கயிற்றில் தொங்கிய கணபதி (கி.பி. 1911-1949) part-2
போதைக்கு மக்கள் அடிமையாகி அழியக்கூடாது என்பதற்காக போதை ஒழிப்பு, நடவடிக்கைகளையும், மக்கள் மது அருந்தக் கூடாது என்ற பிரச்சாரத்தையும் மேற்கொண்டார். திருட்டு, கொள்ளை, கொலை போன்ற சமூக எதிர்ச் செயல்களைச் செய்யக் கூடாது என்று வலியுறுத்திய கணபதி, அவை நிகழாமல் தடுக்க, மக்களைப் பாதுகாக்க பாதுகாப்புப் படைகளை உருவாக்கினார். இந்திய தேசிய இராணுவத்தில் இருந்தவர்களையும், முற்போக்காளர்களையும், பகுத்தறிவுச் சிந்தனையாளர்களையும் இப்பாதுகாப்புப் படையில் சேர்த்தார்.
இப்படையின் முக்கியப் பணிகளாகக் கீழ்க்கண்டவற்றை வரையறுத்தார்.
1. தொழிலாளர்களிடையே ஒற்றுமை, வர்க்க உணர்வு, தேசிய உணர்வு, நாடு தன்னாட்சி பெற பாடுபடுதல் போன்ற நற்பணிகள் செய்தல்.
2. ஜாதி வேற்றுமை, தீண்டாமை ஆகியவற்றை ஒழித்தல் மூடநம்பிக்கைகளை ஒழித்தல்.
3. கள், மது, சூது, லாட்டரி போன்ற பழக்கங்களை மக்களிடம் ஒழித்தல்.
4. கொலை, கொள்ளை, திருட்டு, கடத்தல், போக்கிரி செயல், நாட்டுத் துரோகம் ஆகியவற்றைச் செய்கின்றவர்களைத் திருத்தி நல்வழியில் செலுத்துதல், திருந்த மறுக்கின்றவர்களைக் காவல்துறையில் ஒப்படைத்தார்.
5. தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை ஆதரித்து, தொழிலாளர் நலன் காத்தல், தொழிற்சங்கத்திற்கு எதிராகச் செயல்படுகின்றவர்களையும் திருத்தி, ஆதரவாகச் செயல்படச் செய்தல்.
மேற்கண்ட இந்த உயரிய நோக்கங்களை அடைய தொண்டர் படைக்குழு தலைவர் கணபதி அவர்கள் தலைமையில், தோழர்களுடைய முழுமையான ஒத்துழைப்புடன் சிறப்பாகவும், பொறுப்பாகவும், நலம் விளையும்படியும் செயல்பட்டது.
1946ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும், தொழிற்சங்க பொதுக்குழு கூட்டங்கள் எழுச்சியுடன் தொழிலாளர் நலனின் கண்ணுங் கருத்துமாகச் செயல்பட்டன. தொழிற்சங்கத்தின் தீவிர செயல்பாடுகளில், போராட்டங்களில், உறுதிகுலையா ஒற்றுமையின், சீரிய தலைமையின் காரணமாக, தொழிலாளர்கள் பல நன்மைகளைப் பெற்றனர்.
எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேர உறக்கம், எட்டு மணி நேர வேலை என வேலை நேரம் வரையறுத்தல்; கூலிகள் என்று அழைக்காமல் தொழிலாளர்கள் என்று அழைத்தல்; மே தினமான 1ஆம் தேதி ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளித்தல் ஆகிய கோரிக்கைகளுடன் ஊதிய உயர்வு வேண்டியும் போராட்டங்கள் நடத்தியும் வெற்றி பெற்றனர்.
மே தின விழாக்கள்
சிங்கப்பூர், மலேசியா நாடுகளில் 1946, 1947, 1948 ஆகிய ஆண்டுகளில் தலைநகரங்களிலும், தொழிற்சங்க தலைமை இடங்களிலும், ஒவ்வொரு தொழிற்சங்க கிளைகளிலும், தோட்டங்களிலும் (எஸ்டேட்) தொழிலாளர்கள் வேற்றுமைகள் மறந்து ஒற்றுமையாய்க் கொண்டாடினர்.
மே தின கொண்டாட்டங்களில் தலைவர் கணபதி, வீரசேனன் ஆகியோரும் மற்றும் சீன, மலேய தலைவர்களும் நிர்வாகிகளும், பங்குகொண்டு உற்சாக உரையாற்றினர். தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து நீண்ட தூர அணிவகுப்பையும் நடத்தினர். அப்போது புரட்சிகரமான எழுச்சியூட்டும் முழக்கங்களையும் எழுப்பினர்.
இன்றைக்கு சிங்கப்பூர், மற்றும் மலேசியாவில் பணியாற்றும் தொழிலாளர்கள், மே தினத்தன்று சம்பளத்துடன் கூடிய விடுமுறை பெறுவது அன்றைக்கு இவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாகும்.
