வைகுண்ட சுவாமிகள் (கி.பி.1809-1851)



இன்றைக்குள்ள இளைஞர்களுக்கு அன்றைக்கிருந்த அநீதிகளும், ஆதிக்கங்களும், அடிமைப்படுத்திய கொடுமை நிலைகளும், மனிதனை விலங்கினும் கீழாய் நடத்திய அயோக்கித் தனங்களும் தெரிய வாய்ப்பில்லை. அன்று அதிகம். இன்றைக்கு அவை அவ்வளவாக இல்லை. எப்படி இல்லாமல் போயின! தானே காலப்போக்கில் மறைந்து போயினவா? இல்லை.

இன்றைக்குள்ள இளைஞர்களுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்ட மாமனிதர்களின் துணிவுமிக்க போராட்டங்களால், தியாகங்களால், அவர்கள் ஊட்டிய விழிப்பால், அவர்கள் மேற்கொண்ட இடைவிடா முயற்சிகளால், அவர்கள் ஏற்றுக்கொண்ட இன்னல்களால் களையப்பட்டனர்.

நல்லபெயரை வைத்துக் கொள்ள முடியாது; விரும்புகின்ற ஆடையை அணிய முடியாது; தெருவில் நடக்க முடியாது, எல்லோரையும் தீண்ட முடியாது என்பன  போன்ற எண்ணற்ற கொடுமைகள் கோலோச்சிய நிலை அன்றைக்கு.
இவையெல்லாம் கடவுள் இட்ட விதி என்றெண்ணி, கட்டுப்பட்டுக் கிடந்த மக்களே அன்றைக்கு, அவர்களுக்குள்ளும் மானம்மிக்க சூடு சொரணையுள்ள, விழிப்பு பெற்ற மாமனிதர்கள் இவற்றை எதிர்த்தனர். மக்களுக்கு வியப்பூட்டினர். மாற்றம் கண்டனர். அப்படிப்பட்டவர்களுள் ஒருவர்தான் நமது வைகுண்டசாமிகள்.

கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள பூவண்டன் தோப்பு என்ற கிராமத்தில் ஓர் ஏழை நாடார் குடும்பத்தில் 1809-ஆம் ஆண்டில் பிறந்தவர் வைகுண்ட சாமிகள். பூவண்டன் தோப்பை சமஸ்தான் கோயில் விளையென்றும் , சாமித் தோப்பு என்றும் அழைப்பர்.

பெற்றோர்கள் இவருக்கு இட்ட பெயர் முடிசூடும் பெருமாள் என்பது. பெற்றோர் இவருக்குப் பெயர் சூட்டியபோதே பிரச்சினை பிறந்தது. உயிர் ஜாதிக்காரர்கள் வைத்துக் கொள்ளும் பெயர்களைத் தாழ்ந்த ஜாதிக்காரர்கள் வைத்துக் கொள்ளக்கூடாது என்று அன்றைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டது. அந்த அடிப்படையில் பெற்றோர் இட்ட முடிசூடும் பெருமாள் என்ற பெயரை மாற்றும்படி உத்தரவு போட்டனர் உயிர்ஜாதியினர் - ஆதிக்க வர்க்கத்தினர். வேறு வழியின்றி அந்தப் பெயர் மாற்றப்பட்டு முத்துக்குட்டி என்று பெற்றோர்களால் பெயர் வைக்கப்பட்டது.

அன்றைய நாளில், அவர் பிறந்த நாடார் சமூகத்தவர், ஆதிக்க வர்க்கத்தினரால், மிகக் கேவலமாக கீழ்த்தரமாக நடத்தப்பட்டனர். இதைக் கண்ட முத்துக்குட்டி இந்த இழிவுகளை, கேவலங்களை, உரிமை பறிப்புகளைத் தகர்த்தெறிந்து தான் பிறந்த இனத்தின் மக்களுக்குத் தலைநிமிர்வை ஏற்படுத்த வேண்டும் என்று உறுதி கொண்டார்.

1833-ஆம் ஆண்டு தனது 24-ஆம் வயதில் பொதுவாழ்வில் ஈடுபட்டார். இவர்சிறந்த விஷ்ணு பக்தர் என்றாலும் எல்லாமே கடவுள் வகுத்தது என்று நம்பி, கண்மூடித்தனமாக ஆதிக்க வர்க்கத்தினரிடம் அடிமைப்பட்டுக் கிடக்க அவர் விரும்பவில்லை.

திருச்செந்தூர் சென்று கடலில் குளித்தபோது, அலையில் அடித்துச் செல்லப்பட்டு, மூன்று நாள்கள் கழித்து மீண்டும் தப்பித்து வந்ததாகவும், அப்போது லட்சுமி நாராயணன் தரிசனம் தனக்குக் கிடைத்ததாகவும் அவர்களின் அருள்பெற்று, சக்தி பெற்று, மகிமை பெற்று வைகுண்டராகத் தான் திரும்பி வந்துள்ளதாகவும், மக்களிடம் தன்னைப் பற்றி கூறினார்.

1833ஆம் ஆண்டு முதல் நான்கு ஆண்டுகள் தவம் இருந்தார். சாமியாராக யாரைப் பார்த்தாலும் அவரிடம் அருள் பெற, பயன் பெறச் சென்று கூடுவது இந்த மக்களின் வழக்கமான இயல்பு என்பதால், இவரிடமும் மக்கள் சென்றனர். தங்கள் குறைகளைக்கூறி தீர்வு வேண்டினர். தங்கள் நோய்களைத் தீர்த்து வைக்கும்படி கேட்டனர். இவ்வாறு கூடும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உண்டாக்கும் பல கருத்துக்களை எடுத்துக் கூறினார் வைகுண்டர்.

