொண்டு திரண்டனர்.

பசவர் மீது மதிப்பும் அன்பும் வைத்திருந்த பிச்சலன் வைதீகர்களின் வற்புறுத்தலால் மனம்மாறி, வைதீகர்களுக்கு ஆதரவாக நின்றான். வைதீகர்களின் ஆதரவை இழக்க விரும்பாத அம்மன்னன், அத்திருமணத்தை எதிர்த்தான். பசவர் மற்றும் மணமக்களின் பெற்றோரை அழைத்தான். பசவரைப் பார்த்து, பிராமணப் பெண்ணுக்கு தாழ்த்தப்பட்டவனைத் திருமணம் செய்து வைத்தது குற்றமல்லவா? என்று கேட்டான்.
மன்னரே! இதில் எந்தக் குற்றமும் இல்லை. திருமணம் செய்து கொண்டவர்கள் உங்கள் பார்வையில் உயர்ஜாதி தாழ்ஜாதியாக இருக்கலாம். ஆனால், அந்த இருதரப்பாரும் வீர சைவத்தை ஏற்றுக் கொண்டவர்கள். வீரசைவத்தை ஏற்றுக் கொண்டபின் அவர்களுக்குள் ஜாதியில்லை; எனவே ஜாதி வேறுபாடுகள் இல்லை. இருபிரிவினரும் சமமானவர்கள். இவர்களுக்குள் திருமணம் உறவு செய்யப்பட்டதில் எத்தவறும் இல்லை.. என்று வழக்கறிஞர்போல வாதிட்டார் பசவர்.

வைதீகர்களால் மூளைச் சலவை செய்யப்பட்ட மன்னன் பசவரின் நியாயத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. மதுவரசனைப் பார்த்து பிச்சலன் மன்னன், ஏய் மதுவரசா! நீ உன் குலப்பெருமையை மறந்து ஈனக்குலத்தில் பிறந்த பஞ்சமப் பயலுக்கு உன் மகளைத் திருமணம் செய்து வைத்துள்ளாய். உனக்கு எவ்வளவு துணிச்சல்! என்ன ஆணவம்! என்று சீறினான்.

அதேபோல மாப்பிள்ளையின் தந்தை ஹரளய்யாவைப் பார்த்து, ஏண்டா, பஞ்சமப் பயலே, உன் ஈனக்குலத்தையும் மறந்து, உயர்ஜாதிப் பெண்ணை உன் மகனுக்கு மணம் செய்விக்க உனக்கு எங்கிருந்தடா துணிவு வந்தது? என்று சீறினான்.

இது ஜாதி மறுப்பு மணம் அல்ல, வீரசைவர்களின் காதல் மணம் என்று பெற்றோர்கள் கதறினர்.

ஆனால் மன்னன் இதை ஏற்றுக் கொள்ளாது, கொடுந்தண்டனை விதித்தான்.

பெற்றோர்களின் கண்களைப் பிடுங்கச் செய்தான். ஈவு இரக்கமின்றி, பெற்றவர்கள் துடிதுடிக்க அவர்களின் கண்கள் பிடுங்கி எறியப்பட்டன. மன்னன் அத்தோடு நிறுத்தாது அவர்களின் கைகால்களைக் கட்டி, யானையின் கால்களில் பிணைத்து இழுத்து வரச்செய்து கொல்லச் செய்தான். யானையின் கால்களில் பிணைக்கப்பட்ட பெற்றவர்கள், வீதிகளில் இழுத்து வரப்பட்டு கடுமையான காயத்தோடு துடிதுடித்து இறந்தனர்.

இப்படிப்பட்ட கொடிய தண்டனை கொடுத்தால், இனிமேல் ஜாதி மறுப்பு மணங்கள் நடக்காது, என்று வைதீகவாதிகள் கூறிய மோசமான யோசனையைக் கேட்டு மன்னன் இக்கோரத் தண்டனையை விதித்தான். ஆனால் விளைவு வேறு விதமாக மாறியது.