போட்டித் தொழிற்சங்கங்கள் தொழிற்சங்கங்களின் திறமையான செயல்பாடுகளால் தொழிலாளர்களுக்கு உரிமைகள், வசதிகள் பல வழங்குவதால், தங்களுக்கு (முதலாளிகள் மற்றும் அரசுக்கு) செலவு அதிகம் ஆனதில், தொழிற்சங்க நடவடிக்கைகளை பலவீனப்படுத்த போட்டித் தொழிற்சங்கங்களை உருவாக்கினர். என்றாலும் தலைவர் கணபதி போன்றவர்களின் திறமை வாய்ந்த செயல்பாடுகளால், போட்டியாளர்களால் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்த இயலவில்லை.
சிங்கப்பூர் வேலை நிறுத்தமும் கணபதி உரையும்
சிங்கப்பூரில் தியாகி வீரசேனன் தலைமயிலான சிங்கப்பூர் பொதுத் தொழிலாளர் சங்கம், ஆர்பர் தொழிலாளர் சங்கம், போக்குவரத்து தொழிலாளர் சங்கம், லெமனேட் தொழிற்சங்கம் மற்றும் சில தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து, கோரிக்கைகளை முன்வைத்துப் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் கோரிக்கைகளை ஏற்காது, பேச்சு வார்த்தையை முறியடிக்கவே முதலாளிகளும் அரசும் முயற்சி செய்ததால், வெறுப்படைந்த தொழிற்சங்கங்கள் மாபெரும் பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. 16 நாட்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம் நடைபெற்றது. வரலாற்றில் குறிப்பிடத்தக்க வேலை நிறுத்தமாகவும் அது அமைந்தது.
கார்கள், பேருந்துகள் ஓடவில்லை. சாலைத் துப்புரவு நடைபெறவில்லை. கழிவறைகள் தூய்மை செய்யப்படவில்லை. சிங்கப்பூரே நாற்றம் அடிக்கும் நிலையடைந்தது. சாக்கடை நீர் அடைப்பு நீக்கப்படாமல் சாலைகளில் ஓடியது. பொதுமக்கள் தவித்தனர். அரசு அதிர்ச்சியடைந்தது.
1946ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீரசேனன் அவர்கள் தலைமையில், ராபின்சன் பூங்காவில் ஒன்று கூடிய தொழிலாளர்கள் எழுச்சிமிகு பேரணியை நடத்தினர். தீவிரமான முழக்கங்களை முழங்கினர்.
ஊர்வலத்தின் முடிவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வீரசேனன், கணபதி, சம்சுதீன் போன்றவர்கள் வேலை நிறுத்தத்தை ஆதரித்துப் பேசினர்.
தியாகி கணபதியின் உணர்வுப்பூர்வமான உரை, எல்லோர் உள்ளத்திலும் எழுச்சியை ஏற்படுத்தியது. அரசுக்கும் முதலாளிகளுக்கும் கடுமையான நெருக்கடியைத் தந்தது.
கணபதி உட்பட தலைவர்களை, காவல்துறையினர் கைது செய்ய முற்பட்டனர். இதனால் ஏற்பட்ட கலவரத்தில் தடியடியும் பின்னர் துப்பாக்கிச் சூடும் நடைபெற்றது, இரண்டு சீனத் தொழிலாளர்கள் இறந்து போயினர். கூட்டம் சிதறி ஓடியது. தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தப் பொது வேலைநிறுத்தத்தின் விளைவாய் தொழிலாளர்களின் கோரிக்கைகள் பல நிறைவேற்றப்பட்டன.
கணபதி கலந்துகொண்ட ஆசிய உறவு மாநாடு
இந்தியாவில், டெல்லியில் நேருவின் தலைமையில் ஆசிய உறவு மாநாடு 1946-இல் நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் தியாகி கணபதி அவர்களும் கலந்து கொண்டார். இது வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாடு. ஆசிய நாடுகளைச் சேர்ந்த பிரதமர்கள், அறிஞர்கள், குடியரசுத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் கலந்து கொண்ட கணபதி, மலேசியா திரும்பியதும், நாடு முழுக்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தொழிலாளர் மாநாடுகள், கருத்தரங்குகள் போன்றவற்றில் கலந்து கொண்டார். அதன் மூலம், மலேசியா முழுவதும் தொழிற்சங்க செயல்பாடுகள், முறையாகவும், பயனுள்ள முறையிலும் அமைந்து, தொழிலாளர்கள் பல்வேறு உரிமைகளும் சலுகைகளும் பெற்றனர்.
அவசர காலச் சட்டம்
மலேயா நாட்டுச் சுதேசி இயக்கம் அம்னோ. தன்னாட்சி விடுதலைக்குப் போராடியது. ஒத்துழையாமை இயக்கம் நடத்தி, ஆங்கிலேயர்களை நாட்டைவிட்டு வெளியேற வலியுறுத்தினர்.
