இரட்டைமலை சீனிவாசன் (கி.பி.1859-1945)



1. பிராமணன், 2. க்ஷத்திரியன் 3. வைசியன் 4. சூத்திரன் என்று நான்கு வருணங்களை உண்டாக்கி, நாட்டைக் கெடுத்த ஆரியப் பார்ப்பனர்கள், சூத்திரர்களை மிக இழிவாகவும் கொடுமையாகவும் நடத்தினர்.

இந்தச் சூத்திரர்கள் பிரம்மாவின் காலில் பிறந்தவர்கள் என்று கதை எழுதி கடைக்கோடி மக்களாய்க் காட்டினர். உழைக்கின்ற உழைப்பாளிகளைக் கொச்சைப்படுத்தும் திட்டமாக இதைச் செய்தனர்.

இத்தகு கொடுமைக்கும், இழிவிற்கும், கேவலத்திற்கும் உள்ளாக்கப்பட்ட சூத்திரர்களைவிடவும் மோசமாக நடத்தப்பட்ட மக்கள் உண்டு. அவர்களைப் பஞ்சமர்கள் என்று அழைத்தனர். அதாவது  மேற்கண்ட நான்கு வருணத்திலும் சேராதவர்கள் பஞ்சமர்கள் - அய்ந்தாம் பிரிவினர் என்று அழைக்கப்பட்டனர்.

சூத்திரனுக்காவது பிரம்மாவின் காலில் பிறக்கின்ற தகுதியைக் கொடுத்துப் புராணம் எழுதினர். ஆனால், அந்த வாய்ப்புக்கூட பஞ்சமர்களுக்கு அளிக்கப்படவில்லை. காரணம், கடவுளிடமிருந்து வரும் தகுதி அவர்களுக்கு அறவே இல்லை. தீட்டு உடைய இழிமக்கள் அவர்கள். எனவே, கடவுளின் அங்கமாக அவர்கள் இருக்க முடியாது. எனவேதான், இந்த நான்கு வருணத்திலும் சேராத பஞ்சமர்களாக அவர்களால் ஒதுக்கப்பட்டுள்ளனர்.

தந்தை பெரியாரிடம் ஒருமுறை நான்கு வருணத்தாரும் பிரம்மாவிடம் பிறந்ததாகச் சொல்கிறார்களே, அப்படியானால், பஞ்சமர்கள் எப்படி பிறந்தார்கள்? என்று கேட்க -தந்தை பெரியார் அவர்கள் பட்டென்று, அவர்கள் தான் முறையாக அவர்கள் தாயிடம் பிறக்கவேண்டிய வழியில் பிறந்தார்கள்! என்று பதில் சொன்னார்கள்.

அப்படி வருணப் பிரிவில்கூட சேர்க்காமல் ஆரியப் பார்ப்பனர்களால் கேவலப்படுத்தப்பட்டு, கீழ்ஜாதியாக ஒதுக்கப்பட்டு, நிழல்கூட தங்கள்மீது படக்கூடாது என்று இழிவு செய்யப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தவர்தான் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள்.

பிறப்பு

செங்கற்பட்டு மாவட்டத்தில் கோழிப்பாளையம் என்ற சிற்றூரில், 1859ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் நாள் பிறந்தார். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் சீனிவாசன். இவரது தந்தையின் பெயர் இரட்டைமலை. எனவே, இரட்டைமலை சீனிவாசன் என்று அழைக்கப்பட்டார். தாழ்த்தப்பட்ட சமுதாயமே, மிகவும் ஏழ்மையிலும், வறுமையிலும் வாடும் சமுதாயம்தான். அதிலும் இவரது குடும்பம் மிகவும் வறுமையில் வாடிய குடும்பம்.

எனவே, இவரது குடும்பம் பிழைப்புத் தேடி தஞ்சாவூருக்குச் சென்றது. தாழ்த்தப்பட்டவர்கள் அக்காலத்தில் படிப்பது என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒன்றாகும். என்றாலும், இவர் எப்படியாவது படிக்கவேண்டும் என்பதில் ஆர்வமும், முனைப்பும் காட்டினார். இதையறிந்த இவரது குடும்பத்தார் அவரைப் படிக்க வைக்க முயற்சி மேற்கொண்டனர்.

தாழ்த்தப்பட்டோர் மற்றவர்களோடு சேர்ந்து படிக்க இயலாது. தீண்டாமை உச்சத்திலிருந்த நேரம் அது. இவர்களுக்கென்று தனியே கல்விக்கூடமும் இல்லை. திண்ணைப் படிப்புதான் அன்றைக்கு நடப்பிலிருந்த கல்வி முறை.
உயர்ந்த ஜாதிக்காரர்களுக்காகத் திண்ணையில் நடத்தப்படும் பள்ளிக்கூடத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இச்சூழலாலேதான் தாழ்த்தப்பட்டோரின் கல்வி மிகவும் பாதிக்கப்பட்டது.

கல்வி

இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் கல்வி முதலில் திண்ணையில்தான் தொடங்கியது. ஜாதி இந்துக்களுக்கான அத்திண்ணைப் பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுக்கப்பட்டபோது, இவர் பிற மாணவர்களிடம் சேராமல் தள்ளி உட்கார்ந்து பாடங்களைக் கேட்டார். இந்த அளவிற்கு வேறு எந்த ஊரிலும் அனுமதியில்லை. விதிவிலக்காக, அபூர்வமாக அந்த ஊரில் உள்ள சில நல்லவர்கள் இவருக்கு அந்த வாய்ப்பை அளித்தனர்.

அடுத்து, பள்ளிப்படிப்பை கோயம்புத்தூரில் தொடர்ந்தார் இவர். அதைப்பற்றி இவரே தம்முடைய ஜீவிய சரித்திர சுருக்கம் என்பதில் கூறியுள்ளார்.

கோயம்புத்தூர் கலாசாலையில் நான் வாசித்தபோது, சுமார் 400 பிள்ளைகளில் 10 பேர்கள் தவிர, மற்றவர்கள் பிராமணப் பிள்ளைகள். ஜாதி கோட்பாடுகள் மிகக் கடினமாய் கவனிக்கப்பட்டன. மற்ற பிள்ளைகளோடு சிநேகிதத்தால் (பழகினால்) ஜாதி, குடும்பம், இருப்பிடம் முதலானவை தெரிந்துகொண்டால், அவர்கள் தாழ்வாக என்னை நடத்துவார்கள் என்று பயந்து, பள்ளிக்கு வெளியே எங்கேனும் வாசித்துக் கொண்டிருந்துவிட்டு, பள்ளி ஆரம்ப மணி அடித்த பிறகு வகுப்புக்குள் போவேன். வகுப்பு கலையும்போது, என்னை மாணவர்கள் எட்டாதபடி வீட்டுக்குக் கடுகென நடந்து சேருவேன். மற்றப் பிள்ளைகளோடு விளையாடக் கூடாமையான கொடுமையை நினைத்து, மனங்கலங்கி எண்ணி எண்ணி இந்த இடுக்கத்தை எப்படி மேற்கொள்வதென்று யோசிப்பேன்... என்று தன் பள்ளிப் படிப்பின் அவலம்பற்றி அழாத குறையாகக் கூறியுள்ளார் சீனிவாசன்.