அப்பாவிகளுக்கு அளிக்கப்பட்ட, நியாயமற்ற இக்கொடிய தண்டனையைப் பார்த்து மக்கள் வெகுண்டு எழுந்தனர். ஜாதி மறுப்பு மணத்திற்கு ஆதரவான கருத்து இதன்மூலம் பரவியது; பெருகியது.

மன்னனின் கொடுமை கண்டு வெறுப்படைந்த, வேதனை அடைந்த பசவர் அமைச்சர் பதவியைத் தூக்கியெறிந்து அரண்மனையை விட்டு வெளியேறினார்.

மக்கள் மத்தியில் வேகம் வெடித்தது. மன்னனைக் கொல்வோம் என்று சூளுரைத்தனர். மன்னனைக் கொல்லும் வரை ஓயமாட்டோம் என்று ஆவேசத்துடன் குரல் எழுப்பினர்.

வைதீகர் சொல் கேட்டு அநியாயம் செய்து விட்டோமே! மக்கள் வெறுப்புக்கு ஆளாக நேர்ந்துவிட்டதே என்று பிச்சலன் கலங்கினான். தூயவரான பசவரின் வெறுப்புக்கும், வேதனைக்கும் காரணமாகி விட்டேனே என்று கவலைப்பட்டான்.
இறுதியில் பிச்சல மன்னன் கொலை செய்யப்பட்டான். யாரால் கொலை செய்யப்பட்டான் என்பதே உறுதி செய்ய முடியாத அளவிற்கு அக்கொலை நடந்தது.
மக்களின் மனமாற்றத்தை மன்னனாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பது இங்கு உறுதி செய்யப்பட்டது. கொலைத் தண்டனையால் ஜாதி மறுப்பு மணத்தைத் தடுத்துவிடலாம் என்று நம்பிய மன்னனும் வைதீகவாதிகளும் தோற்றுத் துவண்டனர்.

பசவரின் எழுச்சி வீறுகொண்டு நின்றது; வென்றது.

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உதவி

பசவர் ஏழை எளிய மக்களின் மீது அளவற்ற அன்பும், பரிவும் காட்டினார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் அவருடைய வீட்டின் கதவுகள் எப்பொழுதும் திறந்தே இருந்தன. தன் வருவாய் முழுவதையும் அவர்களுக்கு உதவி செய்யவே செலவிட்டார்.

அடிமரத்திற்கு நீர்ப்பாய்ச்சி உரமிட்டால் தானே, மேல் மரம் தழைத்து வளரமுடியும்; அடித்தளத்திலுள்ள மக்களுக்கு உதவுவதன் மூலமே சமுதாயம் தழைக்கும் - பயனளிக்கும் என்று ஆய்ந்தறிந்து அனுபவத்தோடு கூறினார் பசவர்.

பெண்ணுரிமை பேணிய பசவர்

எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னமே பெண்ணுரிமை பேசிய, அதற்காக உழைத்த, அதை நடைமுறைப்படுத்திய பெருமைக்குரியவர் பெம்மான் பசவர். பெண்களுக்கு, சம உரிமையும் சம வாய்ப்பும் அளித்தார்.

பெண்கள் கல்வி கற்கக் கூடாது என்ற வருணாசிரமக் கொள்கையைத் தகர்த்து, பெண்கள் கட்டாயம் கற்க வேண்டும் என்று வற்புறுத்தி, பெண்களைக் கற்கும்படிச் செய்தார். பெண்கள் கற்பது பாவம் என்ற வருணாசிரமக் கொள்கையை வன்மையாகச் சாடினார். கடவுள் படைப்பிலே ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதியா? வெகுண்டெழுந்து கேட்டார்.

அனைத்து ஜாதியினருக்கும் வழிபாட்டுரிமை

ஆலயங்களில் உயர்ஜாதி ஆதிக்கம் கோலோச்சிய நிலையைத் தகர்த்தார். இறைவனுக்கு முன்னால் எல்லோரும் சமம். எல்லா ஜாதியினருக்கும் வழிபாட்டுரிமை உண்டு என்று கூறி அதற்காகப் போரிட்டார்.