எனவே, ஆங்கில ஆட்சியாளர்கள் கிளர்ச்சியாளர்களை கடுமையாக ஒடுக்க முடிவு செய்து அதற்கான சட்டம் பிறப்பிக்க முடிவு செய்தனர்.
இங்கிலாந்தின் ஆலோசனைப்படி, கிழக்காசிய கவர்னர் ஜெனரல் மால்கம் மெகனால்டும், மலேசிய கவர்னர் ஜெனரல் லார்ட் லூயி மவுண்ட்பேட்டனும், மலேசிய ஹைகமிஷனர் ஹென்றி கர்னினியும், போலீஸ் அதிகாரிகளின் கருத்துக்களைப் பெற்று, 20.06.1948இல் இரவு 10 மணிக்கு அவசர காலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தினர்.
அதன்படி, துப்பாக்கி, துப்பாக்கித் தோட்டாக்கள், ரிவால்வர், ஆயுதங்கள் வைத்திருப்பவர்களுக்கும், அதன் மூலம் கிளர்ச்சியில் ஈடுபடுகின்றவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அன்று இரவு, தீவிரவாதிகள் போராளிகள் ஆயிரக்கணக்கில் கைது செய்யப்பட்டனர். தொழிற்சங்கத் தலைவர்களும், உறுப்பினர்களும் ஏராளமாகக் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் 20 விழுக்காடு தமிழர்கள் என்பது குறிப்பிட வேண்டிய செய்தியாகும்.
கைது செய்யப்பட்டவர்கள், அடித்து உதைத்து சித்திரவதைச் செய்யப்பட்டனர். பலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் தூக்கிலிடப்பட்டனர்.
இக்கொடுமைகளின் விளைவாய் கம்யூனிஸ்ட்டுகளும், தொழிற்சங்கத் தலைவர்களும் தலைமறைவாகக் காடுகளுக்குச் சென்றனர். தாங்கள் பழிவாங்க நினைக்கும் தலைவர்களைக் கைது செய்து மரணதண்டனை வழங்க சிறு தடயம் கிடைத்தாலும் போதும் என்று துருவித் துருவி அலசித் தேடினர்.
காடுகளுக்குச் சென்றவர்கள், அங்கு இந்திய தேசிய இராணுவத்தினரால் விடப்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தி, கொரில்லா முறையில் போர்புரிந்து, ஆங்கில ஆட்சியை மலேசியாவிலிருந்து அகற்ற முனைந்தனர்.
தலைவர் கணபதி கைது
அவசர காலச் சட்டத்தின்படி கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்கவும், பிரிட்டிஷாரை எதிர்க்கவும், மலேசிய தொழிற்சங்க சம்மேளனத் தலைவர் கணபதி அவர்கள் தன் தோழர்களுடன் தலைமறைவாகி, கோலாலம்பூருக்கு அருகில் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த டமன் சாரா எஸ்டேம் அருகிலுள்ள காட்டில் இருந்தபோது, 1948 ஆகஸ்டு மாதம் சிறப்புக் காவல் இராணுவப் படையால் சுற்றி வளைத்துக் கைது செய்யப்பட்டார்.
கோலாலம்பூரில் போலீஸ் காவலில் 10 தினங்கள் வைக்கப்பட்டு விசாரணை செய்தபின் கோலாலம்பூர் மத்திய புடு சிறையில் அடைக்கப்பட்டார்.
தலைவர் கணபதி கைது செய்யப்பட்ட செய்தி, சிங்கப்பூர் வானொலி ஒலிபரப்பியது. மறுநாள் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் ஆங்கில, தமிழ், மலேயா, சீன நாளேடுகளில் தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்டது. இந்திய நாளேடுகளிலும் செய்தி வெளியிடப்பட்டது.
இதையறிந்த மலேசியா, சிங்கப்பூர், இந்தியா போன்ற நாடுகளில் வாழ்ந்த மக்கள் குறிப்பாகத் தமிழர்கள் அதிர்ச்சியும் கலக்கமும் அடைந்தனர்; கண்ணீர்ச் சிந்தினர்.
கணபதிக்கு வந்த சம்மன்
சிறையிலடைக்கப்பட்ட கணபதிமீது, சிலாங்கூர் மாநில சமஸ்தான நிர்வாக நீதின்றம், கீழ்க்கண்ட குற்றச்சாட்டுகளைச் சுமத்தி தலைவர் கணபதிக்கு சம்மன் அனுப்பியது.
குற்றச்சாட்டுகள்
1. நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட் என்று நம்புகிறோம்.
2. அந்த இயக்கத்திற்கு உதவுபவர் என்று நம்புகிறோம்.
3. கம்யூனிஸ்ட்டுகளுடன் சேர்ந்து ஆட்சியைக் கைப்பற்ற ஆயுதப்போர் செய்வீர் என்று நம்புகிறோம்.