அப்போது கன்னியாகுமரி திருவிதாங்கூர் மன்னர் ஆட்சியில் இருந்தது. மன்னராய் இருந்தவர் சுவாதி திருநாள் மகாராஜா. இவர் சிறந்த இசை மேதை என்றாலும், இவர் ஆட்சியில்தான் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும், அடித்தட்டு மக்களும் சொல்லொண்ணா துயரங்களை அடைந்தனர். ஜாதியின் பெயரால் மக்கள் அடக்கியாளப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டனர். சமுதாய அடிப்படையிலும், பொருளாதார அடிப்படையிலும் ஏராளமான இன்னல்கள் அடைந்தனர்.

ஜாதியக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்திய இந்த மன்னன், இம்மக்கள் மீது அநியாய வரிகளையெல்லாம் விதித்தான். கட்ட முடியாத மக்களைக் கடுமையாகத் தண்டித்தான். இம்மக்களிடம் உழைப்பையும், பொருளையும் கசக்கிப் பிழிந்து உறிஞ்சினான்.

இவற்றைக் கண்ட வைகுண்டர், தமது மக்களின் நன்மைக்காக அவர்களை இக்கொடுமைகளிலிருந்து மீட்பதற்காக, அந்த மன்னனை மிகவும் துணிவோடும், வீரத்தோடும் எதிர்த்தார். இதனால், எரிச்சலடைந்த மன்னன் வைகுண்டரைக் கைது செய்து, அடித்து இழுத்துச் சென்று 110 நாள்கள் சிறையில் வைத்தான்.

ஆனால், அக்கொடுமைகளுக்கும், அச்சுறுத்தலுக்கும் அஞ்சாத வைகுண்டர், சிறிதும் உளம் தளராது, தமது போராட்ட முடிவை மாற்றிக் கொள்ளாமல் இருந்தார். 1838ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவரை மன்னன் சிறையிலிருந்து விடுதலை செய்தான்.

வெளியில் வந்த வைகுண்டர் வீறுகொண்டு எழுந்தார். முன்னிலும் தீவிரமாக, மக்களின் மீதான கொடுமைகளைக் களைய பாடுபட்டார்.

இவர்பிறந்த நாடார் சமூக மக்கள் பனை மரமேறி கள் இறக்கும் தொழிலைப் பெரும்பாலும் செய்தனர். இவர்களைச் சாணார் என்றும் அழைத்தனர். உயர்ஜாதி ஆதிக்கவாதிகள் இவர்களைத் தீண்டத் தகாதவர்களாக ஒதுக்கி வைத்தனர்.

யார் யாரிடம் எவ்வளவு தூரத்தில் நின்று இவர்கள் பேச வேண்டும் என்று விதிகள்கூட வகுக்கப்பட்டிருந்தன.

ஒரு நாடார், நம்பூதிரி பார்ப்பனனிடமிருந்து 36அடி தூரத்தில் நின்று பேச வேண்டும். நாயரிடமிருந்து 12அடி தூரத்தில் நின்று பேச வேண்டும். பேசாமல் சந்திப்பதாக இருந்தாலும் இவ்வளவு தூரத்திலிருந்துதான் சந்திக்க வேண்டும்.

பொதுச்சாலைகளில் இவர்கள் செல்லக்கூடாது என்று சட்டம் போடப்பட்டிருந்தது. பொதுக்கிணறுகளில் இவர்கள் நீர் எடுக்கக் கூடாது. உயர்ஜாதியினர் வசிக்கும் தெருக்களை இவர்கள் மிதிக்கக் கூடாது. தெருவில் போவதற்கே இந்தத் தடையென்றால், கோயிலைப் பற்றிச் சொல்லவா வேண்டும். ஆம் கோயிலுக்கு இவர்கள் வரவே கூடாது.

கோயிலுக்கு அருகில்கூடச் செல்லக்கூடாது என்று கட்டாயப்படுத்தப்பட்டதால், கோயிலுக்கு அருகிலுள்ள பள்ளிகள் மற்றும் அரசு அலுவலங்களுக்குக்கூட இவர்கள் செல்லக்கூடாது. அதிகாரிகள் அலுவலங்களிலிருந்து வெளியில் வரும்போதுதான் அவர்களிடம் தங்கள் வேண்டுகோளை வைக்க முடியும்.

தெருக்களில் இவர்கள் குடைபிடித்துச் செல்லக்கூடாது. செருப்பு போடக்கூடாது. தனது வீட்டைக்கூட ஓடு வேய்ந்த வீடாகக் கட்டிக் கொள்ளக் கூடாது. பொன் நகைகள் அணியக்கூடாது. இச்சமுதாயப் பெண்கள் இடுப்பில் தண்ணீர்க்குடம் எடுத்துச் செல்லக்கூடாது. மாராப்புச் சேலை அணியக்கூடாது. இடுப்போடுதான் சேலை அணிய வேண்டும். இரவிக்கை அணியக்கூடாது. ஒரு பெண் தன் மறைவிடத்தை மறைத்துக் கொள்ளக்கூட அவர்களுக்கு உரிமையில்லை என்ற கடுமையான சட்ட திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு, இம்மக்கள் கொடுமைப்படுத்தப்பட்டனர்.