ஆக, தம்மை யார் என்று அறியாத வகையில், மற்ற மாணவர்கள் கண்டுபிடித்துவிடாத வகையில் அவர் ஒரு பள்ளியில் படித்து முடிப்பதென்பது என்ன சாதாரண காரியமா? நித்தம் நித்தம் அவர் செத்துப் பிழைப்பது போன்ற ஒரு கள்ள வாழ்க்கையே அவரது கல்வி வாழ்க்கையாக அமைந்தது என்றால், அந்தப் பிஞ்சு உள்ளம் என்ன பாடுபட்டிருக்கும்!

அக்காலத்தில், தாழ்த்தப்பட்டவர்களில் ஓரிருவர் ல்வி கற்றார்கள் என்றால், இப்படிப்பட்ட இன்னல்களையும், இழிவுகளையும், இடர்ப்பாடுகளையும் ஏற்றுத்தான்.

குடும்ப வறுமை காரணமாக, சீனிவாசன் எவ்வளவு முயன்றும் தொடர்ந்து படிக்க இயலவில்லை. இக்காலத்தில் எல்லா வசதிகளையும் செய்துகொடுத்து, சம வாய்ப்பு, சலுகை, உதவி, இலவச உணவு என பல வகை உதவிகளையும் செய்துகொடுத்த பின்பும் படிக்காமல், படிப்பதில் அக்கறை இல்லாமல் வாழ்வைப் பாழடிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் இரட்டைமலை சீனிவாசன் அவர்களுடைய வாழ்வை மனதிற்கொண்டு படித்து முன்னுக்கு வரவேண்டும். சமுதாயத்தில் அக்கறையுள்ளவர்கள் இப்படிப்பட்ட மாணவர்களுக்கு நல்ல அறிவுரைகளை வழங்கி நல்வழிப்படுத்தவேண்டும்!

மனம் முழுக்கப் படிப்பில் சென்றாலும், பணம் இல்லையென்ற வறுமையால், குடும்பத்திற்கு வாழ்வளிக்க வருவாய் தேடும் முயற்சியில் இறங்கினார் இரட்டைமலை சீனிவாசன்.

பணி

1822-ஆம் ஆண்டு நீலகிரியில் இருந்த ஓர் ஆங்கிலேய வர்த்தக நிறுவனத்தில் கணக்கராக வேலைக்குச் சேர்ந்தார். இங்குதான் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். இந்திய நாட்டு நிறுவனம் எதிலும் அவர் வேலைக்குச் சேர இயலவில்லை. ஜாதி பாராத ஆங்கிலேய நிறுவனத்தில்தான், அவரால் பணியில் சேர முடிந்திருக்கிறது. அந்த அளவிற்கு கல்வி வேலை வாய்ப்புகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு அறவே மறுக்கப்பட்ட காலம் அது. என்றாலும், அவருக்கு அதில் ஒரு நன்மை இருந்தது.
இத்தனை காலமும் அஞ்சி, அஞ்சி, மறைந்து, ஒளிந்து இந்து சமுதாய அடக்குமுறையால் அல்லல் உற்றவருக்கு, ஆங்கில நிறுவனம் விடுதலைக் காற்றைச் சுவாசிக்கும் வாய்ப்பை அளித்தது. இதில் என்ன விந்தையென்றால், அடிமைப்படுத்திய ஆங்கில நிறுவனம் விடுதலை வாழ்வைக் கொடுத்தது, விடுதலை வேண்டிய இந்தியச் சமுதாயம் அடிமை வாழ்வைத் தந்தது. அதனால்தான், தந்தை பெரியார் அவர்கள், எம்மக்கள் அனைவரும் சமமாக வரும்வரை ஆங்கில ஆட்சியே நீடிக்கட்டும் என்றார். விடுதலை பெற்றால், ஆரியப் பார்ப்பன ஆதிக்கமே நிலவும். அது அடித்தட்டு மக்களுக்குப் பாதிப்பாக அமையும் என்றார். அம்பேத்கர் மட்டும் இருந்து, விழிப்போடு செயல்படவில்லையென்றால், பெரியார் சொன்னதுபோல் பெரும்பாதிப்பு ஒடுக்கப்பட்டோருக்கு வந்திருக்கும்.

ஆங்கில நிறுவனத்தில், மனித உரிமைகளோடு வாழும் ஒரு வாய்ப்பைப் பெற்றார். செயலும், சிந்தனைகளும் விடுதலை பெற்ற ஓர் உணர்வு அவருக்கு ஏற்பட்டது. தியோசாபிகல் சொசைட்டியை நிறுவிய பிளாவட்ஸ்கி அம்மையார் மற்றும் ஆல்காட் என்ற இருவரையும் சந்திக்கும் வாய்ப்பும் இங்கு இவருக்குக் கிடைத்தது.

1884 இல் சென்னை அடையாறில் இச்சொசைட்டியின் ஆண்டுவிழா நடைபெற்றபோது, இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் அதில் கலந்துகொண்டார். அதிலும் ஒரு சிறப்பு என்னவென்றால், அச்சங்கத்தில் அவர் ஓர் உறுப்பினராகவும் சேர்க்கப்பட்டார். அந்த விழாவிற்கு, இந்தியா முழுமையிலிருந்தும் வந்திருந்த முதன்மை மனிதர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பு, அவருக்குக் கிடைத்தது. இந்தியாவில் அரசியல் இயக்கம் ஒன்றைத் தொடங்குவது குறித்து அப்போது கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
இதுபற்றி இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் -ஷெட்யூல்டு இன மக்கள் வேண்டுவது சமுதாய விடுதலை. மனிதனை மனிதனாக மதிக்கும் உரிமை. குறிப்பாக இந்திய நாட்டில், இந்தியனாய் வாழ்கின்ற மனிதர்களிடையே, அதே நாட்டில் வாழ்கின்ற இந்தியனைப் பார்த்துக் கேட்கும் விடுதலை. சமூகப் பொருளாதார தகுதியைப் பெறாத நாட்டில் அரசியல் விடுதலை தேவையா? காங்கிரஸ் தேவையா? எனவே, ஷெட்யூல்டு இன மக்களின் முன்னேற்றமான வாழ்விற்கு எவ்விதமான திட்டமும் இல்லாத இந்த அரசியல் அமைப்பில் எனக்கு நம்பிக்கையில்லை என்று ஆணியடித்தாற் போன்ற, முதன்மையான கருத்தை வெளியிட்டார்.

பின்னாளில் இதேபோன்ற கருத்தைத் தந்தை பெரியார் அவர்கள் வெளியிடுவதற்குக்கூட இரட்டைமலை சீனிவாசன் அவர்கள்தான் முன்னோடி என்பதை அறியும்போது வியப்பாகவும், பெருமையாகவும் உள்ளது.

1885 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் பம்பாயில் துவங்கப்படுவதற்கு முன்னே, இந்திய விடுதலையில், தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலையும் சேர்ந்திருக்குமா? அப்படியில்லாமல் ஒரு விடுதலை இந்த நாட்டிற்குத் தேவையா? என்று கேள்வி எழுப்பி எல்லோரையும் அக்கோணத்தில் சிந்திக்கச் செய்தவர் ஒரு தாழ்த்தப்பட்டவர். அதுவும் ஒரு தமிழர் என்கிறபோது, அவரது அறிவு நுட்பமும், விழிப்புணர்வும் மிகச் சிறப்பாக வெளிப்படுகின்றன.