4. தங்களைக் கைது செய்தபோது, நீங்கள் ஆறு குண்டுகள் நிரப்பப்பட்ட ரிவால்வர் வைத்திருந்ததால், அவசர காலச் சட்டப்படி தாங்கள் கைது செய்யப்பட்டிருக்கிறீர்கள்.
இக்காரணங்களுக்காக நீங்கள் நீதிமன்றக் காவலில் தற்போது வைக்கப்பட்டுள்ளீர்கள். இவைகளுக்கு வரும் 15.3.1949 அன்று நடைபெற இருக்கும் நீதி விசாரணையின் போது, தக்க பதில் அளிப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம் என்று அச்சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இச்சம்மன் சிறையிலிருந்த கணபதிக்கு வழங்கப்பட்ட செய்தி, பத்திரிகைகளில் வெளியிடப்பட்டது. இதைக் கண்ட தமிழர்கள், மற்றும் தொழிற்சங்கவாதிகள், தலைவர் கணபதியை தூக்கிலேற்றவே ஆங்கில அரசு திட்டமிட்டுள்ளது. எனவே, அவருடைய உயிருக்கு ஆபத்து வந்துவிட்டது என்று எண்ணி எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். தமிழகத் தலைவர்களும் பெரிதும் கவலை அடைந்தனர்.
தலைவர் கணபதிக்குத் தரப்பட்டது மரண தண்டனை
சம்மனில் கண்டவாறு கணபதி அவர்கள் 15.3.1949 அன்று காலை 8.45 மணிக்கு நீதிமன்றத்திற்குத் தக்கப் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டார்.
அவரிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. கோலாலம்பூரில் நீதிமன்றத்திற்கு அருகில் அமைந்திருந்த தனி நீதிமன்றக் கூடத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
ஒரு மணி 40 நிமிட நேரம் கணபதியின் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்குப்பின் நீதிபதிகள், தனியறையில் அரை மணி நேரத்திற்கு மேல் ஆலோசனை நடத்தினர். பின் தலைமை நீதிபதி, கணபதி அவர்களைப் பார்த்து, நீங்கள் ஆறு புல்லட் நிரம்பிய ரிவால்வர் வைத்திருந்தது அவசர காலச் சட்டப்படி மரண தண்டனைக்கு உரிய குற்றமாகும். எனவே, உங்களுக்குச் சட்டப்படி மரண தண்டனை விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.
தீர்ப்பிற்குப் பின் கணபதி அவர்கள் கோலாலம்பூர் புடு சிறைச்சாலைக்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டார்.
இச்செய்தியைச் சிங்கப்பூர் ரேடியோ மாலை 7.00 மணிக்கு ஒலிபரப்பியது. உலகம் முழுவதும் உள்ள தொழிற்சங்கவாதிகளும், இடதுசாரிகளும், தமிழ் மக்களும், இந்தியத் தலைவர்களும், கிழக்காசிய மக்களும் பெரும் அதிர்ச்சியடைந்தனர். அளவுக்கு மீறிய துயரங்கொண்டனர்.
தந்தை பெரியார்
தந்தை பெரியார், குத்தூசி குருசாமி, பேரறிஞர் அண்ணா, ப.ஜீவானந்தம், பி.இராமமூர்த்தி, கல்யாணசுந்தரம், ஏ.எஸ்.கே.அய்யங்கார், சிந்தன், தமிழ்ஒளி, முருகேசன், கே.டி.ராஜு, எம்.என்.நம்பியார் மற்றும் எண்ணற்ற தலைவர்கள், தூக்குத் தண்டனையை ரத்து செய்து கணபதியை விடுதலை செய்யக் கோரி, தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் அனுப்பினர்.
அகில இந்தியத் தலைவர்கள் கணபதி அவர்களை விடுதலை செய்யக்கோரி, இந்தியா முழுமையிலிருந்தும், அனைத்துக் கட்சிகள், தொழிற்சங்கங்கள், விவசாயச் சங்கங்கள், பொதுவுடைமை இயக்கங்கள், ஒன்றுசேர்ந்து ஊர்வலம் நடத்தின.
அகில இந்திய தலைவர் எஸ்.ஏ.டாங்கே, ஏ.கே.கோபாலன், இரேன் முகர்ஜி, பி.ஜி.ஜோஷி, பி.டி.ரணதிவே, நம்பூரிபாட் போன்றோர், கணபதியை விடுதலை செய்யக் கோரி பொதுக் கூட்டங்கள் நடத்தி, தீர்மானம் நிறைவேற்றி, இந்தியப் பிரதமர் நேரு அவர்களுக்கும், பிரிட்டிஷ் பிரதமர் அட்லி அவர்களுக்கும் அனுப்பி வைத்தனர்.