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால், நாடார் சமுதாயத்தில் ஒரு சிலர் பொருளாதார வசதியோடும், நில உரிமையோடும் வாழ்ந்தனர். இவர்கள் தங்கள் சமுதாயத்தில் பெரும்பான்மையினராக உள்ள ஏழை நாடார்களை மதிப்பதில்லை. அவர்களுக்குச் சிக்கல் வரும்போது, இடர் வரும்போது அவர்களை இவர்கள் பாதுகாப்பதும் இல்லை. ஆனால், ஏழையோ, பணக்காரர்களோ, எந்த நாடாரையும் உயர்ஜாதியினர், தீண்டத் தகாதவர்களாகக் கருதி நடத்தினர். செல்வம் இருந்தாலும் அவர்கள் இழிந்தவர்கள் என்றே எண்ணப்பட்டனர்; நடத்தப்பட்டனர்.

இவற்றைக் கூர்மையாகக் கவனித்த வைகுண்டர், தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஜாதியினருக்குள் முதலில் ஒற்றுமையை ஏற்படுத்தினால்தான், ஆதிக்கவாதிகளை எதிர்க்க முடியும். இழிவைப் போக்க முடியும் என்றும் சரியாகக் கணித்தார். அதன்படி இம்மக்களிடையில் ஒற்றுமையை ஏற்படுத்த சமத்துவச் சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கத்தை அமைத்தார்.

இதில் ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர். ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் உறுப்பினர்களாகச் சேர்ந்தனர்.

தன்னைக் கண்ணபிரான் என்று அழைத்துக் கொண்ட வைகுண்டர், தனக்குச் சீடர்களாக அய்ந்து பேர்களை அமர்த்தினார். அவர்களைப் பஞ்சபாண்டவர்கள் என்று அழைத்தார்.

தன்னுடைய கொள்கைகளையெல்லாம் ஊர் ஊராகச் சென்று பரப்பும்படிச் செய்தார். இவ்வாறு, தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்ற, ஒடுக்கப்பட்டோரின் இழிவைப் போக்க, உரிமையைப் பெற, ஓர் அமைப்பையும், அதில் செயல்புரியும் குழுவையும் அமைத்து ஓர் இயக்கத்தின் வடிவத்தை உருவாக்கினார்.

சீடர்கள் ஊர் ஊராகச் சென்று கொள்கைகளைப் பரப்பினால் மட்டும் போதாது, தாமும் நேராகச் சென்று மக்களிடம் கருத்துக்களைச் சொன்னால்தான் மிகுந்த பயனளிக்கும் என்று எண்ணி இவரே, ஊர் ஊராகப் பயணம் சென்று மக்களுக்கு விழிப்பூட்டி அவர்களை ஒற்றுமைப்படுத்தி ஓரணியில் சேர்த்தார்.

தம்முடைய கொள்கைகளைத் தொடர்ந்து பரப்பவும், மக்களிடையே ஒற்றுமையைத் தொடர்ந்து நிலைநாட்டவும் நிழல் தாங்கல் என்னும் மன்றங்களை ஏற்படுத்தினார். அவை வழிபாட்டு இடங்களாகவும், கல்வி கற்பிக்கும் நிலையங்களாகவும் வைகுண்டரின் கொள்கைகளைப் பரப்பும் பிரச்சார மையங்களாகவும் திகழ்ந்தன. சமத்துவச் சங்கத்தின் கிளைச் சங்கங்களைப் போல இவை செயல்பட்டன.

இங்கு வழிபாடு மேற்கொள்ளப்பட்டாலும் உருவ வழிபாடு இல்லை. இதைச் சரியான காரணத்தோடுதான் வைகுண்டர் செய்தார். உருவ வழிபாட்டைக் கடைப்பிடித்தால் அங்கு ஒரு கடவுள் சிலை வைக்க வேண்டி வரும். அதற்குப் பூஜை செய்ய அபிஷேகம் செய்ய அர்ச்சகர் என்ற பெயரில் ஆரிய பார்ப்பனர் உள்ளே நுழைந்து விடுவர். எனவே, அங்கும் ஆரியர் ஆதிக்கம் ஏற்பட்டு விடும். அந்த நிலையை அறவே தவிர்க்கவே இதைச் செய்தார்.

இராமலிங்க வள்ளலார், உருவ வழிபாட்டை மறுத்து வெறுத்தவர். அந்த சத்திய ஞான சபையிலே தற்போது உருவ வழிபாட்டைப் புகுத்துகின்றனர். என்ன காரணம்? உருவம் இல்லை என்றால் ஆரிய பார்ப்பனர் உள்ளே நுழைய முடியாது. ஆனால், உருவம் வைக்கப்பட்டால் அவர் உள்ளே நுழைய காரணம்  கிடைத்து விடுகின்றது. அவர்களுக்குக் கடவுள் எல்லாமே கருவிகள்தானே!

கடவுளை, தங்கள் ஆதிக்கத்தினை நிலைநாட்டவும் பாதுகாக்கவும் கருவியாகவே அவர்கள் காலங் காலமாக கையாண்டு வருகின்றனர். அந்த சூட்சுமத்தை, சூழ்ச்சியைப் புரிந்து கொண்டதனால்தான் வைகுண்டர் உருவ வழிபாடு கூடாது என்று நீக்கினார்.