உள்நாட்டிலுள்ளவர்களிடமிருந்தே விடுதலையை உறுதி செய்யாமல், அயலவரிடமிருந்து விடுதலைக்குப் போராடுவது எப்படிச் சரியாகும்? அப்படிப் பெறப்படும் விடுதலை எப்படி அனைவருக்கும் நிகராகும், உரியதாகும் என்ற ஆழமான உள்ளடக்கம் உள்ள கேள்விகளை அவர் முன்வைத்தது அனைவரின் சிந்தனையையும் கிளறியது.

இவரது நியாயமான கேள்விக்கு அப்போது தொடங்கப்பட்ட காங்கிரசில் சரியான பதில் இல்லை. இதனால் வெறுப்புற்ற இவர், காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒதுங்கினார். தந்தை பெரியார் அவர்கள் பிற்காலத்தில் செய்த முடிவுகள் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் முடிவுகளைப் பின்பற்றியே வருவதை நம்மால் ஒப்பிட்டு அறிய முடிகிறது. அதுமட்டுமல்ல, தன்னலமில்லா தலைவர்களின் செயல்பாடுகளும், சிந்தனைகளும் ஒத்தே இருக்கும் என்பதும் இதன்மூலம் வெளிப்படுகிறது.

திருமணம்

1887-ஆம் ஆண்டு அரங்கநாயகி என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்ட இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் 1890 முதல் சென்னையிலேயே தங்கி வாழத் தொடங்கினார்.

திராவிட மகாசன சபை

1891இல் சென்னை மற்றும் செங்கற்பட்டு பகுதிகளில் வாழ்ந்த பறையர் (ஆதிதிராவிடர்) இன மக்களில் கல்வியும், அறிவும், வளர்ச்சியும் விழிப்புணர்வும் பெற்றவர்கள் ஒன்று சேர்ந்து, திராவிட மகாஜன சபை என்ற அமைப்பை  உருவாக்கினர். ஆதிதிராவிடர் மக்களுக்கென்று உருவாக்கப்பட்ட முதல் அமைப்பு இதுவாகும்.

1891ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த அமைப்பின் முதல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்குத் தேவையான முதன்மை முயற்சிகளை இரட்டைமலை சீனிவாசன் அவர்களும், பண்டிதமணி சி.அயோத்தியதாஸ் (அயோத்தி தாச பண்டிதர்) அவர்களும் மேற்கொண்டனர். இந்த மாநாட்டில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

கல்வி கற்கக்கூடிய வாய்ப்புகளுக்கு உள்ள சமூகத் தடைகளை நீக்கவேண்டும். கிராம ஒன்றியங்கள், நகராட்சிகள் ஆகியவற்றில் பிரதிநிதித்துவம் தரவேண்டும். முன்சீப், மணியக்காரர் வேலைகள் தரப்படவேண்டும். இந்துக்கள் பணிபுரியும் நீதிமன்றங்களில் செல்வதற்குள்ள தடைகள் நீக்கப்படவேண்டும். பொதுநீர் நிலைகளில் தண்ணீர் எடுப்பதற்கு உள்ள தடைகளையும் நீக்கவேண்டும். பறையர் என்று கேவலப்படுத்தும் நோக்கில் சொல்வதோ, பறையர்க்கு இழிவான சிறு பணிகளைத் தருதலோ கூடாது.

இத்தீர்மானங்களை அக்காலத்தில் நிறைவேற்றுவது என்பது சிந்தித்துக்கூட பார்க்க முடியாத அரிய செயலாகும். அந்த அளவிற்குக் கொடுமைகளும், அடக்குமுறைகளும், ஆதிக்கமும் உச்சநிலையில் இருந்த காலம் அது. அது மாத்திரம் அல்ல, இப்படிப்பட்ட உரிமைகளைக் கேட்கவேண்டும் என்ற விழிப்பும், துணிவும் அக்காலத்தில் தாழ்த்தப்பட்டோர் மத்தியில் வந்ததே வியப்பிற்குரிய ஒன்றாகும்.

இருபதாம் நூற்றாண்டில் புரட்சிப் பணிகளாக, போராட்டங்களாகக் கருதப்பட்ட, செய்யப்பட்டவற்றை 19ஆம் நூற்றாண்டிலே செய்த இவரின் சாதனை வரலாற்றில் வலுவாகப் பதியப்படவேண்டிய முதன்மைப் பதிவாகும். தாழ்த்தப்பட்ட மக்களின் நெடுங்கால குமுறலுக்கும், அழுத்தத்திற்கும் ஒரு வடிகாலாக இவை அமைந்தன. இவைகள் தீர்மானங்கள் என்பதைவிட, உள்ளப் புழுக்கம் சிந்திய உணர்ச்சித் துளிகள் என்று கொள்வதே பொருத்தமுடையதாகும்.
இத்தீர்மானங்கள் அரசுக்கும், இந்திய தேசிய காங்கிரசுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. ஆம், உள்ளப் புழுக்கம் உலகறியச் செய்யப்பட்டது.

இந்தத் திராவிட மகாஜன சபை பின்னர் பறையர் மகாஜன சபை என்று பச்சையாகப் பெயர் மாற்றம் செய்து அழைக்கப்பட்டது. இச்சபையின் செயலராக இரட்டைமலை சீனிவாசன் அவர்களே பணியாற்றினார்.

1892 ஏப்ரல் மாதத்தில், மெட்ராஸ் மகாஜன சபை கூட்டத்தில் திராவிட மகாஜன சபை சார்பில் அயோத்திதாச பண்டிதர் கலந்துகொண்டார். அனைத்து ஊர்களிலும் தாழ்த்தப்பட்டோருக்குப் பள்ளிகள் அமைக்கவேண்டும் என்றும், புறம்போக்கு நிலங்களை அவர்களுக்கு வழங்கவேண்டும் என்றும் தீர்மானம் கொண்டு வந்தார்.

பறையன் பத்திரிகை

இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் 1893-இல் நான்கு பக்கங்களைக் கொண்ட பறையன் என்ற மாதாந்திரப் பத்திரிகையைத் தொடங்கினார். தாழ்த்தப்பட்ட மக்கள் அதை ஆவலோடு வாங்கிப் படித்தனர்; படிக்கச் சொல்லிக் கேட்டனர்.
அப்பத்திரிகைக்கு பறையன் என்று ஏன் பெயர் வைத்தார் என்ற காரணத்தையும் அவர் விளக்கினார்.

நான்! நான்! என்ற மகா மந்திரத்தை ஜெபித்துக் கொண்டிருப்பவன், தன்னை உணர்ந்து, சகலமும் அறியும் ஞானியாகி, தலைவனைக் காண்பதுபோல், நான்! நான் என்று எவன் ஒருவன் தன்னையும், தன் இனத்தையும் மறுக்காமல், அச்சமும், நாணமும் இல்லாமல் உண்மை பேசி தன் சுதந்திரத்தைப் பாராட்டுகின்றானோ அவன் மதிக்கப்பெற்று இல்வாழ்க்கையில் சம்பத்துள்ளவனாய் நித்திய சமாதானத்துடன் வாழ்வானாகையால், பறையன் இனத்தொருவன் பறையன் என்பவன் நான்தான் என்று முன்வந்தாலொழிய அவன் சுதந்திரம் பாராட்ட முடியாமல் தாழ்த்தப்பட்டு என்றைக்கும் தரித்திரனாய் இருப்பான். ஆகையால், பறையன் என்னும் மகுடம் சூட்டி ஒரு பத்திரிகையைப் பிரசுரித்தேன்!