பிரதமர் நேரு
இந்தியப் பிரதமர் நேரு அவர்கள், மலேசியாவுக்கான இந்திய தூதர் ஜான்திவி அவர்களுக்குக் கடிதம் எழுதி, மலேசியாவிலுள்ள பிரிட்டிஷ் அரசுக்குக் கடிதத்தை நேரில் தந்து, கணபதி அவர்களைக் கருணை அடிப்படையில் விடுவிக்கக் கேட்டுக் கொள்ளும்படிச் செய்தார். இம்முயற்சியைப் பற்றி, இந்திய தூதர் ஜான்திவி அவர்கள், புடு சிறையிலிருந்த கணபதியைச் சந்தித்துக் கூறி, விடுதலைக்கு முயற்சி மேற்கொண்டுள்ளோம் என்றார்.
அய்.நா. மன்றத்தில் வேண்டுகோள்
கணபதி அவர்களை விடுதலை செய்யக் கோரி, அய்.நா.மன்றத்தில், இந்தியாவின் பிரதிநிதியாக இருந்த வி.கே.கிருஷ்ணமேனன் வேண்டுகோள் வைத்தார். அய்.நா. மன்றம் இதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தமிழகப் பத்திரிகைகள் கண்டனம்
தலைவர் கணபதிக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையைக் கண்டித்து, விடுதலை, ஜனசக்தி, சுதேசமித்திரன், தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்து போன்ற நாளேடுகளும், திராவிட நாடு, தம்பி, போர்வாள், ஆனந்தவிகடன், கல்கி, திராவிடன், தமிழ்மணி, சக்தி போன்ற ஏடுகளும் செய்திகள் வெளியிட்டு, மரண தண்டனையை நீக்கக் கோரின. தமிழகம் முழுக்க கணபதியை விடுவிக்கக் கோரி உச்சக்கட்ட கிளர்ச்சிகள் நடந்தன.
கணபதியின் கடிதம்
கோலாலம்பூர் புடு சிறையில் இருந்தபடி, சிங்கப்பூர் சிறையில் இருந்த தன் சகோதரர் சற்குணத்திற்கும், தம்பிக் கோட்டை பி. மாரியப்பனுக்கும் தனது நிலையை விளக்கியும், தன்னோடு மக்கள் நலனுக்குப் பாடுபட்டவர்களுக்கு நன்றி தெரிவித்தும் கடிதம் எழுதினார்.
தலைவர் கணபதியின் மேல்முறையீடு
கணபதி அவர்கள் தனக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, 04.4.1949இல் மேல்முறையீடு செய்தார்.
சிலாங்கூர் மாநில சமஸ்தான விசாரணைக் கமிஷனால், தலைவர் கணபதியின் மேல்முறையீட்டு மனுவிசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அத்துடன் அவரை விடுதலை செய்யக்கோரி வந்த மனுக்களும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. பரிசீலனை மற்றும் விசாரணையின் முடிவில், கணபதியின் மரண தண்டனை 23.4.1949 அன்று மீண்டும் உறுதி செய்து தீர்ப்பளிக்கப் பட்டது.
ஆனால் 23.4.1949 அன்று சிங்கப்பூர் வானொலி பகல் 12 மணி செய்தியில் மறுநாள் (24.04.1949) கணபதி கோலாலம்பூர் புடு சிறையில், காலை 5 மணிக்குத் தூக்கிலிடப்படுவார் என்று அறிவித்தது. கேட்ட அனைவரும் அதிர்ச்சியால் நிலைகுலைந்தனர்.
மீண்டும் கிளர்ச்சிகள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள்! தமிழகத் தலைவர்கள் அண்ணா உட்பட அனைவரும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் காமராஜ் அவர்களை நேரில் சந்தித்து கணபதியைக் காப்பாற்றும்படி வேண்டுகோள் விடுத்தனர். அய்.நா. மன்றத்திலும் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
இவற்றின் விளைவாய் தூக்குத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, 23.04.1949 அன்று மாலை 7 மணிக்கு, சிங்கப்பூர் வானொலி அறிவித்தது. இச்செய்தியைக் கேட்டு மலேசியா, சிங்கப்பூர், இந்தியா போன்ற நாட்டு மக்கள் மகிழ்ந்தனர்.
ஆனால் அந்த மகிழ்ச்சி அதிக நாள் நீடிக்கவில்லை. 30.4.1949 அன்று பிற்பகல் 3 மணிக்கு சிறை கண்காணிப்பாளர் தலைவர் கணபதியைச் சந்தித்து, தங்களை 4.5.1949 அன்று காலை 5 மணிக்குத் தூக்கிலிடும்படி உத்தரவு வந்துள்ளது என்று தெரிவித்தார்.
கணபதி அதிர்ச்சியின்றி அமைதியாகக் காணப்பட்டார். மெல்ல புன்னகைத்தார். வீரனும் தியாகியும் என்றைக்கும் மரணத்தை மகிழ்வுடன்தானே எதிர்நோக்குவர். உண்மையான தியாகி கணபதியும் அவ்வாறே இருந்தார்.