அதற்கு அவர் தத்துவ ரீதியிலான விளக்கமும் அளித்தார்.
மறையினிலடங்கா இறையினிலடங்காவணங்கிலுமடங்கா
பலவகையிலுமடங்கா நுரையினிலடங்கா தொல்புவியினில டங்கா
சுருதியிலடங்கா சகயினிலடங்கா உறவினிலடங்கா
மொழியிலுமடங்கா யுகத்திலுமடங்கா ஒரு விதத்திலு மடங்கா...

இயல்புடையது இறை. எனவே, அதை எந்த உருவத்திலும் அடக்க முடியாது என்றார். எனவே, இந்தச் சித்தாந்த ரீதியிலான விளக்கம், அவரைப் பின்பற்றுகின்றவர்களுக்கு நிறைவை, ஏற்பை அளித்தது! எதிரிகளின் வாயை அடைத்தது.

உருவத்தை வணங்குவதைவிட உள்ளத்தால் வணங்குவதே உயர்ந்தது. இதை ஆரிய பார்ப்பனர்கள் நன்றாக அறிந்தாலும் தங்களுக்குப் பிழைப்பு வேண்டும் என்பதற்காக உருவ வழிபாட்டை உருவாக்கினர்.

உருவ வழிபாடு இருந்தால்தான், அர்ச்சனை செய்ய அவசியம் வரும், அப்படிச் செய்தால்தான் வருவாய் வரும். அப்படிச் செ ய்தால் தான் மக்களுக்கும் கடவுளுக்கும் இடையே புரோகிதராய் நின்று தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்ள முடியும் என்ற சுயநல, ஆதிக்க அடிப்படையில் இதைச் செய்தனர்.
அந்த மூலம் அறிந்து, அவர்கள் சூழ்ச்சி மூளை அறிந்து அதற்கு வைகுண்டர் முடிவு கட்டினார். தன் இனமக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் விடிவு காட்டினார்.

உருவ வழிபாட்டை ஒழித்ததன் மூலம் ஆடு கோழி பலியிடும்வழக்கத்தையும் அவரால் ஒழிக்க முடிந்தது,. கடவுளை வழிபட இவையெல்லாம் வேண்டாம். இவை கடவுள் கொள்கைக்கு எதிரானவை என்றார்.

ஆடுகிடாய் கோழி பன்றி ஆயனுக்கு வேண்டாங் காண்
மேளதாளம் குரவை தொனி வேண்டாங்காண் ஈசனுக்கு
என்று  தன் முடிவிற்கு சித்தாந்த விளக்கம் அளித்தார்.

பலியிடுதல் கூடாது என்று கூறியதோடு, ஆரவார செயல்பாடுகள் கடவுள் வழிபாட்டுக்குத் தேவையில்லை என்ற தம் எண்ணத்தையும் இதன்மூலம் வெளிப்படுத்தினார்.

கல்வி அறிவு இல்லாது, கடைநிலையில் உழலும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களிடையே நிலவிய பல்வேறு மூடநம்பிக்கைகளை களையவும் பாடுபட்டார். பேய், பிசாசு, மாந்திரீகம் என்று ஏமாற்றுப் பேர்வழிகளின் ஏமாற்று வேலைகளில், பொய்க்கதைகளில் நம்பி இவர்கள் ஏமாந்து போகும் இழிநிலையைப் போக்க உறுதியுடன் பிரச்சாரம் செய்தார்.

பொய்யில்லை பிசாசுயில்லை பில்லியின் வினைகளில்லை
நொய்யில்லை நோவுமில்லை நொன்பலத் துன்பமுமில்லை
தொய்யில்லை இறைகளில்லை சுறுபடுமா ஞாலமுமில்லை
மையில்லை உலகத்தோரே வாழுமோர் நினைவால்
என்று பாடினார் வைகுண்டர்.

இப்படிச் சொன்னால் உடனே மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். எனவே, விஷ்ணுவின் மகனாகிய நான், மந்திரவாதிகளிடமிருந்து மந்திரங்களைப் பறித்து கொண்டேன். எனவே,இனி அவர்களை நம்பவும்வேண்டாம். அவர்களிடம் பயப்படவும் வேண்டாம்... என்று கூறி மக்களுக்கு துணிவூட்டினார்.

ஆரியர்கள், தாழ்த்தப்பட்டவர்களைப் பிற்படுத்தப்பட்டவர்களைத் தாழ்த்தி, வீழ்த்தி, தீண்டாமல் தூரத்தில் நிறுத்தினாலும், தங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் என்றால், அதற்கேற்பத் தங்கள் வழிமுறைகளைத் தளர்த்திக் கொண்டனர். வருவாயையும் இழக்கக் கூடாது, தாழ்த்தப்பட்டவர்களை, பிற்படுத்தப்பட்டவர்களை விலக்கி வைப்பதையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்கு ஒரு சூழ்ச்சியைச் செய்தனர்.

ஆம், ஆலயங்களுக்குள் நுழையக்கூடாது என்று பெருவாரியான மக்களை ஒதுக்கி வைத்துவிட்டதால், அவர்களுடைய தட்சணையை இழக்க வேண்டி வந்தது. எனவே, அவர்கள் கூடாது என்றாலும் அவர்கள் கொடுக்கும் தட்சணை மட்டும் வேண்டும் என்று ஆவல் கொண்டு அலைந்தனர் ஆரிய பார்ப்பனர்கள்.