பாமர மொழியில் இவர் இவற்றைச் சொல்லியிருந்தாலும், இதன் உள்ளடக்கமும், உணர்வுத் துடிப்புகளும் பலவாகும்; பலமாகும்!

ஜாதி கூடாது என்று சொல்லுகின்ற அரசு ஜாதியைக் கேட்பது ஏன்? என்று இன்றைக்குத் தங்களை அறிவு ஜீவிகளாக எண்ணிக்கொண்டு கேள்வி கேட்பவர்களுக்கு அன்றைக்கே இவர் பதில் சொல்லியுள்ளார்.

தன்னை அடையாளம் காட்டித்தான் தன் நிலையை அடையாளம் காட்ட முடியும். தன் நிலையை அடையாளம் காட்டுவதன்மூலம்தான் தனக்குள்ள உரிமைகளைப் பெற முடியும்; குறைகளை நீக்கிக் கொள்ள முடியும்.

நோயாளி தன்னை நோயின் பெயரால் அடையாளம் காட்டாமல், நோய்க்கு நிவாரணம் பெற முடியாதல்லவா? அதைத்தான் இவர் ஆழமாகச் சொன்னார்.
சமுதாயத்தின் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தன்னை நோயாளிகள் என்பதை முதலில் அடையாளம் காட்டவேண்டும். அந்த அடையாளம்தான் பறையன் என்ற பெயர் என்ற உட்பொருளைத்தான் அவர் அந்த விளக்கத்தில் உரைத்தார்.

பறையடிக்கவும், பிணம் புதைக்கவும், கழிவு அகற்றவும், மாடு மேய்க்கவும் என்று என்னை இச்சமுதாயம், சமுதாயத்தின் ஆதிக்கவாதிகள், அதிலும் குறிப்பாக ஆரியப் பார்ப்பனர்கள் எங்களை முத்திரைக் குத்தி ஒதுக்கி வைத்தார்கள். அந்த முத்திரைதான் பறையன் என்பது. அந்த அடையாளத்தைக் காட்டித்தான், சொந்தக் கொடுமைகளை வெளிக்காட்ட முடியும்; விடிவு பெற முடியும் என்ற உண்மையினை உணர்ந்ததால்தான் இந்த விளக்கத்தை அவர் அளித்தார்.

ஒதுக்கி வைக்கப்பட்டவன் நான்தான். உரிமை மறுக்கப்பட்டவன் நான்தான். என் ஜாதிக்கு இடப்பட்ட பெயர்தான் பறையன் என்பது. எனவே, பறையனுக்கு நீதி வேண்டும், பறையனுக்கு உரிமை வேண்டும், பறையனும் சமமாக வேண்டும், பறையனும் மனிதனாக வேண்டும், பார்ப்பானுக்கு உள்ளது பறையனுக்கும் வேண்டும், எந்த அடையாளத்தால் நான் ஒடுக்கப்பட்டேனோ அந்த அடையாளத்தின் அடிப்படையிலே எனக்கு உரிமை வேண்டும். சலுகை வேண்டும், வாய்ப்பு வேண்டும், உயர்வு வேண்டும் என்று கேட்கின்ற உறுதியை ஒடுக்கப்பட்டவர்கள் பெறவேண்டும் என்ற உள்ளடக்கந்தான், அவர் அளித்த விளக்கத்தின் பொருள். அவமானத்தின் அடையாளமாக அச்சொல்லை எண்ணிக் கூனிக் குறுகுவதைவிட்டு, வாய்ப்புப் பெறும் அடையாளச் சீட்டாக அதைக் கொள்ளுகின்ற மனப்பக்குவமும், துணிவும் வேண்டும் என்று அவர் விரும்பினார்.
இழிசொல் என்ற எண்ணத்திலே இதுவரை கூனிக் குறுகி அவமானத்தோடு ஒதுங்கிய மக்களுக்கு, தன்னம்பிக்கையூட்டி, முன்னுக்குக் கொண்டு வருகின்ற உணர்ச்சியை இவரது விளக்கம், அச்சமுதாய மக்களுக்கு அளித்தது. ஆம், இது உளவியல் சார்ந்த அணுகுமுறை.

19 ஆம் நூற்றாண்டிலே பத்திரிகை நடத்துகின்ற துணிவும், ஆற்றலும் அவருக்கு இருந்ததோடு, அதற்கு விழிப்பூட்டும் ஒரு பெயரையும் இட்டு, அப்பத்திரிகையை, ஏழு ஆண்டுகள் நடத்திய பெருமையும் அவருக்குக் கிடைத்தது.

தம் இனத்தின் மேம்பாட்டுக்கு வழிகண்டு அதற்காக அயராது பாடுபட்டதோடு, எதிரிகளின் ஆதிக்கத்தை அவர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பதிலும் இவர் விழிப்போடு இருந்தார்.

ஆரிய ஆதிக்க எதிர்ப்பு

அய்..எஸ். என்று இன்றைக்கு அழைக்கப்படும் தேர்வுக்கு இணையான தேர்வு அக்காலத்தில் அய்.சி.எஸ். என்று அழைக்கப்பட்டது. அத்தேர்வு இலண்டனில் மட்டும்தான் நடத்தப்பட்டது.

ஆரியப் பார்ப்பனர்கள் தங்களின் சாஸ்திரப்படி கடல் தாண்டிச் செல்லக்கூடாது என்பதால், அத்தேர்வு எழுத முடியாமல் இருந்தனர். உயர் பதவிகளுக்குச் செல்ல அத்தேர்வு எழுதி தேறியிருக்கவேண்டும். எனவே, சாஸ்திரத்தையும்விடாமல், அய்.சி.எஸ். தேர்வையும் எழுதி உயர்பதவியில் உட்கார்ந்துவிடவேண்டும் என்று திட்டமிட்ட ஆரியப் பார்ப்பனர்கள், அய்.சி.எஸ். தேர்வை இந்தியாவிலும் நடத்தவேண்டும் என்று ஆங்கில ஆட்சியாளர்களிடம் கோரிக்கை வைத்தனர். ஆரியப் பார்ப்பன ஆதிக்கத்தின் பாதுகாப்பிடமாக விளங்கிய இந்திய தேசிய காங்கிரசும் இக்கோரிக்கையை ஆதரித்தது. இத்தேர்வு இந்தியாவில் நடந்தால், பார்ப்பன சூழ்ச்சியில் மற்றவர்கள் பலியாகிப் போவார்கள்; அவர்களோடு போட்டியிட்டு மற்றவர்கள் தேர்வு பெறுவது இயலாமல் போகும். எனவே, அத்தேர்வு தொடர்ந்து இலண்டனிலே நடத்தப்படவேண்டும் என்றார் இரட்டைமலை சீனிவாசன் அவர்கள்.

இவரது இந்த வேண்டுகோளில் நுட்பமான உள்நோக்கமும் இருந்தது. சாஸ்திரத்தைக் காட்டி, இந்தியாவில் எல்லா உயர்வையும் அடைகின்றவர்களுக்கு, சாஸ்திரத்தில் அவர்களுக்குப் பாதிப்பாக உள்ள ஒரே விதி கடல் தாண்டக்கூடாது என்பதுதான். எனவே, இந்தத் தடையிருந்தால்தான் பார்ப்பனர்கள் அதிகம் செல்லமாட்டார்கள். அய்.சி.எஸ். தேர்வில் வெற்றி பெறுகின்ற வாய்ப்பு மற்ற சமுதாயத்தினருக்கு அதிக அளவில் அதன்மூலம் கிடைக்கும் என்று உறுதியாய் நம்பினார்.