கண்காணிப்பாளர், தங்களுக்கு விருப்பமான உணவைக் கூறுங்கள் என்றார். யாருக்காவது செய்தி சொல்ல வேண்டியிருப்பினும் சொல்லுங்கள் என்றார்.
கணபதி எழுதுவதற்குத் தாளும், பென்சிலும் கேட்டார். அதன்படி தாளும், பென்சிலும், கடித உறையும் வழங்கப்பட்டன.
இதையறியாத தமிழகத் தலைவர்களோ, கணபதிக்கு இனி மரண தண்டனை இருக்காது என்று மகிழ்வோடு இருந்தனர். ஆனால், அனைவரும் அதிர்ச்சியடையும் வகையில் 3.5.1949 அன்று சிங்கப்பூர் வானொலி, பகல் 12 மணி செய்தியில், மறுநாள் காலை (4.5.1949) 5 மணிக்குக் கோலாலம்பூர் புடு சிறையில் தூக்கிலிடப்படுவார் என்று அறிவித்தது.
மக்களும் தலைவர்களும் கடுமையான ஆத்திரம் கொண்டனர். மீண்டும் ஆர்ப்பாட்டங்களும், கண்டனங்களும், கோரிக்கைகளும் தொடர்ந்தன. இம்முறையும் மரண தண்டனை நிறுத்தப்படும் செய்தி இரவு 7 மணி செய்தியில் அறிவிக்கப்படும் என்று ஆவலோடு எதிர்பார்த்தனர். 7 மணி செய்தி படிக்கப்பட்டபோது, கணபதியைப் பற்றிய எந்தச் செய்தியும் இல்லை. எனவே, கணபதியை இனி நம்மால் காப்பாற்ற முடியாது, மாபெரும் தியாகியை இழக்கப் போகிறோம் என்று எல்லோரும் செய்வதறியாது திகைத்தனர்.
4.5.1949 விடியற்காலை 3.15 மணிக்குத் தியாகி கணபதி சிறையிலிருக்கும் தோழர்களிடம் பேசினார். தமிழிலும், சீன மொழியிலும் பேசினார். தன்னுடன் இன்னல் ஏற்ற எல்லோரையும் நினைவுகூர்ந்தார்.
மலேயா நாட்டு மக்களின் தன்னாட்சி விடுதலைக்கும், பாட்டாளி மக்களின் பொருளாதாரச் சமத்துவத்திற்கும், ஆங்கில ஆட்சியாளர்களின் ஆதிக்க, கொடுங்கோன்மை ஆட்சியை அகற்ற வேண்டியும் தமிழிலும், சீன மொழியிலும் ஆவேசத்துடன் உணர்வு பொங்கப் பேசினார். உரத்த குரலில் தொழிலாளர்களின் கீதத்தைப் பாடினார். சாவின் விளிம்பில் நின்று கொண்டிருந்த வேளையிலும் அவரது விடுதலை வேட்கையும், தொழிற்சங்க உணர்வும் குன்றாது நின்றன என்பதை இது எடுத்துக்காட்டியது.
காலை 3.30 மணியளவில் சிறைக் கண்காணிப்பாளர், சிறை சார்ஜண்ட், சிறைக்காப்பாளர் உட்பட 15 பேர் உள்ளே நுழைந்தனர். சிறிது நேரத்தில் நீதிபதியுடன் ஜெயிலரும், டாக்டரும் வந்தனர். தூக்குமேடை முதல் நாளே சீர் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
கணபதி அவர்கள் அடைக்கப்பட்டிருந்த அறைக்கதவு திறக்கப்பட்டது. ஜெயிலர் கணபதியைப் பார்த்து, மிஸ்டர் கணபதி என்றார். எல்லோரும் கணபதியின் முகத்தைக் கவலையுடன் பார்த்தனர். கணபதிக்கு இரவு வழங்கப்பட்ட உணவும் தண்ணீரும் அப்படியே உண்ணப்படாமல் இருந்தன.
மருத்துவர் கணபதியின் உடலை முழுமையாகச் சோதித்தார். உடல்நலமாக இருந்தது. மணி 4 ஆயிற்று. சிறைக் கைதிகள் அனைவரும், கணபதி புகழ் ஓங்குக! என்று உணர்ச்சியுடன் முழங்கினர். அந்த முழக்கம் சிறைச்சாலை எங்கும் எதிரொலித்தது.
கணபதியைக் குளியலறைக்கு அழைத்துச் சென்றனர். குளித்து முடித்தபின் சிறைச்சாலைக்கு உரிய உடை வழங்கப்பட்டது. கணபதி அந்த உடைகளை அணிந்து கொண்டார். மருத்துவர் மீண்டும் அவர் உடலைச் சோதித்தார். உடல் நலம் நன்றாக இருப்பதாக ஜெயிலரிடம் சொன்னார்.