எனவே, இவர்களால் ஒதுக்கப்பட்ட மக்கள், கோயிலுக்கு வெளியே நின்றுகொண்டு, காணிக்கையை கோயிலுக்குள் எறிய வேண்டும் அதைப் புரோகிதர்கள் பொறுக்குவார்கள். பின் கோயிலுக்குள் இருந்தபடியே புரோகிதர்கள் இலையில் வைத்துக் கட்டப்பட்ட பிரசாதத்தைவெளியில் எறிவார்கள். அதைக் கோயிலுக்கு வெளியில் நிற்பவர்கள் பிடித்துக் கொள்வார்கள். எப்படிப்பட்ட தந்திரம் பாருங்கள்.

இப்படி காணிக்கை செலுத்தி ஏமாந்து போகும் மக்களைப் பார்த்து,
காணிக்கை யீடாதுங்கோ காவடி தூக்காதுங்கோ  வீணுக்குத் தேடுமுதில் விருதாவில் போடாதுங்கோ
என்று பாமரத் தமிழில் பதியும்படிச் சொன்னார் வைகுண்டர், விருதா என்றால் வீணே என்று பொருள்.

ஆரிய பார்ப்பன புரோகிதர்களுக்குக் காணிக்கை செலுத்த வேண்டாம் என்று மக்களுக்கு விழிப்பூட்டிய இவர், ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார்.

பயந்து தர்மம் இட்டு அந்தப் பரம்பொருளைத் தேடிடுங்கோ... என்றார்.

நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தலையில் சுமை தூக்கும் போது, அது உறுத்தாமல் இருக்க தலைப்பாகை அணியக்கூடாது என்று உயர்ஜாதிக்காரர்கள் கட்டளையிட்டனர். அப்படிச் சுமை தூக்கும்போது, வைக்கோலால் சும்மாடுசெய்து அதைத் தலையில் வைத்துத் தூக்க வேண்டும் என்றனர்.

நாடார் சமுதாயத்தில் ஒரு இளைஞன் 16 வயது அடைந்தால், அவன் தலையில் தலைப்பாகை கட்டி, கையில் பிச்சுவா கத்தியைக் கொடுப்பது மரபு. அவன்  பெரிய மனிதன் ஆகிவிட்டான் என்பதன் அடையாளமாக அவ்வாறு செய்யப்பட்டது. குடும்பத் தலைவர் இறந்தபின் அவரது மகனுக்கு இவ்வாறு செய்யும் வழக்கமும் இருந்தது. இதற்கு உறுமால் கட்டு என்று பெயர். இந்த வழக்கத்தை நாடார் சமுதாய மக்கள் செய்ய கூடாது என்று தடுத்து நிறுத்தி, அவர்களை இழிவு செய்ய வேண்டும் என்பதற்காக வைக்கோல் சும்மாட்டைத் தலையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். அவ்வாறு வைக்கோலால் செய்து தலையில் வைக்கப்படுவதற்கு சுருமாடு என்று பெயர் சூட்டினர்.

இப்படி  வைக்கோல் சுருமாடு வைக்கும் வழக்கத்தை ஒழிக்க, அவ்வாறு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாட்டை மீறும்படி வைகுண்டர் கேட்டுக் கொண்டார். தலைப்பாகை துணியால் அணியும்படிச் செய்தார். தன்னைக் காண வருகின்றவர்கள் தலைப்பாகை அணிந்து வரும்படி கேட்டுக் கொண்டார்.

தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டோரும் ஓட்டு வீடுகளையும், மாடி வீடுகளையும் கட்டக்கூடாது என்று ஆதிக்கவாதிகள் ஆணை இட்டிருந்தனர். எனவே, ஓலைக்குடிசைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக கட்டிக் கொண்டு வாழ்ந்தனர். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத வைகுண்டர், இம்மக்களிடையே முதலில் ஒற்றுமையை உருவாக்க வேண்டும் அதன்மூலம் பலத்தைப் பெற வேண்டும் என்று முடிவு செய்தார்.

இவர்களின்வீடுகளை ஒன்றன் பக்கத்தில் ஒன்றாக வரிசையிலும், ஒரே பக்கத்தில் வாயில் இருக்குமாறும் கட்டச் சொன்னார். முன்மாதிரியாக முட்டம் என்ற பகுதியில் இந்தத் திட்டப்படி சமத்துவக் காலனியை அமைத்தார்.

தமது சொந்த ஊரில் கிணறு ஒன்றை வெட்டியமைத்து, அனைத்து ஜாதி மக்களும் அதில் தண்ணீர் எடுக்கும்படிச் செய்தார். அதற்கு, முத்திரி கிணறு (புனிதக் கிணறு) என்று பெயரிட்டார்.

இங்குதான் வைகுண்டரின் திறமையும், மதிநுட்பமும் பளிச்சிடுகிறது. எந்த மக்கள் கிணற்றுத் தண்ணீரைத் தொட்டால் தீட்டாகிவிடும் என்று ஆரிய பார்ப்பனர்கள் ஒதுக்கி வைத்தார்களோ, அதே மக்கள் தண்ணீர் எடுக்கின்ற கிணற்றைப் புனித கிணறு என்று பெயர்சூட்டி, ஆரியர்களின் ஆதிக்கத்தில் ஓங்கி அறைந்தார். அந்த மக்கள் கைப்பட்டதால் அது தீட்டாகவில்லை; அது புனிதம் பெறுகிறது என்றார்.