பறையர் மகாசன சபை

எனவே, பறையர் மகாசன சபை சார்பில் 1893 டிசம்பரில் சென்னையில் கூட்டம் ஒன்றைக் கூட்டி, அக்கூட்டத்தின் தீர்மானமாக, 3412 பேர் கையொப்பம் இட்ட மனு ஒன்றினை, ஜெனரல் சர்ஜாஜ் - செஸ்னி என்ற பாராளுமன்ற உறுப்பினர்மூலம் பிரிட்டிஷ் மக்களவையில் சமர்ப்பித்தார்.

அந்த மனுவில்,சிவில் சர்வீஸ் பரீட்சையானது ஏக காலத்தில் இந்தியாவிலும், இங்கிலாந்திலும் நடத்தப்படவேண்டும் என்னும் ஏற்பாடானது, இந்துக்களில் வங்காளிகள், பிராமணர்கள் என்னும் இரு வகுப்பினர்கள் கொள்ளும் உயர் பதவியான உத்தியோக அபேஷையை வெளியிடுவதாகவே தோன்றும். வெளி ஜில்லாக்களில் மேல் ஜாதியாரின் பிள்ளைகள் படிக்க இடமாற்றியிருக்கிறீர்கள். உயர்ந்த ஜாதியார் குடியிருந்து வரும் கிராமங்களில் வீதியில், கிராம கன்று காலிகள் நடமாட பாதை வழியிருந்தும், பறையர் நடமாட பாதை வழி கிடையாது. ஊரார் தண்ணீர் மொண்டு கொள்ளும் நீர்நிலைகளில் இவர்கள் தண்ணீர் மொள்ளக்கூடாது. கிராமக்குடிகள் பல விஷயங்களிலும் இவர்களை ஜனாங்கத்தினின்றும் அப்புறப்பட்டிருக்கும் குஷ்டரோகிகளைப்போல் எண்ணி வருகிறார்கள். சிவில் சர்வீஸ் பரிட்சையானது இவ்விதத் தன்மை  உள்ளவர்களால் நிரப்பப்படுவதைப் பறையர் பார்த்துப் பீதி கொள்வதுமின்றி அவர்கள் தங்களுக்கு இயல்பிலேயே விரோதிகளாக இருக்கிறார்கள் என்றும் காண்கிறார்கள் என்று அம்மனுவில் கூறியிருந்தார்.

அக்காலத்தில் சென்னை மயிலாப்பூரில் உயர்நீதிமன்ற நீதிபதியின் வீட்டிற்கு அருகில், இந்தத் தெருவுக்குள் பறையர் வரக்கூடாது என்று ஓர் அறிவிப்புப் பலகையே இருந்தது. பச்சையப்பன் கல்லூரியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களே சேர்க்கப்படுவதில்லை. இச்செய்திகளும் அம்மனுவில் இவரால் குறிக்கப்பட்டிருந்தது.

இக்கோரிக்கைக்குப் பலன் கிடைத்திருக்குமா? ஏழை சொல் அம்பலம் ஏறியிருக்குமா? என்ற கேள்வி கட்டாயம் எழும். அப்படியானால், அவர் மனதிலும் அது எழாமல் இருந்திருக்காது. என்றாலும், தன் நிலைப்பாட்டை, தன் இனத்திற்கு எது ஏற்றது என்ற கோரிக்கையை அவர் நன்கு சிந்தித்துத் தயாரித்த மனுவின்மூலம் ஆங்கில ஆட்சியாளர்களுக்குத் தெரிவித்தார். ஓர் உண்மையான சமுதாயத் தொண்டன் என்பவன் விளைவுகளைப்பற்றிக் கவலைப்படாமல், எது செய்யப்படவேண்டுமோ அதைத் தயக்கமின்றி செய்துகொண்டே இருப்பான். எனவே, உண்மையான சமுதாயத் தொண்டரான இவர், முடிவு என்ன என்பதைப்பற்றிக் கவலைப்படாமல் முயற்சியைத் தவறாது செய்தார்.

அந்தத் தூய தொண்டரின் மனிதநேய முயற்சிக்கு நல்ல பயன் கிடைத்தது. ஆம், இம்மனுவைக் கருணையுடன் பரிசீலித்த ஆங்கிலநாடாளுமன்றம், அய்.சி.எஸ். தேர்வினை இந்தியாவில் நடத்தினால் பிராமணர்கள் மட்டுமே தேர்வு பெற்று உயர்பதவிகளைப் பிடிக்க நேரிடும் என்ற முடிவிற்கு வந்தது. அதன்படி அய்.சி.எஸ். தேர்வு இலண்டனில் மட்டுமே, இந்தியாவில் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

இச்செய்தி, பறையன் இதழில் (22.9.1894) வெளியிடப்பட்டிருந்தது. இரட்டைமலை சீனிவாசன் அவர்கள் இதன்மூலம் இரட்டைப் பலன் பெற்றார். ஒன்று தன் சமுதாயத்திற்குரிய உயர்பதவி வாய்ப்பு அதிகமாயிற்று. மற்றொன்று ஆரியப் பார்ப்பனர்களுக்கான வாய்ப்பு அடைக்கப்பட்டது.

தன் பலத்தை அதிகரிக்கின்ற அதேவேளையில் எதிரியைப் பலவீனப்படுத்துவதுதானே போர்த் தந்திரம். சமுதாயப் போராளியான அவர் அதையே செய்தார்.

தாழ்த்தப்பட்டவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உயர் ஜாதியைச் சேர்ந்தவர்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்ப்பதுதான் வாடிக்கை. அதே வகையில் இவரை அவர்கள் திட்டித் தீர்த்தனர். ஆனால், தாழ்த்தப்பட்டவர்களோ, அடித்தளத்திலிருந்து சற்றே எட்டிப் பார்த்தனர்.

செங்கற்பட்டு மாவட்டத்தில் தர்காஸ் நிலத்தைத் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தரவேண்டும் என்கின்ற கோரிக்கையை இவர் எழுப்பினார். 1894-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நிலப் போராட்டம் ஒன்றினை இவர் நடத்தினார். தாழ்த்தப்பட்டவர்களின் மேம்பாட்டிற்கு நிலச் சீர்திருத்தமும் தேவை என்ற சிந்தனையை இவர் முதன்முதலில் உருவாக்கினார். பிற்காலத்தில் வந்த நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு இதுவே வழிகோலியது.

தாழ்த்தப்பட்டோர் மாநாடு

1895 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், சென்னை விக்டோரியா மண்டபத்தில், தாழ்த்தப்பட்ட மக்களின் மாநாடு ஒன்றினைக் கூட்டினார். வருவாய்த் துறை சார்ந்த அலுவலகங்கள், கலெக்டர் அலுவலகங்கள், கிராம அஞ்சல் நிலையங்கள் போன்றவற்றில் தாழ்த்தப்பட்டவர்களைப் புறக்கணிப்பதாகவும், தரம் தாழ்த்தி நடத்துவதாகவும் அம்மாநாட்டில் கண்டனம் தெரிவித்தார். மேல்ஜாதிக்காரர்கள், தாழ்த்தப்பட்டவர்களை இழிவாக நடத்துவதையும் கண்டித்தார்.