ஆலய ஆதிக்கத்தின் அடிப்படையையே பசவர் தகர்க்க எண்ணினார். கோயில் கட்டுவதே வெட்டிச் செலவு என்ற புரட்சிக் கருத்தை 800 ஆண்டுகளுக்கு முன்பே கூறினார். கடவுள் ஆலயத்திற்குள்தான் இருக்கிறதா? ஒவ்வொரு உள்ளத்திலும் அல்லவா வாழ்கிறது என்றார்.
இறைவன் எங்கும் இருக்கிறான். எவருக்கும் இறைவன் உரிமையானவன். இறைவனுக்கும் பக்தனுக்கும் இடையே தரகர் (அர்ச்சகர்) தேவையில்லை என்று கூறி ஆரிய ஆதிக்கத்தின் அடிப்படையையே தகர்த்தார்.

அனைவருக்கும் தாயும் தந்தையுமான இறையை அதன் பிள்ளைகளாய்ப் பிறந்த அனைவரும் தொழலாம்; நேரடியாகத் தொழலாம். ஒழுக்கமும், சீலமும், பக்தியுமே கடவுளை அடைய வழி. மற்றபடி, சடங்குகள், வேள்விகள், பூசைகள், ஆராதனைகள், அபிஷேகங்கள் அனைத்தும் வெட்டி வேலைகள் என்றார்.

சடங்குகளும், ஆச்சாரங்களும், சம்பிரதாயங்களும், ஆகமங்களும் மக்களைப் பிரித்து வேறுபடுத்துகின்ற, அடிமைப்படுத்துகின்ற சூழ்ச்சி முறைகள்; ஆதிக்கவாதிகளின் ஆயுதங்கள் என்று அறிவுப்பூர்வமாக வியப்பூட்டி, எழுச்சியூட்டினார்.

ஜாதியொழிப்பு

பிறக்கும்போதே குழந்தை எங்கே பிறக்கப் போகிறோம் என்று முடிவு செய்து தன் விருப்பப்படி பிறப்பதில்லை. உயர்ஜாதி, கீழ்ஜாதி என்ற அடையாளங்கள் ஆதாரங்கள், வேறுபாடுகள், மாறுபாடுகள் ஏதும் இல்லை. தாழ்ந்த ஜாதியான் என்று யாரையாவது ஒருவனை மற்றவன் ஒதுக்கினால், அவன் இறைவனுக்கு உகந்தவனாகான். அவ்வாறு ஒதுக்கப்படுகின்றவனே இறைவனுக்கு உகந்தவனாவான்.

மணம் செய்ய பெண் பார்க்க இனம் பார்க்கக் கூடியவர்கள் எப்படி கடவுளின் பக்தர்களாக இருக்க முடியும்? கடவுளின் கருணையை அவர்கள் எப்படிப் பெற முடியும்? கடவுளின் பெயரைச் சொல்ல அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? அனைவரும் கடவுளின் பிள்ளையென்னும்போது மக்களுக்குள் உயர்வு தாழ்வும் பிறப்பால் பேதமும் ஜாதியும் எப்படி வரமுடியும்? இவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்களா? கடவுளை ஏமாற்றுகிறார்களா? என்று கடுமையாகக் கேட்டார்.
உண்பதில்தடை, உடுத்துவதில் தடை, தூய்மைக்குத் தடை, வழிபடத் தடை, கல்வி கற்கத் தடை, வீதியில் நடக்கத் தடை, விழாக்களில் கலந்துகொள்ளத் தடை என்று தன்னையொத்த மனிதனுக்குத் தடை போடுகின்றவன் -கடவுளுக்குப் பிடித்தவனாக எப்படி இருக்க முடியும்? மனிதன் என்று சொல்லிக்கொள்ளும் தகுதிகூட அவர்களுக்கு எப்படி வரும்?