அது மட்டுமல்ல, அக்கிணற்று நீரைக் கொண்டு ஊற்றிக் குளித்து? அந்த கிணற்றுநீரைக் கொண்டு சமைக்கப்பட்ட உணவை அனைத்து ஜாதியினரும் ஒன்று சேர்ந்து உண்டு மகிழும்படிச் செய்தார். இன்றைக்குச் செய்யப்படும் சமபந்தி விருந்திற்கு வைகுண்டரே முன்னோடி என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும், வைகுண்டர் தனது சீடர்களைப் பல்வேறு ஊர்களுக்கும் அனுப்பி, அங்குள்ள தாழ்த்தப்பட்ட ஜாதியினரின் வீடுகளில் உணவருந்துமாறு கட்டளையிட்டார்.

ஒருநாள், தமது சீடர்கள் இரண்டு பேரை பிச்சம்மாள் என்ற சலவைத் தொழிலாளி வீட்டிற்குச் சாப்பிட அனுப்பினார். அவர்கள் இருவரும் அங்குச் சென்று சாப்பிட விருப்பமில்லாமல் திரும்பி வந்துவிட்டனர். இதையறிந்த வைகுண்டர், அந்தஇருவரையும் கடுமையாக கண்டித்து, மீண்டும் அந்த வீட்டிற்குச் சென்று உணவருந்தும்படிச் செய்தார். சுமார் 170 ஆண்டுகளுக்கு முன் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்வதென்பது, நினைத்துக்கூடப் பார்க்க முடியாத அரும் செயலாகும். ஆனால், அவற்றைச் செய்துகாட்டிய புரட்சியாளர்தான் அய்யா வைகுண்டர் அவர்கள்.

தாழ்த்தப்பட்ட மக்கள் சுத்தமின்றி இருக்கிறார்கள், புலால் உண்கிறார்கள். அதனால் தான் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது என்று உயர் ஜாதிக்காரர்கள் கூறிய வார்த்தைகளை வைகுண்டர் மறுத்தார். இதுவெல்லாம் சாக்குகள், சமாதானங்கள், தங்கள் நிலைப்பாட்டிற்குச் சொல்லப்படுகின்ற காரணங்கள். அவசியம் வரும்போது அவர்களை ஏற்பதும், மற்ற நேரங்களில் தாழ்த்துவதும் ஆதிக்கக்காரர்களின் சூழ்ச்சியென்று சொல்லி, தம் மக்களும் தூய்மையாய் இருக்க,
மூன்று நேரந் துவைத்து உச்சியொரு நேரமதாய்
வேணும் பச்சரிசி வெற்றிச் சிறுமணியும்
வேகவைத்து நன்றாய் விரைவாய் மணலிலிட்டு
தாகமில்லாமல் தவிச்சிருக்க வேணுமென்று  அறிவுரை கூறினார்.

மீன் உணவை அதிகம் உண்ணும் கன்னியாகுமரி மக்கள் சைவ உணவைச் சாப்பிடவும், அதன் மூலம் தன்னைத் தீண்டாதார் கூறும் காரணத்தை முறியடிக்கும் படியும் கேட்டுக் கொண்டனர். மேலும், மூன்று வேளையும் உடைகளைத் துவைத்துக் குளித்து சைவ உணவை வேக வைத்து உண்டு, மணல் மீதிருந்து தவம் செய்ய வேண்டும் என்றார். அதன்மூலம் நீயும் உயர்வடைய முடியும் அதன்பின் எவரும் உன்னைத் தீட்டு என்று கூறி எப்படி விலக்கி வைக்க முடியும் என்று கேட்டார்.

ஆதிக்க வர்க்கத்தோடு போட்டியிட்டுத் தூய்மை காத்து கடவுளை எண்ணி தவமிருந்து, காய்கறி உணவை மட்டுமே உண்டு நீங்களும் உயர்ந்தவர்களாய், அவர்கள் தீண்டும் தகுதியைப் பெற்றவர்களாய் வாழ வேண்டும் என்று வற்புறுத்தி வழிகாட்டினார்.

வைகுண்டருக்கு இருந்த நோக்கமெல்லாம், அடித்தட்டு மக்கள், ஆதிக்கவாதிகளைவிட உயர்ந்துநிற்க வேண்டும் என்பதே. எப்படி முயன்றாவது அந்நிலை எட்ட வேண்டும் என்று வழிகாட்டினார்.

என்ன செய்தால் என்னை ஏற்பாய்? அதைச் சொல், நான் செய்கிறேன் என்று ஆதிக்க வர்க்கத்திற்கு அவர் இட்டச் சவால்தான் இது. அவர்களோடு நம்மாலும் போட்டியிட முடியும், அவர்களைப் போல் நம்மாலும் வாழ முடியும் என்று செயல் மூலம் காட்ட, உறுதி செய்ய அவர் விரும்பினார்.

வார்த்தையளவில் கொள்கை பேசினால், மாற்றம் வராது, செயல்வழி எவ்வளவு செய்கிறோம் என்பதைப் பொறுத்தே மாற்றங்களும் ஏமாற்றங்களும் வரும், இழிவுகளும் நீங்கும், சமத்துவம் உருவாகும் என்பதை நன்கு உணர்ந்ததால், தம் கொள்கைகளைச் செயற்படுத்திக் காட்ட முகாம் ஒன்று நடத்தினார். அந்த முகாமிற்கு அடித்தட்டு மக்களை அழைத்துப் பயிற்சி கொடுத்தார். அதற்குத் துவையல் பந்தி என்று பெயருஞ்சூட்டினார்.