நாங்கள் கணக்கிட முடியாத வருடங்களாகக் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறோம். எங்களுடைய கோரிக்கைகள் நியாயமானவை. எதிர்காலத்தில் எங்கள் இனம் சமத்துவமாகவும், சமாதானமாகவும் வாழ எண்ணுகிறது. எங்களுடைய முன்னேற்றத்தில் மற்றவர்கள் குறுக்கிட்டால், நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம். இனிமேலும் நாங்கள் எல்லாவிதமான கொடுமைகளையும் ஏற்கமாட்டோம் என்று உயர்ஜாதிக்காரர்களுக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்தார்.

கவர்னர் மாளிகையில் காலடி வைத்தார்

1895-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் நாள் இந்தியாவின் அப்போதைய கவர்னர் ஜெனரல் எல்ஜின்பிரபு சென்னைக்கு வந்தார். அவர் கவர்னர் மாளிகையில் தங்கியிருந்தார். அதை அறிந்த இவர், பறையன் மகாஜன சபை சார்பில் அவரைச் சந்தித்துக் கோரிக்கை மனு கொடுத்தார்.

கவர்னர் ஜெனரல் மாளிகைக்குள் ஒரு தாழ்த்தப்பட்டவர் செல்வது என்பது கற்பனைக்குக்கூட வராத ஒன்றாக இருந்த காலத்தில், அதையும் செய்து காட்டினார். அந்த அனுபவத்தை அவரே விவரித்தும் இருந்தார்.

நாங்கள் நேராகக் கட்டடத்திற்கு முன்புறம் சென்று வண்டிகளை விட்டு இறங்கி, கவர்னர் மாளிகைக்குள் சென்றோம். அங்கே இதற்குமுன் இவ்வின மக்கள் செல்லாத காரணத்தால், தலைமைச் செயலாளர் அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இம்மாளிகையில் ஆங்கிலோ - இந்தியர்கள், முகம்மதியர்கள், கிறித்துவர்கள் எட்டு எட்டுப் பேர்கள் கும்பல் கும்பலாக நின்றுகொண்டு காத்திருந்தார்கள். நாங்களும் கும்பலாகச் சேர்ந்து நின்றோம். எங்களைக் கண்ட மற்றச் சமூகத்தைச் சார்ந்தவர்கள் வெறுப்பும், சினமும் கொண்டவர்களாகத் தோன்றினார்கள். அவர்களோடு எங்களையும் சமமாக, ஒரு சமூகத்தவராக அங்கீகரித்து தக்க சமாதான நல்மொழி கூறினார் எல்ஜின் பிரபு என்று அன்றைய நிகழ்வை உணர்வுப்பூர்வமாகப் படம் பிடித்தாற்போல் விளக்கினார்.

சமூக முன்னேற்றத்திற்குக் கல்வி அவசியம் என்ற உண்மையை இவர் நன்கு உணர்ந்திருந்தார். காரணம், இவர் இளம் வயது முதற்கொண்டே அவ்வாறு கல்வியின் கட்டாயம் கருதி பல்வேறு இடர்ப்பாடுகளைச் சமாளித்துக் கற்றவர்.
முன்னேற்றத்திற்குக் கல்வியே முக்கிய காரணம் என்று 1893 இல் பறையன் ஏட்டில் எழுதியிருந்தார். எனவே, தன் நோக்கப்படி, தாழ்த்தப்பட்டோரின் கல்வி வளர்ச்சியில் அதிகம் அக்கறைக் காட்டினார்.

1893-இல் வெளியிடப்பட்ட அரசாணையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கல்வி வாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தும், அந்த ஆணையின்படி அந்த வாய்ப்பு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அளிக்கப்படவில்லை. குறிப்பாகச் சென்னை நகரில் பல பள்ளிகளில் தாழ்த்தப்பட்டோர் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. 1893 இல் இது சார்ந்து அரசிடம் இவர் கோரிக்கை வைத்து, அரசாணையைச் சரியாக நடைமுறைப்படுத்தும்படி கேட்டுக்கொண்டார். அதன் பலனாய், தாழ்த்தப்பட்டோருக்கான கல்வி தடையின்றி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டது. ஆம், சென்னை நகராட்சியே பள்ளிக்கூடங்களை நடத்தும்படியும், அதில் தாழ்த்தப்பட்டவர்களைத் தடையின்றி சேர்த்துக் கொள்ளும்படியும் அரசு ஆணையிட்டது.

1900-இல் இரட்டை மலை சீனிவாசன் அவர்கள் வெளிநாடு சென்றார். தென்னாப்பிரிக்காவில் 20 ஆண்டுகள் தங்கியிருந்தார். அப்போது காந்தியாரோடு அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. காந்தியாருக்கு இவர் திருக்குறள் கற்றுக் கொடுத்ததோடு, தமிழில் கையொப்பம் இடவும் கற்றுக்கொடுத்தார்.

1921-இல் மீண்டும் இவர் இந்தியாவிற்குத் திரும்பினார். மீண்டும் பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட்டார். தாழ்த்தப்பட்டோரின் மேம்பாட்டிற்கான தொண்டினைத் தொய்வின்றிச் செய்தார்.

சட்டமன்றச் சாதனை

1923-இல் சென்னை மாகாணத்தின் சட்டமன்ற உறுப்பினராக இவர் நியமிக்கப்பட்டார். அப்போது நீதிக்கட்சி ஆட்சி நடந்தது.

இவரது துணைவியார் ரங்கநாயகி அம்மையாரும் சமூகச் சீர்திருத்த செயல்பாடுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். தீண்டாமையைத் தடை செய்து சட்டம் ஒன்று கொண்டுவர வேண்டும் என்று தனது கணவருக்கு ஆலோசனை கூறி, அதைக் கொண்டு வருவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபடும்படி கணவரைத் தூண்டிக் கொண்டேயிருந்தார்.

இரட்டைமலை சீனிவாசன்அவர்கள், 1924 இல் சட்ட நிரூபனச் சபையில் இதுகுறித்து ஓர் தீர்மானம் கொண்டு வந்தார். நகரம் அல்லது கிராமத்திலுள்ள எந்தவொரு பொதுப் பாதையையும் எந்தவொரு சமூகத்தைச் சேர்ந்தவரும் பயன்படுத்தலாம் என்றும், அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களுக்குள் எந்தவொரு ஜாதியினரும் போகலாம் என்றும், பொது நீர் நிலைகளை எந்த ஜாதியினரும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் இந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இத்தீர்மானத்தை அரசு ஏற்றுக்கொண்டு, 1925-இல் ஓர் அரசாணை வெளியிட்டது. ரங்கநாயகி அம்மையாரின் விருப்பம் நிறைவேறி தாழ்த்தப்பட்டோருக்கு இருந்த தடைகள் நீக்கப்பட்டன. இந்த ஆணை வருவதற்கு அடித்தளமிட்ட ரங்கநாயகி அம்மையார் 1928 இல் மரணமடைந்தார். அவரது கல்லறையில் கீழ்க்கண்டவாறு செதுக்கப்பட்டிருந்தது.