கோயில், குடமுழுக்கு, கடவுள் விழா, தேர்த்திருவிழா, வேள்வி, பூசை என்ற வீண் ஆடம்பரங்கள், ஆரவாரங்கள் வழிபாடு அல்ல. உள்ளத்தால் கடவுளை உள்ளுதலே (எண்ணுதலே) உண்மையான வழிபாடு; உயர்வான வழிபாடு.

வருணாசிரம முறை தவறு என்பதை எல்லோரும் உணர்ந்து அதை விட்டொழிக்க வேண்டும். சமத்துவ உணர்வுடன் உடன் பிறந்தார் என்ற பாசத்துடன் வாழ்பவர் எவரோ அவரே வீரசைவர். அவரே கடவுளை வணங்கும் தகுதியைப் பெற்றவர். உண்மையான கடவுள் நம்பிக்கையுள்ளவராக அவரே இருக்க முடியும்!

தீண்டத்தகாதான், பஞ்சமர், சூத்திரர், சத்திரியர், பிராமணன் என்ற வேறுபாடுகள், உயர்வு, தாழ்வுகள், பாகுபாடுகள் கூடாது. மக்களிடையே ஏற்றத் தாழ்வு பிறப்பால் கற்பிக்கக்கூடாது என்பதே வீரசைவக் கொள்கை என்று முழங்கினார்.

பெண்களுக்கு வழிபாட்டு உரிமை உண்டு

ஆண் பெண் அனைவரும் இறைவன் முன் சமம். ஆணுக்குள்ள அனைத்து உரிமையும் பெண்ணுக்கும் உண்டு.

பெண்கள் பூப்படையும் காலத்திலும், மாதக் கழிவு வரும் நேரத்திலும், கருவுற்ற காலத்திலும் தன்னை முடிந்த அளவு தூய்மை செய்து கொண்டு வழிபடலாம்.
வீட்டில் இறப்பு நேர்ந்தால் அதனைத்தீட்டு என்று கூறவேண்டாம். இறந்த மனிதனின் உடலில் தீட்டு எங்கிருந்து வரமுடியும்? என்று கேட்டார்.

விதவை மணம்

கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்துகொள்ள வேண்டும். அதைத்தடை செய்வதும், அவளை அறையில் தள்ளி அலங்கோலப்படுத்துவதும் மனித எதிர்க் கொள்கையாகும். விதவை மணம் வீரசைவக் கொள்ளைக்கு உகந்ததுதான் என்று விழிப்பூட்டினார். விதவைத் திருமணங்களை ஆதரித்ததோடு ஊக்குவித்து அதுபோன்ற திருமணங்கள் நடக்க வழிவகுத்தார்; துணை நின்றார்.

புரோகிதர் ஒழிப்பு

திதி, திவசம், சடங்கு, பூஜை, திருமணம், பிறந்தநாள் என்று சடங்குகள் செய்வது கூடாது. இவையெல்லாம் வெட்டி வேலைகள், அதற்காகப் புரோகிதர்களுக்கு கொட்டிக் கொடுத்து ஏமாறக்கூடாது. எக்காரணம் கொண்டும் வருணாசிரமக் கொள்கையுடைய புரோகிதர்களுக்கு நம் விழாக்களில், வழிபாடுகளில் இடம் அளிக்கக் கூடாது. திருமணங்கள் போன்ற விழாக்களில் புரோகிதர்கள் கூடவே கூடாது என்று புரோகிதர் ஒழிப்பைப் புரட்சிகரமாக நிறைவேற்றினார். தன்மான உணர்வை ஊட்டி, தட்டி யெழுப்பி தகுதியோடு தலைநிமிர்ந்து சமமாக வாழ்; ஏமாறாதே; இழக்காதே என்று எச்சரித்தார்; வழிகாட்டினார்.

உயர்ந்தவர் யார்? தாழ்ந்தவர் யார்?