ஜெயில் கண்காணிப்பாளர் கணபதியைப் பார்த்து, நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? வேறு யாருக்காவது செய்தி சொல்ல வேண்டுமா? என்று கேட்டார்.
தலைவர் கணபதி மெல்ல புன்னகைத்தபடி, மலேயா மண் மாற்றாரிடமிருந்து விடுதலை பெறட்டும்! மலேயா நாட்டுத் தொழிலாளர் வர்க்கம் வெற்றி காணட்டும்! மலேயா நாட்டு மக்களுக்குப் புதிய வாழ்வு மலரட்டும்! மலேயாவில் மட்டுமல்ல. உலகின் எந்தவொரு பகுதியிலும் அடிமைக் கொடுமைக்கு முடிவு விரைந்து கிடைக்கட்டும்! இதுவே என் இறுதியான உறுதியான விருப்பம்! வாழ்க வையகம்! என்று உணர்ச்சிப் பொங்கக் கூறினார்.
தலைவர் கணபதி அவர்கள் குடிக்கத் தண்ணீர் கேட்டார். வார்டன் ஒருவர் கவலை தோய்ந்த முகத்துடன் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.
மலேயா மண் வளங்கொழிக்கட்டும்! என்று வாழ்த்தியபடி தண்ணீரைக் குடித்தார். எல்லோரும் கவலையுடன் அவரையே பார்த்தனர்.
நீதிபதி உட்பட அனைவரும் பின்தொடர, கணபதி கம்பீரமாக தூக்குமேடையை நோக்கி நடந்தார்.
புடு சிறைச்சாலை 700 மீட்டர் நீளமும், 500 மீட்டர் அகலமும் கொண்டது. இச்சிறை இருந்த இடத்தின் பெயர் புடு என்பதால் அப்பெயராலே இச்சிறை அழைக்கப்பட்டது. இச்சிறைச்சாலையில் தூக்குமேடை 15 அடி சம சதுரம் கொண்டது. அதன் வாயிலில், இரும்புக் கதவிற்கு மேல் சுவரில், ழுயடடடிறள என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும்.
தூக்குமேடைக்கு நடுவில் 8 அடி நீளம் 4 அடி அகலம் 10 அடி ஆழம்கொண்ட குழி இருக்கும். இதன்மீது பலகைப் பொருத்தப்பட்டிருக்கும். இந்த பலகை கைப்பிடியுள்ள ஒரு கருவியுடன் பொருத்தப்பட்டிருக்கும். அந்தக் கைப்பிடியை இழுத்தால் பலகை விலகி கயிற்றில் மாட்டப்பட்ட ஆள் குழியுள் தொங்குமாறு அது அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் கைப்பிடியை இயக்கி தூக்குத்தண்டனையை நிறைவேற்ற ஒருவர் பணி அமர்த்தப்பட்டிருந்தார்.
தலைவர் கணபதி தூக்குமேடையில் ஏறினார். பள்ளத்திற்கு மேல் உள்ள பலகையில் வெள்ளைநிற வட்டம் போடப்பட்டிருந்தது. அதில் கணபதி நிற்க வைக்கப்பட்டு, அவர் கால்கள் இரண்டும் கட்டப்பட்டன. அவரது முகத்தைக் கருப்புத் துணியால் கழுத்து வரை மாட்டிக் கட்டினார்கள்.
தலைக்கு மேல் தொங்கிய தூக்குக் கயிற்று வளையத்தை கழுத்திலே மாட்டி சுருக்கை நெருக்கினார்கள். பின் ஜெயிலரின் ஆணைக்கு எல்லோரும் காத்திருந்தனர். ஜெயிலர் சரியாக 5 மணிக்குத் தூக்கில் போட ஆணையிட்டார்.
உடனே, கைப்பிடியை இழுக்கும் பணியாளர் கைப்பிடியை இழுத்தார். உடனே தியாகி கணபதி நின்றிருந்த இரும்புப் பலகை இரண்டும் விலகிக் கொள்ள, அவர் பள்ளத்தில் தொங்க கழுத்தில் மாட்டப்பட்டக் கயிறு இறுக்கியது. ஆம். தொழிற்சங்கத் தலைவரும், போராளியும், தமிழ் மக்களின் பாதுகாவலரும், பகுத்தறிவு பொதுவுடமைச் சிந்தனையாளருமான மக்கள் தொண்டர் மாபெரும் தியாகி கணபதி அவர்கள் தூக்கிலிடப்பட்டார்.
பத்து நிமிடங்கள் அவர் தூக்கிலே தொங்கவிடப்பட்டார். உடல் துடிப்பு ஓய்ந்தது. ஒப்பற்ற தீரர் மக்களுக்காகவே வாழ்ந்த மாமனிதர் உயிரிழந்தார்!