இந்த முகாமில் பங்கேற்கும் அனைவரும், இங்கு மூன்று வேளையும் நன்றாகக் குளித்துத் துவைத்து, நண்பகல் ஒருவேளை பச்சரிசி பயறு வேக வைத்த கஞ்சி உணவை உண்டு, தவமிருக்க வேண்டும் என்றார்.

சற்றேறக்குறைய 700 குடும்பங்கள் இம்முகாமில் பங்கு கொண்டன. இவ்வாறு இம்முகாமில் பயிற்சி பெற்றவர்கள், தாங்கள் பெற்ற பயிற்சியை, கற்ற போதனைகளை, ஊர்தோறும் சென்று, மக்களிடம் பரப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதன்படி அவர்களும் பரப்பினர்.

வைகுண்டரின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்தால், அவர் தமது புரட்சியை ஓர் அமைப்பு ரீதியில் செய்தார் என்பதை அறிய முடியும்.முதலில் சங்கம் உருவாக்கினார். பின் பயிற்சி முகாம் நடத்தினார். அதனைப் பரப்ப தொண்டர்களை உருவாக்கினார். தமது இயக்கத்தின் அடையாளமாக ஒரு கொடியையும் அமைத்தார். கட்சி, சங்கம், தொண்டர், உறுப்பினர், பிரச்சாரம் என்று ஏதும் அறியா காலத்தில் இவற்றிற்கெல்லாம் முன்னோடியாய் நின்று செய்து காட்டினார். ஒரு புரட்சி இயக்கத்தின் அத்தனைக் கூறுகளும் இவருடைய செயல்திட்டங்களில் புதைந்து கிடப்பதை நாம் அறியலாம்.

காவி நிறத்தில், வெள்ளைத் தீபச் சுடரை தாங்கியதாய், அக்கொடி அமைக்கப்பட்டது. அக்கொடியை அன்புக்கொடி என்று அழைத்தார். இக்காலத்திலும் இவரது கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள். நிழல்தாங்கல்களில் இக்கொடியை ஏற்றி வணங்கி வருகின்றனர். வைகுண்டரின் பிறந்த நாளன்று நடக்கும் ஊர்வலத்தில் இக்கொடியை ஏந்திவருவது வழக்கத்தில் உள்ளது.

ஒரே நேரத்தில் மன்னர், ஆரிய பார்ப்பனர்கள், ஆங்கில ஆட்சியாளர்கள், மதப் போதகர்கள் என்று , பல தரப்பு எதிர்ப்புக்களையும் சமாளித்து, விழிப்பில்லா மக்களின் விடிவிற்கு வழிகாட்டுவதும், சாதிப்பதும் சாதாரண செயல்களா? அதுவும் 170ஆண்டுகளுக்கு முன் இது சாத்தியமா? என்று கற்பனைக் கண்கொண்டு கணக்கிட்டு எண்ணிப் பார்த்தால், வைகுண்டரின் புரட்சிகள் எவ்வளவு துணிவு மிக்கவை, திட்டமிட்டவை, சூழ்நிலைக்கேற்றவை. வியப்பிற்குரியவை என்று விளங்கும்.

ஆட்சியாளர்களும், ஆதிக்கப் பேர்வழிகளும் ஒடுக்கப்பட்ட மக்கள்மீது கடும் வரிகளை விதித்துக் கொடுமை செய்தபோது,
குஞ்சரமும் உன்னுடைய கொத்தளமும் தானிடத்து
வஞ்சகமாய் உந்தனுக்கு வலியகர்மம் சற்றுமடா
கர்ம வியாதிகளாய் கண்ட மாலையுடனே
வறுமை வந்து சிக்குமடா மானீசா நீ கேளு
தெய்வச் சாணாத்தி தினமுனை நிந்தித் துண்டால்,
பொய் வகையால் கர்ம போகத்தால் நீ மடிவாய்
என்று மன்னனுக்குச் சாபம் இட்டார். அதில் கூட அவர் ஆத்திரம் தீராததால்,
அவன் பட்டத்தைப் பறித்திடுவேன் கொட்டிக் குலைத்திடுவேன்! என்று பொங்கினார்.

இவரது ஆத்திரம் ஆரிய பார்ப்பனர்கள் மீதும் பாய்ந்தது.,
பிராமணர்களைப் பயம் காட்ட நம் வருவோம் என்றும்,
பிராமண வேசம் போட்ட பக்தன்மாரே நீங்கள் உண்டு என்றும் கூறினார்.

அதாவது பிராமணர் என்ற தகுதியே ஒரு வேஷம் என்றார். அதை யார் வேண்டுமானாலும் போடலாம். இதில் என்ன உயர்வு உள்ளது? எனவே, சூத்திரன் என்று ஒதுக்கப்பட்டவனும் அந்த வேசத்தைப் போட்டு உயர்ந்துவிடலாம் என்று அதை எள்ளி நகையாடியதன் மூலம், பிராமணன் புனிதமானவன்; அவன் பிறப்பால் மட்டும் வருபவன்; அவனே உயர்ந்தவன் என்ற ஏமாற்றுப் பிரச்சாரங்களைப் பிய்த்து எறிந்தார்.