அறம், நற்பண்பு, நற்பணி உடையவரே உயர்ந்தவர். அவை இல்லாதவர் தாழ்ந்தவர். மற்றபடி ஜாதியினால், வருணாசிரமப் பகுப்பால் வருவதல்ல உயர்வு தாழ்வு என்று தெளிவுபடுத்தி, பிறப்பால் உயர்வு தாழ்வு கூறுவது பித்தலாட்டச் செயல், அயோக்கியத்தனம் என்று தெளிவுப்படுத்திக் கூறினார்.

சடங்கைச் சாடல்

திருமணத்தின்போது அம்மி மிதித்தல், அருந்ததி பார்த்தல், அக்கினி வளர்த்தல், அதன் சாட்சியாய் மணம் முடித்தல் கூடாது. அறிவிற்கு உகந்த முறையில் விரும்பிய ஆணும் பெண்ணும் இல்வாழ்வைத் தொடங்க வேண்டும். இதில் சடங்கு சம்பிரதாயங்களுக்கு வேலையே இல்லை. விருப்பமும், பொருத்தமும், அன்பும், பாசமுமே கட்டாயம் என்று விளக்கினார்.

குழந்தை மணம் கூடாது

குழந்தைத் திருமணம் அதிக அளவில், பரவலாகச் செய்யப்பட்ட சூழலில், குழந்தைத் திருமணம் கூடவே  கூடாது என்று வற்புறுத்தி, தடுத்தும் நிறுத்தினார் பசவர். இது மாபெரும் கொடுமை. பிஞ்சுப் பருவத்தில் அதன் சுதந்திரத்தைப் பறித்து, குடும்பப் பந்தத்தில் முடக்கிப் போடுவது முட்டாள்தனம். அதற்குரிய வயதும், முதிர்ச்சியும் வரும்போது, அதனதன் விருப்பத்திற்கேற்பதான் மணம்இருக்க வேண்டும். மாறாக ஏதும் அறியா வயதில் பெற்றோர், மற்றோர் விருப்பத்தில் பிணைத்துவிடுவது பித்தர்களும் எத்தர்களும் செய்யும் வேலையாகும். வருணாசிரம தர்மத்தைக் காப்பதற்கு வைதீகர்கள் ஏற்படுத்திய மிகக் கொடிய வழக்கம் இது. பெண்களையே இவ்வழக்கம் பெரிதும் பாதிக்கும். எனவே, குழந்தை மணம் அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்றார்.

தாய்மொழியில் வழிபாடு

இன்றைக்குக்கூட தாய்மொழி வழிபாடு கூடாது. ஆரிய மொழியிலேதான் செய்யப்பட வேண்டும் என்று அடாவடித்தனமாகவும் அயோக்கியத்தனமாகவும் பிடிவாதம் பேசும் நிலை இருக்கும் போது, 850 ஆண்டுகளுக்கு முன்பே, அவரவர் அவரவர் தாய்மொழியில் வழிபாடு நடத்த வேண்டும் என்று புரட்சி செய்தார் பசவர் என்றால் அவருடைய நேர்மையையும் துணிவையும் மனித நேயத்தையும் விளக்கிச் சொல்ல வார்த்தைகளே இல்லை!

சுயமரியாதைத் திருமணம்

திருமணத்தில் மந்திரங்களோ, அக்கினி வளர்த்தலோ கூடாது. புரோகிதர் வைத்துத் திருமணம் நடத்தக்கூடாது. சிவாச்சாரியார், சான்றோர், வீரசைவத்தில் ஈடுபாடு கொண்ட பெரியவர்களை வைத்துத் திருமணம் நடத்த வேண்டும்.

பெண்ணையும், தாய்மையையும் சிறப்பிக்கும் வகையில் திருமணப் பொறுப்பு மற்றும் செலவுகளை மணமகன் வீட்டாரே ஏற்றுக் கொள்ள வேண்டும். வரதட்சணை வாங்கக்கூடாது. அதுமுற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.