நீதிபதி உள்ளிட்ட அனைவர் முன்னிலையில் 5.20 மணிக்குத் கதவு திறக்கப்பட்டது. காலெமல்லாம் மக்களுக்காகவே இன்னல் ஏற்ற தலைவர் கணபதி கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்தார்.
உலகில், இருபதாம் நூற்றாண்டில் அயல்நாட்டில் அரசியல் காரணத்திற்காகத் தூக்கிலிடப்பட்ட முதல் தமிழர் தியாகி கணபதி அவர்கள்தான் என்பதுகூட முதன்மையான வரலாற்றுப் பதிவாகும். ஆங்கில ஆட்சியாளர்கள் பலமுறை போக்குக் காட்டி இறுதியில் அவரைத் தூக்கிலிட்டதிலிருந்தே அவர் எந்த அளவிற்கு ஆங்கிலேயர்களைப் பாதித்திருக்கிறார் என்பதும், தன் இனத்திற்காகப் பாடுபட்டிருக்கிறார் என்பதும் விளங்குகிறது.
மருத்துவர் தூக்கில் தொங்கிய தியாகி கணபதியின் உடலைச் சோதித்து அவர் இறந்துவிட்டார் என்பதை உறுதி செய்தார். உடனே அவரது உடல் கீழே இறக்கப்பட்டது. அவரது கைகளில் பூட்டப்பட்டிருந்த விலங்கு, காலில் கட்டப்பட்ட கட்டும் விடுவிக்கப்பட்டன. அதன்பின் கழுத்திலிருந்த கயிறும் விடுவிக்கப்பட்டது. உடல் (ஸ்ட்ரெச்சரில்) சுமப்பானில் கிடத்தப்பெற்று, முகத்தை மறைத்து, மூடப்பட்டிருந்த கருப்புத் துணியும் அப்புறப்படுத்தப்பட்டது.
அவரது கண்கள் திறந்தபடியே இருந்தன. வாயும் திறந்தே இருந்தது. நீதிபதி அனைத்தையும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தார். ஜெயிலர் உத்தரவுப்படி உடல் பிணவறைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்குள்ள சிமெண்ட் பலகையின்மீது உடல் கிடத்தப்பட்டது. அவரது உடலில் இருந்த வெள்ளை மேலாடையும், கால்சட்டையும் கழற்றப்பட்டன. பின் உடல் குப்புற கிடத்தப்பட்டது.
ஜெயிலர் உத்தரவுப்படி மருத்துவர் கத்திரிக்கோலால், கணபதி அவர்களின் குதிகால்களின் நரம்புகளை வெட்டினார். அப்போது அவர் காலிலிருந்த உறைந்த இரத்தம் சிமெண்ட் பெஞ்சில் சிதறியது. பின் அவரின் நிர்வாண உடல்மீது, அவர் அணிந்திருந்த மேலாடையையும் கால்சட்டையையும் போர்த்தப்பட்ட பின், உடல் பெட்டிக்குள் வைத்து ஆணி அடிக்கப்பட்டது. பின் உடல் வேனில் ஏற்றப்பட்டது.
சிமெண்ட் பெஞ்சில் சிதறிய இரத்தம் தண்ணீரால் கழுவப்பட்டது. அதன் வழி அவரது இரத்தம் மலேசிய மண்ணில் கலந்தது; தியாகி கணபதியின் நினைவு மக்கள் மனதில் கலந்தது.
மாமனிதர் கணபதிக்கு மறைவு ஏது?
காரிருளால் சூரியன்தான் மறைவதுண்டோ?
கரைசேற்றால் தாமரையின் வாசம் போமோ?
பேரெதிர்ப்பால் உண்மைதான் இன்மையாமோ?
பிறர் சூழ்ச்சி செந்தமிழை அழிப்பதுண்டோ?
நேர் இருத்தித் தீர்ப்புரைத்துச் சிறையில் போட்டால்
நிறை தொழிலாளர்களுணர்வு மறைந்த போமோ?
- பாரதிதாசன்
ஆம். தொழிலாளர்களின் நலனுக்காகவே தன் வாழ்நாளை அர்ப்பணித்த அந்த மாமனிதர் கணபதியினால் தூண்டப்பட்ட உணர்வை, அவரை அழித்ததன் மூலம் அழிக்க முடியவில்லை. அழிந்தது ஆங்கில ஆதிக்கந்தான்.
அவர் பட்ட இன்னல்கள்தான் இன்றைக்குத் தொழிலாளர் பெற்ற உரிமைகள்! அவர் பெற்ற இறப்புதான் தொழிலாளர்களுக்குக் கிடைத்த வாழ்வு!
வாழ்க தியாகி கணபதியின் புகழ்!
நூல் - மறைக்கப்பட்ட மாமனிதர்கள்
ஆசிரியர் - மஞ்சை வசந்தன்
Comments
Post a Comment