வைகுண்டரின் கொள்கைப் பிரச்சாரத்தால், எழுச்சிப் புரட்சியால் ஒடுக்கப்பட்ட மக்கள் இழிவு நீங்க கிறித்துவ மதத்திற்கு மாறுவது நின்றது. இதனால் ஆத்திரமுற்ற கிறித்துவர்களும், ஆங்கில அரசும், வைகுண்டரை வெறுத்தனர். எதிரியாகக் கருதினர்.

ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியர் தூண்டுதலால்தான் வைகுண்டரை மன்னர் கைது செய்தார் என்ற செய்தியும், 1874இல் அவர்கள் தயாரித்த ஆண்டு அறிக்கையில், முத்துக் குட்டியிசத்தை எதிர்த்து இடைவிடாது போராட வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளமையும் இதை உறுதி செய்கின்றன.

ஆனால், வைகுண்டர்மத மாற்றத்தைத் தடுக்க வேண்டும் என்றோ, இந்து மதத்தைக் காப்பாற்ற வேண்டும் என்றோ நோக்கம் கொண்டு செயல்படவில்லை. மாறாக, தாழ்த்தப்பட்ட, பிற்பட்ட மக்கள் சம உரிமையோடு, மானத்தோடு, இழிவும், கொடுமையும் இன்றி வாழ வேண்டும், ஆதிக்கத்திலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்றே வைகுண்டர் செயல்பட்டார். இதனால் மதமாற்றம் இயல்பாகத் தடைப்பட்டது என்பதே உண்மை. இச்சூழல் கிறித்தவர்களுக்குப் பாதகமாக அமைந்தது என்று வேண்டுமானால் இதைக் கருதலாம்

நீ  பெரிது நான் பெரிது நிச்சயங்கள் பார்ப்போமென்ற
வான்பெருதறியாமல் மாள்வார் வீண் வேதமுள்ளோர்!
என்று வைகுண்டர் கூறுவதிலிருந்தே இதை உணரலாம்.


பெண்ணுரிமை

அடித்தட்டு மக்களில் உள்ள பெண்களின் உரிமைக்காகவும் வைகுண்டர் போராடினார். தாழ்த்தப்பட்ட வகுப்புப் பெண்கள் தோள் சேலையைத் துணிவுடன் அணிய வேண்டும் என்று இவர் எழுச்சியூட்டினார். இப்போராட்டத்தின் விளைவாய் 1859ஆம் ஆண்டு நாடார் பெண்களுக்குத் தோள் சேலை அணிகிற உரிமையைத் திருவிதாங்கூர் அரசு வழங்கியது. 1865இல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தோள் சேலை அணிகின்ற உரிமை வழங்கப்பட்டது.

இவரைப் பின்பற்றுகின்றவர்கள் இன்றளவும் இறந்தவர்களை எரிக்காமல் புதைக்கின்றனர். கருமாதி, திதி போன்ற காரியங்களை இவர்கள் செய்வதில்லை. எனவே, வைகுண்டர் இச்சடங்குகளை எதிர்த்து விழிப்பூட்டியிருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

இவ்வளவு துணிவுடன், மதிநுட்பத்துடன், எழுச்சி தரும் புரட்சிக் கருத்துக்களைப் பரப்பி, புரட்சிப் போராட்டங்களையும் நடத்தி வெற்றியும் கண்ட வைகுண்டர் 1851-இல் இறந்துபட்டார்.

இவரது அரிய புரட்சிப் போராட்டங்கள் பற்றியும், வாழ்க்கைப் பற்றியும் அறிய, அகிலத்திரட்டு அம்மானை என்ற வைகுண்டரின் சீடர் சகாதேவனால் எழுதப்பட்ட நூலாலும், அருள்நூல் என்ற இன்னொரு நூலும் உதவுகின்றன.

அம்மானை நூல் வைகுண்டரின் வாழ்க்கை வரலாறும், அவரது பணிகளும், திருவிதாங்கூர் மன்னரின் கொடுமைகளும் விளக்கப்படுவதோடு, கொடுமைகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.

அருள்நூல் அம்மானை நூலில் கூறப்பட்டுள்ள செய்திகளை உறுதி செய்வதாய் உள்ளது.

தமிழகத்தின் முதல் புரட்சியாளர் என்று சொல்லத்தக்க அளவிற்கு இவரது செயல்பாடுகள் அமைந்துள்ளன. காலத்தை வைத்துக் கணக்கிட்டுப் பார்க்கும்போது இவரது சிறப்பு உயர்ந்து நிற்கிறது.

ஆனால், இவருக்குப் பின் வந்தவர்கள் இவரைக் கடவுளாக்கி விட்டனர். வள்ளலாரின் நிலையும் தற்போது அதே வகையில் உள்ளது.

மதிப்பிற்குரிய மாமனிதர்களே தெய்வங்களாகப் பின்னாளில் வணங்கப்பட்டனர் என்பதற்கான எச்சங்களாகவும், தடயங்களாகவும் இவர்களது வாழ்க்கையைக் கொள்ளலாம்.

வாழ்க வைகுண்டரின் புகழ்!

நூல் - மறைக்கப்பட்ட மாமனிதர்கள்  
ஆசிரியர் - மஞ்சை வசந்தன்

Comments

Popular posts from this blog

கயிற்றில் தொங்கிய கணபதி (கி.பி. 1911-1949) part-2

பெம்மான் பசவர் (கி.பி.1131-1167)