திருமணங்கள் மானமும், அறிவும் உடைய, மூடநம்பிக்கை அற்ற, ஆண் பெண் சமத்துவத்தை நிலைநாட்டக் கூடிய சுயமரியாதைத் திருமணங்களாக நடைபெற வேண்டும் என்றார். அவ்வாறே நடத்தினார்.

துன்பத்தை எதிர்கொள்ளும் பகுத்தறிவுப் பாங்கு

இறந்தவர்களை நினைத்துக் கலங்குதல், இழவு கொண்டாடுதல் கூடாது. இறப்பைத் துக்கமாகக் கருதாது இயல்பாக, இயற்கையாகக் கொள்ள வேண்டும்.
இழப்பு இறப்பால் ஏற்படுமென்றால் அதற்கு மாற்றுவழி என்ன என்று அறிவோடு செயல்பட வேண்டுமே ஒழிய மாறாக அழுது, அரற்றி, கண்ணீர் வடித்துப் புரளக் கூடாது என்று மனஉறுதியோடு வாழ வழிச் சொன்னார். பகுத்தறிவின் உச்சநிலையில் உள்ளவர்களுக்கே இதுவயப்படும். அறிவுநிலை நின்று உணர்ச்சிகளை கட்டுக்குள் வைத்தால் மட்டுமே இது இயலும். எனவே, இதைக் கூறிஅதன் வழி வாழ்ந்து காட்டிய பசவர் எத்தகு பகுத்தறிவுவாதியாய் இருந்திருப்பார் என்பதை இதன்மூலம் எடைபோட்டு அறிய வேண்டும். இப்படிப்பட்ட இணையில்லா புரட்சியாளர் பசவரின் இறுதி பற்றி (இறப்பு பற்றி) உறுதியான செய்தி இல்லை.

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு
கடவுளை வெளியில் தேடாதே! உன்னுள் தேடு!
இருகாலும் பெருந்தூண்கள்! புலன்கள் ஐந்தும்
பெருமாலை! என்தலையே பொற்கலசம் காண்!
பேணுமுள்ளம் கருக்கோயில்! எழுக நீயே!         என்றார் பசவர்.

ஆக, மக்கள் அனைவருமே நடமாடும் கோயில். மக்களுக்குத் தொண்டு செய்வதே மகேசன் தொண்டு. அதற்கு சடங்கு, பூசை, விரதம், விரயம் தேவையில்லை. மனிதர் அனைவரும் சமம், வருணாசிரமம் மனித விரோதக் கொள்கை. அது ஒழிக்கப்பட வேண்டும். ஜாதி வேறுபாடு பார்ப்பவன் மனிதனேயல்ல. பெண்களும் ஆண்களுக்குச் சமம். கல்வி அனைவருக்கும் வேண்டும். மனிதநேயமே உயர்ந்த தத்துவம்! என்றார்.
அப்பப்பா... 850 ஆண்டுகளுக்கு முன் இவ்வளவு புரட்சிகளைச் செய்தார் பசவர் என்றால் அவருக்கு இணை யார்? இணையற்ற மாமனிதரை இருட்டில் வைக்கலாமா? அவர் கொள்கை பரப்புவோம்! மனிதம் காப்போம்!]


வாழ்க பெம்மான் பசவர்!.

நூல் - மறைக்கப்பட்ட மாமனிதர்கள்  
ஆசிரியர் - மஞ்சை வசந்தன்

Comments

  1. பசவர் என்னும் மிகப் பெரிய சீர்திருத்தவாதியே ஒரு சாதியின் அடையாளமாகவும்,மூட நம்பிக்கையின் தலைவராகவும் சித்தரித்து வைத்துள்ளது வேதனையான உண்மை..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கயிற்றில் தொங்கிய கணபதி (கி.பி. 1911-1949) part-2

வைகுண்ட சுவாமிகள் (கி.பி.1809-1851)