இவ்வம்மையாரின் கோரிக்கைக்கிணங்கி, தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் பொது ரஸ்தாக்கள் (வீதிகள்), கிணறுகள், பொது இடங்கள், கட்டடங்கள் முதலியவற்றை உபயோகிக்க பின்வரும் கவர்ன்மெண்ட் உத்தரவை தங்கள் பக்தாவான (கணவரான) சீனிவாசன் பெற்றனர்.

இந்தக் கல்வெட்டு தாழ்த்தப்பட்டோரின் உரிமைப் போராட்ட வரலாற்றின் நினைவுச் சின்னமாக அமைந்தது.

அரசாணைகள் வந்துவிட்டாலே வாய்ப்புகள் வந்து விடுவதில்லை என்பதுதானே இந்தியாவின் வரலாறு. அதற்கேற்பவே, இப்படியொரு ஆணை பிறப்பிக்கப்பட்ட போதிலும் அது ஏட்டளவில்தான் இருந்ததேயன்றி செயல்முறைக்கு வரவில்லை. என்றாலும், இப்படியொரு உரிமையைப் பெற்றதே அன்றைக்கு அரும்பெரும் சாதனையாகும்.

வட்டமேஜை மாநாட்டில் இரட்டைமலை சீனிவாசன்

1928-1929-இல் லண்டனில் நடந்த வட்டமேஜை மாநாட்டிற்கு, இந்தியாவிலிருந்து தாழ்த்தப்பட்டோரின் பிரதிநிதியாக, டாக்டர் அம்பேத்கரையும், இவரையும் இந்திய அரசு தேர்வு செய்து அனுப்பியது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டதுபற்றியும், அங்கு நடந்த நிகழ்வுகள்பற்றியும் இரட்டைமலை சீனிவாசன் அவர்களே விளக்குகிறார்கள்.

சர்வ கட்சி மகாசபை என்னும் வட்டமேஜை மாநாட்டிற்கு என்னையும், டாக்டர் அம்பேத்கரையும் தேர்வு செய்து அழைத்திருந்தார்கள். நாங்கள் இருவரும் நகமும், சதையுமாக இருந்து உழைத்தோம். 1928-1929 ஆம் ஆண்டுகளில் நடந்த மகாசபைக்கு நாங்கள் இருவரும் சென்றிருந்தோம். 1930 ஆம் ஆண்டு டாக்டர் மட்டும் மகாசபைக்குப் போனார். என் ஆலோசனையைக் கேட்க இந்தியா இராஜப் பிரதிநிதி கமிட்டிக்கு (Viceroys Conssolative Committee)  என்னை அழைத்துக் கொண்டார்கள். என்று கூறும் அவர், அங்கு நடந்த நிகழ்வு ஒன்றையும் விளக்குகிறார்.
ஜார்ஜ் மன்னரையும், இராணியையும் காணும் பொருட்டு, வின்சர் காஸ்சல் (Windsor Castle)  என்னும் ராஜ மாளிகைச் சபைக்கு இந்தியப் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டார்கள். என்னுடன் சக்கரவர்த்தி, சக்கரவர்த்தினி இருவரும் கைகுலுக்கி உபசரித்தார்கள். இப்படியாக மூன்று தடவை நடந்தது. ராஜா மாளிகையில் சிற்றுண்டியும் பரிமாறப்பட்டது. பின்னுமோர் தடவை மன்னரிடம் சம்பாஷிக்க (பேச) நேர்ந்தது. தீண்டாமை என்றால் என்னவென்று மன்னர் வினவினார். மேல்ஜாதியான் என்போன்  கீழ்ஜாதியான் தெருவில் விழுந்துவிட்டால் மேல்ஜாதியான் தூக்கிவிடமாட்டான் என்று நான் கூறியபோது, மன்னர் திடுக்கிட்டு அசந்து நின்று, அவ்விதம் நடக்க என் ராஜ்ஜியத்தில் விடவே மாட்டேன் என்றார். மன்னர் மாளிகைக்குள் பிரவேசிக்கவும் மன்னரோடு கைகுலுக்கி பேசவுமுண்டான பாக்கியம் நமது சமூகத்தைப் பொருந்தியதல்லவா. இதர சமூகத்தோடு நம்மையும் சமமாக மன்னவர் நடத்தியதனால் ஆங்கிலேய அரசாட்சி எவ்வளவு அன்பும், அருமையானதென்றும் நம் இனம் முன்னேறவுஞ் செய்ததென்றும் விளங்குகிறது என்று வரலாற்று முக்கியம் வாய்ந்த நிகழ்வை பாமரத் தமிழில் விளக்கியுள்ளார்.
அந்த மாநாட்டில் இவர் கலந்துகொண்டபோது, ராவ் சாகிப் ஆர்.சீனிவாசன் பறையர். நான் ஒரு தீண்டப்படாதவன் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அட்டையொன்றை தன் மேலாடையில் மாட்டியிருந்தார். இதைப் பார்த்துத்தான் மன்னர் அக்கேள்வியைக் கேட்டார்.
ஆங்கிலேயர்களின் ஏகாதிபத்திய ஆட்சியைவிட ஜாதி இந்துக்களின் கொடுமையான ஆதிக்கம்தான் தாழ்த்தப்பட்ட மக்களை வெகுவாகப் பாதித்திருக்கிறது என்ற உண்மையும், ஆங்கில ஆட்சி வந்திராவிட்டால், இந்த விடிவுகூட அவர்களுக்குக் கிடைத்திருக்காது என்ற உண்மையும் இவற்றால் விளங்குகின்றன.
தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அரசியல் அதிகாரம் கொடுக்கப்பட்டால்தான் தீண்டாமை என்னும் கொடிய பழக்கம் ஒழியும். சட்டசபையில் எங்களுக்குப் பிரதிநிதித்துவம் அளித்தால்தான் எங்கள் இலட்சியங்களை அடைய நாங்கள் போராட முடியும். வயது வந்தோருக்கு வாக்குரிமை வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை என்று அந்த மாநாட்டில் தன் சமூகத்திற்குரிய கோரிக்கைகளை முன்வைத்தார்.
சொத்துள்ளவருக்கும், படிப்புள்ளவருக்கும் மட்டுமே வாக்குரிமை என்ற அந்தக் காலத்தில், தன் இனம் முன்னுக்கு வரவேண்டும் என்றால், வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை என்று ஆணையிடப்படவேண்டும் என்ற மிக முக்கியமான கோரிக்கையை அவர் முன் வைத்தார்.
தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்கு என்ன செய்யவேண்டும் என்பதை எவ்வளவு நுட்பமாகச் சிந்தித்து அவர் கோரிக்கைகளை வைத்திருந்தார் என்பது இதன்மூலம் விளங்குகிறது.
அரசியல் அதிகாரத்தைப் பெறாத எந்தச் சமுதாயமும் முன்னுக்கு வர இயலாது என்பது ஆழமான உண்மை. அதை நுட்பமாக அறிந்து, அதைக் கோரிக்கையாக வைத்தார். அக்காலத்தில் இந்த அளவிற்கு விழிப்போடு சிந்திப்பது என்பதும், சிந்தித்து எடுத்த முடிவுகளைச் செயல்படுத்துவது என்பதும், அதுவும் அயல்நாட்டிற்குச் சென்று உலகையே ஆண்டு கொண்டிருந்த ஆட்சியாளர்களிடம் அது குறித்துக் கோரிக்கை வைப்பது என்பதும் வியப்புக்குரிய அரிய செயல்களாகும். அவற்றை ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த, தாழ்த்தப்பட்ட தமிழர் செய்திருக்கிறார் என்பது தமிழர்க்குப் பெருமை, தாழ்த்தப்பட்டோர்க்கு அதனிலும் பெருமை.
காந்தியைக் கண்டித்தார்
1932-இல் ஏரவாடா சிறையில் காந்தியார் உண்ணாவிரதம் இருந்தபோது, அதை முடிவுக்குக் கொண்டுவர இவர் முயன்றார்.
சிறைச்சாலையில் (காந்திஜியை) மூன்று தரம் கண்டேன். வாதாடி வெற்றி பெறுவதை இவர் தவிர்த்து, உண்ணாவிரதமிருப்பது வீரத் தன்மையிழந்து இரக்கத்தைத் தேட வேண்டியவரானார் என்பதைக் கண்டு மனதிரங்கி புனா ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டேன் என்று இவர் கூறுவது இவரது நிலைப்பாட்டைத் தெளிவாக விளக்குகிறது.
ஆதிக்கவாதிகளிடம் உரிமைகள் பெற போராடவேண்டுமே ஒழிய உண்ணாவிரதம் இருந்து அவர்களின் இரக்கத்தைப் பெற முயல்வது வீரமும் அல்ல, நடைமுறைக்கு உகந்ததுமல்ல என்பதை அப்பொழுதே இவர் ஆணித்தரமாக அறிவித்திருக்கிறார். எனவே, இவர் ஒரு சரியான விடுதலைப் போராளி என்பதை இதன்மூலம் அடையாளம் காண முடிகிறது அதேபோல், இந்துமதக் கொடுமைகளைக் கண்டு, மனம் வெறுத்து அம்பேத்கர் 1935-இல் புத்த மதத்தைத்தழுவியபோதுகூட அதை இவர் எதிர்த்திருக்கிறார்.
தாங்களிருக்கும் மதத்தில் இருந்துகொண்டே ஆண்மையான வீரத்துடன் முன்னேற வேண்டுமென்று உடனே தந்தி மூலம் அம்பேத்கரிடம் பிரஸ்தாபித்தேன் (தெரிவித்தேன்) என்று அவரே குறிப்பிட்டுள்ளார்.
இழிவைப் போக்கிக்கொள்ள மத மாற்றம் சரியான தீர்வு அன்று. ஆதிக்கவாதிகளிடம் போராடி நமது உரிமைகளை மீட்டு எடுத்து, சரிநிகர் சமானமாய் வாழவேண்டும் என்பது இவரது கொள்கையாக இருந்தது.
1937 இல் இராஜாஜி ஆட்சியில் ஆலயப் பிரவேசம் நடத்தப்பட்டபோதுகூட, அதை முழுமையாக இவர் நம்பவில்லை. சட்டப்படியாகவும் நடைமுறையில் செயல்படுத்தும் விதமாகவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இவர் விரும்பினார்.
ஏட்டளவில் சட்டங்கள் சாதகமாய் இருந்தால் மட்டும் போதாது. அதை நடைமுறைப்படுத்துவதில்தான், அதன் வெற்றியே உள்ளது என்றார். இவரைப் போன்றே தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட, எம்.சி.இராஜா அவர்கள், ஜாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டோர் மீது செலுத்தும் ஆதிக்கம், செய்யும் கொடுமை, இழிவு ஆகியவற்றை அறவே ஒழிக்க ஒரு மசோதாவை இரு அவைகளிலும் கொண்டு வந்தார். இது பல்லில்லா பாம்பு போன்றது என்று கூறினார் இரட்டைமலை சீனிவாசன். இரு அவைகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தை மீறுகின்றவர்கள் மீது சிவில் கோர்ட்டில் வழக்குத் தொடுக்கலாம் என்று சொல்லப்பட்டிருந்தது. இதைத்தான் இவர் கடுமையாக விமர்சித்தார். தாழ்த்தப்பட்டவன் நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்து நியாயம் பெறும் நிலையிலா உள்ளான்? எனவே, இதுபோன்ற சட்டங்கள் நடைமுறையில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது என்றார்.
உப்புச் சத்தியாக்கிரகம்
காந்தியாரின் உப்புச் சத்தியாக்கிரகத்தை இவர் முதலில் எதிர்த்தார். உப்பு வரியின் வருவாயைத் தாழ்த்தப்பட்டோருக்குச் செலவிட்டு அவர்களின் நிலையை உயர்த்தவேண்டும் என்றார். ஆனால், ஆங்கில ஆட்சியாளர்கள் அந்த வருவாயைத் தாழ்த்தப்பட்டோருக்குப் பயன்படுத்த மாட்டார்கள் என்பதைப் பின்னாளில் உணர்ந்து காந்தியின் நிலைப்பாட்டை ஆதரித்தார்.
பட்டங்கள்
ஆங்கில ஆட்சியாளர்கள் இவருக்கு 1926-இல் ராவ்சாஹிப் பட்டமும், 1930-இல் ராவ்பகதூர் பட்டத்தையும், 1936-இல் திவான் பகதூர் பட்டத்தையும் வழங்கினர். இவர் ஆங்கில ஆட்சிக்கு ஆதரவாக நின்றது ஜாதி இந்துக்களின் கொடுமைகளைவிட, ஆங்கில ஆட்சியின் ஆதிக்கம் சிறப்பானது என்று எண்ணியே. மேலும், ஓரளவிற்காவது தாழ்த்தப்பட்டவர்களுக்குரிய நன்மைகளை ஆங்கில ஆட்சியாளர்களிடமிருந்தே பெற முடியும் என்று நம்பினார். அவரது எண்ணத்திலும் நம்பிக்கையிலும் உண்மையில்லாமல் இல்லை. இதைத்தான் தந்தை பெரியாரும் சொன்னார் என்பதை முன்னமே கூறினேன். இவரது ஆங்கில ஆட்சி ஆதரவு தன்னலத்தில் எழுந்தது அல்ல. தன் சமுதாய நலனை முன்னிறுத்தி எழுந்ததாகும். 19-ஆம் நூற்றாண்டில், தீண்டப்படாத சமுதாயத்தில் பிறந்து இவ்வளவு சாதித்தார் என்றால், அவரது திறமைக்கும், பெருமைக்கும் அளவே இல்லை. தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, மனிதநேயம் விரும்பும் அனைவரும் இவரை என்றென்றும் மறக்கமாட்டார்கள்.
இத்தகு பெருமைக்குரிய இந்த மாமனிதரின் 80-ஆவது பிறந்த நாளில் எம்.சி.ராஜா, திரு.வி.., ராஜாஜி போன்றோர் கலந்துகொண்டனர். விழிப்பும், எழுச்சியும், போர்க்குணமும், அறிவு நுட்பமும் நிறைந்த இரட்டைமலை சீனிவாசன் 1945 செப்டம்பர் 18-ஆம் நாள் தனது 85 ஆவது வயதில் இறந்துபட்டார்.
வாழ்க இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் புகழ்!

நூல் - மறைக்கப்பட்ட மாமனிதர்கள்  
ஆசிரியர் - மஞ்சை வசந்தன்



Comments

Popular posts from this blog

கயிற்றில் தொங்கிய கணபதி (கி.பி. 1911-1949) part-2

பெம்மான் பசவர் (கி.பி.1131-1167)

இராஜாராம் மோகன்ராய் (கி.பி.1777-1833)